சில நிமிட சிந்தனை

அன்புள்ள madukkur.com இணையதள பார்வையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பரந்து விரிந்து, நமது அன்றாட வாழ்க்கையில் நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்துள்ள பல்வேறு விதமான இணையதளங்கள் நம்மில் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல. அப்படியான இந்த இணையதள யுகத்தில் அது தோன்றிய காலம் தொட்டே, இன்றைய தினத்தில் அதற்கு கிடைத்துள்ள இந்த அளவு ஏகோபித்த வரவேற்பு இல்லாத காலம் முதலே, கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இணைய தளங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்த போகும் தாக்கத்தையும், மாற்றத்தையும் கணித்து நமது ஊர் மற்றும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்காக எனது ஆருயிர் நண்பர் முகம்மது இஸ்ஹாக் அவர்களால் துவங்கப்பட்ட இந்த madukkur.com வலைப்பக்கத்தில் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏப்ரல் 19- ம் தேதி மாலை. இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடமையை முடித்த திருப்தியுடன் நமதூர் மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அனைவரும் தத்தமது கடமைகளை முடித்துவிட்டு இரவு உறக்கத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென பக்கத்து தெரு இளைஞர்கள் பிரிதொரு தெருவுக்குள் நுழைந்து அந்த தெரு வாலிபர்களோடு கைகலப்பில் ஈடுபட்டனர். விசாரித்ததில் அந்த இரண்டு தெரு வாலிபர்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த தகராறு பகை உணர்ச்சியின் தொடர்ச்சிதான் இது என தெரிய வந்த்து. பின்னர் இது நமதூர் ஜமாத்தார்கள் மற்றும் நல்லுள்ளம் கொண்ட நலம் விரும்பிகள் தலையிட்டு, தகராறில் ஈடுபட்ட இருசார்ரையும் சமாதானப் படுத்தி பிரச்சனை அடிதடி, போலீஸ் கேஸ் என்று பெரிதாகாமல் தடுக்கப்பட்டது. இத்தனைக்கும் தகராறில் ஈடுபட்ட இரு தரப்பிலும் நன்கு படித்த, நல்ல நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் உள்ளனர் எனினும் இதுபோன்ற விரும்பத்தகாத காரியங்களில் ஏன் ஈடுபட்டனர் என்பது மிக ஆச்சரியமான, கவலையளிக்கக் கூடிய விஷயம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இதுபோன்ற கவலை, கட்டுப்பாடற்ற விஷயங்களில் நமது இளைஞர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்? அவர்களுக்கு ஏன் தங்களது எதிர்காலம் , குடும்ப கவுரவம் மற்றும் நமதூரின் ஒட்டுமொத்த ஒற்றுமை போன்றவற்றைப் பற்றி துளியேனும் சிந்தனையோ, சிறு கவலையோ இல்லாது இருக்கின்றார்கள்? இதன் அடிப்படை காரணம் என்ன? என எண்ணிப் பார்க்கிறேன்…

நேற்றைய ஜும்மாவில் ஹஜரத் அவர்கள் உரையாற்றியதை கேட்ட போது மேலே உள்ள எனது கேள்விகளுக்கு கிட்டதட்ட பதில் கிடைத்த நிறைவு ஏற்பட்டது. அந்த உரையில் ஹஜரத் அவர்களின் இன்றைய நமது சமுதாய இளைஞர்களைப் பற்றிய கவலையும் ஆதங்கமும் வெளிப்பட்டது. நமது சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதும், பெரும்பாலான குடும்பங்களில் தந்தைமார்கள். வெளிநாடுகளில் இருப்பதும், தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரம் கொடுப்பதனாலும் அவர்கள் ஒரு கட்டுப்பாடற்ற, ஒழுக்க விழுமியங்களைப் பற்றி அறியாத அல்லது பின்பற்ற விரும்பாத தலைமுறையாக உருவெடுக்கின்றனர் என்றார். மேலும் அவர் கூறுகையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மார்க்க அறிவை உரிய முறையில் போதிப்பதில்லை என்றும், தொழுகை வணக்கங்களில் ஈடுபட சொல்லித்தருவதில்லை என்றும், அதிகபட்சமாக வெளியுலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி மற்றும் அதன் தொடர்ச்சியான வேலை வாய்ப்புக்களை மட்டுமே எடுத்து சொல்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக லுக்மான் (அலை) அவர்கள் தமது மகனுக்கு வழங்கிய நல்லுபதேசங்களாக கீழ்கண்ட ஐந்து விடயங்களை எடுத்துரைத்தார். அதாவது

  1. அல்லாஹ்வின் நாமம் சொல்லப்படாத சபையில் நீ பங்கு பெறாதே
  2. யாரிடமும் கடனாளி ஆகிவிடாதே
  3. உனது பொழுதுகளை பெரும்பாலும் அல்லாஹ்வை நினைவு கூறுவதிலும் அவனிடத்தில் பாவ மன்னிப்பு கோருவதிலும் செலவிடுவாயாக
  4. நீ சேவலிடம் தோற்று விடாதே (அதாவது வைகறையில் சேவல் கூவுவதற்கு முன்பாக எழுந்து அல்லாஹ்வை வணங்கி அன்றாட பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதாகவும்)
  5. கண்டபடி, நின்றபடி பேசாதே
    எனவும் லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்கு உபதேசித்தார்.

மேலும் மகனே நீ சுபகாரிய விருந்து விழாக்களில் பங்கு பெறுவதைவிட ஒரு ஜனாஸா எடுத்து செல்லும்பொழுது நீ அவசியம் அதனை பின் தொடர்ந்து செல்வாயாக. அப்படி சென்றால் மறுமை வாழ்வைப் பற்றிய தெளிவு ஏற்பட்டு இம்மை வாழ்வில் இறையச்சத்தோடு வாழ்வதற்கு உன்னை நீ தயார்படுத்திக் கொள்வாய் என அறிவுரை கூறியதை எடுத்து சொன்னார்.

இதன் மூலம் நமது இளைய தலைமுறையினருக்கு நல்ல முறையில் அறிவுரை கூறுவதும், அவர்களுக்கு நமது மார்க்க அறிவை போதித்து, அவர்கள் தொழுகை மற்றும் நல்லொழுக்கத்தை பேணும்படி செய்வதும் பெற்றோர்களின் கடமையாகும் என்பது மிக தெளிவாக புரிந்தது. ஆகவே நமது இளைய தலைமுறையினரை நல்வழிபடுத்தி, அவர்கள் சிறப்புற வாழ தக்க அறிவுரைகளை வழங்கி அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றில் தவறு இருக்கும்பட்சத்தில் அவர்களை திருத்தி நல்வழிப் படுத்துவது பெற்றோர்கள் மட்டுமல்லாது நமதூர் ஒட்டுமொத்த சமூகத்தினரின் பொறுப்பாகும்

Leave a Reply