Madukkur
கருத்துக்கள் - Opinions

ஒரே இலக்கை நோக்கி பல பயணங்கள்

ஒரே இலக்கை நோக்கி பல பயணங்கள்

முன்னுரை

அஸ்ஸலாமு அலைக்கும், நான் நமதூரில்  உள்ள மதுக்கூர் ஜாமிஆ  பெரியபள்ளிவாசலில்  விபரமறிந்த நாள் முதல்….அன்று முதல் , இன்று வரையிலும் , வெள்ளிக்கிழமை தொழுகையான , கொத்துவாதொழுகை, மட்டுமே தொழுது  வளர்ந்தவன், இன்றளவும், அப்படிதான்.  பெரியதாக  மார்க்க  அறிவு  கிடையாது  இதுதான்  நானும்  என்னுடைய  ஈமானும்  .

இந்த  சமகால  சூழலில் நமதூரில்   சந்திக்கின்ற  பல   வேறு  வாழ்க்கை  முறை உதயமானது பற்றிய தொகுப்பே  இப்பதிவு .

80ஸ்   நறுமணங்களும்        VS        20ஸ் வெறுமனங்களும்

மேன்மக்கள்   மேன்மக்களே

நமதூரில் நமது சமுதாயத்தில் , முன்னோர்களில் பலர், ” கடவுள் மறுப்பு கொள்கையில் ( கடவுள் கிடையாது) திராவிடர் கழகத்தில் ,  நாத்திகர்களாக  பயணித்தார்கள். இவர்கள் இறக்கும் வரையில் தாங்கள் ஏற்றுகொண்ட கொள்கையை , தனது சமுதாயத்தினரிடமோ,ஈமான் கொண்டு வாழ்ந்த தனது குடும்பத்தாரிடமோ கடைசிவரை  திணிக்கவில்லை  . ” என் பாதை எனக்கு” ” உங்கள் பாதை உங்களுக்கு” என கடந்து சென்றார்கள். யாரையும்  தூற்றியதுமில்லை  ,  வசைபாடியதுமில்லை  , மாண்புற, மக்கள்  நெஞ்சங்களில்   குடிகொண்டு  அழகிய முறையில் வாழ்ந்து மறைந்தார்கள்.

நுப்பத்தி ஏழு, வருடங்களுக்கு முன்பு,  1983  – களின் தொடக்கங்களில், நமதூரில் உள்ள இஸ்லாமியர்கள் வசிக்கும்  தெருக்களிலெல்லாம்  ஒரு தெருவிற்கு 20 வீடுகள் இருந்தால் அதில் 4மாடி வீடுகளும், 3 ஓட்டு வீடுகளும்,  சணல்சாக்கு  மற்றும் சிமெண்ட் சாக்குகள், மற்றும் உர சாக்கினால் பிணைக்கபட்ட 13 குடிசை வீடுகளுமாய் கொண்ட சிற்றூர். ஊர் மக்களிடம் , ஒருவருக்கொருவர், பெரும்பாலும் ” அஸ்ஸலாமு அலைக்கும்” என்று ” ஸலாம் சொல்லி வாழும் நடைமுறை வாழ்க்கை பெரிதாக இல்லை.

ஆனால் அந்த “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ” , “வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ” என்ற (ஸலாமின் ) வார்த்தையின் அர்த்தம் என்னவாகவோ இருக்குமோ அந்த அர்த்ததுடன் ” ஸலாம்” கூறாமல் வாழ்வார்கள்.அமைதிலும் அமைதியாக, அழகிலும் பேரழகாக.

சரிபுவாவா  மற்றும் தொழுகை வைக்கும் ஹஜ்ரத் மார்களிடம் மட்டும் ஸலாம் கூறுவார்கள். ஜீம்ஆ தொழுகை , தராவீஹ் தொழுகை, பெருநாள் தொழுகை போன்ற விஷேச தொழுகைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ஸலாம் சொல்லி வீட்டுக்குள் நுழைவார்கள்.

ஐங்காலத்தொழுகைக்கு நமதூர்  மஸ்ஜித்   முகைதீன்    பெயர் கொண்ட பெரியபள்ளிவாசலில் 4 வக்த்களுக்கு 3 ஸப்கள் இருக்கும்.சுப்ஹீ வக்திற்கு ஒன்றை வரிசை இருக்கும்.

பெரும்பாலானவர்கள் மனநிலையில் 5 வேளை தொழுகைகள் வயோதிகம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கடமை என்றும் , ஜீம்ஆ தொழுகை அனைவருடைய தொழுகை என மனநிலை நிலவிய கால கட்டங்கள். வாரத்திற்கு 1 வக்து தொழுதாலும் ஊர் எந்தவித குழப்பமற்ற நிலையில் தெளிவாக பரக்கத்தாக, ரஹ்மத்தாக இருந்தது.

உலக கல்வியும் , மார்க்க கல்வியும் பெரிய அளவில் இல்லை என்றாலும், பண்பட்ட மனிதர்களாகவே வாழ்ந்தனர்.

தலவலி, ஜீரம் மட்டுமே கொடிய நோய்கள், “எட்டாணவிற்கு”        அண்ணாமெடிக்கல்     மருந்தால் குணமாகும்.

இந்த குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளில் அன்பும், அனுசரனையும், ஓடுகின்ற நீரோட்டங்களின் நடுவே  பூந்தோட்டம்   பூத்துகுலுங்குவது  போல் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒற்றுமை சகோதரத்துவம் என்ற “வசந்த காற்று” மிக மகிழ்ச்சியுடன் வீசியது.

ஒரு தெருவில் அதிகபட்சம் 3 அல்லது 4 வீடுகளில் மட்டுமே மின்சாரம் இருக்கும்.மற்ற வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்கான குத்துவிளக்குகளும், காண்டாவிளக்குகளும், பணக்கார குடிசை வீடுகளில் ”  அரிக்கன்   விளக்கு  ” எரியும் இதுதான் வெளிச்சம்.

படிக்கும் இளைஞர்கள் தெரு முக்கங்களில் (”  தந்திமரம்  “) ” மின்சார மரத்தில் ” ஒரு குண்டுபல்பு வெளிச்சத்தின் கீழ் 7,8 பேர்  ஒற்றுமையாக  ஒன்றுசேர்த்து படிப்பார்.

விடுமுறை நாட்களிலும் இந்த மரத்தின் வெளிச்சத்தின் கீழ்தான். அனைத்து நல்லது கெட்டதுகளையும், பேசி பொழுதுபோக்கி கொள்வார்கள். யாருடைய கையிலும் அதிகபடியான  காசுகள்  கிடையாது. ஊருடைய ஒற்றுமைக்கு இதுவும் ஒரு வகையில் வழி கோலியது( வகுத்தது. )

மின்சாரம் இல்லாத ஒரு வீட்டில் மஃரிப் பிறகு , இரவு நேரத்தில் ஒரு மௌத் ஏற்ப்பட்டால் இந்த 8 சகோதரர்களும் தெருவாசிகளும் பதறி துடிப்பார்கள் . மரணித்தவரின் இரத்த சொந்தங்களுக்கு தெரியபடுத்துவதற்காக 2 பேர் தனிதனி பாதையில், செம்மண் கலந்து போடப்பட்ட  கருங்கல்  ,  கப்பிக்கல்  , சாலையில், காலில் கல் குத்துவதையும் பொருட்படுத்தாது,  தடதடவென்று  விரைந்து ஓடுவார்கள்.

ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக மின்சாரம் இருக்கின்ற ஒரு வீட்டிலிருந்து மௌத் வீட்டுக்கு கரண்டு கொடுப்பதற்காக பல வீடுகளில் இருக்கிற சிறுசிறு electric ஒயர்களை ஒன்றுகோர்த்து பயன்படுத்தி அடுத்த மின்னல் வேக நேரத்திற்குள் மின்சாரத்தைா தயார் செய்து எரியவிடுவார்கள்.

அடுத்ததாக மௌத் செய்தி தெரியபடுத்துவதற்காக பெரியபள்ளிவாசலுக்கு விரைந்து போவார்கள். யாரிடமும் சொந்த  சைக்கிள்  இருக்காது, தெருக்களில் ஒருவரிடமோ, அல்லது இருவரிடமோ இருக்கும். அவசரத்திற்க்கு அமையாது. செருப்பணியாத காலுடன் ஒரே ஓட்டமாக அனைத்து காரியங்களிலும் காணப்படும்.

தெருவின் ஏதேனும் ஒரு வீட்டில் ” ஜனாஸா” குளிப்பாட்டுவதற்கு மரபெஞ்சு தூக்குவதிலிருந்து, இன்னொரு வீட்டிலிருந்தோ, தெருமுனை பைப்களிலிருந்தோ, விறுவிறுவென்று, குளிப்பாட்ட குடம்குடமாக தண்ணீர் கொண்டு வருவதிலிருந்து அந்த ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டுதான். அங்கிருந்து நகர்வார்கள். தெருவின் பாட்டிகளும், தெரு மக்களும் 40 நாட்கள் அந்த வீட்டிற்கு போவதும் வருவதும் என ஒருவர் முகம் ஒருவர் மாற்றி ஆறுதலாய் சென்று வந்துகொண்டே இருப்பார்கள். அனைத்து தெருக்களிலும் இப்பழக்கம் தென்பட்டது.

காலங்கள் நகர, நகர இறைவனுடைய கருணையால் அரபு நாடுகள் கதவு திறந்தன .ஒவ்வொருவராய் சென்றவர்கள் கடுமையான உழைப்பை கொண்டு குடும்பத்தின் குடியை உயர்த்தினார்கள். சொந்த வீடு வந்தது ,மின்சாரம் இல்லாத நிலை என்று மாறி மின்சார வசதியுடன் வாழும் கட்டத்திற்குள் வந்தனர். அயல்நாடுகளுக்கு சென்றவர்கள் விடுமுறைகளில் ஊருக்கு வருகின்ற பொழுது , 90 களின் தொடக்கங்களில் “ஸலாம்” சொல்லி பேச கூடிய சுன்னத் மெல்ல மெல்ல தொடக்கம் பெற்றது.

பல்வேறு மார்க்க கருத்துக்கள்

வெளிநாட்டில் மார்க்கத்தை பற்றி பல்வேறு மார்க்க கருத்துக்களை தெரிந்து கொண்ட அடிப்படையில், சிலர் பாரம்பரிய மார்க்க  வழிகளிலிருந்து விலகி புதிதாக கற்றுக்கொண்ட வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

1996- களின் தொடக்கங்களில் , புதிய மார்க்க பேச்சுக்கள் நமதூரில் பரவவே இளைஞர்கள் , பாரம்பரிய பாதையை விட்டு விலகி,      , பெரியோர், சிறியவர் என புதிதாக கற்றுக் கொண்ட பாதையை ஏற்று பயணித்தனர்.

அதற்கு பின் ஊரு நிலைப்பாடு

தான் விரும்பும் மார்க்க வழிபாட்டு  பற்றுடன், தான்உண்டு, தன் வேலை உண்டு என்று யாரையும் சீண்டாமல், அன்று முதல் இன்று வரை வாழும் சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ( big salute).

ஆனால்……

பெரியபள்ளியிலும், ஊரிலும் ஈருடல் ஓருடலாய் பழகி தொழுது வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இடையில் , படி படி யாக  மார்க்கவிஷயத்தில்  இதுசரி இது தவறு என பல குழப்பங்கள் ஏற்படத் தொடங்கியது.

” நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய்” ஒவ்வொரு நாளும் சிறுசிறு  சலசலப்புடன்  பயணித்து கொண்டிருந்த சென்றது நமதூர்.

ஊரின் சகோதரத்துவத்தில் மெல்ல மெல்ல  விரிசல்  ஏற்பட்டு, சுழல தொடங்கியது.

பயான் Stay order வாங்குவது, காவல்துறை வழக்கு, ஜெயில்,கோர்ட்டு வரை மார்க்க அறிவொளிகள் அழைத்து சென்றது.

பின்னர் 2007, திருமண கடித பெட்டகங்களும் மூன்றாக உதயமானது.

சில வருடங்களுக்கு பின்,  மார்க்க புரிதலில் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கி , மற்றொரு மார்க்க அமைப்பு  உருவானது. ஆகையால், திருமண  கடிதபெட்டகம்  நான்காக உதயமானது.

அவரவர்கள், அவரவர் கொள்கை, பாதை, என சென்ற பிறகும், பாரம்பரிய வழியை விமர்சிப்பது இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

நாளடைவில் காத்திரா, நார்ஷாக்களை புறக்கணித்து,  தர்காஹ்வை சுத்தி  விற்கப்படும் ஜாமான்கள் வாங்குவது ஒரு வகையா ஷிர்க்கிற்கு ஆதரவு கொடுப்பதற்கு சமம்  என சிலர் எடுத்துரைக்க தொடங்கினர். .

தர்காவிற்கு சில ஆட்டோ ஓட்டுனர்கள், சவாரி வருவதை ஷிர்கிற்கு ஆதரவாகிவிடும் என்று  நிறுத்தினர்.

இன்று ஒரு சிலர்,  இல்ல திருமண விஷேசத்திற்கும், விருந்திற்கும், அழைப்பு கொடுத்த பிறகும் , பங்கேற்பதில்லை. அதே போன்று ஒரு சிலர், ஜனாஸாக்களிலும் பங்கேற்பதில்லை காரணம் ,  நபிவழி வழிபாடுகளை காரணம் காட்டி தவிர்க்கின்றனர் .

அதையும் மீறி,  நபிழிபாடுகளிலேயே புதுமையாய்… ஒரே  ஊருக்கு ரெண்டு பெருநாள் கொண்டாடும் நிலைக்கும் வந்தோம்.

மார்க்க நிகழ்ச்சிகளை முகநூலில்  பதிவிட்டு சந்தோஷம் அடைவது ஒரு பக்கம் இருந்தாலும் , அந்த  தலத்திலே அதை எதிர்க்கும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன .

மற்ற அன்றாட நடவடிக்கைகளில் (நாம் உண்ணும் உணவு, நாம் அணியும் உடை, நாம் பயன்படுத்தும் பொருட்கள் வரை) ஏராளமான கலாச்சார மற்றும் பிற மத சடங்குகள் ஈடுபட்டுள்ளன, அதை ஏற்றுக்கொள்ள தெரிந்த நமக்கு, இறைநேசர்  விவகாரத்தில்  மட்டும்  “ஷிர்க்” என வேறுபட்டு வாழ்கிற காலகட்டம் ஆகிவிட்டது  .

நமது அன்பு  ?

நாம் அனைவரும் பார்த்து பழகி, அன்னியோன்மாய் வாழ்ந்த உணர்வுக்கு இப்படி ஒரு நிலைமை. நமது சமுதாயத்தின் இடையிலேயே மட்டும் இப்படி ஒரு நிலைப்பாடு ஆனால், நமது பள்ளி, கல்லூரியில் , படித்த நண்பர்கள் , ஆசிரியர்கள், புரபொஸர்கள், வேலைபார்க்கும் நிறுவனத்தின் சக தொழிலாளிகள், மாற்று மதத்தை சார்ந்த சகதொழிலாளிகளின் திருமண நிகழ்ச்சிகள், அரசியல் பிரமுகர்களின் மரணங்கள், போன்ற இன்ப துன்பங்களில் பங்கேற்க மனம்  தடுப்பதில்லை . நபிவழி என்ற பெயரில் நமது சமுதாயத்தேயே நாம் வெறுத்துக்கொண்டு , இந்த நிலைக்கு ஆளாகிவிட்டோம்  .

இன்று நமதூரில் இரண்டு தலைமுறைகளாக இளைஞர்கள் கொள்கை வேறுபாடு காரணத்தால், ஒரே பஸ்ஸில் கல்லூரிக்கு ஒன்றாக பயணித்தாலுமோ, சென்னை போன்ற ஊர்களில் தங்கி படித்தாலுமோ , ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது, கொள்கை வேறுபட்டால், மலர்ந்த முகத்துடன் பேசிக்கொள்வது கிடையாது. இது அனைத்து இடங்களிலும் பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை நடக்கிறது. எதாவது பேசினால் மனஸ்தாபம் ஏற்பட்டுவிடுமோ என்றே கடந்து விடுகிறார்கள். இப்படியே சென்றால் ஊரின் எதிர்காலமும், அடுத்த சந்ததிகளின் நிலை என்ன ஆகும்.

தமிகம் முழுவதும் இப்படி ஆரம்பித்த ஒவ்வொரு மனஸ்தாபம், கோபம், குரோதம், ஈகோ, விட்டுகொடுக்கும் மனப்பாங்கு இல்லாமையால் ஒவ்வொரு இஸ்லாமிய ஊரும்  சுக்குநூறாக  உடைந்து நிற்கிறது .இன்று ” சட்டசபை முதல் ” பாராளுமன்றம் வரை செல்லமுடியாமல்  கொள்கைகளை பிடித்து தொங்கிகொண்டு ஒற்றுமையை சிதற விட்டுகொண்டிருக்கிறோம்.

அடுத்த சந்ததிகளும் நம்மை போன்று சிக்குமுக்காடி, தத்தளிக்க நிலை ஏற்பட்டுவிடும்..

மார்க்கமும் மரியாதையும் , அன்பும் அறிவொளியம் ஒன்று செல்லாதா ?

மார்க்க சொற்பொழிவு ஒருவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் அவர்களுடைய  ஹிதாயத்திற்காக  துவா செய்து கடக்க கற்றுக்கொள்ளவேண்டும் . அதற்கென வெறுக்க தொடங்க வேண்டாம். வெறுப்பின் அடிப்படையில் இஸ்லாம் நம்மை வாழ அனுமதிக்க வில்லை.

எந்த  ஒரு மார்க்கபிரச்சாரம், ஒற்றுமையை சீர்குலைக்கிறதோ அந்த பிரச்சாரத்தை விட்டுவிடுவோம்.அவரவர் அமலுக்கு அவரவர் பொறுப்புதாரி.மறுமையில் அல்லாஹ்வுக்கும் அவருக்குமானது.

1996- களிலிருந்து நமதூரில், மனிதருக்கு மனிதர் ஏற்படுத்தி கொண்ட கொள்கைகளால் மனஸ்தாபம் ஏற்பட்டு இன்றுவரை ஒருவரையொருவர் சந்தித்தால் ஸலாம் கூறிக்கொள்வது குறைந்து வருகிறது. பெண் எடுத்து பெண் கொடுக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஜனாஸாவிலும் அனைத்து நிலைகளிலும் முழுமையாக பங்கேற்பது குறைந்து வருகிறது. இன்னும் பல அடுக்கி கொண்டே போகலாம்.

கடந்து செல்லுங்கள் ஊரின் ஒற்றுமையை நாடி , இது போன்று வேற்றுமை ஏற்பட்டதன், சிறிய  தீப்பொறிதான்  இன்று ஊருக்குள் திரும்பிய திசையெங்கும், இன்று  தீப்பிழம்புகளாக  திரும்பிய திசையெங்கும் ஒன்றுபட முடியாத நிலை,காண்கிறோம்.

நன்மையை நாடி மற்ற நற்செயல்கள்…

இன்று ஊரில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் சிலசில, மாத இடைவெளியில் மார்க்க பிரச்சார பொதுக்கூட்டம்,மார்க்க சொற்பொழிவு,மார்க்க பயான் நடத்துகின்றனர். அந்த ஈடுபாட்டை மற்ற நற்செயல்கலிலும் கட்டிடலாம்.

இன்று திரும்பிய திசையெங்கும் இரத்தம் தேவை, இரத்தம் தேவை, என ” சமூக வலைதளங்கள்” அலறுகின்றன.ஊருக்குள் கொடிய நோய்கள் பஞ்சாக பறக்கிறது,

நமதூரிலிருந்து 1 வாரத்திற்கு சராசரியாக 50-  கார்களுக்கு  மிகாமல் அதிகாலை முதல் மருத்துவமனையை நோக்கி  தஞ்சையை  நோக்கியும், இன்னும் பிற  சிட்டிகளை  நோக்கியும் வண்டிகள் சீறி பறக்கின்றன.

பெரும்கொடுமை, இளம்வயதிலயே நமதூர் சிறுவர்கள் சிறுமிகள் என  பாரபட்சமின்றி  கொடிய, கொடிய நோய்களுக்குள்ளாக்கபட்டு, இறக்கின்றனர். மருந்து, மாத்திரை, இல்லாத வீடு கிடையாது. பலரும் நோய்வாய்படுகின்றனர். சிலர் இறந்தும் போகின்றனர். இதன் பிண்ணணியில் இருக்ககூடிய நோயை கண்டறிந்து எதிர்ப்பு சக்தியான, ஊட்டமான எந்த மாதிரியான உணவை உட்கொண்டால் வரக்கூடிய தலைமுறைகளின் ஆரோக்கியம் மேம்படும் என 3 மாதத்திற்கொரு முறை ” மருத்துவ நோய் எதிர்ப்பு முகம் நடத்தலாம். எதிர்காலத்தில் உள்நாட்டு,வெளிநாட்டு சம்பாத்தியங்கள் சேமிக்கபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த  முருங்கைமரம்  ,  முள்ளுமருங்கைமரம்  இவற்றின் பயன்பாட்டை எடுத்துரைத்து வீட்டுக்கு வீடு, நட்டு வளர்த்து குழந்தைகளுக்கு உணவளித்து, வரக்கூடிய சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக வளர எடுத்துரைக்கலாம்.இன்னும் பிற(  antibiotics  ) தானிய வகைகளின் பயன்பாட்டையும் எடுத்து சொல்லலாம்.

சமீப நாட்களாக குடும்ப மன அழுத்தத்தால் மனைவி, மக்கள் என  தவிக்கவிட்டுவிட்டு  தன்னுயிரை தாங்களே மாய்த்து கொள்ளும் இளைஞர்கள், இவர்களை போலுள்ளவர்களை கண்டறிந்து ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினால் அவர்களுடைய மரணத்தை “at least 1 வாரமாவது தள்ளி போட்டு, இறக்கலாம். இதனிடையே நல்ல மனநிலை மாறலாம்.

பல இலட்சம் செலவு செய்து பட்டபடிப்பு படித்த எத்தனையோ இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமலும், வெளிநாட்டு வாய்ப்பு இல்லாமலும், அடுத்த நகர்வு என்ன செய்யலாம் என புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து கவுன்சலிங் கொடுக்கலாம்.

கத்னாசெய்வதற்கு நமதூரில் ஒரு சொந்த மருத்துவமனையும், டாக்டரையும் உருவாக்க முயலலாம்.

இதுவரை” ( மதுக்கூர் வாக்காளர் தொகுதி) தோராயமாக 14 சட்டமன்ற தேர்தலையும், 15 பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்து இருக்கும். இதுவரை பெரிய ” ஆற்றிலிருந்து”  புதுகுளத்திற்கு  நேரடியாக தண்ணீர் வரும் வகையில்  கால்வாய்களை  அமைக்க நாடாளுமன்ற வேட்பாளரின்மோ, அல்லது சட்டமன்ற ” வேட்பாளரிடமோ” ஒன்று சேர்ந்து மனு கொடுத்திருந்தால் , முயற்சி வெற்றி பெற்றுருக்குமல்லவா , அதற்கு இப்பொழுதே முயலலாம்.

மருத்துவமனைகளில் தங்கள் உறவினர்கள் இருக்கும் நிலையில், ஆண் துணை” இல்லாத பெண்கள் எப்படி அச்சூழலை எதிர்கொள்வது என கற்பிக்கலாம்.

இதுபோன்று நிறைய சமுதாய விழிப்புணர்ச்சிகள் கொடுக்க கடமைபட்டிருக்கிறோம்.

இதையெல்லாம் ஒரு பெரும் பொருட்டாக கருதாமல், கொள்கை ரீதியான பிரச்சாரம் மட்டுமே நம் கடமை என , மார்க்கத்தின் பெயரால் பேசி, நாம் இன்னும் எத்தனை வருடம் பிளவுபட்டு , நிற்கபோகிறோம் என தெரியவில்லை.

யதார்த்தம்

இங்கே யாரும் 100% சதவீதம் தக்வாதாரியாக ஈமான்தாரியாக முழுமையடையவில்லை . இது நிதர்சனமான உண்மை ஒன்றிரண்டு பேர் இருக்கலாம்.

ஒரு இடம் வாங்குகிறோம், வீடு கட்டுகிறோம், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். படிக்க வைக்கிறோம். (கல்விகடன்,மருத்துவகடன், தொழில் கடன்) அதில் பெரும்பாலனவருக்கு பேங்க்லோன் சார்ந்ததோ, கிரெடிட் கார்ட் சார்ந்ததோ, அல்லாஹ் தடை செய்த வட்டி எனும் ” ஹராம்” இருக்கதானே செய்கிறது. அல்லாஹ் மன்னிக்ககூடியவன் என்ற தவ்பா செய்து கொள்வோம் என்ற மனநிலையை வகுத்துகொண்டு கடந்து செல்கிறோம். ( நான் உட்பட).நம்மை சுற்றி சுழலக்கூடிய காலசக்கரத்தின் கட்டமைப்பு இதுதான், இதனை கடந்து தான் வாழ்ந்தாக வேண்டும்.

மீண்டும்   ஒருமுறை   நான்   பின்னோக்கி   நினைத்து   பார்க்கிறேன்  .

கள்ளகபடமற்ற  ,  வெகுளிதனமாக  ,  வாழ்ந்து   சகோதரவாஞ்சையுடன்   நடமாடிய   ஆன்மாக்களின்  ”  பூந்தோட்ட சொர்க்கங்களின்  பசுஞ்சோலையான   மதுக்கூரை  ”

அதே 37- வருடங்களுக்கு முன்னால், மின்சார மரத்தின் குண்டு பல்பு சிறிய வெளிச்சத்தின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்த அந்த 8 சகோதரர்களும், மீன் கடையில் மௌலூது சோறு கொடுக்கபடும் பொழுது, ஒருத்தர் அணிந்திருக்கும் அழுக்கு கையலியில், மௌலூது சோற்றினை வாங்கி 8 பேரும், அப்படியே தெருவின் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டு வளர்ந்தவர்கள், இன்று கொள்கை ரீதீயாக எதிரெதிர் துருவங்களில் , இருவர் இருவராக பிரிந்து, தனித்தனி, கொள்கைகளில் நிற்கின்றனர்.

லலாம் சொல்லாத காலகட்டத்தில்  ஸலாத்துக்கான  அர்த்ததுடன் வாழ்ந்தவர்கள், இன்று ஸலாம் சொல்ல வேண்டியது  முஃமினுடைய  கடமை என தெரிந்தும் லலாம் கூறுவதில்லை.

ஜனாஸாக்களில் காலில் செருப்பணியாமல் ஓடியாடி கலந்து கொண்டவர்கள். ஜனாஸா செய்திகளை உறவுகளுக்கு சொல்லுவதற்கு ஓடியவர்கள். இன்று கொள்கை ரீதியாக கலந்து கொள்வதில்லை. ஜனாஸா குளிப்பாட்ட பிற வீடுகளிலிருந்தும், தெருமுனை  அடிபைப்களிலிருந்தும்  , பறக்க பறக்க குடம்குடமாக, தண்ணீர் அள்ளி ஊற்றி ஜனாஸாவை கழுவியவர். இன்று அதனை சுமப்பதற்கு கொள்கை இடம் கொடுக்கவில்லை.

கரண்டு இல்லாமல் வீடுகளும், மின்சார பல்புகளும் சிறிய வெளிச்சத்தில் இருந்தாலும் எங்களுடைய மனதின் ஒற்றுமையும், ஊரின்வெளிச்சமும் படுபிரகாசமாக இருந்தது.

இன்று வீட்டுக்கு வீடு மின்சாரவிளக்குகளும், தெருவிளக்குகளும் வண்ண வண்ண கலரில் பிரகாசிக்கின்றன. ஆனால் ஊர் அனைத்து நிலைகளிலும் ”  காரிருள்  ” சூழ்ந்து நிற்க்கிறது.

அன்று நான் தெருவில் ஒரு இடத்திற்கு வேலையாக நடந்து போகும்பொழுது ஏறுடா தம்பி நீ போக வேண்டிய இடத்தில் இறக்கி விடுகிறேன் என என்னை ”  சைக்கிளில்  ” ஏற்றி செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டவர். இன்று நான்  ஜனாஸாவாக   செல்கிறேன்  .  நான்   போகின்ற   இடம்   கப்ருஸ்தான்  என தெரிந்திருந்தும், மனதை கொள்கை, கொள்கை என நெஞ்சை கல்லாக்கி கொண்டு  கல்நெஞ்சக்காரராக  வேடிக்கை பார்க்கிறார்.

முகம்   தெரியாத   வெளியூர்  ,  வெளிநாடு   ஜனாஸா   தொழுகைகளில்   பங்கேற்கிறோம்  .  உள்ளூரார்   ஜனாஸாவிற்கு   அவர்   இந்த   கொள்கை   சார்ந்தவர்  ,  இவர்   அந்த   கொள்கையை   சார்ந்தவர்   என   ஒருவர்   மாற்றி   ஒருவர்   புறக்கணிக்கிறோம்  .  நமது   முன்னோர்கள்   இது   நமக்கு   கற்று   தந்த  பாடமா   நபி  ,  சொல்லி   தந்த   வழிமுறையா

ஒரு குடும்பத்தில் முதல்நாள் அண்ணன் உடுத்திய கைலியை மறுநாள் தம்பி உடுத்தியிருப்பான். இரவில் ஒரே போர்வையில் ஒன்றுபட்டு உறங்கி வளர்ந்த அண்ணன், தம்பிகளாக வாழ்ந்த பாசமலர்கள், வளர்ந்த பிறகு வீடுளுக்குள் கொள்கை புகுந்தமையால். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் கொள்கை ரீதியாக பிளவுற்று பேசாமல் இருந்துருக்கிறார்கள். சில வீடுகளில் தந்தைக்கும் மகனுக்குமே , பொல்லாப்பு ஏற்ப்பட்டது. இதனை அல்லாஹ் விரும்புவானா.

50- காசுக்கு அண்ணா மெடிக்கல் வாசலில் , நோய் குணமான காலம் கடந்து , இன்று 5 இலட்சம் செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல் திடீரென்று இறக்கின்றனர். தவிக்கிறார்கள் கடனாளிகளாக.

ஒரே ஒரு பள்ளியில் 2 ஸப் தொழுதாலும், அருள் நிறைந்து காணப்பட்ட ஊரில் , இன்று 9 பள்ளிகளிலும், 3- ஸப் தொழுகிறோம், ஆனால் ஏனோ எங்கள் சகோதர உறவில் ” விரிசல்” தொடர்ந்துகொண்டே செல்கிறது.

இறைவா …

ரப்பே, ரஹ்மானே, எங்கள் ஊர் ஜமாத்தினரில், நீ நாடியவருக்கு நேர்வழியை கொடுத்துவிடுவாய்.

இறைவா அவரவர் கல்பில் உள்ள ஆழமான எண்ணங்களும், செயல்களும் நீயே அறிந்தவன் , நீயே நேர்வழி கொடுக்ககூடியவன். உன்னுடைய தூதர் , முகம்மது நபியின் (ஸல்) பெரிய தந்தையான  அபுதாலிப்  அவர்கள் மரணபடுக்கையில் முஹம்மதுநபி கலிமா சொல்லுங்கள் என நபி கெஞ்சி மன்றாடிய பொழுது கலிமா சொல்ல மறுத்தார். மறுத்தார் என்று சொல்வதை விட நீ ஹிதாயத் கொடுக்க நாடவில்லை என்று சொல்வதே சாலசிறந்ததாக இருக்கும். நீ நாடுபவரையே நேர்வழியில் செலுத்துகிறாய்.

இன்று எங்கள் ஊரில் இறைவன் கிடையாது என்று சொன்னவர்களிடம் கூட இவ்வளவு  முரண்படவில்லை  . கலிமா சொன்ன நாங்கள் முரண்பட்டு நிற்கிறோம். ஊரின் ஒற்றுமை மேலும் மேலும் சீர்குலையாமல், இருக்கின்ற ஜமாத்களிலிருந்து வேற்றுமை கொண்டு மற்றொரு புதிய ஜமாத் உருவாகி, குழப்பம் ஏற்படாமலும் , திருமண கடித புத்தகம், மீண்டும் ஒன்று உதயமாகாமலும், உன்னுடைய கருணையால் நோய் நொடியற்ற ஆரோக்கியமான சமுதாயமாக வளர்ந்து, ஒன்றுபட்டு வாழ்ந்திட பாதுகாத்து அருள்புரி நாயனே

லக்கும் தீனுக்கும் வலியதீன்….

ஒருவர் தர்காவுக்குச் சென்றாலும், அல்லாஹ்வைப் பிரியப்படுத்தும் நோக்கில் தான். ஒருவர் தர்காவுக்குச் செல்வதற்கு எதிராக இருந்தால், அதுவும் அல்லாஹ்வைப் பிரியப்படுத்தும் நோக்கத்தில் தான். அல்லாஹ்வைப் பிரியப்படுத்த பல வழிகள் இருக்கலாம். ஒவ்வொரு செயலின் நோக்கங்களையும் அல்லாஹ் காண்கிறான்.

இதயத்திலும் மனதிலும் யாராவது ஷாதாவை வைத்திருந்தால், எந்த ஒரு காரணத்துக்காகவும் அவரை “காஃபிர்” என்று அறிவிப்பதை தவிர்க்கவும். . இது ஃபிட்னாவை உருவாக்கும்.

முடிவுரை

இன்று   பல   பிரிவினைகளாக   5   வக்திற்கும்  ,  5   ஜமாத்களாக   தொழும்  ,  இந்த வாழ்க்கையை   காட்டிலும்  ,  வாரம்   1முறை   கொத்துவா ,  தொழுகை   தொழுதாலும்  ,  ஊரில்   சலனமற்ற   முறையில்   ஒற்றுமைகயிற்றுடன்   வாழ்ந்த   அந்த   80ஸ்   மனிதர்களின்   மணிமகுடங்களின்   வாழ்க்கை  ,  என்   வாழ்வில்   திரும்ப   கிடைக்காத   பொக்கிஷங்களே

Written  &  feel   by   Janab S.Jabarullah
(Edited with permission from author)

2 கருத்துகள்

Laser March 19, 2021 at 5:53 pm

EDITED BY MODERATION TEAM:

இறைத் தன்மை கொடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும்

சில அறிஞர்கள் எல்லா மதங்களையும் பின்பற்றுவது போன்ற கொள்கைகளை வைத்திருக்கிறார்கள், எல்லா வகையான வழிபாடுகளும் ஒன்றே, அனைத்து மதங்களுக்கும் இடமுண்டு. அவர்கள் எல்லா மதங்களையும் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள்,

அத்வைதம் என்ற கருத்து கவனிக்கத்தக்கது, ” எல்லாமே கடவுள் என்ற கருத்து!”

“அத்வைதம்” என்பது “துவைதம்” என்பதற்கு நேர் எதிரானது.

“துவைதம்” கொள்கை.
இறைவன் (பரமாத்மா) வேறு; ஆடியன் (ஆன்மா) வேறு; இரண்டும் தனித்தனியாக…… ஒருபோதும் ஒருவருக்கொருவர் கலக்க முடியாது. இந்த கொள்கையின்படி, இறைவன் எப்போதும் இறைவன்! ஆடியான், எப்போதும் ஆடியான்!

ஆடியான் எத்தனை நல்லொழுக்கங்களைச் சேர்த்தாலும், அவர் – அதிகபட்சம் – இறைவனுடன் மிக நெருக்கமாக இருக்கிறார், ஆனால் இறைவனுக்கு சமமானவர் அல்ல, அவரை இறைவனுடன் கலக்க முடியாது!

ஆனால் மாறாக ஒரு கொள்கை உள்ளது. அத்வைதம்.

இறைவன் (பரமாத்மா) மற்றும் வேலைக்காரன் (ஜீவத்மா) வேறுபட்டவர்கள் அல்ல;இருவரும் ஒன்றாக மாற முடியும் என்ற கொள்கை. இந்த கோட்பாட்டாளர்கள் தாங்கள் இறைவனாக கடவுளுக்கு தகுதியானவர்கள் என்று நம்புகிறார்கள்.

அத்வைதத்தின் இந்த கோட்பாடு பண்டைய கிரேக்க மற்றும் ஃபோர்சைத் தத்துவங்கள் மற்றும் சைவ-வைஷ்ணவ சித்தாந்தங்கள் உட்பட முந்தைய காலங்களில் பல வடிவங்களில் பரவியது.

ஒவ்வொரு யுகத்திலும் கடவுள் அனுப்பிய பல தூதர்கள் தங்கள் காலத்திற்குப் பிறகு மக்களால் கடவுளாக வணங்கப்பட்டனர். அதற்கு அடிப்படைக் காரணம் இந்த அத்வைத கொள்கை. கடவுள் வேறு, வேலைக்காரன் வேறு இல்லை! கடவுளும் அவருடைய ஊழியரும் ஒன்றே! அவ்வளவுதான். ஆகவே, ஏகத்துவத்தின் விதைகள் தூக்கி எறியப்பட்டன.

இறுதி தூதர் ஒரே ஏகத்துவ வழிபாட்டை நிறுவ, கடவுளால் அனுப்பப்பட்டார்.

Assistant Editor March 20, 2021 at 8:16 pm

மதிப்புமிக்க கருத்தை சமர்ப்பித்ததற்கு நன்றி.

சமூக நலன் மற்றும் ஒற்றுமை சம்பந்தப்பட்ட கட்டுரைகளை madukkur.com ஊக்குவிக்கிறது.

நாம் காணக்கூடியபடி, கட்டுரை உள்ளடக்கத்தின் முக்கிய கருத்து: “விழிப்புணர்வின் பெயரில், இழந்த ஒற்றுமை “. இது புதிய அறிவொளி பற்றி அல்ல, அணுகுமுறையைப் பற்றியது.

இந்த கட்டுரை எழுத்தாளரின் அனுமதியுடன் எடிட்டிங் செய்யப்பட்டது.

கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி, மார்க்க கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், நம்பிக்கை பெறுவதும், அவரவரின் தனிப்பட்ட புரிதல்களை அடிப்படையாகக் கொண்டது.

madukkur.comஇல் , எந்த சமூகத்திற்கும் அல்லது பின்பற்றுபவர்களுக்கும் எதிரான சொற்பொழிவுகளை ஊக்குவிக்கப்படுவதில்லை.

வேறுபாடுகளை முன்னிலையப்படுத்தாமல், ஒற்றுமையை மையமாகக் கொண்ட அனைத்து துறைகளிலிருந்தும் வரும் கட்டுரைகளை வரவேற்கிறோம்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR