Madukkur
வாழ்கைமுறை - Lifestyle

“நெஞ்சுக்குள்  குடியிருக்கும்”   பொழுதுபோக்கு கேடயம்

“நெஞ்சுக்குள்  குடியிருக்கும்”   பொழுதுபோக்கு கேடயம் – by Janab S Jabarullah.

80ஸ்  90ஸ் களில் மதுக்கூரை தெறிக்கவிட்ட இரண்டு மாஸ்டர்ஸ்  தியேட்டர்கள்.!! 

ஐயப்பா தியேட்டர்!! , M.K.M டாக்கீஸ்!!

தமிழ் சினிமா நாடக துறையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று அடுத்த கட்டமாக ஒரு படிமேலே சென்று  சினிமா என்ற அந்தஸ்தை பெற்று  ” ஒரு சராசரி சினிமா ரசிகனை  தியேட்டர் என்னும் அரங்கினுள் அவனை கொண்டு சென்றது. இந்த சராசரி ரசிகனுக்கு திரைவடிவமைப்பு காட்சிகளும்,  தியேட்டர் வடிவமைப்பு காட்சிகளும் ,வெகுவாக  கவர்ந்து வெற்றி பெற்றமையால்  பெரிய பெரிய பட்டணங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தியேட்டர்கள் தோன்ற ஆரம்பித்து நாளடைவில் தியேட்டரில் ரீலீசாக கூடிய  சினிமாக்கள்  பெரும் வரவேற்பு பெற்றது.

பெரும்பாலும் பட்டணங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் அனைத்தும் , சிற்றூர்களிலும், கிராமபுறங்களிலும் வெளியிடப்படுவதில்லை.

காரணம்,  பட்டணங்களில் பெரிய தொகை முதலீடு செய்து வசூல் செய்துவிட முடியும் மற்ற இடங்களில் வணிக ரீதீயாக வெற்றி பெறுவது சாத்தியமற்ற ஒன்று.

இதனிலிருந்து ஒரு மாற்று வடிவமாக ,பட்டணங்களில் வெளியிடபட்ட  திரைப்படங்களை இரண்டு மாத காலம் நிறைவடைந்த  பிறகு ஒரு சில  கிராமபுறங்களிலும், சிற்றூர்களிலும் வணிக ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படங்களை, சிறிய முதலீட்டுடன்  திரையிடுவதற்கு   ஒவ்வொரு சிற்றூரிலும் தியேட்டர்கள்,டூரிங் டாக்கீஸ்கள்   தோன்ற துவங்கின.

அந்த தோற்றத்தின் ஒரு உருவமாக எங்கள் ஊரில்(மதுக்கூர்) முதன் முதலில் முளைத்தது ஐயப்பா தியேட்டர் ,பிற்காலத்தில் M.K.M டாக்கீஸ்.( தியேட்டர்).

இந்த இரண்டு தியேட்டர்களிலும்  2-ம் தாராமாக  வெளியிடப்படும் இத்திரைப்படம் இந்த ஊர் ரசிக பெருமக்களுக்கு ,ஒரு புதிய திரைப்படம் தனதூர் தியேட்டரில் ரீலீசானது போல்  பிம்பம் நிலவும்  படபோஸ்டர்களை கண்டவுடன் ஒருவித  பரவசத்தை உண்டாக்கி அவனை தன் வசம்   ஈர்க்க தொடங்கியது. அந்த படத்தை பார்த்தால் தான் கையும், காலும் , ஒதறுவது கொஞ்சம் நிற்கும்.

ஐயப்பா தியேட்டர் 1960-களின்  தொடக்கங்களில்  துவக்கப்பட்டு தன்னுடைய கலைவாழ்க்கையை , மதுக்கூர் ரசிகனிடம்  இணைந்து கொண்டு தன்னுடைய கலை பயணத்தை  துவங்க ஆரம்பித்தது.

இந்த தியேட்டர் மிக பிரம்மாண்டமானது.  மதுக்கூர் மற்றும் சுற்றுபுற கிராம மக்களின் “பொழுதுபோக்கு”  !!களஞ்சியம்!!என்றே சொல்லலாம். இந்த தியேட்டரை கண்டு வசியபடாதவர் என எவரும் இருக்க முடியாது.

M.G.R  மற்றும் சிவாஜியின் திரைப்படங்களை கைதட்டி  கண்டு களித்த ரசிகர் பட்டாளம்  , இந்த இரு  சகாப்தங்களின் ஓய்வுக்கு பிறகு, இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் , அமைதி அடைந்த பின்,   85 களின் தொடக்கங்களில் நமதூர் தியேட்டரில் ரஜினி,கமல் ,விஜயகாந்த் , ராமராஜன்,ராம்கி,கார்த்திக், பிரபு ,T.ராஜேந்தர்,சத்யராஜ் (மற்றும்பலர்)  என தலைதூக்க தொடங்கி,அடுத்த தலைமுறை ரசிகர்களின் கையில்  இந்த இரண்டு  தியேட்டர்களும் தஞ்சமடைந்தது .  ஆரம்பங்களில் “கமல்ஹாசனுடைய ரசிகர்  கோட்டையாக” மதுக்கூர் இருந்தது. ரஜினிகாந்தின், ஊர்க்காவலன்,மிஸ்டர்பாரத், மனிதன், குருசிஷ்யன்,  போன்ற “கமர்ஷியல்” படங்கள்,வெறித்தனமாக ஓடியதால்  சில மாதங்களிலயே” “மதுக்கூர்திரையரங்கம்” ரஜினிகாந்த் ரசிகர்களின்  ” சாம்ராஜ்யமாக” உருவெடுக்க தொடங்கியது .

இதன் பிறகு தான் மதுக்கூர் “சினிமா வரலாறு “மாற்றி எழுதபட தொடங்கியது.இதுவரை கைதட்டி படம் பார்த்த தலைமுறையிடமிருந்து இந்த தியேட்டர்கள்,  விசிலடித்து,காச் பூச்,   சத்ததுடன் கரகோஷமிடும் ரசிகர்களிடம்  சென்றது.

இரு தியேட்டர்களிலும் ஓடுகின்ற திரைப்படங்களில் தனக்கு பிடித்த ஹீரோக்கள்   திரையில் அறிமுகம் ஆகும் பொழுதே, (காணும் பொழுது) சந்தோஷத்தின்  உச்சத்திற்கே சென்று பூரிப்படைவார்கள். இது போன்ற பல  ஹீரோக்களின்  கமர்ஷியல் கதை  படங்கள் இவர்களை வெகுவாக கவரவே திரையில் தனது ஹீரோ தோன்றியவுடன் ” பூ” க்களை திரையில் தூவிகொண்டே,தானும் படம் பார்க்காமாலும்,பிறரையும் படம் பார்க்க விடாமலும்,   மகிழ்ச்சியை  வெளிப்படுத்துவார்கள்.

இந்த மதுக்கூர் ரசிகனுடைய மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் தனக்கு பிடித்த ” ஹீரோக்களின்”  படத்தை கண்டுகளிப்பது மட்டும் மல்லாது ,சிறந்த கதையம்சம் கொண்ட ,மற்ற ஹீரோக்களின் திரைபடங்களையும் வெற்றி பெற செய்யாமல் இருந்ததில்லை. 90 களின்  தொடக்கங்களில் ! செந்தூரபூவே, கரகாட்டக்காரன்,  ஊமை விழிகள், இணைந்தகைகள், உழவன் மகன், வெற்றிவிழா, கேப்டன் பிரபாகரன்,சின்னதம்பி, மாநகர காவல்,பூந்தோட்டகாவல்காரன்,பூவிழி வாசலிலே,வால்டர் வெற்றிவேல், தேவர்மகன், நாட்டாமை, போன்ற  (இன்னும் பல)  படங்கள் மதுக்கூர் தியேட்டர்களில் “தாறுமாறாக தறிகெட்டு” ஓடி வெற்றியடைந்த படங்கள்.

இந்த இரு தியேட்டர்களின் முதலாளிகளுமே சீசனுக்கு தகுந்த திரைப்படங்களை வெளியிடுவதில் ஜெகஜால கில்லாடிகள். பள்ளி விடுமுறைகளில் குழந்தைகளை கவரும் விதமான (துர்கா,யானை ,பாம்பு படங்கள்) 13-ம் நம்பர் வீடு போன்ற பேய் படங்கள் . மார்கழி மாதத்தில் சாமிக்கு மாலை போடும் சீசனில் அதற்கு தகுந்த  பக்தி திரைப்படங்கள் , தாய்க்குலங்களை கவரும் விதமாக ஆடிவெள்ளி,தைப்பூசம், ஆடிவிரதம் ,போன்ற படங்கள், இடையிடையே,பிறமொழி டப்பிங் படங்கள், காலைகாட்சியாக , English action film ஜாக்கிஜான்,புருஸ்லீ ,ஜெட்லி  நடித்த படங்கள்   வெளியிடபட்டு நல்ல வரவேற்பு பெறும்.குறிப்பாக MKM தியேட்டரில்,  கிராமிய கதையம்சம் கொண்ட படங்கள் திரையிட்டு வெற்றி பெற்றதுண்டு. 

இளைஞர்களையும், மாணவர்களையும் கவரும் விதமாக வெள்ளிக்கிழமைகளில் அவர்களின் ரசனைக்கேற்ப படங்களை வெளியிட்டு வந்தமையால்  ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றது.  

அதிலும் பொதுவாக  ஆயுத பூஜை, தீபாவளி,பெருநாள்,பொங்கல் போன்ற விசேஷ பண்டிகை தினங்களில் அனல் பறக்கும்  “Action block buster ” திரைப்படங்கள் திரையிடப்பட்டு மதுக்கூர் நகரமே இரு தியேட்டரையும் நோக்கி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

ஐயப்பா தியேட்டரில் ஜனரஞ்சகமான , திரைப்படங்களை வெளியிடுவார்கள். M.K.M.தியேட்டரில் குடும்ப பாங்கான திரைப்படங்களும்,காமெடி, கமர்ஷியல் திரைப்படங்களும் வெளியிடுவார்கள். இந்த இரு தியேட்டரின் பட போஸ்டர்,மரதட்டி போஸ்டர்களும் ,டவுனில் முக்கியமான இடமான  “அண்ணா மெடிக்கல் சுவர்,” “காளியம்மன் கோவில் எதிர்புறம் S.S.B சுவர்”, “மீன் மார்க்கெட் சுவர்” இந்தியன் பேங்க் முக்கம் ,பஸ்ஸ்டாண்ட், முக்கூட்டுச்சாலை, “சின்னரோஜா”லாட்டரிகடை மேல் மரதட்டி போஸ்டர், சிவக்கொல்லை என அனைத்து ரேஷன்கடை,பஸ்ஸ்டாப், போன்ற  இடங்களிலும்,மக்கள் அதிகம் கூடும்  ஜங்ஷன் களிலும் ,பொதுவாக அனைத்து  “டீ” கடைகளின் டீ ஸ்டால்களில் போஸ்டர்கள் ஒட்டபட்டு, நகரின் 4 திசைகளிலும் வண்ண வண்ண மஞ்சள், நீல ,கலரில் போஸ்டர்கள் ஒட்டபட்டு படம்பார்த்தே ஆக வேண்டும் என்ற  ஆசையை தூண்டிவிடும் விதமாக காட்சியளிக்கும்.

பெரும்பாலும் அன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாததால் நமதூர் தியேட்டர்கள் தாய்க்குலங்களாலும், பெண்களாலும் பெரும் வரவேற்பு பெற்றது.  பெண்கள் ,சிறுவர்கள்,சிறுமியர்கள் என  பண்டிகை தினங்களில் தெருக்களில் வாழும் மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு ஒருவரின் கையை ஒருவர் பிடித்தபடி  குரூப்குருப்பாக  புறப்பட்டு நடந்து வருவார்கள். 

 பெரும்பாலும் வீடுகளில்  தாய்மார்கள் தங்கள் “குழந்தைகளை”  !! மேட்னிஷோ!! பார்ப்பதற்கு மட்டும் தான் அனுமதி கிடைக்கும்.மதியம் 12- மணிலேந்து வீட்ல “சோத்த போடு சோத்தபோடு” னு அமளி அடிச்சி, கொதிக்க கொதிக்க சோற்றுபருக்கையை, நாக்கு சுடசுட ,அறக்க பறக்க  சாப்பிட்டுவிட்டு, தயாரான பின், தெருவின் லீடர் வீட்டில் பாதுகாப்பு  “ஜாமீன்” போட்டபிறகு தான்.   அனுமதி கிடைக்கும்.

ஐயப்பா தியேட்டருக்கு வருகை தர கூடிய இடையகாடு,மௌலானா தோப்பு,படப்பைகாடு போன்ற பகுதிகளில் வசிக்கும் தாய்க்குலங்கள், சூரியதோட்டம் வாய்க்காங்கரை வழியாக நடைபயணமாக புறப்பட்டு  வருவார்கள். புலவஞ்சி ,பழைய மதுக்கூர் , அண்டமி,சிராங்குடி, பெரியகோட்டை பகுதிகளிலிருந்து வருகை தரும் கூடிய மக்களும், அனைவரும் பெரமையாகோவிலிருந்து ஒருமித்தவாறு சாரசாரயாக வருவார்கள்.

விக்ரமம்,இந்திராநகர் ,கீழத்தெரு, கீழக்காடு ,செட்டித்தெரு இந்த பகுதியிலிருந்து வருகை தரும் தாய்க்குலங்கள், பெண்கள் ,சிறுமியர்கள் வாசவி மண்டபம் ஆற்றங்கரை வழியாக வருவார்கள். ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரும், ஆற்றின் இரு ஓரங்களிலும் சாய்ந்த நிலையில்,காற்றில் அசைந்தாடியபடியே அழகு தோரணையுடன்  காட்சியளிக்கும் முருங்கை மரங்களும், கொத்துகொத்தாக , முருங்கைகாய்காய்   தொங்கிய நிலையில் காணப்பட்டு,  முருங்கை பூக்கள்   ஓடுகின்ற ஆற்றில் உதிர்ந்து ஓடுகின்ற காட்சிகளும் அதனுடன் கன்னிபொங்கல் அன்று” சிறுமிகள்” தலையில் கூந்தலில்  வைத்துகட்டிய செவ்வந்தி பூ பட்டையுடன்  ஆற்றிலிருந்து தியேட்டருக்கு புறப்பட்டு நடந்து பவனி வரும் காட்சி.இந்த அனைத்து அழகுகளும் ஒரே நேரத்தில் ஒன்றாக சங்கமித்து என்ன ஒரு பேரழகாக இருக்கும்.  வாழ்வில் மீண்டும் காணக்கிடைக்காதவை.

மற்றொரு புறம் பல கிராமங்களிலிருந்தும் ” மாட்டு வண்டிகளில் வரும் குடும்ப ரசிகர் கூட்டம் தியேட்டரை ஆக்கிரமித்து,கூட்டம் குலுங்கி “ஆத்துபாலம்” வரை ஆர்ப்பரித்து  காணப்படும்.

ஒரு வழியாக 4 திசைகளிலிருந்தும்,வருகை  வந்த அனைத்து மக்களும் தியேட்டரில் ஒன்றாக  சங்கமிக்கும் பொழுது, தியேட்டர் வாசல் திருவிழா கூட்டம் போல் ஜேஜேனு ஜெகஜோதியாக காட்சியளிக்கும். தியேட்டரில் “வண்ணகலர் ” கொடிகளும் சரசரவென்று பறந்து கொண்டு தியேட்டர் மேலும் அழகாக காட்சியளிக்கும்.

டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசைகட்டி கூட்டங்கள் நிற்க தொடங்கிவிடும்.

தியேட்டர் வாசலில் புளியமரத்தடி ஓரமாக  ஒருவர் தகரடப்பாவில் குலுக்கல் சீட்டு உறுட்டி கொண்டிருப்பார். அதனை வேடிக்கை பார்த்தவேற சிலர் விளையாடுவர்.

தியேட்டர் பெல் அடிக்கும் ஓசைக்கு காத்திருப்போம். மறுபுறம் சைக்கிள் டிக்கெட் 1 ரூபாய், பல கலர்களில்  டிக்கெட் பரபரப்பாக கிருஷ்ணமூர்த்தியுடன், இன்னொருவரும்  வைத்து கொண்டிருப்பார்.  சைக்கிள் வரிசை மட்டுமே சாதாரண தினங்களில் 3- வரிசைக்கு குறையாமல் இருக்கும்.

பண்டிகை தினங்களில் 8- வரிசைகளுக்கும் மேற்பட்டு  சைக்கிள்கள் நிறுத்தபட்டிருக்கும்.

பெல் அடித்தவுடன்,  தியேட்டரின்( 4-நான்கு) ஊதாகலர் கதவின் “counterகள் திறக்கபடும்.

பெண்கள் கவுண்டர் தனி, டிக்கெட் விலை   1.25 பைசா, ஆண்களுக்கு .075 பைசா, 2.50 பைசா  3.00 ரூபாய் பேக் பெஞ்சு சீட் இது தான்  டிக்கெட் விலை.  இப்பதான் கச்சேரிய ஆரம்பிக்கும்.

0.75 பைசா கவுண்டரில் கூட்டம் தள்ளுமுள்ளாக பயங்கர சத்ததுடன் ஒருத்தரை ஒருத்தர் முதுவ புடிச்சி தள்ளிவுடுறதும்,திட்டுறதும் அமளியா இருக்கும். ஒருவர் முகம் மற்றொருவரின் கழுத்தில் மூச்சைவிட்டபடி  இருக்கும்.

அடிச்சிபுடிச்சி கவுண்டர்கிட்ட .0.75 பைசா காச கொடுத்து  டிக்கெட் கேட்டா டிக்கெட் முடிஞ்சிறுச்சினு ஒரு பதில் வரும். கெட்ட கோவம் வரும் அந்த நேரத்துல .

சரி அடுத்த கவுண்டர்க்கு போகலாம்னு அப்படியே திரும்ப வந்து  2.50காசு கவுண்டர்கிட்ட  போய்ட்டு காசு எவ்வளவு இருக்கும்னு பாத்தா 2.25 பைசா தான் இருக்கும்.

கவுண்டர்ல கெஞ்சிபார்த்தா டிக்கெட் கிடைக்காது.பின்னாடி மீசையை முறுக்கிவுட்டபடி கிராமத்து மாமா நின்றுகொண்டிருப்பார் யாரு எவறுனே தெரியாது.மாமா என்று உரிமையோட அழைத்து கூட்டத்துல காரூவா விழுந்துவிட்டது நீங்கள் கொடுங்கள் அடுத்த படத்துக்கு வறப்ப தறேனு கேட்டவுடன் கிடைத்தது, சிரித்துகொண்டே கொடுத்தார். ஒரு வழியாக டிக்கெட் எடுத்து கிழிச்சிகிட்டு மரசட்டம் வளையம் (பார்டரை) கடந்து வந்தால் அப்பாடா இன்னும் படம் போடலனு ஒரு நிம்மதி பெருமூச்சு விடுவோம்.

அடுத்த சோதனை அமருவதற்கு இடம் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆளாளுக்கு இடம் புடிச்சி போட்டுகிட்டு கறச்சலா கிடக்கும்.

அதுவும்” மாட்டுபொங்கல்” அன்று “மதுபிரியர்களின்” (அலப்பறையால்) இரு தியேட்டர்  ஊழியர்களும், ஈரக்கொலையை கையில் பிடித்து கொண்டு எவன் என்னா பண்ண போப்பாறானு தெரியலயனு, விழி பிதுங்கி  நிற்ப்பார்கள். ஷேர்,நாற்காலி,செருப்பு, எல்லாம் பறந்த வண்ணம் இருக்கும்.  “ரஜினிகாந்த்” படத்துக்கு வந்துட்டு “விஜயகாந்த்”வாழ்கனு ஒரு கூட்டம் கோஷம் எழுப்பும்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் கோபமடைந்து  அவர்களுடன் சண்டைக்கு நிற்ப்பார்கள். தியேட்டர்ல  கூகூனு, ஒரே “தள்ளுமுள்ளா ” கெடக்கும். படம் போடுறதுக்கு முன்னாடியே,ஒரே அலப்பறையா கெடக்கும். தியேட்டர் ஊழியர்கள் இந்தா “எலவுகூட்ட” ஆரம்பிச்சிட்டானுவப்பானு  தலையில கை வைப்பாங்க.ஒரு சின்ன சமாதானத்துடன் சண்டை லேசாக முடியும்.

டிக்கெட் எடுத்த பிறகு ஒரு வழியாக உட்கார ஒரு இடம் கிடச்சிரும் .திரைக்கு நடுவே நேராக முள்ளு தடுப்புகம்பி அமைத்து பெண்களுக்கு வலதுபுறமும்,ஆண்களுக்கு இடதுபுறம் என வகுக்கபட்டிருக்கும்.

திரைக்கு( முன்னால்) மிக அருகில்  சிமெண்ட் முட்டுகட்டாயம் அதில் ஒரு கும்பல் சாய்ந்துகொண்டு 2,3 பீடிகட்டுகளை போட்டு புகைத்து கொண்டு எப்படா ஸ்கீரீன் திறக்கும் கத்தலாம்னு பரபரப்பா இருப்பாங்க.பீடி பிரியர்கள்.

பண்டிகை தினம் என்பதாலும் சிறப்பு திரைப்படம் என்பதாலும்  பெரிய பெரிய ஸீபீக்கர்களை வாடகைக்கு எடுத்து கொண்டு  வைப்பார்கள் .அதுதான் எங்களுக்கு (dts)  மக்கள் கூட்டம் தியேட்டரின் உள்ளே பிதுங்கி வழியும் .பலர் நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள்.

ஒரு வழியாக திரை திறக்கபடும் ,  ஏன் கத்துறோம் எதுக்கு கத்துறோம்னு தெரியாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து கத்தும்.

வாஷிங்பவுடர் நிர்மா, மற்றும் வீக்கோ வஜர்டெண்டி, விளம்பரம் ஓடும் பொழுதே தியேட்டர் ரணகளமாக இருக்கும். அதுவும் ரஜினிகாந்த் படம் என்றால் அது ஒரு தனி ஸ்பெஷல்.

ஒரு வழியாக படம்  டைட்டில்கார்டு போட தொடங்கி ரஜினிகாந்த் பெயரும் ,படத்தின் பெயரும் பார்க்கும் பொழுது கத்தி,கரகோஷம் எழுப்ப ஆரம்பிக்குற  கூட்டம் “முதல் பாட்டு,முதல் பைட்டு வரும் வரை திரையில் பூக்களை தூவிகொண்டும், வண்ண கலர் பேப்பர்களை கிழித்து தூவிகொண்டே  இருப்பார்கள். தியேட்டர் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என அல்லோலகல்லோலபடும். ஒருபுறம்” இளையராஜாவின்” இசையில் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.காமெடிக்கென்று கவுண்டமணி,செந்தில் என அனைத்து நவரசமும் ஒன்றிணைந்து ரசிகர்களை தியேட்டர் தன்வசபடுத்தி குஷிபடுத்தியது.

படம் ஓடி கொண்டிருக்கும் பொழுது  இடையில யாராவது ஒருவர்  யூரின் போறதுக்கு கதவை திறந்தால் போதும் அவர் கதை முடிஞ்சது ‘ஹாய்பூய்னு” கதவ சாத்துடானு ஒரே பயங்கர மிரட்டலா இருக்கும். அதோட அவர் யூரின் போறதயே  மறந்திடுவார்.    

இது போதாதகுறைக்கு அப்பதான் படத்துல முக்கியமான கட்டம் ஓடிக்கிட்டு இருக்கும்.திடீர்னு கரண்டுபோய்ரும் ” சொல்லவா வேணும்.படம் ஓட்டுற ஆளோட முந்தைய 3- “தலைமுறைகளை “எழுப்பி திட்டுவாங்க. கூகூகூனு  ஒரே இறைச்சலா, கெடக்கும்.ஊர் உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தையும் கரண்டு போனால் இங்கே கேட்க முடியும். பெண்களெல்லாம் கையை வச்சி காத பொத்திக்குவாங்க.  பீடிபிரியர்கள் தங்கள் பங்கிற்கு  பீடியை ஊதி தள்ளுவார்கள். புகையுடன் , கும்மிருட்டாக தியேட்டர் ஒரே புகைமண்டலமாக காட்சியளிக்கும்.எச்சில் வேற உட்கார்ந்த இடத்திலயே துப்பிகிட்டு, யூரின் வாசனையையும் நுகர்ந்து கொண்டு தான் படம் ஓடிக்கொண்டிருக்கும்.  (ஒரு பாக்டீரியா,வைரஸ் எங்களை அச்சுறுத்தியது இல்லை. .ஒரு தொற்றுநோய்களும் பரவி” பயமுறுத்தியதும் இல்லை.இன்று”ரிலீஸ்” செய்ய பயப்படுகின்ற உலக தரம் வாய்ந்த அனைத்து தியேட்டர்களும் எங்கள் ஊர் தியேட்டருடன் ஒப்பிட்டு பார்த்தால் 10 அடி பின்னாடி தான் நிற்க வேண்டும். )

ஒரு வழியாக ஜென்ரேட்டு போட்டு படம் தொடங்கி படத்தோட இடைவேளை வுட்டவுடனே, முதல் வேளை  சைக்கிள தேடுறது ‘எங்குன அடுக்கி நிக்குதுனே தெரியாது .அதை கண்டுபிடித்துவிட்டு canteen பக்கம் போறது.

2.00 ரூபாய்க்கு Goldspot  கலர் குடிப்பவர் No 1 VIP.

1.50 காசுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுபவர் 2-வது Vip

1.00 ரூபாய்க்கு டீ குடிப்பவர் 3- வது VIP

இந்த சோளப்பொறி முறுக்கு வாங்குற மக்களெல்லாம் பட்ஜெட் ரசிகர்கள்.

இவை அனைத்தையும் இந்த கூட்டத்துல புகுந்து வாங்கிட்டு வறதுக்குல்ல அப்பப்பா.பாதி முறுக்கு தான் மிஞ்சும். சில்வர்கேன்ல  தண்ணி  சங்கிலிகம்பி பிணைந்த தம்ளரில் அரைக்கையை நனைத்தபடி எடுத்து தண்ணி குடிப்பது சுவாரஸ்யம்.(திரைக்கு பின்னால் விபரம் அறியாத பருவத்தில்  திரையில் உள்ளிருக்கும் நடிகர்களை பார்க்க வேண்டும்  காத்து கிடந்தது குழந்தைதனமான ஒன்று)

இடைவேளை முடிஞ்சி திரும்ப படம் போட்டு நல்லாதான் போய்க்கிட்டு இருக்கும். அப்பதான்  யாராவது ஒருவர் ,கை பட்றுச்சி, கால் பட்றுச்சி,துப்புன எச்சிபட்றுச்சினு  அடிபுடி தகராறு நடக்கும். !கொலை! பண்றதுக்கு ” பட்டாகத்தி”யை தேடுவார். உள்ளே நிறுத்தபட்டிருக்கும் சைக்கிள்களை “வானத்திற்கும் பூமிக்குமிடையே” பறக்க விடுவார்கள்.கோஷ்டி மோதலும் நடக்கும். பிறகு தியேட்டரிலிருந்து வெளியேற்ற பட்டுருக்கிறார்கள்.

படம் முடிஞ்சி சைக்கிள எடுக்க போனா சைக்கிள் டிக்கெட்’சட்டை ஜோப்ல இருக்காது .

காணா போய்டும் நம்ம ரசிகர்களுக்கும் , கிருஷ்ணமூர்த்தி,ராவுத்தர்ஷா,ஷேக்மைதீன், இவங்க கூடம் வாக்குவாதம் நடக்கும் அதுக்கொரு பஞ்சாயத்து. யாராவது தெரிஞ்ச ஆளு, ஜாமீன் போட்டால்தான் சைக்கிள் கிடைக்கும்.

படம் முடிஞ்சி 2 பெரிய கதவுகளும் திறக்கப்பட்டால் வரலாறு காணாத கூட்டம் அடுத்த காட்சிக்காக நிற்கும். உள்ளிலிருந்து வெளியேறுபவர்கள், வெளியே நிற்கும் கூட்டத்தால் வெளியேற  முடியாமல் மிதப்பார்கள்.  கூட்டம் ரோடுகளை அடுத்த அரை மணிநேரம் ஆக்கிரமித்தவாறு காணப்படும்.

ரோடுகளில் வாகனங்கள் இரு புறங்களிலும், செல்லமுடியாமல் ஊர்ந்து செல்லும். இந்த கூட்டத்தின் தாக்கம் “முக்கூட்டுச்சாலை”வரை எதிரொலிக்கும்.  வந்த ஜனங்கள் வந்த வழியே பார்த்த திரைப்படத்தின் கதை  தன்மையை ருசித்தபடியே பேசிக்கொண்டே திரும்புவார்கள். 

1 வாரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு போஸ்டரை ஒட்டுவார்கள், வெற்றி நடை போடுகிறது .அதனை காணும் பொழுது உள்ளுக்குள்ளயே ஒரு சிறிய சந்தோஷம் நமதூரிலும் படங்கள்   பெரிய பட்டணங்களின் படங்கள் போல் ஓடுகிறதே என்று. 

MKM தியேட்டரில் வீட்டுக்கு தெரியாமல் படத்துக்கு போனால் , “MKMகரீம் அவர்கள் மொறச்சி மொறச்சி பாப்பாங்க.வீட்ல சொல்லி கொடுத்துடுவேனு அதட்டுவாங்க,அதுக்கு பயந்தே இந்த தியேட்டர் பக்கம் வராமல் “ஐயப்பா” தியேட்டர் பக்கம்  அதிகமாக ஒதுங்கியது.

காலத்தின் சூழல் ,புதிய தலைமுறைகளின் ரசனை மாறியதாலும் , வீட்டுக்கு வீடு கேபிள் டிவி , தொலைக்காட்சி  “சீரியல்கள்” பெண்களை  ஆட்கொண்டதாலும் தியேட்டருக்கு செல்லக்கூடிய கூட்டங்கள் குறைய தொடங்கின. நாளடைவில் இரு தியேட்டர்களுமே ஓய்வடைந்து தன்னை  துயில் கொண்டது. 

1960-70-80- 90-களில் பிறந்தவருக்கு மட்டுமே தெரியும் .மிக மிக இலகுவான, டிக்கெட் கட்டணத்தில்  இந்த இரண்டு தியேட்டருமே ” மதுக்கூர் ரசிகர்களை”  சந்தோஷபடுத்தி பார்த்தது என்றால் அது மிகையாகாது. இவையன்றி தினக்கூலி தொழிலாளிகளுக்கு “ஒரு சிறந்த  நண்பனாகவும்,ஆறுதல் கிடைக்க கூடிய இடமாகவும், அழகிய   பொழுதுபோக்கு அம்ஷம் ,நிறைந்த  இடமாகவும் என பலமுகங்களை கொண்டு  “சிம்மசொப்பனமாக” விளங்கியது  இவ்விரண்டு தியேட்டர்களும்,

இந்த இரண்டு தியேட்டர்களையுமே மதுக்கூர் மக்கள் கொண்டாட தவறியதில்லை. அதிகபட்சமாக எனக்கு தெரிந்து  “எஜமான்” என்ற திரைப்படம் M.K.M. தியேட்டரில் 28நாட்கள்  ஓடியது. ஐயப்பா தியேட்டரில்  ” சின்ன மாப்ளே” சின்னவர், சூரியன், கிழக்கு வாசல்,என்ற திரைப்படம்.மற்றும் நினைவில் இல்லாத பல திரைபடங்கள் நீண்ட நாட்கள் ஓடி  வசூலில் சக்கைபோடு போட்டுள்ளன.

இதில் “சின்னவர்” படம் பார்த்துவிட்டு வரும்பொழுது அந்த படத்தின் பாட்டுபுக் ஐயப்பா தியேட்டரில் வழங்கினார்கள். மற்றொரு சம்பவம் தியேட்டரில் “கிழக்குவாசல்” படம் ஓடிக்(பார்த்து)கொண்டிருக்கும் பொழுது ” கார்த்திக்” அம்மா !! மனோரமா மரணித்த காட்சி வரும்.  பிறகு வில்லனிடம் கார்த்திக் சண்டையிட்டு   என் ஆத்தாவின் உயிரை திருப்பி கொடு என்று ” “பொன்னுரங்கம் ” (கேரக்டர்)தேம்பி தேம்பி விம்மி  அழும் காட்சி அரங்கினுள் இருந்த அனைத்து ரசிகர்களின் கண்களை குளமாக்கியது. பக்தி படங்கள் ஓடும்பொழுது  சில பெண்களுக்கு ” அருள் ” வந்துவிடும். தியேட்டரகாரர்கள் உள்ளே நிற்கும் ” வேப்பில்லை” மரத்தின் இலைகளை உடைத்து கொடுத்து,அமைதிபடுத்துவார்கள்.  

முதன்முதலாக எனக்கு விபரம் தெரிந்து  ஒரு ” தீபாவளிக்கு” ரீலிசான !! நாட்டாமை !! என்ற திரைப்படம் ஐயப்பா தியேட்டரில் 5- காட்சிகளாக ஒளிபரப்பு செய்யபட்டது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு(சந்தை)பள்ளி மாணவ,மாணவியருக்கு 1 ரூபாய் கட்டணத்தில் குரங்கு படம்,சர்க்கஸ் படம் என பல பன்முக தன்மைகளை கொண்டு விளங்கியது இந்த இரு  தியேட்டர்களும் நான் அயல்நாட்டிலிருந்து விடுமுறைகளில்  தாயகம் வரும் பொழுதெல்லாம், படம் ஓடாமல் மூடப்பட்டு இருந்த   ஐயப்பா தியேட்டரை  “புளியமரத்தின்” ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு  ,  அனைத்து டிக்கெட் கவுண்டர்களையும்,போஸ்டர் ஒட்டியிருக்கும் இடங்களையும்  5 நிமிடம் ஏற இறங்க கண்ணால் பார்த்து, சந்தோஷபட்டுவிட்டு வருவேன்.

கடந்த 2 -வருடங்களுக்கு முன்  ஐயப்பா தியேட்டர் கட்டிடம் இடிக்கபட்டுவிட்டது. கட்டிடம் இடிக்கபட்டாலும் அதன் உருவமும்,அது தந்த கலைரசங்களும் , இன்னும் நிறைய ரசிகநெஞ்சங்களின் உள்ளங்களில்  குடில்கொண்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது  இந்த  ஐயப்பா தியேட்டர்.

இன்று உயர்ந்த  பல தியேட்டர்களில் ,உயர்ந்த கட்டணங்களில், பல திரைபடங்கள் பார்த்தாலும், ஒரு பெரும் திருப்தியில்லை. எனதூர் தியேட்டரில், எனதூர் மக்களிடம் ஒன்றாக அமர்ந்து (“ஆரவார ரணகள சத்ததுடன்”) பார்ப்பது தான் ஒருவித மகிழ்ச்சியே.

வீட்டிலிருந்து விறுவிறுவென்று  நடந்தே சென்று நடந்தே வருவது,இப்படி பார்த்து  கண்டுகளித்த “ஆத்மதிருப்தி” வேறெங்கும் கிடைக்கவில்லை என்றே மனம் ஏங்குகிறது.

ஐயப்பா தியேட்டரில் நான் கண்ட முதல் திரைப்படம். “ராஜா சின்ன ரோஜா”      0.75 பைசா கட்டணம்     இறுதியாக 2006- ல் “சிவகாசி” கட்டணம் 10ரூபாய்.

MKM தியேட்டர்  ” பொங்கி வரும் காவேரி   கட்டணம் : 1.25 பைசா  இறுதி படம் ” நந்தா” 2002     கட்டணம் 10 ரூபாய்  இது தான் கடந்து வாழ்ந்த திரைபயணத்தில் அதிகபட்ச திரை  கட்டணங்கள் .

சில நேரங்களில் ஸ்கூல் கட்டடிச்சிட்டு படம் பார்த்த நிகழ்வுகளும் உண்டு,

   எங்க “அண்ணண்”கூட படத்துக்கு போகும் பொழுது ,அண்ணன் தந்திரமாக பெண்கள் கவுண்டரில்’ விலை குறைந்த டிக்கெட்டை என்னை விட்டு எடுக்க சொல்வார். அதனை எடுத்து கொண்டு 3- ரூபாய் கவுண்டரில் எளிமையாக அழைத்து செல்வார். தெரிந்தவர்களுக்கும்,நண்பர்களுக்கும்,5டிக்கெட்,10டிக்கெட் என சிறிய விலையில் மொத்தமா எடுத்து மெயின்கேட் வழியாக கொடுத்து ,பார்த்து மகிழ்ந்தோம்.

இன்று சினிமாக்கள் நம்முடைய  உள்ளங்கையில் தஞ்சமடைந்தாலும், அந்த பழைய சந்தோஷங்களும்,பூரிப்புகளும் வாழ்வில் திரும்ப கிடைக்காத ஒரு வரலாற்று  “பொக்கிஷங்களே”

எனக்குள் ஒரு நப்பாசை நமதூரில் வணிக ரீதியாக ஒரு பெரும் ” பேரெழுச்சி “ஏற்பட்டு ஒரு   தியேட்டர் தோன்றி பண்டிகைகால திரைப்படங்கள் திரையிடப்பட்டால் நமதூர் எப்படி இருக்கும் என தோன்றிய  கனவின் வெளிப்பாடே இப்பதிவு

.  !! இன்று இப்படம் கடைசி!! 

Happy pongal

    A.Dream(feel)  BY S.J 

இரண்டு தியேட்டர்களிலும் படம் பார்த்து மகிழ்ந்த அனைத்து ரசிகர்களுக்கும், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR