Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

வாழ்த்துக்களும்….. கோரிக்கைகளும் …..

மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் , உதவித் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

பதவியேற்கும் விழா, வெற்றிக் கொண்டாட்டம் , வாழ்த்து பரிமாற்றங்கள் ,நன்றி தெரிவிப்புகள் , பொன்னாடை போற்றுதல் என்று சந்தோஷ நிகழ்வுகள் எல்லாம் மிக சிறப்புடன் நிகழ்ந்து முடிந்துவிட்டன.

இனிமேல்தான் நீங்கள் செய்யவேண்டிய பணிகள் மிகப் பெரிய சவால்களுடன் உங்கள் அனைவரையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன .

பணிகளை வரிசை படுத்துகிறேன் …

 1. மதுக்கூரில் மக்கள் பயன்பாட்டில் இருந்த குளங்கள் தற்போது செடிகள் முளைத்து அசுத்தமாகி தண்ணீர் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருக்கின்றன. அவைகளை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் .
 2. வெளியூர்களிலிருந்து மதுக்கூருக்குள் நுழையும் நான்கு எல்லைகளிலும் மதுக்கூர் என்ற பெயர் பலகை இல்லாமல் இருக்கிறது .
  நான்கு எல்லைகளிலும் மதுக்கூர் பேரூராட்சி உங்களை வரவேற்கிறது என்று பெயர் பலகை வைக்க வேண்டும்.
 3. ஊரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கருப்பு நிற தண்ணீர் (டேங்கில்)
  தொட்டியில் தண்ணீர் வெளிவரும் குழாய்கள் அடைக்கப்பட்டு செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. அவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும்
 4. மதுக்கூரில் தெருநாய்களின் தொல்லைகள் மிகக் கடுமையாக இருக்கிறது .நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் .நாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை செய்தால் மட்டும் போதாது . அந்த நாய்கள் மீண்டும் தெருக்களுக்குள் வராமல் இருக்குமாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
 5. சந்தை பள்ளிக்கூடத்திலிருந்து ஷேக் பரீத் ஒலியுல்லா தர்கா வரை தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் .
 6. ஆற்றில் , குளக்கரைகளில் குப்பைகள் கொட்டுவதையும் கழிவு நீர் கலக்கச் செய்வதையும் தடுத்து நிறுத்த வேண்டும். நமது ஊரில் பல தெருக்கள் குப்பை மேடாக காட்சியளிக்கின்றன . அவைகளை ஒழுங்கு செய்ய வேண்டும்
 7. முக்கூட்டு சாலையில் இரண்டு விளக்குகளைக் கொண்ட உயரம் குறைந்த விளக்கு மின் கம்பம் இருக்கிறது . அதில் உள்ள விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை . அந்த இடத்தில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் அமைந்திருப்பதை போல மிக உயரமான மின்விளக்கு கம்பம் அமைக்க வேண்டும் .
 8. முக்கூட்டுசாலை மணி கூண்டில் கூண்டு இருக்கிறது மணி இல்லை.சேயை இழந்த தாயை போல இருக்கும் இந்த மணிக்கூண்டில் கடிகாரத்தை ஓட வைக்க வேண்டும் .
 9. ஊருக்குள் போடப்பட்டு இருக்கின்ற தார்சாலைகள் பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதை சரி செய்ய வேண்டும் .
 10. நமது ஊருக்குள் பல இடங்களில் காட்டுச் செடிகள் வளர்ந்து புதராக மண்டிக் கிடக்கிறது . இதற்குள் பாம்புகளும் குடியிருக்கின்றன . இவற்றையெல்லாம் சுத்தம் செய்து அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் பயம் இல்லாமல் வாழ வழிவகைகள் செய்ய வேண்டும்.

இவை அல்லாமல் இன்னும் பல பணிகள் இருக்கிறது . அவற்றை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டிய முழுப் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

குப்பைகள் குடி கொண்டிருக்கும் மணியாங்குளம்.
புதருக்குள் புதுக்குளம் .
தண்ணீர் தெரியாமல் பாசி படர்ந்து பசுமை புரட்சியாக காட்சிதரும் பலியாகுளம் .
இல்லாத படித்துறையை நோக்கி செல்லும் இக்கட்டான பாதை . (புதுக்குளம்)
தெருவிற்குள் துண்டிக்கப்பட்ட சாலை .
குப்பைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சாலை ..
ஓரத்தில் மழையில் கரைந்த பின் வளைந்து ,நெளிந்து போன தார்சாலை .
சந்தை பள்ளிக்கூடத்திற்கும், ஷேக் பரீத் ஒலியுல்லா அவர்கள் தர்காவிற்கும் இடையே உள்ள மண் சாலை . மழைக்காலங்களில் சேறு நிரம்பிய சாலையாக மாறிவிடும் .
குப்பை கிடங்காய் மாறிப்போன செட்டி தெரு ஆறு
நமதூர் ஆறு கழிவுநீர் கலந்து கூவம் ஆறாக உருமாறிய அவலம் .
மக்களின் அலட்சியத்தால் குப்பைகள் தெருக்களில் குடியேற தொடங்கிவிட்டன .
சிமெண்ட் சாலையில் இருந்து தன்னை விவாகரத்து செய்துகொண்டு காணாமல் போன தார்சாலை .
முக்கூட்டு சாலையில் எரியாத விளக்குகளின் கீழே எம்ஜிஆர் சிலை .
கறி இல்லா பிரியாணி போல் மணி இல்லா மணிக்கூண்டு .
ரோட்டில் இருந்தாலும் காட்டில் தெரியும் ரேஷன் கடை கட்டிடம் .
நமதூர் பிள்ளையார் கோவில் அருகில் தார் சாலை இருந்த இடத்தில் இப்பொழுது மண்சாலை . தார்சாலை மறைந்துபோன மாயம் என்ன ?

பதவி ஏற்றுக்கொண்ட கண்ணியமிக்க பேரூராட்சி மன்ற உறுப்பினர்களே…தாங்கள் 15 பேர்களும் செயல்திறன் மிக்க திறமையாளர்கள்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே சமயத்தில் தங்கள் செய்யும் தங்களின் செயல்பாடுகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவு செய்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதை மதுக்கூர் மக்கள் விரும்புவதில்லை . இறைவனும் ஏற்பதில்லை.

மாறாக தேர்தலுக்கு முன் நீங்கள் சொல்லால் சொன்ன வாக்குறுதிகளுக்கு செயல் வடிவம் கொடுத்து காட்டுங்கள் . மக்களாகிய நாங்களே உங்களை விளம்பரப்படுத்துவோம் .

எதிர் வரும் காலங்களில் உங்களின் கடுமையான முயற்சிகளால் மதுக்கூர் சுத்தமான, சுகாதாரமான , மக்கள் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் ஊராக மாற்றம் காண வேண்டும் என்பது என் அவா.

அரசால் தேர்வு செய்யப்படும் பேரூராட்சிகளில் நமது மதுக்கூரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதினை மத்திய அரசிடமும் நமது ஊர்  பேரூராட்சி பெற வேண்டும் என்பதை என் அன்பான, பணிவான வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன் .

சொன்னதை செய்யுங்கள் ..
சொல்லாததையும் செய்யுங்கள் …..
நல்லதை செய்யுங்கள் …

வாழ்த்துக்களுடன் …

KNM. முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 07.03.22.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR