Madukkur
'80s '90s madukkur

பேரப்பிள்ளைகளை சுமக்கும், இல்லங்களின் சீமாட்டிகள்.

!! பேரப்பிள்ளைகளை சுமக்கும் !!
!! இல்லங்களின் சீமாட்டிகள் !!!

By Janab S. Jabarullah.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு உறவும் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய அருமைபெருமைகள் விளங்கிகொள்ள முடியவில்லை.அதனை விளங்கி கொள்ளும் நேரத்தில் அந்த உறவு நம் கையை விட்டு வெகு தூரத்தில் சென்றடைந்து விடுகிறது.

சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து நல்லது கெட்டது கண்ணாற செய்ய வேண்டிய கட்டங்களை கோட்டை விட்டுவிட்டு , ஈகோக்களை தூக்கிபிடித்து பல உறவுகளை ஈகோக்களுக்கு இறையாக்குகிறது இந்த மானுட வாழ்வியல் ,

ஒவ்வொரு உயிருடைய இழப்பும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை கொண்டது.அதில் மிகமிக முக்கியமானது.
பாட்டியாக்கள் பேரப்பிள்ளைகள் மீது அக்கறை காண்பித்து வளர்த்து இந்த சமுதாயத்தில்,வெளிஉலகத்தில் நடமாட விடும் வரை ஓய்வுகொள்ளமாட்டார்கள்.
இந்த உறவு மிக வலிமையானது.

ஒரு பெண் தாய்மையடைந்து,பல கடினங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் வரையில் அப்பெண் அடையகூடிய துன்பத்தை காட்டிலும்,அப்பெண்ணுடைய தாயார் ,

மகள் கருவுற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நேரமும் தனது மகளை கண்காணித்தவாறே மகளை விட ஒருபடி உடலால் தியாகம் செய்து மிகபெரிய பாதுகாப்பு அரணாக இருந்து அந்த “பேரக்குழந்தையை” பெற்றெடுத்து அக்குழந்தைக்கு 5 வயது எட்டும் வரை ” பேரக்குழந்தையுடைய “(பாட்டிகள்) “உம்மம்மாக்கள் ” பல போராட்டங்களை சந்தித்து அடுத்த தலைமுறையை சரிவர தயார் செய்கிறார்.

இதில் தகப்பனுடைய பாட்டிகள் (அத்தம்மாக்கள்) பங்களிப்பு இல்லை என்று அர்த்தமில்லை,பேரக்குழந்தைகளுடைய விவகாரத்தில் மகளுடைய அம்மாவின் ஆதிக்கமே ஒருபடி மேலோங்கி இருக்கும்.

ஒரு தாய் முதல் குழந்தையை பெற்றெடுத்த பின்பு அந்த குழந்தையை எவ்வகையில் பராமரித்து வளர்ப்பது என்பதில் ஒரு புரிதல் இருக்காது .தெளிவு கிடைக்காது.

அக்குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு மிகப்பெரிய வலுவான சப்போர்ட்டாக கை கொடுப்பது
பாட்டியாமார்களே. கருவடைந்த மகள் எந்த உணவு சாப்பிடணும,எந்த உணவு சாப்பிடகூடாது ,சாப்பிட கூடிய உணவு வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த வகையிலும் பக்கவிளைவுகள் வரக்கூடாது என மிக அக்கறை எடுத்து கொண்டு நேரத்திற்கு மருத்துவமனை, செல்வது நேரத்திற்கு மருந்து மாத்திரை கொடுப்பது “அடுப்படி “வேலை முதல் சகலவிதமான வீட்டு வேலைகளுக்கும் பிறக்க போகும் பேரக்குழந்தையின் மேல் கரிசனம் வைத்து கருவுற்ற தன் மகளையும் ,இரண்டு உயிர்களையும் நெஞ்சோடு சுமந்து ஆறுதலாக இருந்து குழந்தை பெற்றெடுக்கபடுகிறது.இதற்குள் முதல்கட்ட போராட்டம் முடிந்துவிடும்.

அடுத்த நிலையாக அக்குழந்தையை பராமரிப்பது மிகபெரியசவாலான விஷயம்.
அதனையும் நம் பேரக்குழந்தைக்கு தானே கஷ்டபடுகிறோம் என முழு சந்தோஷத்துடன் இரண்டாம் நிலையை தொடங்குகிறார்.

குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது மட்டும் தான் பெற்ற தாயுடைய வேலையாக இருக்கும்.

குழந்தை தொட்டியில் உறங்கும் பொழுது இன்று இருப்பது போல்,மின்விசிறியோ,கரண்டு போனால் பேட்டரி இயக்கி ஓடுவது போல் இருக்காது.

ஒரு பூச்சி, , பூரான், தேள்.,எறும்பு,கொசு,
அண்டவிடாமல் மின்சாரம் இல்லாத காலகட்டங்களில் விசிறிமட்டையை விசிறிகொண்டே தூங்கவைப்பது,தொட்டிலில் படுக்க வைத்து “தாலாட்டு” பாடி அக்குழந்தைய தூங்க வக்கிறதுகுள்ள வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிருவர்.

நீண்ட நேர தொட்டி ஆட்டுதலுக்கு பின் குழந்தை அப்பொழுது தான் கண்ணுறங்கும்.

குழந்தை தூங்குதுனு இவங்க கொஞ்சம் கண்ண மூடுவாங்க திடீர்னு தூங்குற குழந்தை “வீர்வீர்னு ” கத்தி அழும்.
தாய் முழிப்பதற்கு முன்னே, குழந்தை பாட்டியாவின் தோள்களில் அரவணைக்கபட்டிருக்கும்.
“பம்பர்ஸ்” இல்லாத காலகட்டங்களில் துணியை,மாற்றி மாற்றி போட்டு உறங்க வைப்பது,அந்த துணியை கசக்கி போட்டு காயவைப்பது, கேஸ் அடுப்பு இல்லாத காலகட்டங்களில்,மண் அடுப்பில் புகைச்சலுடனும்,கண்ணெரிச்சலுடனும் அடுப்பை ஊதி ஊதி பால் காய்ச்சி பசியை உணர்ந்து, ஆற்றுவது என எடுத்து கொள்ளும் பொறுப்புகள் ஈடு இணையற்றவை.

“சங்கில்”மருந்து ஊத்தும் காலகட்டத்தில் இக்குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதென்பது ஒரு தெய்வீகசெயல் ,அவ்வளவு எளிதல்ல, இன்றும் அப்படிதான்.

துள்ளி குதிக்கும் குழந்தையை மடியில் மடக்கிபோட்டு, வாயில ஊத்திட்டு வேண்டாவெறுப்பா குடிக்கிற குழந்தைக்கும் பொற ஏறாம, பாதுகாத்து வளத்தாங்கல அங்கே தோற்றுபோகிறது ஆண்மையின் அனைத்து பலமும்.

சுடுதண்ணீர் போட்டு பொறந்த குழந்தைய பக்குவமா குளிப்பாட்டி ,எந்த வயசுல இட்லி கொடுக்கணும்,
எந்தெந்த வயசுல எதுஎத கொடுக்கணும்னு வளர்த்து கொண்டு இந்த சமூகத்தில் அந்த குழந்தை நடமாடும் பொழுது அந்த பாட்டியாக்களின் தியாகங்கள்
தான் அங்கே பெரும் பங்காற்றுகின்றன. 5 வயது வரை அக்குழந்தையின் பாதுகாவலானகவே வாழ்ந்து எதுபிடிக்கும் எது பிடிக்காது என அனைத்தையும் அறிந்து அக்குழந்தைக்காகவே தன்னை முழுநேர சேவகியாக ஆக்கி கொண்டவர்கள் இந்த பாட்டியாமார்கள்.
பேரக்குழந்தை 5 வயதுக்குபிறகு பாட்டியாவின் கைகளிலிருந்து வெளியேறி வெளி உலகத்திற்கு கொஞ்சம் காலடி எடுத்து வைக்கும் அப்பதான் மகள் அடுத்த குழந்தையை சுமந்து கொண்டு தயாராவாள்.
மீண்டும் அதே இன்முகத்துடனே அடுத்த போராட்டத்திற்கு “இந்த சேவகி தயாராவார்.

100 க்கு 99 சதவீதமான குழந்தைகள் அன்னையின் தோள்களில் அரவணைத்த நாட்களை விட, பாட்டியாவின் தோள்களில் அரவணைந்த நாட்கள் அதிகம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று அக்கறை கரிசனம் கொண்டவர்கள் அதிகம்.
இவர்கள் உணவு அருந்தும் பொழுது அவருடைய வாயில் உணவு வைத்துகொண்டதைவிட பேரப்பிள்ளைகளின் வாய்களில் ஊட்டி வளர்த்த நாட்களே அதிகம்.

இதே போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பல தியாக செம்மல்கள் இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நமதூரில் காலை,மாலை நேரங்களில் வீட்டு வாசலில் தெருக்களில் உள்ள பாட்டிகள் வெற்றிலைபாக்கு , சுருட்டு சகிதம் என சங்கமிப்பார்கள்.

தெருவில் அனைத்து குழந்தைகளையும் தங்களுடைய குழந்தைகள் போல் உறவு பாராட்டுவார்கள்.

நெற்றி கொஞ்சம் வியர்த்து இருந்தால் போதும் மறுகணம் அவர்கள் தாவணி நம்முகத்தில் பட்டு துடைக்கிற வேகம் தெரியாது.பழைய தலைமுறையினர் மிகமிக கொடுத்து வைத்தவர்கள்.கூட்டுகுடும்பம்,பாட்டிகளின் 90,100வயசு. வரை வாழ்ந்து அரவணைத்தனர்.

இன்றைய தலைமுறைகளில் தற்பொழுதுள்ள சூழலில் இன்றைய பெண்கள் 60,70 வயதை கடப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.

உங்கள் வீட்டில் ஒரு பாட்டியா வயது கடந்து இருப்பாரானால், நேரம் ஒதுக்கி விளையாடுங்கள். அவர்களுடைய வயசு காலத்தில் அனைத்து சிறுவர் சிறுமிகளையும் தங்கள் வீட்டு குழந்தைகள் போன்று செலுத்தியவர்கள்.மிக மிக பேரன்பு கொண்டவர்கள்.
அதிக கரிசனம் காட்டியவர்கள். விளையாட்டு சண்டை, பேரப்பிள்ளைகளோடு அதிகமாக விரும்பி செய்தவர்களாக இருப்பர். “படுவா” என்ற வார்த்தையே இவர்களுடைய செல்ல வார்த்தையும், கோபமான வார்த்தையுமாக இருக்கும்.
வயது கடந்த காரணத்தினால் ஞாபக மறதி,பேசுனதையே திரும்ப திரும்ப பேசுவது போன்ற செயல் ,நம்மை எரிச்சலடைய செய்யலாம்.
ஒரு கணம் யோசித்து பாருங்கள் .எத்தனை தடவை மருத்துவமனைக்கு போகும் பொழுதும், வரும்பொழுதும், பேருந்தில் இறங்கும் பொழுதும்,ஏறும் பொழுதும் உங்களை சுமந்து கொண்டு நீங்கள் தான் உலகம் என வாழ்ந்தவர்கள்.

ஊரைவிட்டு,வெளிநாடு பயணம் வரும் பொழுதும்,போகும் பொழுதும்,இவர்களிடம் கிடைக்கக்கூடிய !முத்தங்கள் ! அந்த கள்ளகபடமில்லாத துவாக்கள்! நமக்காக சிந்தும் கண்ணீர் உண்மையானவை.அந்த பிரார்த்தனையின் மகிமையே ஊர் இன்றும் கம்பீரமாக இருக்கிறது.

அடுத்த தடவை நீ வரும்பொழுது நான் இருப்பனா, இறந்துவிடுவேனா என்று கூறியே 2, 3 முத்தங்களை அதிகமாக கொடுத்தவர்கள்.வெளிநாட்டில் வாழகூடியவர்கள் அறிவர்.

அதிகபட்ஷமாக நாம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்திருப்போம்.
அவர்களும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் கடைசி காலத்தில் அவர்கள் மீது நாம் காட்டகூடிய பரிவுகள் தான்.

. பலரது வாழ்வில் விளையாட்டுதனமாக
பள்ளி தினங்களில் விடுமுறை எடுக்கும் பொழுதெல்லாம்,ஆசிரியரிடம் பாட்டி இறந்துவிட்டது, இறந்துவிட்டது, என்று கூறி அடியிலிருந்து தப்பிப்பதற்காக பலமுறை பொய்யாக வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறோம். இன்று பல உண்மையாகவே நடக்கும் பொழுது நாம் கூறிய பொய்யான வார்த்தைகள். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தத்தங்கள், வலிகள் உணரும்பொழுது ஒரு மிக பெரிய விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை இழந்தது போன்று உணர்கிறோம்.

நம்மை இரவு பகல்,மழை,வெயில்,குளிர் போன்ற பல சூழ்நிலைகளிலிருந்து,
தங்களுடைய தோள் மீது போட்டு , பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய மரணச்செய்தி கேட்கும் பொழுது ,அந்த வலி விவரிக்க முடியாத ஒன்று.

வெளிநாட்டில் வாழும் பலருக்கு அவர்களுடைய, இறப்பில் பங்கேற்க முடியாத ஒன்று ,பெரும் வேதனை. கொடுப்பினை இல்லாதது போல் உணர்கிறோம். அல்லும் பகலும் சுமந்து வளர்த்தவரை
நம் தோளில் சுமந்து செல்ல முடியாமல் அழுகிறோம்.

இன்று சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பின்னாலும் பல பாட்டியாக்களின் தியாகங்கள் நடமாடிதான் கொண்டிருக்கின்றன.

உயிரோடு இருந்தால் மேலும் அரவணையுங்கள்.
மரணித்து இருந்தால் மேலும் துவா செய்யுங்கள்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR