Madukkur
வாழ்கைமுறை - Lifestyle

இதயங்களின் இணையம்

!!80’90″ஸ்களின் சமூக வலைதளமும்!!
!!அண்ணாமெடிக்கலின் இதய தளமும்!!

by Janab S Jabarullah

தொன்றுதொட்டு  நமதூர் ஆண்மக்களின், அன்றுமுதல் இன்றுவரை,  மக்களின் வாழ்வாதாரங்களின் மிக முக்கிய அடிப்படை காரணியாக விளங்குவது “சம்பாதித்யம்”.

சிலர் சொந்த தொழிலாகவும், சிலர் பிறரிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளாகவும், உழைத்து வருமானத்திற்கேற்ப தங்கள் வாழ்க்கைகளின் தேவைகளை, பூர்த்தி செய்து கொண்டு வாழ்ந்தனர். 

காலத்தின் கட்டாயம், (பெற்ற பிள்ளைகளின்) அடுத்த சந்ததிகளின் உயர்வான வாழ்க்கைக்கு சம்பாதித்யம் தேடிடும் பொருட்டு ,” வெளிநாடு செல்லும் ” நோக்கோடு70  களில், ஒன்று இரண்டு, என ஒற்றை இலக்கத்துடன் ஆரம்பம் பெற்றது.

வெளிநாடு பயணம்  80களின் தொடக்கங்களில் சவுதி, குவைத், மலேசியா, சிங்கப்பூர், புருணை, இன்னும் பிற நாடுகளுக்கு, பொருளாதாரம் தேடும் பொருட்டு, இரட்டை இலக்கமாக  மெல்ல மெல்ல தொடங்கியது. 

சென்றவர்கள் லெட்டர் வடிவத்தில்மட்டுமே தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை பரிமாறிக்கொள்வர். சவுதியிலிருந்து ஒரு கடிதம் தமது குடும்பத்தினருக்கு குடும்ப தலைவர்  அஞ்சல் செய்தால்,12’13 நாட்களில் வீட்டில் கிடைக்கும்.

தொலைபேசி  கலந்துரையாடல் மிகமிக குறைவு.தெருக்களுக்குள் எந்த வீட்டிலும் landline போன்கள்  முளைக்காத காலகட்டங்கள்.

அதிரை, முத்துபேட்டை இன்னும் பிற ஊர்களை சேர்ந்தவர்கள்,  சவுதியிலிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் வரும்பொழுது அவர்களிடம், லெட்டர் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் தங்கள் ஊரில் உள்ள போஸ்ட் ஆபிஸ் மூலியமாக கடிதங்களை அஞ்சல் செய்து வைப்பார்கள்.

இந்த அஞ்சலக வாழ்க்கை முறை தான், குடும்பத்தின் அனைத்து நல்லது கெட்டதுகளும், அறிந்து கொள்ளும் வாழ்வியல் முறை இருந்தது.

அடுத்த லெட்டர் வரும்வரையிலும் இந்த லெட்டர் தான் ஒரே ஆறுதல் .திரும்ப திரும்ப எடுத்து வைத்து படிப்பார்கள்.

தேட்டங்கள் திடீரென்று அதிகமானால் எல்லா பழைய லெட்டரையும் மொத்தமாக, வீட்டில் கொட்டி,  பரப்பிகொண்டு படித்து படித்து மனதுகளை சந்தோஷபடுத்தி கொள்வார்கள்.

இப்படி பயணம் சென்றவர்கள் ,
2 வருடத்திற்கொரு முறையோ,3- வருடத்திற்கொரு முறையோ,விடுமுறையில் ஊர் திரும்புவார்கள். இன்று போல், அன்று  வீட்டுவாசலிருந்து விமானநிலையம் சென்று  காரில் அழைத்து வரும் வசதியுமில்லை, வழக்கமுமில்லை.

அவர்கள்  குடும்பத்திற்கு  எழுதிய கடைசி லெட்டரில் தெரியபடுத்திவிடுவார்கள். இந்த தேதியில் ஊருக்கு வருகிறேன் என்று அதுதான் கடைசி தகவல் .வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டுவாசலில் காகம் கரைந்தாலும், ஒங்க மகன் வருகிறார் என மாமியாரிடமும்,அத்தா வறபோறாங்கனு, குழந்தைகளிடமும், மனதிற்குள் வீட்டுக்காரர் வருகிறார்  என சந்தோஷத்துடனும் அந்த முகத்தை காண்பதற்கு, ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும்,  தவமாக    காத்திருப்பார்கள். குடும்பத்தார்கள்.

சென்னை விமான நிலையத்திலிருந்து 2, 3 பொட்டிகளுடனும்,  ” பாஸ்போர்ட்” க்கென்று பிரத்யோகமான, கருப்பு கலர் (handback) உடன், பஸ்ஸில் புறப்பட்டு மன்னார்குடியோ, பட்டுக்கோட்டையோ வந்தடைந்து அங்கிருந்து ஊருக்கு காரில் வருகை தருவார்கள்.

அவர் எழுதிய லெட்டர்க்கு பிறகு இதுதான் இந்த குடும்பங்களுடைய  அடுத்த சந்திப்பு, இன்று நாம் பயணிக்கும் பொழுது போர்டிங் முடித்துவிட்டு, நொடிக்கு நொடி,செல்பி எடுத்து வீட்டிற்கு அனுப்பி மகிழும் இணையவசதி இல்லாமல் வாழ்ந்த தியாகங்களின் பேருருவங்கள்.

வந்தவர் 2, அல்லது 3- மாத காலகட்டம் விடுமுறையை சந்தோஷமாக கழித்துவிட்டு, ஊரிலும், தெருவிலும் வசித்தவர்கள் யாரும் மரணித்து இருந்தால் அந்த வீடுகளில் உள்ளவர்களை கண்டுக்கொள்ள போவார்கள்.

பெரும்பாலும் வாழ்ந்து அனுபவித்து வயது முதுமையடைந்து மரணித்தவர்களாக தான் இருப்பர் .இளம்வயது மரணம் மிகமிக குறைவு , ஒன்று,  ரெண்டு நிகழ்ந்து இருக்கும்.

அவ்வீட்டிற்கு ஆறுதல் சொல்லும் விதமாக அங்கு சென்று,கணவரை இழந்தவராக இருந்தால், சகோதரியை பார்த்து நீ ஏன்க்கா அதையே நினச்சி, நினச்சி  இப்படி கவலபட்டு, நீத்து போற, நீ நல்லாஇருந்தால்தானே புள்ளைங்கள வளர்க்க முடியும். 

நான் உன் தம்பி மாரி இருப்பேன் நல்லது கெட்டது நான் பாத்துகிறேன், உன் புள்ளைங்க என் புள்ளைங்க, உன் குடும்பம் என் குடும்பம் மாதிரினு மனநிலையில் நொடிந்து வாழும் அந்த குடும்பத்தினருக்கு,

அனுசரனையான வார்த்தையாலும்,ஆறுதலாலும் அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்துவார்.

(கொடுத்த வாக்கை காப்பாற்றிய பல ஹீரோக்கள் ஊருக்குள் இருக்கிறார்கள்.)

தன்னுடன் சவுதியில் வசிக்கும், உள்ளூர், வெளியூர் மக்களின் வீடுகளுக்கு சென்று , அவரது குடும்பத்தில் நடக்கும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டு,சிறப்பிப்பார்.

அந்த நிகழ்ச்சிகளை – பிலிம் ரோல் வடிவத்தில் 36 போட்டோக்கள் பிடிக்கபட்டு,இருக்கும்.

அந்த பிலிம்ரோலை தனது நண்பனுக்கு கொண்டு செல்வார்.

அவர் திரும்பவும் பயணபடுகையில் அடுத்த 3- வருடத்திற்கு உண்டான வாழ்க்கை திட்டங்களை வகுத்துவிட்டு பறந்து விடுவார்.

அங்கு சென்றவர் தனது நண்பரின் இல்ல விசேஷத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கூறி காண்பிப்பார்.அதனை கேட்கும் பொழுதே கண்ணீரில் மிதந்து கொண்டே கேட்டு அறிந்து கொள்வதும், அதே போன்று இவர் விடுமுறையில் வரும்பொழுதும், அவர் வீட்டின் விசேஷம், நட்புநிமித்தமாக பயணமென்று கலந்துகொண்டு, பரிமாறி கொள்வதும் என ஒவ்வொரு ஊரும் நட்பால் மேம்பட தொடங்கி, வெளிநாடு வரை பெரிய இணக்கங்கள் தோன்றின.

இதுதான் நமதூரின் பெரும்பாலான குடும்பங்களில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த அயல்நாடுகளில் பொருளாதார தேடும் ஆண்பிள்ளைகளின் வாழ்வியல் முறை.

நாட்கள் செல்ல செல்ல துபாய் நாட்டின் சுதந்திரகாற்று வீச தொடங்கியது.பல கடினங்களுடன் துபை நாட்டிற்கும் சென்று மனைவி, மக்கள், பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் என அனைவருடைய வாழ்க்கையிலும், முன்னேற்றம் வேண்டும், என்றெண்ணிய மக்கள் வெளிநாட்டை மிகமிகநேசிக்க ஆரம்பித்தனர்.

வெளிநாடுகளில் வாழக்கூடிய ஒவ்வொருவருக்கும் இன்றுவரை அவர்களுடைய முதல் வெளிநாட்டு பயணமும், முதல் ஊரின் பிரிவும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

விஷா  வந்துவிட்டது என்று முதல் செய்தி கேட்கும் அந்த நாள் , அந்த ஆண்மகன் அடையும் சந்தோஷம் எல்லையற்றது. பல கனவுகளுடன் ஊரை விட்டு புறப்படுகின்ற , பயணபடுகின்ற அந்த நாள் மிக கொடிய வலியுடையது.
ரணவலியானது.

வீடுகளை பிரிந்து உறவுகளை பிரிந்து, ஊர் மக்களை பிரிந்து , சிறுவயது முதல் நம்மிடையே நெஞ்சங்களிலும், கைகளிலும், கால்களிலும் பிண்ணிபிண்ணி வளர்ந்த நட்பினை பிரிவது உயிர்போவது போன்று இருக்கும். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மாத்தி நெஞ்சம் அழுதுவிம்மி அழுதுகொண்டே    பிரியாவிடை பெற்று செல்வார்கள். நம்மை வீட்டு சென்றவன் பற்றிய நினைவுகள் 1  வாரம் 10  நாள் என அந்த பிரிவு வாட்டும். அவனுடையோ வீடும், கலகலப்பற்று இருக்கும். 

லெட்டர் வந்தால்தான் இன்ப துன்பங்கள் அறிய முடியும். அவனுடைய பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவ்வீட்டிற்கு,நண்பர்கள் வருவதும் போவதும் என ஒருவருக்கொருவர் சென்றுகொண்டு ஆறுதலடைவார்கள். 

இப்படி பயணித்து கொண்டிருந்த நம்முடைய மக்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரிவினைக்கு மருந்து போடும் விதமாக அறிவியல் சிறிதுசிறிதாக நுழைய ஆரம்பித்தது.

3- தெருவிற்கு 1 வீடு என landline தொலைபேசி நுழைய ஆரம்பித்தது. வெளிநாட்டில் உள்ளவரிடம் லெட்டர் மூலியமாக இத்தகவலை தெரியபடுத்துவார்கள்.அவர்களும் போன் நம்பரை வீட்டுக்காரர்களின் அனுமதியுடன் எழுதிபெற்று அனுப்புவார்கள். இந்த  தொலைபேசி நம்பர் தகவல் அனுப்பும் பரிமாற்றம் நடந்து முடிப்பதற்குள் 3- மாத பொழுது ஓடி விடும்.

வெள்ளிக்கிழமை ஒருநாள் கிடைக்கின்ற, வார விடுமுறையில் 3-வது தெருவில் இருக்கும் டெலிபோன் வீட்டிற்கு போன் செய்து தனது மனைவி மக்களுடன் பேசுவதற்கு, அயல்நாடுகளில் உள்ள public telephone booth கூட்டம் வெள்ளியன்று, குறிப்பிடபட்ட இடங்களில் மட்டுமே டெலிபோன் பூத் இருக்குமாம்.

அதிகாலை முதலே கூட்டம்  வரிசையில் நிற்குமாம்.நம்மக்களும் ஒரு 50, நபர் 100 நபர்களின் பின்புறத்திலிருந்து ஒருமணி நேரமோ, இரண்டு மணிநேரமோ காத்திருந்து ஒவ்வொருவராக செல்ல செல்ல  பூத்தின் அருகே வந்து அந்த வீட்டிற்கு போன் செய்து, தன்னை அறிமுகபடுத்திகொண்டு, நான் திரும்ப போன் பண்றேன். என் மனைவி மக்கள கொஞ்சம் கூப்பிட்டு வைங்கனு சொல்லியவர் கட் செய்தவராக, மறுபடியும் பின்புறம் லைனிலிருந்து வருகை தருவார்.

அதற்கொரு 2 மணிநேரமோ, அதற்கு குறைவாகவோ கால்கடுக்க நின்று வருவார் அந்த தாய், மனைவி, மக்களின்
முதன் முதலாக தொலைபேசியில் சந்தோஷகுரலை கேட்கும் அந்த விநாடிக்காக,டெலிபோன் வீட்டு தாய்க்குலமும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அழைத்து, அந்த வீட்டுக்கார பெண்மணிக்கு தகவல் சொல்லி அனுப்புவார்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் தனது கணவரின் குரலை கேட்பதற்காக பரவசமாக கெளம்பி வருவார்கள்.

இவர்களும் டெலிபோன் இருக்கும் வீட்டிலயே காத்திருப்பார்கள்.சில மணிநேரங்களில் அந்த வெளிநாட்டு போன்ரிங் வந்துவிடும், அந்த இரு குரல்களும் சங்கமிக்கும் அந்த தருணம் இருக்கிறதே. 

2- வருடம் கழித்து ஒருவருக்கொருவர் தேக்கி வைத்த அந்த அன்புகள்,  பரிமாறும் பொழுது கண்களில் நீர் தாரைதாரையாக ஓடும்.

நல்லாஇருக்கேன் என்ற வார்த்தை சொல்வதற்கு கூட கண்ட்ரோல் பண்ண முடியாமல் நெஞ்சகுமுறலுடன்
வாய்களில் வார்த்தைகள் ஊசலாடும், வெளிவராது. 5, 6  நிமிட போராட்டத்திற்கு பின் மனதை ஆசுவாசபடுத்தி தேற்றி கொண்டு, பேச ஆரம்பிப்பார்கள். மனைவி, மக்கள்,( அம்மா மகன்) இந்த சந்தோஷமான தருணத்தை தந்த இறைவனை நினைக்கும் பொருட்டாக ஸலாம் கூறி விடையும் பெறுவார்கள்.  

வெளிநாடுகளில்  உறவுகளை பிரிந்து வாழ்ந்த பலரும் இது போன்ற கட்டங்களை சந்திக்காமல் வந்திருக்க மாட்டார்கள்.

டெலிபோன் வீட்டுக்காரர்களையும் மீண்டும் , மீண்டும் தொந்தரவு கொடுக்கமாட்டார்கள்.

நமதூர் மக்களுடைய வாழ்க்கை அமீரகத்தை நோக்கிய பயணம் 80- களின் இறுதிகளில் அதிகம் தொடக்கம் பெற்றது. துபாயிலிருந்து மாதம் இருவர் வருவதும் , இருவர் போவதுமாக ஊர் சுறுசுறுப்பு எழ தொடங்கியது.

வெளிநாடுகளில் சம்பாதித்வர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அவர்கள் முன்னேறுவதற்கும், சாதிப்பதற்கும்அண்ணாமெடிக்கல் மாலிக் அவர்கள் மிகபெரிய பக்கபலமாகவும், பாதுகாப்பு அரணாகவும், பின்புலமாகவும் இருந்தார்கள்.

வெளிநாடுகளிலிருப்போர் அவர்களது வீட்டு திருமணம், வீடு கட்ட இடம் வாங்கி கொடுப்பது, வீடு கட்ட ஆலோசனை கொடுப்பது போன்ற சமுதாய நலன்சார்ந்த விஷயத்தில் அக்கறையுடன் பொறுப்பாக செயல்பட்டு நிறைய பேர் குடும்பங்களின் உயர்வுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். சில கிராமங்கள் உட்பட, வெளிநாடுகளிலிருப்பவர்கள் , யார் என்ன வேண்டுகோள் வைத்தாலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பார்கள். சிலர் மாலிக் அவர்களின் விருப்படியே விட்டுவிடுவார்கள். நீங்கள் பாத்து செஞ்சி கொடுங்கண்ண என்று. மொத்த குடும்ப பொறுப்பையும்  அவர்களித்தில் ஒப்படைத்து விடுவார்கள்.

மொத்தத்தில் சமுதாய மக்களின் ” நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்க தொடங்கினர்கள்.

இச்செய்தி வெளிநாடுகளிலிருப்போருக்கு பரவவே ” அண்ணாமெடிக்கல்” நம்முடைய குடும்பத்திற்கு சிறந்த பாதுகாப்பாளர்கள். சேவையாளர்கள் என்ற நற்மதிப்பு ஏற்பட்டு, துபாய்& இன்னும் பிற வெளிநாட்டு வாழ் மக்களும்
தங்களது வீட்டிற்கு அனுப்பக்கூடிய லெட்டர்களில் அண்ணாமெடிக்கலில் கொடுத்து விடவும் என்ற வாசகத்துடன் வீட்டில் உள்ள ஒருவரின் பெயரும், தெருவின் பெயரும் இருக்கும். பயணத்திலிருந்து வருவபர்கள் அண்ணாமெடிக்கலில் கொடுத்துவிடுவார்கள்.சிலர் அங்கேயே வந்து பார்த்து எடுத்துகொள்வார்கள். 

சில லெட்டர்கள்  பெயருடன் ” புதுத்தெரு” என்ற முகவரி இடம் பெற்றிருக்கும். நமதூர் 4 வகையான புதுதெருக்களை கொண்டது . கொஞ்சம் சிரமபட்டு அடையாளம் கண்டுபிடித்து கொடுத்துவிட்டுவிடுவார்கள்.அதே போல் விடுமுறை முடிந்து திரும்பவும் பயணம் செல்வோர் 2,3 தினங்களுக்கு முன்பாக மெடிக்கலில்  சொல்லி வைப்பார்கள். நமதூர் மக்கள் மெடிக்கலிலயே லெட்டர்களை குமித்து வைத்திருப்பார்கள்.

ஒரு அஞ்சல்பெட்டி போல் கடிதம் போடுவதற்கும் ஒரு பொட்டி வைக்கபட்டு  இருந்தது. பார்சல்களும், வரும், போகும்.

மொத்தத்தில் அண்ணாமெடிக்கல்ஸ் பல குடும்ப இதயங்களின்  செய்திகளை பரிவர்த்தனை செய்யும்  (இதயதளமாக) சிறப்பான சேவை செய்தார்கள்.

இப்படித்தான் நமதூர் மக்களுடைய வாழ்க்கை பயணம் சென்றுகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வீடுகளிலும், landline டெலிபோன் முளைக்க ஆரம்பித்தது. லெட்டர் பரிவர்த்தனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. 1997- களில் முக்கூட்டுச்சாலை டாக்டர் பிரகாஷம் மருத்துவமனை அருகே எனக்கு தெரிந்து பிற மாவட்டம், பிற மாநிலம், பிற நாடுகளுக்கு போன் செய்து பேசிடும் வசதியாக STD,ISD,PCO,   என்ற எழுத்துகளுடன்  மரக்கதவால்  தயாரிக்கபட்ட பப்ளிக் டெலிபோன் பூத் உதயமானது.

ஊர் மக்களுக்கு மிகபெரிய அளவில் கைகொடுத்தது. முக்கிய குடும்ப செய்திகளையும், ஊரின் செய்திகளையும் உடனடியாக போன் பண்ணி தெரிவிக்கும் அளவிற்கு ஊர் வளர்ந்தது. 2004-க்கு பிறகு சிறிய சிறிய கையடக்க செல்போன்கள் அறிமுகம் ஆக தொடங்கின. பட்டுக்கோட்டை டவர் சிக்னல் மட்டுமே கிடைக்ககூடியதாக இருந்து.

2005 களில் டவரும் நமதூரில் நடப்பட்டு , சன்னம் சன்னமாக தொலைபேசி விறுவிறுவென்று கையில் உட்கார்ந்தது.

உலகம் முழுவதும் வெளிநாடுகளில் வாழும் மதுக்கூர்மக்கள், ஊர் செய்திகளை அறிந்து கொள்வதற்காக Madukkur.com என்ற இணையதளம் 2007-க்கு பிறகு துவக்கம் பெற்றது.

3- வது தெரு வீட்டில் போன் செய்து பேசிய காலம் கடந்து , ஒவ்வொருவரும் நினைத்த நேரத்தில் பேசக்கூடிய நிலை உருவானது.இன்ப துன்பங்கள் உடனடியாக பகிரபட்டு கொள்ளபட்டன. வெளிநாடுகளில் உள்ளவர்கள் கான்பரஸ் கால் பேசிடும் விதமாகவும் டெலிபோன் பூத்கள் உருவாகின. மக்கள் மகிழ்ந்து பயனடைந்தனர்.

அறிவியல் வளர்ச்சி அசுரவளர்ச்சி அடைந்ததன் விளைவு வாட்ஸப், முகநூல் போன்ற பலவகையான சமூகவலைதளங்கள் தோன்ற ஆரம்பித்தன. லெட்டரில் மேலோங்கிய நல்லுறவுகள், இவைகளின் மூலம் மேலோங்கவில்லை.

குழந்தை பிறந்து நெகட்டிவ் ரோல் அனுப்பபட்டு குழந்தையை பார்த்த நிலைமாறி , இன்று குழந்தை  பிறந்தவுடன் வாட்ஸப்களில் காண முடிகிறது. வெளிநாடுகளிலிருந்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைகளின் போட்டோக்கள் ஊருக்கு வந்த நிலைமாறி, இன்று  profile picture ல் காணும் நிலை ஏற்ப்பட்டது. இதேபோன்று ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் நுழையநுழைய, முகத்துக்கு முகம் பார்த்து வீடியோகால் பேசும் அளவிற்கு , பிரிவின் தாகங்கள் தேங்காத அளவிற்கு கொடுத்து வைத்த தலைமுறைகளாகினார்கள்.

செல்போன் டவர் வருகையால் பழைய விருந்தாளியான  காகத்தின் கரையும் குரல்களும், பெரிதும் நடமாட்டமில்லாமல் , அதன் சப்தங்களை கேட்க முடிவதில்லை,நாம் வீட்டில் சாப்பிடுகின்ற நேரத்தில் சில காகங்களும், பறவைகளும் தினசரி உறவினர்களாக, உணவருந்தவும், நீர் குடிப்பதற்கும்   வந்து செல்லும், வீட்டில் உள்ள பெரியோர்கள் பழக்கபடுத்தி வைப்பார்கள். குடும்பத்தில் ஒன்றாக சில பறவைகளும் வாழ்ந்தன.

..மாலை நேரங்களில் தெருக்களில் உள்ள மரங்களிலெல்லாம் ஆர்ப்பரித்து கூட்டுக்குள்  அடையும்  காகங்கள், மற்றும்
பறவையின் கீச்மூச் சப்தங்களும், அதிகாலையில் கரையும் அந்த ரிங்டோன்களும், மனதிற்குள் வாழும் அழகோவியங்கள்.

இன்றைய smartphone-ல் வகைவகையான  வாட்ஸப் மெசேஜ் ரிங்டோன் கேட்டாலும், நமதூர் பறவைகளின் ரம்மியமான இரைச்சல்களுக்கு ஈடு இணை ஆகாது.

நாம் இழந்து வரும் பழையனவற்றில் இதுவும் ஒன்று.

ஆயிரம் சமூகவலைதளங்கள் வந்தாலும் கடுதாசிகளில் வரிக்குவரி, வார்த்தைக்கு வார்த்தை, இடம்பெற்ற உயிரோட்டமான அந்த நல உபசரிப்புகளும், சுவாரஷ்யங்களும், இன்றைய சமூக வலைதளங்களில் கிடைக்கவில்லை என்றே  தோன்றுகிறது.

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR