'80s '90s madukkur

90ஸ் ரமலான் நோன்புகளில் , 90ஸ் kidsன் அடாவடி சேட்டைகள்

90ஸ் ரமலான் நோன்புகளில் ,
90ஸ் kidsன் அடாவடி சேட்டைகள்
  by   Janab S.Jabarullah
10 – வயதினை அடைவதற்கு முன்பாக
Funny guys
சங்கைமிகு புனித ரமலான், நோன்பு மாதத்தின் அருமை, பெருமைகள், சிறப்புகள் ஒரு குறிப்பிட்ட பருவ வயதினை கடந்த பிறகு , வருடங்கள் நகர, நகர கொஞ்சம் கொஞ்சமாக சேட்டைகளை மாற்றிக்கொண்டு சில சிறுவர்கள், அமலுக்கான மாதங்களில் இந்த சேட்டைகள் செய்யகூடாது என ஒரு பருவத்தில், உணர்ந்த பின், வயது பக்குவமடைந்து ஒருவர் மாறி அடுத்தகட்டமாக அமலின் பக்கம் செல்வார். ஆனால் அவருடைய அந்த இடத்தில் அடுத்த சிறுவன் வருகை தருவான்.அவருடைய சேட்டைகளை தொடர்வதற்கு,
இதேபோல் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருவர் விட்டு சென்றதை எடுத்து செய்வதற்கு இன்னொருவர் வந்த வண்ணம் இருப்பார்கள்.இந்த அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும். இவர்கள் மாறிய பின்பு இவர்கள் விட்டுசென்ற
” கலாச்சார சேட்டைகளை” எடுத்து செய்வதற்கு அடுத்த தலைமுறை சிறுவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். ஊரில், “வாழையடிவாழையாய்”
ஒரு கட்டத்தில் தொடர்ந்த ஊரின் பாரம்பரிய சேட்டைகள்.
இது மட்டுமல்லாமல் இந்த நோன்பு காலங்களில் தான்
கீழத்தெரு சிறுவர்களுக்கும்,
மேலத்தெரு சிறுவர்களுக்கும்
ஜென்ம பகைபோல் இருக்கும்.
என்ன ( flashback) என்று பார்த்தால்
” கீழத்தெரு சிறுவர்கள் சைக்கிளில் மேலத்தெரு சென்றால், அங்குள்ள சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு 1 டயரின் காற்றை புடுங்கிவிட்டு தள்ளிக்கிட்டு நடந்து போடா, என முறைப்பதும், அதே போன்று
மேலத்தெரு பசங்க சைக்கிளில் கீழத்தெரு பக்கம் வந்தாலும் , இவர்கள் 2- டயரின் காற்றைபுடுங்கிவிட்டு,
சைக்கிள கீழே தள்ளிவிட்டு பழிவாங்குவதும், பகையகையாகவும் தொடர்கதையாக இருந்தது.
இரண்டு தெரு சிறுவர்களும் சந்திக்கும் பொழுதெல்லாம்
போர் மூள்கிற அபாய சூழ்நிலைபோல் காட்சியளிக்கும். நீங்க இனிமே “மேலதெருவிற்கு பொண்ணு” கேட்டு வறாதியடா,
என அவர்கள் கூறுவதும், இவர்கள் பதிலுக்கு எங்கள் “கீழத்தெருவிலிருந்து இனி மேலத்தெருவிற்கு” “பொண்ணு கொடுக்கவும் மாட்டோம், எடுக்கவும் மாட்டோம் என வாய் சண்டை சிரிப்பா சிரிக்கும்.
இதுல கொடுமை என்னவென்றால் சவால்விட்ட
மேலத்தெரு சிறுவன் கீழதெருவில் பெண்ணெடுத்ததும், கீழதெரு சிறுவன் மேலதெருவில் பெண்ணெடுத்து” திருமணம் செய்து இருப்பதும் காலத்தின் விளையாட்டு.
இதோடு மட்டுமல்லாமல் பொதுநிகழ்ச்சிகளில் மேலத்தெரு பசங்களை
கீழதெரு பசங்க இடிப்பதும்
அவனுடைய சகாக்கள் நோன்புல பாத்துக்குவோம்னு
பழிவாங்கும் படலமாக,
முதல் நாள் தராவீஹ் அன்று
இரண்டு குரூப்பும் தயாராகும்.
90ஸ்களில் தலைபிறையன்று மஃரிப் தொழுகை பிறகு தராவீஹ் தொழுகை உறுதி ஆகிவிட்டால், ஒவ்வொரு தெருவிலும் உள்ள சிறுவர்கள் ஆனந்த கூச்சலிடுவர். அந்த கூச்சலுக்கு காரணம், இரவில் ஊர் சுற்றுவதற்கு வீட்டில் கிடைக்ககூடிய முழு சுதந்திரமே. பெரியபள்ளிக்கு தொழுக போகிறோம் என்று கூறிவிட்டு 8- மணியிலிருந்து தெரு முக்கத்திருக்கு ஒவ்வொரு சிறுவராக வர தொடங்கி ஒன்றுகூடி விடுவர்.ஒவ்வொரு தெருவிற்கும் சங்கமிப்பதற்கு ஒரு இடம் இருக்கும் .அதுபோல் “கீழத்தெரு” சிறுவர்கள் பெரும்பாலும் சங்கமிப்பது
” செவிடரப்பா பெட்டிகடை” முக்கம் தான். பெரும்பாலும் பெரியபள்ளியை நோக்கி 100 சதவீதமான சிறுவர்களும் கோலாகலமாக வருவார்கள்.
இந்த நோன்பு 30- நாட்களிலும் நெஞ்சில் கை வைத்தபடி இந்த பயலுவோ இந்த வருசம் என்னென்ன அட்டகாசம் பண்ண போறானுவளோ, என பலரும் பீதியில் இருப்பார்கள். அதில் முதன்மையானவர்கள்.
ஒன்று, சந்தை வியாபாரிகள், மற்றொருவர்,
,இரவு நேரங்களில் சந்தையில் உறங்ககூடியவர்.
முதல் நாள் தராவீஹ் உறுதி ஆன பின்பு, சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பால், தராவீஹ் தொழுகைக்கு வருவதற்கு முன்னரே, மஃரிப் பிறகு பெரியபள்ளியையும், சந்தையையும், ஒவ்வொரு தெருவின் நண்பர்களும், குரூப்குரூப்பாக, படைசூழ ஒரு வட்டமடித்து, சுழன்று கொண்டு வந்துகொண்டே இருப்பார்கள்.
சந்தையில் இச்சிறுவர்களை காணக்கூடிய அனைத்து வியாபாரிகளும் ‘ இந்தா ஒண்ணு சேந்துட்டானுவப்பா, இந்த 1 மாதம் பொழுது இவன்கூட எப்படி போக போதுனு தெரியலனு மனதுக்குள் வருத்தம் மேலோங்க பேசுவார்கள்.
பாக்குகடை மாரியப்பன் செட்டியார் அவர்கள் சந்தைக்குள் நடமாடும் அனைத்து வகையான குரூப் சிறுவர்களையும் மேலேயும் , கீழேயும், ஏற இறங்க பார்ப்பதும், மூட்டைபூச்சி ஆலிம்சாவை பார்த்து நோன்பு ஆரம்பிச்சிருச்சா ராவுத்தரே ஒரே ” ஈசல்படை” நடமாட்டமா இருக்கு என கேட்பார். பதிலுக்கு மூட்டைபூச்சி ஆலிம்ஷா செட்டியாரே இந்த 1 மாசத்திற்கு உங்களையும், உங்க கடை டியூப்லைட், குண்டுபல்பு, நீங்கள் தான் காப்பத்திக்கணும், என் கடைய பாருங்க , குண்டு பல்பு கழட்டி 1- மணி நேரம் ஆச்சு
நீங்களும் கழட்டிருங்கனு எச்சரிக்கை மணி கொடுத்து விடுவார்.
அப்புறம், செட்டியாரே கடைல இந்த மாசம் ” குண்டுபல்பு” வியாபாரம் அமோகமா இருக்கும் நீங்க ஏன் கவலைபடுறிய செட்டியாரே இந்த பசங்க நாள நடக்க போற வியாபாரத்த நினச்சி சந்தோஷபடுங்கனு கிண்டல் செய்வார்.
இந்த சிறுவர்கள் “கச்சல்கட்டி” நடக்கும் தோரணையை பார்க்கும் பொழுதே சந்தை வியாபாரிகளுக்கு அடிவயிறு
கலங்கிரும். எல்லோரும் இன்னைலேந்து கடைய சாத்திட்டு பல்பு,மற்றும் டியூப்லைட்களை கழட்டி உள்ள வச்சிடணும் என்ற மனநிலைக்கு தயாராகி விடுவார்கள்.
குறிப்பாக சுவாமிநாதன் செட்டியார் கடையை சாத்திவிட்டு “சுத்திமுத்தி” பார்ப்பார் .இந்த பயலுவோ கண்டதயும்
புடிச்சி தொங்குவானுவோ நீ “மின்சார மெயின்பொட்டி ஆஃப் பண்ணிட்டு, பீஸ் கேரியர புடுங்கி போடுனு வேலையாட்களிடம் சொல்வார். கடையின் கதவு ஒரு ஒரு மரபலகையாக கொண்ட 7′ அல்லது 8 மரபலகைகளை கொண்டு கடையை மூடிவிட்டு , காலையிலே வறப்ப இந்த கதவு இருக்குமா , பசங்க தூக்கிட்டு போய்ட மாட்டணுங்களே, என்று சிறிய கவலையுடன் கேட்பார்.
அந்த சொல்லில் கடந்த கால பல ஆறாத ரணவடுக்கள் ஏற்படுத்திய தாக்கம் ,கவலைதான்.
அவருடைய” சுவாமிநாதா ஸ்டோர் கடை வாசல்தான்
எங்களுடைய meeting point.
தெருவின் முக்கத்திலிருந்து கிளம்பி “மேலத்தெரு” பயல பள்ளி உள்ள உடகூடாதுனு அண்ணாமெடிக்கல் கிட்ட வம்புழுக்க ரெடியா நிப்போம்.
ஒருவரையொருவர் தாக்கி கொள்ள கொண்டு வரும் ஆயுதம் படு பயங்கரமானது.
சைக்கிள் ரோதையின் ” போஸ்கம்பி” கூர் திட்டி கொண்டு வர்றது.
முதல் நாள் தராவீஹ் இஷா தொழுகைக்கு முன்பாக சண்ட அண்ணாமெடிக்கல்கிட்ட தொடங்கும். மேலத்தெரு பய ஏண்டா கீழத்தெருக்கு வறிய, உங்க பள்ளிக்கு நீங்க போக வேண்டியது தானடானு கீழத்தெரு ” சிறுவன்” ஆரம்பிப்பான்.
அதுக்கு மேலத்தெரு சிறுவன் இந்த பள்ளி ஊர் பள்ளி எல்லாருக்கும் பொதுவானது.
கீழத்தெருக்கு மட்டும் பட்டாபோட்டு எழுதலனு அவன்கூற, வாக்குவாதம் ஆரம்பிச்சிரும். ஒரு பக்கம் பள்ளியில ” இஷா” தொழுகை ஆரம்பிக்க 10- நிமிடம் இருக்கும். கட்டிபுடிச்சி ரோட்டுல உளுந்து புரண்டு ஒரே அமளியா கூகூனு கெடக்கும். தலையில் கர்சீப்”
கட்டிக்கொண்டு தொழுகைக்கு போவோர் எங்களை கண்டும் காணாமல் செல்வர். சட்டை ஜோப்பு பிஞ்சி தொங்கும். இரண்டும் சைடுலயும் இரண்டு பெரிய சிறுவர்கள் தலையிட்டு பேசி தீர்த்துகுவோம்னு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்.
கீழத்தெரு பய காரம்சாரமா பேச ஆரம்பிப்பான். டேய் எங்க கீழதெருல ” மய்யத்தான்கொல்லை” இருக்கு , சந்தை இருக்கு, இந்தியன் பேங்க் இருக்கு. தர்கா இருக்கு,8- வதுவரை படிக்க சந்தைபள்ளிகூடம் இருக்கு, நீங்கள் தாண்டா எங்க தெருவ தேடி வரணும், உங்கள்ட்ட என்னாடா இருக்கு வறண்டு தூந்துபோன, தண்ணி வறாத ஒரே ஒரு ” வாய்க்கால்” வச்சிகிட்டு என்ன ஆட்டம் ஆடுறீங்கனு கேட்பான்.
எங்க ஊரு எல்லைக்குள்ள வர்றதுக்கு உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தா ண்டு கெடக்கும்.
நகரா அடிக்கிற சுவத்து பக்கத்துலேந்து
உள் பள்ளியில் தொழகூடிய A.N.M.ஜின்னா அத்தா டென்ஷனாகி சத்தம் போடுவாங்க .ஏண்டா மொதல் நாளும் அதுமா கொஞ்சம் நிம்மதியா தொழுக வுடுறியலாடா, ஒங்க கீழத்தெரு, மேலத்தெரு சண்டைய ” மூத்தாக்குறிச்சி” பாலத்துல பக்கம் போயி பேசி முடிங்கனு அதட்டலாக குரல் முடியும்.
வாசல் வழியாக ஜலீல்மரைக்கா எங்களை நோக்கி கோவமாக வருவாங்க , மொத்தமா எல்லாரையும் அமுக்கி, முதல்நாள் உள்ள வந்து தொழுவுங்கனு 20- பசங்கள பரபரனு உள்ளே இழுத்துக்கிட்டு போவாங்க. ஒதுவு செய்துவிட்டு
“ஜனாஸா ஹால் தான் எங்கள் அனைத்து தொழுகைக்காக பேவரட் இடம். அங்க தான் தொழுவோம்.
எங்களுடன் மற்ற ஏரியா சிறுவர்களான,
இந்திராநகர், இடையகாடு, கீற்றுசந்தை, பட்டாணியர்தெரு இன்னும் பல தெரு சிறுவர்கள் கும்பல் கும்பலாக முதல் தராவீஹ் அன்று பள்ளியின் உள்ளே இஷா தொழுதுவிட்டு, சில ரக்க அத்துகள், தராவீஹ் தொழுதுவிட்டு, அதுவும் முதல் ரக்காயத் ஹஜ்ரத் நீட்டி நீண்ட வசனம் ஓதுவதால் தக்பீர் கட்டமாட்டோம். ஹஜ்ரத் ருகூஹ் போன பிறகு ஓடி சென்று தக்பீர் கட்டி ருகூஹ் சென்று முதல் ரக்காயத் சேர்ந்து விடுவோம். இப்படியாக சில ரக்காயத்துகள் தொழுதுவிட்டு
வெளியேற தயார் ஆவோம்.
அதுல தெரு பய ஒருத்தன் எங்க கூட சேராம தனியா தொழுதுகிட்டு இருப்பான், அவன்ட்ட போயி நைசா ஊசி போடுறது , ஏண்டா கீழதெரு” பய மீது ஒருத்தன் கை வச்சிட்டான். அவன பழிவாங்க தோணல உனக்கு, உன்
உடம்புல “கீழத்தெரு” இரத்தம் ஓடுறது உண்மைன்னா எங்ககூட வானு கூப்றது அதோட அவனும் கெளம்பி வந்துருவான்.
நகர்வலம் செல்வதற்கு,
முதல்நாளன்று சைக்கிள்கள் பள்ளிவாசல்புறத்திலிருந்து,
“பாரிஅத்தா வீடு வரை” சைக்கிள்கள் இருபுறமும் தெருக்களை ஆக்கிரமித்தவாறு இருக்கும்.பள்ளியின் பின்னாடியும் நோன்பு கஞ்சி கொடுக்கும் வாசல் கேட் வரை, சைக்கிள்கள் வரிசையாக நின்றிருக்கும். பள்ளியை விட்டு வெளியில் வந்த சிறுவர்கள், இது மேலதெரு சைக்கிள், இது கீழதெரு சைக்கிள்னு, டயரின் காற்றை புடுங்கிவிட்டு ” “வால்டியூப்பையும்”,தூக்கி எறிந்துவிடுவார்கள்.head llight டைனமோ மஞ்சள் துணியும் கழட்டி சென்று விடுவார்கள்.
ஒரு சைக்கிள்ள தள்ளிவுட்டா வரிசையாக 10- சைக்கிள் தடதடனு”வுழுவுற சத்தம் கேட்டுகொண்டே இருக்கும்.
ஆங்காங்கே அடுத்த இரண்டு தெருவை சேர்ந்த சிறுவர்களுடைய தள்ளுமுள்ளு, கைகலப்பு, கோஷ்டி மோதல் நடக்க ஆரம்பிக்கும்.
இப்பதான் சந்தை உள்ளே நுழையுறது.எந்த கடையிலாவது தப்பி தவறி டியூப்லைட், பல்பு எறிந்தால், நோன்பு நேரத்தில்
இங்கேயே உடைத்தால் பாவம் என்று,team leader சொல்ல அதனை கழட்டி “பளியாகுளத்தில்” தூக்கி எறிந்து மிதக்கவிட்டு உடைத்து
அந்த தண்ணீரில் அந்த இரவில் வெடிக்கும் சப்தம் வேறு ரகமானதாக இருக்கும்.
அடுத்ததாக ” பன்னிக்குட்டி” சந்தை முழுவதும் கர்ட்,முர்ட்” உர்ட் உர்ட்னு. உறுமலுடன் மேய்ந்துகொண்டு இருக்கும். வளச்சி வளச்சி, துரத்தி துரத்தி அடிக்கிறது, நாலாபுறமும் சிதறி ஓடும் .அப்படி ஓடுகிற பொழுது கடையை சாத்திவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு போகிறவர்களுடைய
சக்கரத்திலோ, முன் கம்பியிலோ, துள்ளி உளுந்து அவரை கீழே தள்ளிவிட்டுட்டு பாய்ந்தோடும்.
சைக்கிளில் கீழே விழுந்தவர்கள் சிறுவர்களை துரத்த ஆரம்பித்து விடுவார்கள். கரிக்கடை பகுதியில் “பன்னிகுட்டியை” துரத்தும் பொழுது வெறிகொண்டு ஓடும், நம் சிறுவர்கள் குறவர்களின் பன்றி பிடிக்கும் பாசையோடு துரத்துவார்கள். பன்னி ஓடுகிற ஓட்டத்தில், கரிகடையில் தூங்கிகொண்டு இருக்ககூடிய 10- நாய்களும், ஓடிக்கொண்டே குரைக்க ஆரம்பித்து விடும்.
வாழத்தாறு கட்டைதான் பன்றி
அடிக்க பயன்படுத்தும் ஆயுதம்.
சில நேரங்களில் 4′ 5 பன்றிகளை துரத்தி 4 பக்கமும் தப்பிக்க முடியாமல் வளைத்து விடுவோம். மீன் மார்க்கெட்டில் ஒரே கும்மிருட்டாக இருக்கும்.
அது தப்பிக்க வழி தெறியாது “பளியாகுளத்தில்” குடும்பத்தோடு பாய்ந்து எதிர்புறம் நீந்தி கடந்து செல்லும் .அது போய் அக்கறையில் சேருவதற்கு முன்னாடியே பெரிய வாழத்தாறு கட்டய தோள்களில் போட்டுகொண்டு அங்கே நிப்போம். நீந்தி கறகிட்ட வந்ததும் எங்கள பார்த்தும், ஏண்டா எங்களை வாழவும், உடமாட்றியா சாகவும் வுடமாட்றியனு, சந்தைபள்ளி பின்புறமா வெளியேறும். அங்கே ஒளிஞ்சி நிண்டு பூசைய போடுறது. அப்ப ஒரு “பன்னிகுட்டி” அடிக்கு பயந்து ஓடுறப்ப சந்தைபள்ளிகூடத்துல பெண்கள் தொழுகை நடந்து கொண்டிருந்தது. தப்பிக்க வழி தெரியாம முதல்கதவு வழியாக உள்ள பாஞ்சிருச்சி, உள்ள கூகூனு ஒரே அமளி சத்தம், இந்த சத்தத்தை எதிர்பாராத பன்னிகுட்டி , மறுகதவு வழியாக வெளியேறியது.
எல்லா பெண்களும் ஒரே திட்டு கருமம் புடிச்சவனுங்களா, போய் தொலைங்கடா அங்குட்டுனு, ஒரே ஓட்டம், தப்பிச்ச பன்றிய அடிப்பதற்கு
சந்தைக்குள்ள துரத்தி வளச்சி புடிச்சி, வாழத்தார் கட்டய அதன் மீது தூக்கி எறியும் பொழுது (அடிக்கிறப்ப) கடைல தூங்கி கொண்டிருந்த ஒருத்தர் நெஞ்சுல அடி பலமா விழுந்துருச்சி, அவர் கத்த, ஒரே ஓட்டம்.
S.S.B கடை சாத்திய பிறகு
வெள்ளக்கட்டி சாக்கில் இருக்ககூடிய பனை(சக்கரை) ஓலைகளை சுவாமிநாதா ஸ்டோர்க்கும் M.R. B.பிரஸ்க்கும் நடுவில் அந்த காலி இடத்தில் கொட்டி விடுவார்கள். ஒரே பன்னிகூட்டமா இருக்கும் , 20,30 பன்னிகுட்டியும், வால குஷியா ஆட்டிகிட்டு, உறுமிகிட்டு மொத்தமாக மேயும். ரவுண்ட்கட்டி அடிக்கிறது .
சில “பன்னி” பயந்து தெரிச்சி ஓடுறப்ப , விடாமல் தொறத்துவோம், பள்ளியின் பின்புறம் நிற்ககூடிய சைக்கிள்களை தடார்புடார்னு தள்ளிவிட்டுட்டு
ஓடும். இந்த சத்ததில் உள்ளே தொழுது கொண்டிருப்பவர்கள்,(what is this) என்ற முணுமுணுப்புடன் அகலின் இரும்பு ஜன்னல் வழியாக சத்தம் போடுவார்கள். சில நிமிடங்கள் ஹஜ்ரத்” தொழுகையை நிறுத்தி வைத்தும் இருந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக கரிக்கடை
கரிவெட்டுற புளியமரகட்டைகளை,இந்த கடையில் உள்ளதை, அந்த கடையிலும், அந்த கடையில் உள்ளதை, இந்த கடையிலும் மாத்தி போடுவோம்.
கோழி கூண்டுகளை தலைகீழாக பொரட்டி போட்றுவோம்.
அடுத்து பழக்கடை அழுகிபோன ஆப்பிள், வாழைபழம், சந்தை மாட்டுக்கு கொட்டி வச்சிருப்பாங்க .ஒரு கூடைல ,
அத எடுத்து போட்டி போட்டு சாப்பிடுறது. பழவண்டி (தள்ளுவண்டிய) தள்ளிக்கிட்டு போய் தர்ஹாகிட்ட வச்சி சுத்தி சுத்தி
ஏறி ஏறி விளையாடுவோம்.
அடுத்து டீக்கடை பட்டறை,
அலுமினிய தகரம், அதபுடிச்சி இழுத்து இரண்டு கடை தள்ளி
தூக்கி போடுறது.
குப்பையில் கொட்டி இருக்கும்
பயன்படுத்திய தேயிலை தூள்களை தூக்கி சந்தை முழுவதும் உள்ள சாலைகளில்
கொட்டி அழகு பார்ப்பது .
காய்கறி ரவி அண்ணன் கடைக்குள்ள தட்டிய தூக்கிவிட்டு, காரட் , வெண்டிக்காய் திருடி தின்பது
என அட்டூழீயங்களின் பட்டியல் நீளம்.
அடுத்ததாக உப்புகடை, அடுக்கி இருக்கும் உப்பு மூட்டைய சரிச்சிவுடுறது.
பக்கத்துல MJN சைக்கிள் கம்பெனி ” புளியமரத்துல” கெடக்குற டயர், டியூப்களை எடுத்து சுத்தி சுத்தி வீசுறது,
நடராஜன் அண்ணன் மற்றும் அலாவுதீன் அண்ணன் கடைல வெளியில் இருக்கும் முட்டைதகடுகள் காற்றில் பறக்கவிட்டு (complan) விளையாடுவோம்.
தர்ஹா திண்ணைல தூங்குற
மிஷ்கின்பாவாவுடைய லுங்கிய புடிச்சி இழுத்து வுட்டுட்டு ஓடுறது, ஒரு தடவை வேகமாக
லுங்கிய இழுத்தவுடன் பாவா டென்ஷனாகி லுங்கிய கழட்டி எங்களிடம் கோபமாக தூக்கி எறிந்தார்.
எடுத்துகிட்டு ஓடுங்கடானு .
டைலர் கடைல வெட்டி தைத்த பிறகு மீதமுள்ள பழைய துணியை மார்க்கெட் முழுவதும் தூவி தூவி ரசிப்போம்.
கீத்து சந்தைல அடுக்கி இருக்கிற எல்லா கீத்துகட்டுகளையும், சரிச்சிவிட்டு, விளையாடுவோம்.
செய்கூலி, சேதாரம் இல்லாமல் தப்பிக்கிற ஒரே கடை ஜவுளிகடை மட்டுமே.
இப்படி 200- க்கும் குறைவான அனைத்து தெரு சிறுவர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு சந்தையை உண்டு, இல்லை, என ஆக்கிவிடுவோம்.
பொழுதா பொழுதனைக்கும் ” ஜலீல் மரைக்காட்ட பஞ்சாயத்திற்கு ஆளாளுக்கு வருவாங்க. காய்கறிகடை, பழக்கடை, கரிக்கடை, மீன்கடை, சந்தைபள்ளி பிரச்சனை,டீ க்கடை, வாழக்கட்டைல நெஞ்சில அடி வாங்குனவர்,
பஞ்சாயத்து என
பரபரப்பாக இருக்கும். ஜலீல் மரைக்கா சிரிச்சுகிட்டே ” சின்ன பசங்க” புரியாத பருவம் , தெரியாமல் நடந்து இருக்கும்.அடுத்த வருஷம் நடக்காம பாத்துக்குவோம் என
புன்னகையுடன் பேசி அனுப்புவார்கள்.எங்களை விட்டு கொடுக்காமல் பேசுவார்கள்.
பொழுது விடிந்து சந்தையின் நிலமையை பார்த்தால், வன்முறை நடந்து, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்தது போல், திக்காலுக்கு திக்கால், மூலைக்கு மூலை, ஒவ்வொண்ணா சிதறி கிடக்கும். வாழத்தாறு கட்ட, டீ கடை தவரம், மணிக்கடை அட்டைபெட்டி,கிழித்து எறியபட்ட மெல்லிய சணல்சாக்கு” பழக்கடை தள்ளுவண்டி, அடித்து நொறுக்கபட்ட காய்கறிகடை கள்ளிபொட்டி, பரவலாக தூவபட்ட அழுகிய காய்கறிகள், கரிக்கடை மரக்கட்டை,முட்டை அடுக்கி வைக்கும் முட்டை தகடுகள்,
புரட்டி போடபட்ட கோழி கூண்டுகள், சம்சாகடையின்
மூங்கில் கூடைகள், வெற்றிலை சுத்துற வாழைஇலை, மீன்கடை பாத்திரங்கள் , அடி வாங்கி நொண்டி நொண்டி, ஒரு சைடு இழுத்தபடியாக நடக்கும் பன்னிகுட்டி , சாலை முழுவதும் அனைத்து டீ கடையின் தேயிலை தூள்கள், தூவபட்டு
அலங்கோலமாக காட்சியளிக்கும். மற்ற 29- நோன்பு நாட்கள் இந்த பயல்வலோட எப்படி கடக்க போறோம்னு தெரியாமல் புலம்புவாங்க. காய்கறி கடை ரவி அண்ணன் இந்த பயல்வோ ” முகமூடி திருடன விட மோசமா இருக்கானுவோ,
பூட்டி இருக்க கடைல 2,3 கிலோ காரட் எப்டி எடுக்குறானுவோண்டு தெரியலனு சிரிக்கும்.
27- ம் கிழமை மிக ஸ்பெஷல் புதுகைலி, புது சட்டையுடன் பன்னி அடிக்க தெருவிலிருந்து புது கைலிக்குள் கூலாங்கற்களையும், ஜல்லி கற்களையும், கொண்டு செல்வது.
27- ம் கிழமை’ “பன்னிகுட்டி” எங்களுக்கு பயந்து எங்கெல்லாம், புதர்களுக்குள் தலைமறைவா ஒளிஞ்சி படுத்து கெடக்கோ, தேடிபுடிச்சி ஓட ஓட விரட்டி,விரட்டி அடிக்கிறது. தவக்களை, பெருச்சாளி, சுண்டலி, மூஞ்சிறு, ஊர்வன, பறப்பன, இளைவன, என்று ஒண்ணு வுடாம அடிக்கிறது அது முடிந்த கையோடு
பெரியபள்ளிவாசலில் ஸகர் விருந்துக்கு முன்பாக ஜனாஸா ஹாலில் நிறைய சிறுவர்கள் உறங்குவார்கள்.
உறங்குகின்ற இரண்டு சிறுவர்களுடைய கைலியை பிடித்து முடிச்சுபோட்டு வுடுறது, மூக்குல மூக்குபொடிய வச்சுவிட்டு தும்ம விட்டு வேடிக்கை பாக்குறது என புரியாத சிறு பருவத்தில் செய்த சேட்டைகள் பல .
பெருநாள் அன்று” தீ பந்தம்” கொளுத்தி ஏரிக்கரைக்கு குளிக்க போறதுக்கு , தீ பந்ததிற்கு தேவையான இரும்பு கம்பிகள்,
புதுவீடு கட்டுபவர்கள் வீட்டில் 2, 3 கம்பிகள் அபேஸ் செய்துடுவோம். பந்தம் கட்டுவதற்கு கையலி , தேவைபட்டால் யார் வீட்லயாவது கொடியில் காய்கின்ற பழைய லுங்கிகளையும் தூக்கிவிடுவோம்.
விடிந்தால் பெருநாளாக இருக்கும். விடிய விடிய கலர்கொடி, பிறைகொடி ஒவ்வொரு வீட்டு மேலயும், ஏறி நின்று கட்டும் பொழுது
கீழிலிருந்து கொடியையும், துண்டு சணலையும் மேலே கட்டுபவனுக்கு சரியாக தூக்கி எறியமாட்டான் .அவன் கெட்ட வார்த்தை 2, 3 பேச ஆரம்பிச்சிருவான், பதிலுக்கு கீழே உள்ளவனும் பேச, அமளியா இருக்கும்.
கத்துற கத்துல தூங்கிகிட்டு இருக்ககூடிய ” பாட்டியாமார்கள்” முழிச்சுடுவாங்க. தலைமுடிய அவுத்து கட்டிகிட்டே” “கல்ச்சல்லபோய்ருவியலானு” வீட்டைவிட்டு வெளி வாசலுக்கு வந்துடுவாங்க . அடேய்,ஏங்கடா நோன்பு நேரத்துல ஏண்டா இப்படி புதுசுபுதுசா, காளிவார்த்தை தினுசுதினுசா, பேசுறீய, 30- நோன்புலயும் எங்கள நிம்மதியா தூங்கவுடல, இன்னைக்கும் ஏண்டா அமளி” அடிக்கிறியனு சத்தம் போட்டுட்டு போவாங்க. இப்படி பல பல சந்தோஷங்களுடன், நடப்புகளுடன் சில பெருநாள்களை கடந்தோம்.
1970- களிலா அல்லது 1980-களிலா என்று ஞாபகமில்லை பெரியோர் ஒருவர் கூற கேட்டிருக்கிறேன்.
29- நோன்புகள் நிறைவடைந்த பிறகு நாளை பெருநாளா, அல்லது நோன்பு நோற்கணுமா,என்று மஃரிப் பிறகு தலைமை ஹாஜியின் அறிவிப்பிற்கு காத்திருக்கும் சூழல் நிலவியபோது ” தராவீஹ்” தொழுது நாளை நோன்பு வைக்கலாம் என பள்ளி மைக்கில் அறிவித்து விட்டார்களாம்.
பெண்களெல்லாம் இரவு தொழுகையை முடித்து விட்டு ஸகருக்கான வேலையை முடித்துவிட்டு உறங்கி கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று
நள்ளிரவு 2- மணியளவில் நகரா அடித்து பள்ளி மைக்கில் இன்று பெருநாள் உறுதி ஆகிவிட்டது .யாரும் நோன்பு நோற்க வேண்டாம் என அறிவிப்பு செய்து இருக்கிறார்கள்.
திடுக்கிட்டு எழுந்த மக்கள் ஒன்றும் புரியாமல் ஊரே அமளியாக இருந்துள்ளது.
” ஆடு அறுக்காமல் ” அன்று கரி கிடைக்க பெரும் தட்டுப்பாடாக இருந்தாம்.
ஒரு வழியாக பெருநாள் கொண்டாடி அந்த நோன்பு பெருநாளை முழுமை செய்து இருக்கிறார்கள்.
நமதூரின் கடந்த கால
!! சிறுவர்களின்!! நோன்பு பெருநாள் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், அனைத்தும் நினைவு கூற, கூற !! சுவாரஸ்யம்!! மேலோங்கி நிற்கிறது என்றால் அது மிகையாகாது.
அன்றும்’ இன்றும்’ என்றும்’ நமதூரின் ஒவ்வொரு “சிறுவர்களுடைய” நடப்புகளும் , சேட்டைகளும் ஒரு ரசிக்கதக்க தனித்துவம் வாய்ந்ததே.
by   Janab S.Jabarullah

கருத்து தெரிவியுங்கள்