Madukkur
வாழ்கைமுறை - Lifestyle

80ஸ் 90ஸ் கந்தூரி விழா – ஷேகுரப்பா தர்கா

” 80ஸ் 90ஸ் கந்தூரி விழா – ஷேகுரப்பா தர்கா ” – by Janab S Jabarullah.

மதுக்கூர் மகான், ஷேக்பரீது ஒலியுல்லாஹ்,

சந்தனகூடு கந்தூரி விழா, ஷேகுரப்பா தர்கா.

80ஸ் 90ஸ்-களில் ( மதுக்கூரில்) வாழ்ந்த  ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கை பாதையை கடந்து பயணித்தவர்கள் தான்.

” நோன்பு பெருநாள்”, ”  ஹஜ் பெருநாள்” என்ற இந்த இரண்டு பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகுவிமரிசையாக கொண்டாடபடுகின்ற மற்றொரு பண்டிகை தினம்  “கத்ததிரா”

பத்துநோன்பு, ஸப்ர்களுவு, ஆண்டவன் கந்தூரி, மையதுன் ஆண்டவோ  கந்தூரி,முத்துபேட்டைகந்தூரி ,நாகூர் கந்தூரி ,  *நம்மூர் கந்தூரி* ,அல்வாபிறை, நோன்பு,6 நோன்பு,அம்மாபிறை, சூட்டுகரி,என இந்த பிறைகளின் பெயர்களையெல்லாம், நம் வீட்டு பாட்டிகள், பெண்கள் என, மாதத்திற்கு 2,3  தடவையாவது குடும்ப விஷேஷ தினங்களுக்கும் , வெளிநாட்டிலிருந்து வருவோர் , போவோர் கணக்குகளை  அடையாள குறியீடாக, இந்த வார்த்தை பிறைகளை விரல் விட்டு  பயன்படுத்துவார்கள். இப்படி சொல்லாடலில்  பயன்படுத்துகின்ற பிறைகளில் ஒன்று தான்  “நம்மூர் கந்தூரி”

நம்மூர் கந்தூரி 

“ஜியாரத்” (கத்தம்பாத்தியா  ஓதும் இரவு) என்ப(து)தான் நாளடைவில் ” மருவி”  நமதூர் மக்களால் கத்ததிராவு என நாவில் ஒட்டிக்கொண்டு இன்றுவரை வழக்காடு மொழியாக இருக்கிறது. சேகுரப்பா தர்ஹாவில் ஜியாரத் செய்து கொண்டாடி மகிழ்ந்த வாழ்க்கை, முற்காலத்தில் பெரும் சந்தோஷத்தின் உச்சநிலை அடைந்த நாட்களாக ஊர் காணப்பட்டது

இந்த கந்தூரியின் நிகழ்வுகளால், நம்மூர் கந்தூரிக்கு,  2-நாளைக்கு முன்னதாகவே நம்முடைய வெளியூர் உறவினர்கள் திருமகோட்டை, ஆழியூர்,ஏனாதி, நரியங்காடு,நாடங்காடு ,ஏனாதி,அதிராம்பட்டினம், முத்துபேட்டை , நாச்சிகுளம், கடுகச்சேரி  இன்னும் பல ஊர்களில் இருக்ககூடிய பெரிய மனிதர்கள் முதல் சிறுகுழந்தை வரை குடும்ப சகிதமாக அவரவர் உறவினர் வீட்டுக்கு வருகை தந்துவிடுவார்கள். தெருவில் உள்ள ஒவ்வொரு வீடும் கந்தூரியின் மகிழ்ச்சியை எதிர்பார்த்து குதுகலமாக இருக்கும் .மறுபக்கம் இளஞ்சிறார்கள், பாளையக்கடை , அமளி அடித்துகொண்டு   தெருவே ரெண்டு பட்டு இருக்கும். சில வீடுகளில், தெருக்களில்  சக்கரைகஞ்சி காய்ச்சி சிறுவர்களுக்கு காலை முதலே கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பெரும்பாலும் கந்தூரி அன்று  பள்ளிக்கூடம் அரை நாள்லீவு விட்டுவிடுவார்கள்.

கந்தூரி காலை முதலே அனைத்து வீடுகளில் உள்ளவர்களும், மாலை தர்ஹாவிற்கு செல்லகூடிய அந்த நேரத்தை எதிர்பார்த்து பரபரப்பு தொடங்கிவிடும். சில வீடுகளில் இசைமுரசு  ” நாகூர்ஹனிபாவின் ”  பாடல்கள் அதிகாலை முதலே ஒழிக்க தொடங்கிவிடும்.

வீட்டிலுள்ள பெரியோர்கள் கறி, காய்கறி என அறுசுவை உணவுக்கான பொருட்கள் வாங்குவதற்கு சந்தைக்கு ஆயத்தமாவர். கறிகடை உள்ளே நுழைந்ததும் தொடக்க கறிகடை முதல் கடைசி கறிகடை வரை ஆடுகள் உறிக்கபட்டு கறிகள்     சப்பை, சப்பைகளாக கயிற்றில் தொங்கி கொண்டிருக்கும். எல்லாகடைகளிலும் தட்,புட்,என கறிவெட்டும் சத்ததுடன் அனைத்து கறிகடையும் படு பிஸியாக இருக்கும்.ஸ்பெஷலாக   , *லியாக்கத்அலி* அண்ணன், *சேட்டு* அண்ணன் கறிகடைகளில், *அண்ணமகனே இங்கே வாடானு* மொரட்டு கத்தியால் வெட்டிகிட்டே அழைப்பார்கள்.

ஜமாத் பெரியோர்கள் அனைவரும் கறிகடைகளில் ஒன்றாக சங்கமித்து அரட்டை தொடங்கிவிடுவார்கள்.மாப்ள,மச்சான், மாமா நீ வாங்குன கறிக்கு நான் காசு கொடுக்குறேனு அமளி தொடங்க ஆரம்பிக்கும். விளையாட்டு பேச்சுகளாலும் நய்யாண்டி வார்த்தைகளாலும் கறிக்கடைகள் *பட்டிமன்றம்* போல்  காட்சியளிக்கும். கறி வாங்கி வீட்டுக்கு வந்த பின் , *அம்மிகற்கள்* அரைப்பது என   வேலையை பெண்கள்  தொடங்கிவிடுவார்கள்.

மறுபுறம், பெண்ணெடுத்த, மாப்பிள்ளையெடுத்த, எடுக்க போகின்ற  சம்மந்தி வீடுகளுக்கும் , நம்முடைய உறவினர்களுக்கும்,   கொத்துபுரோட்டா”  மற்றும் “சுவீட்”ஆர்டர் கொடுக்கும்  வீட்டு ” மசூரா” நடக்கும். (இந்த மிட்டாய் கலாச்சாரம் கந்தூரி அன்று ஒரு மிகபெரிய அறியபொருளாக  பார்க்கபட்டது. காரணம் ,இன்று இருப்பது போல் மிட்டாய் அவ்வளவு எளிதில் கிடைக்கும் பொருளல்ல, பொருளாதார சூழலும் வளராத காலம் என்பதால் ,வருடத்திற்கு ஒருமுறை அதுவும் கந்தூரி தினத்தில் மட்டும்  வாங்கி புசிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது. இன்று பல ஊர்களில் நடக்கும்  கந்தூரிவிழாவில் மிட்டாய்கடைகள் அதிகமாக  ஜொலிப்பதற்கு காரணம் இதுவே.

3- மணியிலிருந்து உறவினர் வீட்டுக்கு மிட்டாய் கொடுக்கும் பரபரப்பு ஏற்படும்.மறுபுறம் நமது வீட்டிற்கு உறவினர்களும், ,அக்கம் பக்கம் வீடுகள் வருவது போவது என வீடுகள் சந்தோஷத்தால் திணறும். மறுபுறம் தர்கா மைதானத்தில் 3- மணியிலிருந்தே “சந்தைபள்ளி ” வாசலிருந்து மார்க்கெட் எல்லை வரை சிறுசிறு  கடை வியாபாரிகள்  இடம் பிடித்து கடை போட்டு கொண்டு இருப்பார்கள்.

இரண்டு புளியமரத்திற்கு நடுவே ஒரு ராட்சத மர *ராட்டினம்* 10- நாட்களுக்கு முன்னதாகவே வருகை தந்து கந்தூரி நாளை எதிர்நோக்கி காத்திருக்கும். மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தாய்மார்களும் , சிறுமிகளும் தங்களை புத்தாடைகளுடன், தயார்படுத்திக்கொள்ள துவங்க ஆரம்பிப்பார்கள். பாட்டியாக்கள்  (நேர்ச்சை) நேர்த்திக்கடன் என்று ” *சக்கரைகஞ்சி* “யை தயார்படுத்துவார்கள். ஆண்கள்,இளைஞர்கள், சிறுவர்கள் இவர்களெல்லாம் அவரவர் நண்பர்களுடன் இணைந்து கொண்டு சென்று விடுவார்கள்.

மஃரிப் தொழுகைக்கு பிறகு ஒவ்வொரு தெருவிலிருந்தும்  தர்காவை நோக்கி, (அம்மா)தாய்மார்கள், தோழிகள் , சிநேகிதிகள், சிறுமிகள்  என செட்டுசெட்டாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி  கூட்டம் கூட்டமாக கிளம்பி நடக்க  ஆரம்பித்துவிடுவார்கள். பிறந்து சிறிது மாதமான  குழந்தைகளையும்  தோளில் சுமந்து கொண்டும் வருவார்கள்.

பெருநாள்கொல்லை, நூருல்இஸ்லாம் தெரு, பள்ளிவாசல் தெரு ,இடையகாடு,புதுத்தெரு,இராமாம்பாள்புரம்,செட்டிதெரு இந்திராநகர் என அனைத்து தெருக்களும் பரவசமடைந்து காணப்படும். இவர்கள் நடந்து வரவர ஒவ்வொரு வீட்டு பெண்களாக துணையாக சேர்ந்து கொள்வார்கள். சில வீடுகளில் இவர்களை வழிமறித்து ” சக்கரைகஞ்சி” கொடுத்து குடிச்சிட்டு போங்கனு கூப்பிட்டு , செல்ல அதட்டலுடன்  அன்புடன் அழைப்பார்கள்.

இதனை பருகிவிட்டு இந்த பகுதியிலிருந்து செல்கின்ற பெண்கள் அனைவரும் சந்தைபள்ளிக்கூடத்தில் ஒரு சேர *ஒன்றுக்கூடுவர்.ஜெனரேட்டர்* பெரும் சத்ததுடன் ஓடிக்கொண்டே இருக்கும்.டியூப்லைட் வெளிச்சத்திற்கு நடுவே பல கடைகளும் பரபரப்பாக இருக்கும்.சட்டிபானைகடை மட்டும் அன்று விடுமுறை. *அரசமரம்* அழகியகாற்றுடன் அசைந்தாடி கொண்டே  இலைகளை உதிர்த்து  கொண்டே இருக்கும்.  மறுபுறம் சூரியதோட்டம், பட்டாணியர்தெரு, மேலத்தெரு , முஹம்மதியதெரு, பஜனைமடதெரு, மக்கள் அனைவரும் மேலத்தெரு சங்கத்தின் வாயிலில் ஒன்றாக குழுமுவார்கள்.

இதற்கிடையே தர்கா மிணுக்குலைட்டுகளால் அலங்கரிக்கபட்டு மிண்ணிமிண்ணி, கொண்டு வண்ண வண்ண கலரில்  ஜொலித்து கொண்டிருக்கும் . மைதானம் பலவித வியாபாரிகளின் வரவால் களைகட்ட தொடங்கிவிடும் .இந்த கூட்டத்திற்கு நடுவே இரண்டு பக்கமிருந்தும் வந்த பெண்கள் ஒன்றுகூடிவிடுவார்கள். ” புறாக்கூண்டு ” வாசலில். சாம்பிராணிபுகையின் நறுமணம் சுண்டியிழுக்கும்.

திரும்பிய திசையெங்கும் வெள்ளை தொப்பிகளாலு,வெள்ளைதுப்பட்டிகளாலும்,நிரம்பியிருக்கும். பார்க்கும் கண்களுக்கு அவ்வெண்மையானது. மனதிற்குள் ஒரு இனம்புரியாத நல்ல மனஎண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும். ஜியாரத் செய்வதற்கு சீனி,சக்கரை,கல்கண்டு, பத்தி, எண்ணெய், சூடம் போன்றவைகள் வாங்குவதற்கு திட்டமிட்டு கலைச்செல்வம் (அண்ணன்) மளிகைகடை, தாஜ் அண்ணன் மளிகைகடை என கூட்டம் மொய்க்கும் . இவையில்லாமல் தர்காவை சுற்றி  சின்ன சின்ன ஸ்டால் இடப்பட்டு  சீனி,சக்கரை, ஊதுபத்தி வியாபாரம் செய்வார்கள். எல்லாகடையும் கூட்டத்தால்  நிரம்பி வழியும். பூக்கடை வியாபாரிகள்  அன்று மட்டும் திக்குமுக்காடி நிப்பார்கள். மாலையும், பூக்களும் அவ்வளவு கிராக்கியாக இருக்கும்.

அனைத்தையும் வாங்கிகொண்டு ஜியாரத் செய்ய படியேற முடியாது. கூட்டம் கட்டுக்கடங்காமல் நெருவுளியாக இருக்கும்.குறுக்கே கயிறு கட்டபட்டு ஆண்களுக்கு ஒரு வரிசையும்,பெண்களுக்கு ஒரு வரிசையும் என அமைக்கபட்டிருக்கும். ஜமாத் மற்றும் சமுதாய பெரியோர்கள்,    ஆண்கள், பெண்களின் நலன்கருதி சற்று முன்னதாகவே ஜியாரத் செய்து விட்டு வெளிபகுதிக்கு சென்று விடுவார்கள்.வாசலில்  நெட்டபாய் *சுல்தான்* அவர்கள் மற்றும் அவர்களுடைய தாயார் 2 ,3 பேர் சாம்பிராணிபுகை வாசனை புகையவிட்டு  கொடுத்துகொண்டே இருப்பார்கள். அதனைகடந்து உள்ளே நுழைந்தவுடன் ஜியாரத் செய்ய வரிசையில் நிற்க வேண்டும். ஜியாரத் செய்தவர்கள் வெளியேற வெளியேற புதியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.

ஒரு வழியாக  தள்ளுமுள்ளுடன்,கப்ரின் அருகே சென்று ” ஷரிபுவாவா ” அவர்களிடம் சென்றடைந்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சு வரும். சரிபுவாவா 4′ அல்லது 5 சக்கரை, சீனி  பொட்டலங்களை கையில் வைத்து கொண்டு  ” பாத்திஹா ” ஓத தொடங்குவார்கள். அல்ஹம்துசூரா, சூராஇக்லாஸ், சூராபலக்,  சூரானாஷ் போன்றவைகளை ஓதும் பொழுது அழகாக காட்சியளிப்பார். வெள்ளைஉடை, தோளில் வெண்மைநிறத்தில் , மெல்லியநூலால் ஆன மென்துண்டு, தலையில் நீள வடிவத்தில் நீல வடிவிலான தொப்பி என பார்ப்பதற்கு அம்ஷமாக இருக்கும். பாத்திஹா முடிந்து இரு கைகளையும் ஏந்தி  துவா கேட்கும் பொழுது சரிபுவாவாவின் இரு கண்களும் இடையிடையே சிமிட்டி கொண்டே இருக்கும். இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து வசீகரமாக வாவா காட்சியளிப்பார்கள்.

துவா முடிந்த பின் சர்க்கரை பொட்டலங்களில் *மல்லிகைபூக்களை* தூவி ” *நார்ஷாக்களை* கொடுப்பார்கள். நர்ஸாக்களை மல்லிகைபூக்களுடன் சுவைப்பது தேனமிர்தம் போல் இருக்கும். ஊதுபத்தியை கொளுத்தி இடதுபுறம் ஸ்டாண்டில் வைத்து விட்டு , கப்ரின் அருகே சென்று மாலைகளையும்,  பூக்களையும் கப்ரில் சாய்த்துவிட்டு அடுத்தகட்டமாக ஆளுயர குத்து(நெருப்பு)விளக்கின் பகுதிக்கு சென்று எண்ணெய்யை விளக்கின், கீழ்பாகம், நடுபாகம், மேல்பாகம் என  ஊற்றிவிட்டு, மிதமான சூட்டுடன் எரிந்த எண்ணெயை உடலின் வயிற்றுபகுதி, தொண்டைபகுதி, கழுத்துபகுதி,  என தடவிவிட்டு ” தோப்புகரணை ” போட துவங்குவோம் .வலது கையால் இடது காதையும், இடதுகையால் வலது காதையும் பிடித்தபடியே” 11, தடவையோ அல்லது அதற்கு மேற்பட்டோ, போட்டிபோட்டுகொண்டு சிறுவர்களும், சிறுமிகளும் , தோப்புகரணை போடுவார்கள். அடுத்ததாக பேச்சு வராத குழந்தைகளுக்கு *பட்டாணியை* தலையில் கொட்டி நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்.அந்த பட்டாணிகள் புறாக்களுக்கு உணவாக பயன்படுத்துவார்கள்.

இதனை முடித்துகொண்டு வெளியே வந்தால்  ” சக்கரைகஞ்சிக்கு” ஒரே கூட்டமா இருக்கும். ஆளாளுக்கு குடுப்பாங்க அது என்னவோ குடிக்க குடிக்க திகட்டாமல் இருக்கும். வாளியின்  தண்ணீரில் குடிக்கும் டம்ளர்கள் மிதந்துகொண்டே இருக்கும்.  விறுவிறுப்பாக கழுவி குடிக்க, குடிக்க கொடுத்து கொண்டே இருப்பார்கள். கஞ்சி வேலை முடிந்த பிறகு இப்பொழுது தான் வியாபார கடைகளுக்குள் நுழைவார்கள்.

சிறுவர்கள் சைக்கிளில் முன்சக்கரம், பின்சக்கரம், என பலூன்களை கட்டிக்கொண்டு படபடவென்ற சத்ததுடன் குறுக்கேமறுக்கே ஒட்டுவார்கள்.

மறுபுறம் பலூன்கடை, சர்பத்கடை, வடை, சம்சாகடை, சைடு,ரிப்பன், தோடு,தொங்கட்டான் என இன்னும் பலசரக்கு கடைகளிலும் கூட்டம் அலைமோதும். இவற்றிற்கிடையே இராட்டினம்  சுழல்கின்ற சப்தம் ரீங்காரம் மிடுவது போல் இருக்கும்.  ” இராட்டினம் ” சுற்றுவதற்கு கூட்டம் வரிசையில் நிற்கும். நான் முதல்ல வந்தேன் நீ முதல்ல வந்தேனு இடம் பிடிக்க பெரும் போராட்டமாக இருக்கும்.

ஐஸ்வியாபாரியின்  ” பெப்ஸிகோலா” பொட்டி சத்தம் , புல்லாங்குழல், பலூன் வெடிக்கும் சத்தம், ஊதும்சத்தம், ஆப்பிள் பலூனில் கடுகு கொட்டி விளையாடும் சப்தம் என அமக்களமாக இருக்கும்.   சர்பத் கடைல ஆரஞ்சுசர்பத் 1 ரூபாய்,பால் சர்பத் 2 ரூபாய் அதை வாங்கி குடிக்க பத்து நிமிஷம் ஆகிடும்.

பொம்மைகடைல குழந்தைகளுக்கு தேவையான கார்,வகைகள் ஒருபுறம். பேன்ஸி ஸ்டோரில் வளையல் , ரிப்பன்,  மை என பிடித்த பொருளை எடுத்துவிட்டு பேரம் நடக்கும்.

“வடைகடையில்”  இரு (பெண்) சம்பந்திகள் எதிர்பாராவிதமாக ஒன்றாக வடைசம்ஷா வாங்க வந்துவிடுவார்கள்.சந்தித்த பிறகு ஒருத்தருக்கொருத்தர் வாங்கிய பொருளுக்கு காசை சேர்த்து கொடுப்பதற்கு அன்புபோராட்டமாக இருக்கும். இதை பார்த்த வடைகடை அம்மா  ரெண்டு பேரும் காசு தர வேண்டாம்மா  என சிரித்துகொண்டே கூறி அந்த இரண்டு பேருடன் இவரும் கலந்து கொண்டு தனதன்புடன் முத்தாய்ப்பார்கள்.

மறுபுறம் ஸ்வீட்கடை வியாபாரம் ,சிலபேருக்கு மதியம்,சிலபேருக்கு அஸர் , இன்னும் சிலருக்கு இஷாவிற்கு முன்பாக கடைகள் வியாபாரம் தீர்ந்துவிடும். மார்க்கெட்கடை முதலாளிகள், சந்தைகடை முதலாளிகள் அனைவரும் தங்கள் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மிட்டாய்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.  சுவீட் கடை போடுவதற்கு அதிரை, முத்துபேட்டை, இன்னும் பிற ஊர்களிலிருந்து  வருகைதந்து   முழு திருப்தியுடன் வியாபாரம் முழுமையடைந்து திரும்புவார்கள்.

பெரியபள்ளிவாசல் ஜபருல்லா அண்ணன் கடையில ஆரம்பிக்கிற ” *கொத்துபுரோட்டா* ” கல்சத்தம் அதிரை ஹோட்டல், அன்று மட்டும் சில நண்பர்கள் ஸ்பெஷல் கடை போட்டு நாலாதிசைகளிலும் “கல்சத்ததம்” காற்றில் கலந்து  பறந்த வண்ணம்  வியாபாரம் செய்வார்கள். 11 மணிவரை சத்தம் கேட்டுகொண்டே இருக்கும்.

இரவு 9- மணிக்கு முன்பாக கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர்கை ஒருவர் பிடித்தபடியே நகர ஆரம்பிக்கும். வீட்டிலுள்ள பிள்ளைகள் பெற்றோர்கள் என்ன வாங்கி வருகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருப்பார்கள். பெற்றோர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக கொத்துபரோட்டா முதல் ஸ்வீட் வரை வாங்கி செல்வார்கள்.

15- வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அன்று இரவு சந்தோஷ நிகழ்வாக கழப்பு கடையில் ஒன்றாக சாப்பிட செல்வார்கள்.

பெரும்பாலும் அனைத்து கடைகளிலும் கொத்துபரோட்டா, மையம் கொண்டிருக்கும் , வசந்தம் ஹோட்டலில் ” பொரிச்ச ரொட்டி  பரோட்டா புகழ்பெற்றது. பார்சல் வாங்கிகொண்டு நண்பர்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்.

வீடு திரும்புகையில் இரவு நேரம் 9.30 கடந்து இருக்கும்.பாட்டியாமார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும், பேரப்பிள்ளைகளுக்காகவும், காத்திருந்து வீட்டிற்குள் பிள்ளைகள்  சென்றவுடன் எங்களருகில் அமர்ந்து ” தர்ஹாவின் நார்ஷாவை” கையில் வைத்துகொண்டு தலையில் முக்காடு சரிவர சரி  செய்துகொண்டு,  *தலவலி* , *தங்கட்டம்* , *கப்பல்* இந்த 3 வார்த்தைகளுடன்  துவா ஆரம்பிக்கும் 2- நிமிடம் கடந்த நிலையில் அந்த துவாவின் ஈர்ப்பு நம்மை  கண் கலங்க செய்துவிடும். அவர்கள் கையால் வாயில் நார்ஷாவை சுவைத்த பிறகு “கந்தூரி  தின பண்டிகை” இனிதே தித்திப்பாய் நிறைவேறும். சர்க்கரையில் உள்ள மல்லிகை பூ , மற்றும் நார்ஷாக்களை வெளிநாட்டில் வாழும் குடும்பத்தாருக்கு அனுப்பி வைப்பார்கள்.  மறுபுறம் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாமும் நார்ஷா கொடுத்து மகிழ்வோம். அவர்களும் அப்படியே செய்வார்கள். அனைத்து வீட்டிலும் ” சுவீட்” 1 வார பொழுது நிறைந்திருக்கும்.

நிச்சயமாக சிறுவயதில் நாங்கள் அனபவித்த அனைத்து சந்தோஷங்களும், ஈடு இணையற்ற மகிழ்ச்சியும் வாழ்வில் திரும்ப கிடைக்காதவை. இவை மட்டுமின்றி பிற ஊர்களில் நடக்கும் அதிராம்பட்டினம், முத்துபேட்டை,நாகூர், கோட்டைபட்டினம், ஒடுக்கம்பட்டி போன்ற ஊர்களில் நடக்கும் ” கந்தூரி விழா நம் ஊரைவிட இருமடங்கு பிரகாசமாக நடக்கும் .பிற பிற மாநிலங்களிலிருந்தும் அனைத்து சமய மக்களும் ” கணக்கற்ற வாகனங்களில் ” கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். நம் ஊரிலிருந்து இந்த   கந்தூரி விழாகளுக்கெல்லாம்” 10 வேன்கள், 10 கார்கள் என இன்னும் பிற வாகனங்களில் கணக்கற்ற முறையில் செல்வார்கள். தெருவாசிகள் , நண்பர்கள்,குடும்பங்கள் என ஒன்றுசேர்ந்து கொண்டு பயணிப்பார்கள். வாணவேடிக்கைகளும், சந்தனகூடு ஊர்வலத்துடன், பைத்-சபா ஊர்வலங்கள் என கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.

மற்றொரு நிகழ்ச்சிகளான, பெயர்பெற்ற தர்கா கொண்ட  ஆத்தாளூர், பிரான்மலை, நெடுவாக்கோட்டை , இன்னும் பல ஊர்களில் சிறுவயதில் ஆடு, கோழி போன்றவைகளை ஊரிலிருந்தே வேன்களில் புறப்பட்டு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றிவிட்டு ஆட்டினை அறுத்து அங்குள்ள மக்களுக்கும் உணவிட்டு  பசியாற்றி  மனம்குளிர்ந்து திரும்புவோம். இது போன்று நிறைய நடக்கும் .

 நமதூரில் *1955* – வரை  மாட்டுவண்டியில் *சந்தனகூடு* வைத்து இழுத்து வரும் கந்தூரி விழா இருந்திருக்கிறது.

” வாணவேடிக்கை ”  நிகழ்ச்சியும் நிறைந்து காணப்பட்டுள்ளது .நமதூர் ஜமாத் பெரியோர்களால் நாளடைவில் !! சந்தனகூடு!! தடைசெய்யபட்டது . செலவு வீண் விரயம், மற்றொரு புறம் நள்ளிரவில் சந்தனகூடு இழுப்பதால் பெண்களும்,அதனை காண்பதற்காக பெரியவர்கள், சிறுவர்கள் என தூக்கத்தை விட்டு காத்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில்   தடைசெய்யபட்டது. அந்த காலகட்டத்தில் கூட்டம் கட்டுங்கடங்காமல் மைதானம் தளும்புமாம் , அனைத்து சமயத்தவர்களும் பங்கேற்று வழிபட்டு, வியாபாரம் செய்வதும், வியாபாரம் கொடுப்பதும் என ,

இது போன்ற  விழாக்கள் ( ராட்டினம் சுற்றுபவர்) (மிட்டாய் வியாபாரம்) இன்னும் பல, சிறுசிறு வியாபாரிகளுக்கு, அடுத்த 4′ அல்லது 5  மாதங்களுக்கு அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இது போன்ற பண்டிகைகளில் பங்கேற்று சிறுவயதில், வாழ்ந்து வந்த அரிதான நாட்கள் வாழ்வில் மீண்டும்திரும்ப கிடைக்குமா என்றே பலரது நெஞ்சம் ஏக்கம் கொள்கிறது.

இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், இந்த கந்தூரிவிழாக்களில், இறைவழிபாடு என்பதை தாண்டியும், ஒரு மிக பெரிய *மனிதநேய* பரவல் ஏற்படுகிறது.

வியாபாரிகள் விழா முடிந்ததும் ஒருவருக்கொருவர் சங்கமித்து நட்புறவு கொண்டு அடுத்து நடக்க இருக்கும் கந்தூரிவிழாக்கள் , கோவில் திருவிழாக்கள் பற்றிய குறிப்பை எடுத்துகொள்வார்கள்.

இந்த அனைத்து விழாக்களிலும்  ” நாடோடி வியாபாரிகளான” இவர்களது வாழ்க்கையில் வியாபாரம் செழிப்பு ஏற்படுகிறது.அவர்கள் குடும்பங்களில் உள்ள வறுமைகள் ஒழிந்து, பசுமைகள் பூத்துகுலுங்கி,  சந்தோஷங்கள் உயிர்ப்பிக்கின்றன.

இது போன்ற கந்தூரி விழாக்கள் மேலும் மேலும் சிறப்புற்று வளர்ந்திட  துவா செய்திடுவோம் . “ஷேகுரப்பா தர்காவின்”   மகான் ஷேக்பரீது ஒலியுல்லாஹ் இறைநேசரை நினைவு கூறும் விதமாக பலரது குடும்பங்களில் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு  ” ஷேக்பரீது ” என்ற பெயரை சூட்டி அழைத்து மகிழ்ந்தனர்.

மதுக்கூரில் ” ஷேக்பரீது” என்ற பெயர் மட்டும் தான் மனித  எண்ணிக்கையில் அதிகம் கொண்டது.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR