Madukkur
Magazine

ரமலான் நினைவுகள்

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நோன்பு காலங்கள் என்றாலே நமது ஊர் களை கட்டிவிடும். அன்று எப்போது நோன்பு என்பதை அறிவதற்காக ஜமாத்தார்கள் மரைக்காயருடன், மரைக்காயர் கடை பின்புறம் உள்ள கலப்புக்கடை வாசலில் நின்று கொண்டு இருப்பார்கள். அதாவது இப்போது சன் எலக்ட்ரிகல்ஸ் உள்ள கடை அன்றைய நாளில் பிரபலமான ஒரு கலப்புக்கடை. மஹ்ரிப் தொழுகைக்குப்பின் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் செய்திகள் தான் அன்றைய நாட்களில் மிகப்பெரிய செய்தி ஊடகம். நம்ம தமிழ் மக்களோடு காலை முதல் இரவு வரை இலங்கை வானொலிதான், அனைவரின் வீட்டிலும் ஒலித்துக்கொண்டு இருக்கும். அன்றைய காலங்களில் சரியாக மாலை 6.30மணிக்கு செய்திகள் என நினைக்கிறேன். இலங்கை வானொலியில் அறிவிப்பார்கள்.. இலங்கை சம்மாந்துறையில் ரமலான் பிறை தென்பட்டதால் நாளை இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது என சொன்னவுடன், காலஞ்சென்ற நமது ஜமாத்தார்கள் அனைவரது முகத்திலும் ஒரு சந்தோசம் இருக்கும். அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.

 

பள்ளியில் நகரா அடித்து ரமலான் மாதத்தின் வருகையை சந்தோசமாக தெரிவிப்பார்கள். அன்று இரவு முதல் தராவீஹ் தொழுகை… தொழுகை முடிந்ததும் ராத்தீப்.. அதில் பல திக்ர்க்கள் இருக்கும். திக்ர் முடிந்ததும் மண்டாப்டி இருக்கும் அது வடையோ சமூசாவோ… பள்ளி வாசல் பின்புறம் உள்ள தோப்பில் தான் கஞ்சி காய்ச்சுவார்கள். சேனாப்பா கஞ்சி காய்ச்சி பார்த்ததுண்டு.. சில சமயம் வேற ஒருவரும் கஞ்சி காய்ச்சுவார் அவர் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. அன்று நோன்பு திறப்பது எல்லாம் தென்னந்தோப்பில் தான். கஞ்சி குடிக்க மண் சட்டி தான். கஞ்சி காய்ச்சி சட்டியில் ஊற்றி இருக்கும். சில சமயம் சட்டியை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று கஞ்சி வாங்கிக்கொண்டு அமர்வதும் உண்டு. பள்ளியிலே பேரீச்சம் பழமும் கொடுப்பார்கள். நாம் வடை மட்டும் வாங்கி செல்வதும் சில சமயம் அதுவும் இல்லாமல் நோன்பு திற்ப்பதும் உண்டு. அப்போதும் எல்லாம் இன்று போல அனைவரும் நோன்பு வைப்பதில்லை. வாசலில் நின்று சில பேரை நோன்பு இல்லை என திருப்பி அனுப்புவார்கள். அன்று நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன் வேட்டு போடுவார்கள். அந்த சத்தம் நமது ஊர் முழுவதும் கேட்கும்..

மக்கள் தத்தம் வீடுகளில் நோன்பு திறப்பார்கள். இது இல்லாமல் பள்ளியில் நகரா அடித்து, பாங்கு சொல்லுவார்கள். பேரூராட்சியில் இருந்தும் சங்கும் ஊதுவார்கள். ஆகவே, ஊர் முழுவதும் ஒரே நேரத்தில் நோன்பு தாமதம் இல்லாமல் திறக்கப்படும். அதே போல கஞ்சி காய்ச்சும் முறை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு நாள் வரும். அதன் சுழற்சியில் ரமலான் வேலைகள் நடைபெறும். இன்றும் அதே நடைமுறை நமது ஊரில் பின்பற்றப்படுகிறது. அதே போல் 27ம் கிழமை அன்று நமது ஊரே களை கட்டி இருக்கும். பள்ளிவாசல் அலங்காரமாக இருக்கும். புது கைலி, புதுச்சட்டையுடன் ஊரே மணக்கும்.. அன்று இரவுத்தொழுகை தாமதாக துவங்கி இரவு 2.30 மணிக்கு முடியும் என நினைக்கிறேன். அதற்கு பின் மதரஸா மண்டபத்தில் சோறு சாப்பிடுவோம். அதாவது தென்னந்தோப்புக்கு பின் புறம் இப்போது அங்கே பள்ளிக்கூடத்தின் சில வகுப்புகள் நடைபெறுகிறது. அல்லாஹ் அக்பர்.

அது போல பஞ்சுக்காரப்பா வீட்டு யூனுஸ் அண்ணன் சஹர் நேரத்தில் சில ஒலிபரப்புக்களையும், சஹர் முடியும் அறிவிப்ப்புகளையும் செய்து கொண்டு இருப்பார். அன்று நமது ஊருக்கு மிக முக்கியமாக இருந்தது. அனைவரும் சஹர் முடியும் நேரத்தை கேட்டுக்கொண்டு நோன்பு வைப்பதுண்டு. ரமலான் மாதத்தில் இளைஞர்களின் முக்கிய விளையாட்டாக இருந்தது கேரம்போர்டு பல தெருக்களிலும் விடிய விடிய கேரம்போர்டுதான். தொழுகை முடிந்ததும் நேராக போர்டு விளையாட வந்து விடுவார்கள். விளையாடுவது நாலு பேர் தான். அதை பார்க்க அரட்டை அடிக்க ஒரு கூட்டமே இருக்கும். அதே போல 27ம் கிழமை கிளிக்கோடு விளையாடுவார்கள். அப்போது கிளிக்கோடு எங்கே என்றால் புதுக்குளம் வாசலில் தான் விளையாடுவார்கள். காரனம் சந்தைப்பள்ளிக்கூடத்தில் பெண்கள் தொழுவதால், அங்கே விளையாட ஜமாத்தார்கள் அனுமதி கொடுக்கமாட்டார்கள். சில பேர் சாச்சாவை கிண்டல் செய்து கல்லால் அடி வாங்குவார்கள். இன்னும் சில பேர் புதுக்கைலி புதுச்சட்டையுடன் கடைத்தெருவில் தனது சகாக்களுடன் நாலுகால் மிருகத்தை கல்லால துரத்தி துரத்தி அடித்துக்கொண்டு இருப்பார்கள்.. இப்படியே அன்றைய ரமலான் காலங்கள் நமது ஊரில் பெண்கள் பல இடங்களில் தராவீஹ் தொழுகை தொழுவார்கள் அதற்கு பின் தான் கீழவீதி சங்கத்தினரால் நிஸ்வான் கட்டப்பட்டது என்பதும் ஒரு ரமலான் செய்தியாகும்.

 

1 கருத்து

Anwar September 7, 2019 at 11:02 am

இந்த கட்டுரையை படிக்கும் சகோதரர்கள் கருத்துக்கள் பதிவு செய்யலாம்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR