கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மதுக்கூர் திருமணங்கள் 1970களை நோக்கி

மதுக்கூர் திருமணங்கள் 1970களை நோக்கி .

உலகத்தையே புரட்டிப்போட்ட  போட்ட கொரோனாவின் கருணையதால்..
மதுக்கூரின் திருமண நிகழ்வுகள்…மீண்டும்
1970ஆம் ஆண்டை பின்நோக்கி
நகர்த்தப்பட்டு இருக்கிறது ..

அன்று திருமண மண்டபங்கள் இல்லாத காலம் …
எந்த உறவையும் உதறித் தள்ள மாட்டார்கள்.
பல மாதங்களுக்கு முன்பே உறவுகள் கூடிவிடுவார்கள் ….
உறவுகள் இன்றி திருமணமே இல்லை எனலாம்…

தென்னங்கீற்று பந்தலும்,
பந்தலின் கீழ்  துரைராஜ் அண்ணன்
கொண்டு வந்து கட்டும் சலவை
வெள்ளை வேஷ்டிகளும்….

பந்தலின் நுழைவாசலில் கட்டப்படும்
வாழை மரங்களும்
இது கல்யாண வீடு என்பதை ஊருக்கே  பறைசாற்றும் …

சில பணக்கார வீடுகளில்
பந்தல் அலங்காரம் அசத்தலாக இருக்கும்.
பள்ளிவாசல் தோற்றத்தில்
பந்தல் முகப்பில் வண்ண விளக்கு ஜோடனைகள்
கண்ணைப் பறிக்கும்..

வீட்டின் கொல்லைப்புறத்தில்
சட்டிகள் வைக்கப்பட்டு நெய் சோறு,
கறி ஆணம் தாளிச்சா என
காலையிலிருந்தே மணம்
தெரு முழுவதும் வியாபித்திருக்கும் …

சங்கத்துப் பிள்ளைகள் சங்கையோடு
விருந்து உண்ண வருவார்கள்….  தெருவாசிகள்,சுற்றத்தார்,
நண்பர்கள்,பெண்கள் என ..
விருந்துண்ண வருவோர்
எண்ணிக்கை 300ஐ தாண்டாது ….

பண்டாரிகள் என்றாலே …
சோமீன் அண்ணன்,தல்பார் யாக்கூப் அண்ணன், சேனாப்பா  ….இவர்கள்தான் அன்று மதுக்கூரில் கல்யாண வீட்டு
சமையல்களில் கலக்கியவர்கள் …

அன்று ஆழியூர் பண்டாரிகளை யாரும் அறிந்ததில்லை….
முத்துப்பேட்டை பண்டாரிகளை  தேடி யாரும் சென்றதில்லை…
உள்ளூர் சமையல் கலைஞர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது .

பெரியண்ணன் காரும், ஆவணம்
சரீப் அண்ணன் வெள்ளைக் குதிரையும்..
மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டன …

ஊர்வல குதிரை மதுக்கூர் வந்தடைந்ததும்  கீற்று சந்தை புளிய மரத்தில் கட்டப்பட்டிருப்பதை …
வேடிக்கை பார்க்க காலையிலிருந்தே சிறுவர்கள் கூட்டம் போடுமே ஆட்டம் …

மணப்பெண்ணை அலங்கரிக்க பியூட்டி  பார்லர் சென்றதில்லை …
கை கால்களில் மருதாணி இட
பணம் கொடுத்து வெளிப் பெண்களை
கொண்டு வந்ததும் இல்லை  ….

1970 களின் திருமண நிகழ்வுகளின்
வரலாறு மதுக்கூரில் மீண்டும்
திரும்ப ஆரம்பித்திருக்கிறது.
உபயம் கொரானா….

மண்டபத்தின் உபயோகங்கள்
மறந்து போயின.
வெகுவாக குறைந்து போயின ..
வீடுகளிலேயே திருமணம்..
வீடுகளிலேயே விருந்து உபசாரம் …
உபயம் கொரானா….

இரண்டாயிரம் பேர்களுக்கு
பிரியாணி வழங்கிய காலம் மலையேறிவிட்டது .
300 பேருக்கு விருந்து கொடுத்து
பெரும் செலவு குறைக்கப்பட்டு விட்டது .
உபயம் கொரானா….

கடன் உடன் வாங்கி,
சொத்துக்களை விற்று
திருமணம் நடத்தும் நிலை
நின்றுபோனது .
திருமணச் செலவுகளும் வெகுவாக
குறைந்து போனது .
உபயம் கொரானா.

சிலரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் திருமணத்திற்கு  வரக்கூடாது இதற்கான அருமையான செயல்திட்டம் நமது
ஊரில் சிலரிடம் இருக்கிறது …அது
திருமணத்திற்கு முதல் நாள்
அழைப்பு விடுப்பது ..

முதல் நாள் அழைத்தால் யார் வருவார்கள் ?…
அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கும் …
அழைக்கப்பட்டவரும் திருமணத்தைத்
தவிர்த்து இருப்பார் .
உண்மையான அன்பு இந்த செயல்பாட்டால் கருணைக் கொலை செய்யப்படுகிறது .
உபயம் கொரானா.

மாண்புமிக்க கொரானாவே…..
சில நன்மைகளுக்குள்ளும்  .
பல  தீமைகள் செய்தாய் ..
சென்று விடு…..நீ சென்று விடு ..

மீண்டும் வரவேண்டும் 1970…
மீண்டு வர வேண்டும்
உண்மையான அன்பு பாராட்டும்
மக்களைக் கொண்ட மதுக்கூர் …..

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் …
08.08.21.

கருத்து தெரிவியுங்கள்