மறதி
பலருக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் இந்த விஷயம்.
இது உண்மையில் பிரச்சினைக்குரிய விஷயம் தானா?
இந்த மறதி தொடர்பான பிரச்சினைகளை இரு முக்கிய காரணிகளை கொண்டு பிரித்து பார்க்கிறேன்.
ஒன்று நாடு, மற்றொன்று வீடு
நாடு என்று எடுத்துக்கொண்டால் நாட்டில் ஏற்கெனவே இருக்கின்ற பிரச்சனைகள், தற்பொழுது நடப்பில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் என இரண்டு ரகம் உண்டு.
நமது தேசத்திற்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது நாட்டில் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளையும் அதற்காக அந்தந்த காலகட்டத்தில் தலைவர்கள் கொண்டிருந்த கொள்கைகளையும், அதனை கையாண்ட விதத்தையும், அதனால் ஏற்பட்ட நன்மை தீமைகளையும் மறவாது இருத்தல் மிக முக்கியம். அப்படி இல்லாமல் அனைத்தையும் மறந்து தலைவர்களை தேர்ந்தெடுத்தால் பிரச்சனைகள் தான். மீண்டும் இந்த நாடு மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
வீடு (சுற்றமும் நட்பும் உறவு முறைகளும்) இந்த கோணத்தில் பார்க்கும் பொழுது மறதி ஒரு அரு மருந்தாகவே படுகிறது.
சற்று நினைத்துப் பாருங்களேன் நம் அனைவருக்கும் எந்த விஷயமும் எந்த நிகழ்வும் மறப்பதே இல்லை என்று வைத்துக் கொண்டால்… அது எவ்வளவு பெரிய பிரச்சினையையும் அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கும் வழிவகுக்கும்.
நம் உறவினரோ நண்பரோ கோபத்தில் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசியிருப்பார்கள் தடித்த வார்த்தைகளைக் கொண்டு வசைபாடி இருப்பார்கள் அப்படியான விஷயங்கள் நமக்கு மறக்கவே இல்லை என்றால், அவர்களுடனான உறவுகளையும் நட்புகளையும் இழக்க நேரிடும் எனவே உறவுகளையும் நட்புகளையும் வலுப்படுத்திக்கொள்ள மறதி அவசியமான ஒன்றாகவே படுகிறது.
மறதி வீட்டுக்கு நன்மை, நாட்டுக்கு தீமை
By சகோதரர்: (மதுக்கூர்) ரஹ்மானியா ஹபீப்.