Madukkur
Magazine

மதுக்கூர் -ஒரு வரலாறு

*சொல்ல மறந்த கதை…*
*நமதூர்! மதுக்கூர்!!*
*நினைவில் வாழும் சம்பவம்…*
வருடம் 2014, நவம்பர் மாதத்தில், விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த காலத்தின் ஒரு நாளின் மாலைப் பொழுது அது. அஸருக்கும்-மஃரிப்புக்கும் இடைப்பட்ட நேரம். வானம் மழைப் பொழிவது போல் இருட்டிக் கொண்டு நின்றது. கூண்டில் அடையும் பறவைகள் இறைத்துதிப்போடு அழகிய குரலை எழுப்பி கொண்டிருந்தன. குளுமையான காற்றும் கூடவே சேர்ந்து கொண்டது மனதிற்கு ஒரு விதமான அமைதி.
அந்த குளுமையான காற்றுக்கு, அவிழ்த்த வேர் கடலையை சாப்பிட்டுக்கொண்டே 83 வயதுடைய மதிப்பிற்குரிய (மர்ஹூமாகிவிட்ட) ஒரு பெரியவங்களிடம் மதுக்கூர் எவ்வாறு உருவானது என்பதை கூறுங்களேன் என்று நான் கேட்க, பற்கள் தெரிய சிரித்தவாறு, சொல்ல ஆரம்பித்தார்கள்.
*(அவர்கள் கூறிய விடயத்தை கதை வடிவில் தருகிறேன்)*
நான் சொல்வதில் சிறு, சிறு வரலாற்று தவறுகள் இருக்கலாம் என்று என்னிடம் அப்பெரியவங்க கூறியவாறே, தனக்கே உரித்தான கணீர் குரலுடன் தங்களின் அனுபவத்தை, காட்சியாகவே காண்பதுபோலும், காட்டுவதுபோலும் பேச துவங்கினார்கள்.
மதுக்கூர் என்பது தற்பொழுது நாம் கூறும் மதுக்கூர் வடக்கு பகுதியைத்தான் கூறுவது. விவசாயம் செய்யும் வெள்ளாளர்கள் நிறைந்த பகுதி. சிவன் கோவில் உள்ள ஊர். சிவன் கோவில் எங்குள்ளதோ அங்கே மனிதர்கள் குடியிறுப்பு முன்பே வந்து விட்டது என்பது பொருள். அதுவே வரலாறு. அப்பொழுது இந்த பகுதியில் எல்லாம் ராவுத்தர்கள், மரைக்காயர்கள் என்று கூறப்படும் முஸ்லிம்கள் இல்லாத கால கட்டம்.
நமது பக்கத்து கிராமத்தில் இருந்த ஜமீன்தார் ஒருவருக்கு (வாடியக்காடா அல்லது வாட்டாக்குடியா என்பது எனக்கு மறந்து விட்டது) நோய் ஏற்பட, அதை குணப்படுத்த நாட்டு வைத்தியர்கள் முயன்றார்கள். ஆயினும் குணப்படுத்த முடியவில்லை.
அதே கால கட்டத்தில் காட்டுபகுதியாக இருந்த இன்றைய மதுக்கூரில் (தெற்கு), இஸ்லாமிய பெரியவர் ஒருவர் வந்துள்ளார்கள். அவர்களிடம் சென்று கூறலாம் என்று ஜமீந்தாரின் குடும்பத்தினருக்கு ஆலோசனை கூற அவர்கள் அந்த வலியுல்லாஹ்வான அந்த இஸ்லாமிய பெரியவரிடம் வந்தார்கள். இறையுதவியால் அம்மகானின் அருள்பார்வையால் பல நாட்கள் குணமாகாத நோய் ஜமீர்தாருக்கு குணமாகியது.
தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கன் மன்னரின் நோயை நாகூர் நாயகம்(ரலி) குணப்படுத்தியபோது அதற்கு நன்றிக் கடனாக அந்த மன்னர் நாகூர் நாயகருக்கு எழுதி கொடுத்த பட்டயமே இன்றைய நாகூர்பதி என்பதை அறிவோம்.
அதே போலவே இந்த ஜமீன்தாரும், தனது நோயை தீர்த்த அந்த மஹானுக்கு பட்டயம் எழுதி கொடுத்ததே இன்றைய மதுக்கூர். சிறிது காலம். அவர்களின் மறைவிற்குப் பிறகு இப்பொழுது நாம் காணும் சந்தைப் பகுதியில் அவர்களுக்கான தர்ஹா ஷரீப் கட்டப்பட்டது. அதுதான் இன்று நாம் காணும் மஹான் ஷேக்பரீத் ஒலியுல்லாஹ்(ரஹ்…) தர்ஹா.
அவர்கள் சென்றபோது, அதனை பராமரிக்கும் பொறுப்பை, மதுக்கூரில்  இன்று நாம் கூறும் ஒரு வகையாறாவைச் சார்ந்த மூதாதையர் (லெவை அல்லது லெப்பை) ஒருவரிடம் பொறுப்பாக கொடுக்கபட்டது. அதை அவர்களும் நீதமாக பார்த்தும் வந்தார்கள்.
வலியுல்லாஹ்வின் காலடி பட்டதாலும் மதுக்கூருக்கு சிறு, சிறு ஊர்களிலிருந்தும் முஸ்லிம்கள் வர ஆரம்பித்தனர். இந்த காலக் கட்டங்களில், மதுக்கூர் பகுதியில் பொருட்கள் வாங்க, விற்கவுமான சந்தை உருவானது. இந்த சந்தையே மதுக்கூரின் பொருளாதராத்திற்கு வித்திட்டதோடு மட்டுமல்லாமல், பல குடும்பங்கள் மதுக்கூரை நோக்கி புலம் பெயர்ந்தார்கள். மக்கள் தொகையும் சன்னஞ், சன்னமாக அதிகரித்தது. வணிகத்திற்கு நற்பெயர் பெற்ற முஸ்லிம்கள்,  மதுக்கூருக்கு பல ஊரிலிருந்தும் வரத்துவங்கினார்கள். தமிழகத்தில் பொள்ளாச்சி, ஒட்டன் சத்திரம் சந்தைக்கு பிறகு மதுக்கூர் சந்தை பிரபலமானது என்பதை நாம் அறிவோம்.
*செவ்வாய் கிழமை சந்தை*
மதுக்கூரில் செவ்வாய் கிழமை நடக்கும் சந்தைக்கு முதல் நாளே பொருட்களை விற்க வந்து தங்கி விடுவார்கள். செவ்வாய் கிழமை தங்களின் வியாபாரத்தை முடித்து கொண்டு, புதன் கிழமை காலை தங்களின் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள். அவ்வாறு செல்லும் பொழுது ஆட்டுக்கறி வாங்கி செல்வார்கள். அதனால் தான் இன்றளவும் எந்த இஸ்லாமிய ஊர்களிலும் இல்லாத பழக்கமான புதன் கிழமை அன்று ஆட்டுக்கறி ஆனம் வைத்து சாப்பிடும் பழக்கமும், செவ்வாய் கிழமை காலை உணவாக சுடு கஞ்சி (பால் கஞ்சி) சாப்பிடும் பழக்கமும் மதுக்கூரில் உள்ளது.
இவ்வாறு செவ்வாய் கிழமை சந்தைக்கு வந்து போய்கொண்டிருந்த முஸ்லிம்கள், நிரந்தமாக தங்களை மதுக்கூரில் குடியமர்த்திக் கொண்டார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்லாது பல ஊர்களிலிருந்து சகோதர சமுதாயத்தை சார்ந்த பல பிரிவுகளை கொண்ட செட்டியார்களும் வந்து குடியேறினார்கள். அந்த காலக்கட்டங்களில் தான் இன்று நாம் மதுக்கூரில் பேசிக்கொள்ளும் பல வகையாறாக்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் வந்து தங்க ஆரம்பித்தார்கள்.
கோட்டை பட்டிணம், மீமிசல், மந்திரிப் பட்டிணம், கோபால பட்டிணம், ஒரத்தநாடும், பாப்பநாடு, நாராண்டிப் பண்ணைவயல், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஆழியூர், முத்துப்பேட்டை, சங்கேந்தி, மன்னார்குடி, அத்திக்கடை, கூத்தூர், ஆலத்தூர், பூண்டி, நம்மங்குறிச்சி, மூத்தாக்குறிச்சி முதலான பகுதிகளிலிருந்து வந்தவர்களே இவர்கள். இன்றும் இது தொடர்கதையாகத்தான் உள்ளது. மகிழ்ச்சித்தானே!
*அதிராம்பட்டிணம் – மதுக்கூர்*
அன்றைய காலங்களில் மதுக்கூர் இஸ்லாமியர்களுக்கு திருமணம், நல்ல காரியங்கள், மௌத் முதலான நிகழ்ச்சிகள் மற்றும் மார்க்க சம்பந்தமான விஷயங்களுக்கு அதிராம்பட்டிணம் ஜமாத்தை சார்ந்துதான் இருந்தார்கள். (பின்னொரு காலத்தில் திருமக்கோட்டை முஸ்லிம்களுக்கு மதுக்கூர் ஜமாத் கவனம் செலுத்தும் அளவிற்கு மதுக்கூர் வளர்ச்சி அடைந்தது.)
*ஜூம்மா பள்ளி*
ஜவுளி வியாபாரத்திற்கு, மதுக்கூர் சந்தைக்கு வந்து போய் கொண்டிருந்த கரூர் பள்ளப்பட்டியைச் சார்ந்த முஸ்லிம் வணிகர் ஒருவர் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக தந்து பள்ளிவாயிலை கட்டி கொள்ள சொன்னாராம். அந்தப்பள்ளியே இன்றைய ஜும்மா பள்ளியின் உள்பகுதி. (பின் வந்த காலங்களில் மதுக்கூர் மக்களே அதை விரிவாக்கம் செய்தார்கள்), பிற பள்ளிகளும் மதுக்கூரின் பல தனவந்தர்களின் நன்கொடையினால் கட்டப்பட்டது.
*மதுக்கூர் வியாபாரம்*
மதுக்கூர் முஸ்லிம்கள் வியாபாரத்தில் செழிப்புற்றார்கள், கொழித்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அல்லாஹ் அவர்களின் வியாபரத்தில் பரக்கத்தை தந்தான். மரக்காயில் காசுகளையும், தங்கங்களையும் அளந்த குடும்பங்களும் இருந்ததாம்.
கீற்று வியாபாரம், ஜவுளி வியாபாரம், காய்கறி வியாபாரம், நவதானிய வியாபாரம், ஆடு, கோழி வியாபாரம், மீன் – கருவாடு வியாபாரம், மிளகாய், பனை-தென்னை சார்ந்த பொருட்களின் வியாபாரம், கோரைப் பாய் வியாபாரம் மற்றும் பல சிறு பொருட்கள் வியாபாரங்களும், பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை காலக்கட்டங்களில் சீசன் வியாபாரம் என்று அல்லாஹ் மதுக்கூர் முஸ்லிம்களின் வியாபாரத்தில் பரக்கத்தை தந்தருளினான். பின்வந்த காலங்களில் மதுக்கூர் முஸ்லிம்கள் பர்மாவும் பின்னர் வளைகுடா நாடுகளுக்கும் சென்று பொருளாதரத்தை தேடி கொண்டார்கள். இன்றளவும் கொண்டிருக்கின்றோம். மதுக்கூரின் சிறப்புக்களையும், சில பழக்க வழக்கங்களையும் பார்ப்போம்.
*மதுக்கூர் அரிசி வகை*:
அரிசிகளில் IR-20, பொன்னி, ஆந்திரா போன்ற வகைகள் இருப்பது போல், மதுக்கூர் அரிசி என்ற ஒரு வகையே உண்டாம். தஞ்சை மாவட்டத்தில் அதிகமான அரிசி ஆலைகளை கொண்ட ஊராக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் உண்டாம்.
*கட்டுப்பாடுகள்*
இன்று வீட்டிற்கு ஒரு போர்வெல். முன்பெல்லாம், பெண்கள் குளிப்பதற்கு காலை மூன்று மணிக்கே குளத்திற்கு போய், வைகறை பாங்கோசை ஒலிப்பதற்கு முன்பே வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார்கள். மேலும் கடைவீதிகளில் பெண்கள் வரவும், சினிமா கொட்கைகளுக்கு வரவும் கட்டுப்பாடு இருந்தது.
*வியாபார பேச்சுகள்*:
சந்தைகளில் வியாபாரிகளுக்குள் பிறருக்கு புரியாத வண்ணம், எண்களுக்கு என்றே ஒரு பேச்சு உண்டு. சாவண்டை, தோவண்டை, திருவண்டை, பாத்தண்டை, கொழச்சி…… பிலும ரூபாய் என்றும், சரியான இச்சிட்டான், சாச்சப்பா என்று நகைச்சுவையாக பேசிக் கொள்ளும் பழக்கம் இன்றளவும் உண்டு. சரியில்லாத ரகத்திற்கு அது ஸ்ம்டார் அயிட்டப்பா என்று கூறிக் கொள்ளவார்கள். பக்கத்தில் இருக்கும் புதியவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரியாமல் திரு, திரு என்று விழிப்பார்கள்.
*நகைச்சுவை*
நகைச்சுவையாக பேசிக்கொள்வதற்கே சில நபர்கள் இருந்தார்கள். வியாபாரத்தை கவனித்து கொண்டே, அந்த பகுதியே சிரி-சிரி என்று சிரிக்கும் அளவிற்கு காமெடி செய்வார்களாம். (பெயர்கள் வேண்டாமே!). இன்றும் கூட நமதூரைபற்றி பிற ஊர் மக்கள் பேசும் பொழுது, மதுக்கூர் ஆட்களிடம், வாய் குடுக்க முடியாது என்று கூறும் அளவிற்கு உள்ளது என்பது நிதர்சனமான உண்மைதானே!
*சமய-சமூக நல்லுறவுகள்:*
மதுக்கூரை பொருத்தவரையில், பிற சகோதர சமயத்தவர்கள், முஸ்லிம்களை பாய் என்றோ அல்லது முஸ்லிம் என்றோ அழைக்க மாட்டார்கள். இராவுத்தர் என்றும், மரைக்காயர் என்றும் தான் அழைப்பார்கள். அனைத்து சமயத்தவர்களும் மாமன் – மச்சான்கள் போன்றும், சகோதரர்கள் போலும் வாழும் அழகிய சமூக-சமய நல்லுறவுகள் உள்ள ஊர்.
*நன்றியுணர்வு:*
பெருமானார்(ஸல்) வாழ்க்கை சரித்தரங்களை நினைவு கூறும், முஹையத்தீன் ஆண்டகை(ரலி) அவர்களின் வாழ்க்கை சரித்தரங்களை நினைவு கூறும் மௌலூது காலங்களில், மதுக்கூரின் வசந்த காலங்கள் எனலாம்.
அப்பொழுது இருந்த ஊர் பெரியவர்கள், பெருமானரை (ஸல்) நினைத்தும், முஹையத்தீன் ஆண்டகை (ரலி) நினைத்தும், மக்களுக்காக, சமூகத்திற்கு அவர்கள் செய்த தியாங்களை நினைத்து  அற்புதமான வரிகளை கொண்டு, நன்றியுணர்வோடு பாடுவார்களாம்.
*மௌலூது கந்தூரி உணவுகள்:*
மீன் கடை வியாபாரிகள் சார்பாக, காய்கறி கடை வியாபாரிகள் சார்பாக, கருவாடு கடை வியாபாரிகள் சார்பாக, ஆட்டு கடை வியாபாரிகள் சார்பாக என்று மௌலூது காலங்களில் கந்தூரி உணவுகள் மூட்டை, மூட்டையாக ஆக்கி ஏழை-வசதியுடையவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் வாங்கி செல்வார்கள். பெரும்பகுதி அன்று அனைவர் வீட்டிலும் மணம், மணக்கும் மீன் ஆனம்தான்.
*வரலாற்றைப் படிப்போம்! பகிர்வோம்!! படைப்போம்!!!*
*

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR