Education & Jobs

Professor Jiavudeen

 தோன்றிற் புகழோடு  தோன்றுக 
by Janab S Jabarullah

மாண்புமிகு பேராசிரியர்” “ஜியாவுதீன்” அவர்கள் ” பொதக்குடியில்” பிறந்தவர்கள். அதிரை காதர் முஹைதீன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, தஞ்சையில் வசித்தவர்கள்.

கல்லூரி தருணங்களில் பணியாற்றும் பொழுதும், மாணாக்கருக்கு வகுப்பு எடுக்கும் பொழுதும், தன்னுடைய கனிவான பேச்சாலும்,  குணத்தாலும் அனைத்து மாணவர்களுடைய பேரன்பை சம்பாதித்தவர்கள்.

அதிலும் குறிப்பாக ” மதுக்கூர்” மாணவர்கள், ஆசிரியர், அவர்கள் மீது மிகுந்த(ஈர்ப்பு) “முஹப்பத்” கொண்டு கல்லூரி படிப்பு  காலம், முடிந்த பின்பும் மாணவர்கள், ஆசிரியருடன் ஒரு குடும்ப உறவினரை போல தங்களுடைய( நட்புறவை ) மேலும் மேலும் வளர்த்துகொண்டனர்.

குடும்ப விசேஷ  நிகழ்ச்சிகளில் தஞ்சைக்கு சென்று நேரிடையாக அழைப்பு கொடுப்பதும், அவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பதும், நல்லது கெட்டதுகளில் , கலந்துகொள்வதும் என இந்த ஆசிரியர் மாணாக்காருடைய நட்பிலக்கணம், மேலும் வலிமையடைந்தது.

ஒரு சிறந்த ஆசிரியருக்கும், தலைசிறந்த மாணாக்கருக்குமான, குடும்ப உறவு இன்றுவரை நீடித்து இருக்கிறது.

தஞ்சைக்கு பிற வேலையாக சென்றாலும் அந்த வேலையை முடித்துவிட்டு ஆசிரியரை சந்தித்துவிட்டு வருவது என மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும், அதிக ஈடுபாடு காட்டுவார்கள். இந்த அதீத பற்றுடன் தேடிச்சென்று  பழகுதலுக்கு மிக முக்கியமான காரணம் ஆசிரியருடைய அதிர்ந்து பேசிடாத அழகிய செயலும், எந்த வழிமுறைகளில் எடுத்து சொன்னால் மாணவ செல்வங்கள் வழிதவறி சென்றுவிடாமல் இருப்பார்களோ, அந்த வழிமுறையை கையாண்டு வழிநடத்திய சொல் விதம்.

இந்த மனிதகுல சமுதாயத்திற்கு நிறைய ஆரோக்கியமான ” மாணவ செல்வங்களை, நேர்மையாளராகவும்,சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் வாழும் மாணவர்களாகவும் வளர்த்து நடமாடவிட்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களிடம் கற்ற மாணவர்கள் வெறும்  கல்வி படிப்பை மட்டும் கற்று வெளியேறவில்லை, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இவர்களிடம் எதிர்கால   வாழ்க்கையின்,அனுபவங்களையும், தேவைகளையும், உணர்வுகளையும், அவர்களிடம் கேட்டறிந்து ,

அவர்களும், நாம் பேராசிரியர் என்ற மமதையோ, கர்வமோ, துளியுமற்று,  தன்னுடைய அனுபவத்தை கொண்டு எதிர்கால  வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறையை போதித்தவர் .சிறந்த ஒப்பற்ற ஆசானாக விளங்கியவர்.

இவர்களிடம் கல்வி பெற்ற  மாணவர்கள் பல அயல்நாடுகளிலும், பல தொழில்களிலும் மேம்பட்டு சிறந்து விளங்குகிறார்கள்.

மறுபுறம் உடல்நல குறைவால் நம்முடைய குடும்பத்தினருக்கு  “தஞ்சையில்”, எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என ஆலோசனை கேட்டாலும், சிறந்த மருத்துவமனையையும், சிகிச்சைபெற்று  குணமடைந்து  திரும்பும் வரை  நமது குடும்பத்தில் உள்ள ஒருவரை எப்படி மருத்துவமனை சென்று பார்த்து கொள்வோமோ , அதே போன்று மாணவர்களுடைய உறவினர்கள் மீதும் அக்கறை காட்டிய பெருந்தகை. டாக்டரிடமும் நேரிடையாக சந்தித்து உடல்நல முன்னேற்றங்களை விசாரித்து கொள்வார்கள்.

அந்த அழகிய ஆசான், இன்று இறைவனடி சேர்ந்தார்கள்.

அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்கள் தங்களுடைய குடும்பத்தில் ஒருவர் இழந்ததை போன்று துடிப்பதற்கு காரணம் , ஆசிரியர் அவர்கள்  மாணவர்கள் மீது செலுத்திய அன்பு, அக்கறை, பரிவு  இவைகள் தாம். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மாணாக்கருடன் பழகி வாழ்ந்த பேராசான்.

எல்லாம் வல்ல இறைவன் கருணை மாதமான இந்த ரமலானுடைய மாதத்தில் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து  உயர்ந்த இடமான ” ஜன்னத்துல் பிர்தௌஸ்” என்னும் சுவர்க்கம் கிடைத்திட துவா செய்திடுவோம். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள், உறவினர்கள் , மற்றும் பேரன்பு கொண்ட “மாணவர்கள்” அனைவருக்கும் வல்ல இறைவன் பொருமையை கொடுத்து ஆறுதல் அளித்திடவும் துவா செய்திடுவோம்.

நாங்கள் வாழும் காலம் வரை உங்களுக்கு துவா செய்தவர்களாகவும், உங்களின் ” நற்செயல்களை” நினைவு கூறுபவர்களாவும் இருப்போம்.

பிரியமுடன்

மதுக்கூர் மாணவர்கள் …
அதிரை காதர் முஹைதீன் கல்லூரி

 அஸ்ஸலாமு அலைக்கும்

by
Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்