குடில் கொண்ட கோயில்களும், குடி கொண்ட நெஞ்சங்களும்
இந்த “மதுக்கூர் மகாணம்” பலவிதமான கோயில் சமஸ்தானங்களை கொண்டது.
அங்காளம்மன் கோயில்
காந்தாரிஅம்மன் கோயில்
முருகன் கோயில்
செல்லம்மா காளியம்மன் கோயில்
மழைமாரியம்மன் கோயில்
திரௌபதி அம்மன் கோயில்
கோதண்டஇராமர் கோயில்
செல்வ விநாயகர் ஆலயம்
பெரமையா கோவில்
கன்னிகா பரமேஸ்வரி கோயில்
தைலம்மை கோயில்
ஸ்ரீபாப்பாரகாளியம்மன் கோயில்.
என இன்னும் பல கோயில்கள் நமதூரிலும் சுற்றுவட்டார கிராமத்திலும் இருக்கின்றன.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் உண்டு. அவரவர் “குலதெய்வங்களை” வணங்கி வாழும் கோவில் நிகழ்வுகளை இவ்வூரில் வசிக்ககூடிய இஸ்லாமிய மக்கள் கண்டிருப்பர்.
மார்க்கெட் தர்ஹாவாசல் காலடி தடம்படாத உள்ளூர் மக்களோ, கிராமத்துமக்களோ இருந்திருக்க முடியாது. அதேபோல், இஸ்லாமியர்கள் கடந்து செல்லாத நமதூர் கோவில்களும் கிடையாது.
மதுக்கூர் கம்பன் T.A.K. யாக்கூப் மரைக்காயர் காலகட்டங்களில்,நடைபெறும் கோயில் விழாக்களில் ” கம்பன்” அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கபடுவார். மரைக்காயர் அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவார்.
ஒருவருக்கொருவர் நட்புறவோடு பிண்ணிபிணைந்து வாழ்ந்து கொண்டிருப்பது தான், நம் மண்ணோட பாரம்பரியமும்,நம் முன்னோர்களின் மரபும் கூட,இங்கு வசித்து கொண்டிருக்க கூடிய இந்து சமுதாய மக்களை சுற்றியும், இஸ்லாமிய சமுதாய மக்களை சுற்றியும் பெரும்பாலான தெருக்களில்,கோயில்களும், பள்ளிவாசல்களும் சூழப்பட்டு ஒருவருக்கொருவர் அந்நியோன்மாக வாழும் சூழலை உருவாக்கியது.
இந்த நட்புக்களுடனும், ஒற்றுமையுடனும் இலக்கணமாக வாழ்ந்து வந்த நமது மதுக்கூர் சமுதாய மக்கள் உள்ளூர், மற்றும் கிராமபுறங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் பங்கேற்பதிலும் தவறியதில்லை.
அதன் நினைவுகள் இதோ…..
மதுக்கூரிலும், ஊரைச் சுற்றி நடக்ககூடிய ஒவ்வொரு திருவிழாக்களுக்கும் , அதற்கு பிறகு நடக்க இருக்கும் திரைக்காவியம் , நடனபோட்டி, இசைக்கச்சேரி ஆர்க்கெஸ்ட்ரா போன்ற அறிவிப்புகளை 1 வாரத்திற்கு முன்னதாகவே சைக்கிள் ரிக்சாவில் விளம்பர படுத்தி கொண்டே துண்டு, துண்டு நோட்டிஸ்களை தெருவில் தூவிகொண்டே வருவார்கள்.
அதனை எடுத்து படிக்கும் போதே அவ்வளவு ஆர்வமாக இருக்கும். ” வால்போஸ்டர்களும், அடித்து ஊரைச்சுற்றிலும் டீக்கடை முதல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிலும் (பயணியர்நிழற்குடை) வரை ஒட்டி இருப்பார்கள்.
கிராமங்களுக்கு இரவில் செல்வதாக இருந்தால் சிலர் குரூப்குரூப்பாக நடைபயணமாக 7- மணி 8- மணியளவில் புறப்படுவார்கள். சிலர் இரவு வாடகைக்கு(3 ரூபாய்) சைக்கிள் எடுத்து கொள்வார்கள். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்குபெறாத ஒரு இஸ்லாமியரை காண முடியாது. நம் வருகையை கண்ட கிராமத்து பெரியோர்கள் ராவுத்தர் வூட்டு புள்ளைங்க நம்ப ஊருக்கு மெனக்கெட்டு வந்துருக்காங்க முதல் வரிசையில்உட்கார இடம் கொடுங்கனு உட்கார்ந்து இருக்கும் பிறரை எழ செய்து உட்கார வைத்து கண்ணியம் செய்வார்கள்.
அங்கே கலந்து கொண்டு பங்கேற்பதில் கிராமத்திற்கும், டவுனிற்கும் ஒருவருக்கொருவர் பழக்கவழக்கம் நட்பு பரஸ்பரம் மேம்பட இந்த கோயில் விழாக்கள் வழிவகுத்தன.
பழைய மதுக்கூர் பெரமையா கோயில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடபடும். சுற்றுபட்டி கிராம மக்கள் உட்பட கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.வழிபடுவதும், நேர்ச்சைகளை நிறைவேற்றுவதும் ,ஆடு, கோழிகளை நேர்ச்சைகளை கொடுப்பதும் என ஒருபுறம். மறுபுறம் கோயில் மணி தொடர்ந்து ஓய்வில்லாமல் ஒலித்து கொண்டே இருக்கும், முசிறி 32- கிராமங்கள் உட்பட ஜன திணறல்களால் 4- திசைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.4- சாலையோரங்களிலும் சிறுசிறு வியாபாரிகள் வியாபார கடைகளை அமைத்து , பலூன் வியாபாரி, ஐஸ்வியாபாரி, பேன்ஸி வியாபாரிகளும் படுபிஸியாக இருப்பார்கள்.
தாய்க்குலங்களும், சகோதரிகளும் எந்த வித மாடர்ன் டிரஸ் இல்லாமல் நமது ஊருக்கு ஏற்ற கலாச்சாரமான, புடவைகளிலும்,பாவாடை தாவணிகளிலும் அழகுற வருகை தருவார்கள்.
பஸ்கள் பெரமையா கோயிலை கடந்து செல்வதற்கு கூட்டத்திற்குள் நடுவில் சிக்கிகொண்டு மாட்டிக்கொண்டு முழிக்கும். ஊர்ந்து ஊரந்து நகர்ந்து செல்லும்.
பெரமையா கோயில் ஒட்டிய அந்த படர்ந்து விரிந்த பருத்த மரமும், எதிர்புறம் இருந்த பழைய ” டீ க்கடை கீற்றுகொட்டகை கடையுடன் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டு திருவிழா கூட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.
பெரிய சிறப்பம்சம் பெரியகோட்டை சாலையில் இரவு நடக்கும் கலர், கலரான வாணவேடிக்கைகள் கண்கொள்ளா காட்சி.ஒவ்வொரு வெடியும் வெடித்து சிதறும் போது கண்களுக்கு ரசிப்பதற்கு அவ்வளவு பிரகாசமானதாக இருக்கும்.
அங்காளம்மன் கோயில். பள்ளிவாசல் தெருவில் உள்ள M.S.A மில் எதிர்புறம் சந்தில் எதிர்புறம் அமைந்துள்ளது.
என்னை போல் சிலருக்கு, இந்த கோயில் மிக அருகில் இருந்ததால், இந்த கோவிலுடன் தொடர்புகள் மிகமிக அதிகம். கோயில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் கோயில் தர்மகர்த்தா முத்துவேல்அப்பா , அருள் வந்து சாமி ஆடுவது, தீ மீதிப்பது, அருகில் நின்று பார்ப்பது பிரமிப்பாக இருக்கும்.
காய்கறிகடை ரவி அண்ணணுடைய ” உடுக்கடி” மிக பிரமாதமாக இருக்கும்.
கோயில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு இரவு 9-மணிக்கு திரைப்படம் திரையிடப்படும் என மைக்கில் ஒலித்து கொண்டே இருக்கும்.
T.V & V.C.R வீடியோ கேசட், பஸ்ஸ்டாண்டில் உள்ள முல்லை ஆடியோ, வீடியோவில் வாடகைக்கு எடுத்து திரைப்படம் இடுவார்கள். கூட்டம் ஆரவாரமாக இருக்கும்.
முருகையன் அண்ணன் வீட்டு வாசலிருந்து பாய், போர்வை என விரித்து கொண்டு தாய்க்குலங்களும் கலந்து கொண்டு அனைவரும் கண்டு ரசிப்பார்கள்.
டீ வி யில் படம் பார்த்தாலும் வேப்பமரத்தில் 4- ஸ்பீக்கர் 4- திசைகளை நோக்கியும் கட்டபட்டிருக்கும். E.S.M அல்லது ஆண்டவரில் வாடகைக்கு எடுக்கபட்டிருக்கும். அந்த இடத்தில் அமர்ந்திருப்பது புதுவித அனுபவமாக இருக்கும். காற்றோட்டமான நம்முடைய தெருவில் மக்களுடன் மக்களாக அமர்ந்து (தியேட்டரில் சென்று படம் பார்ப்பதைவிட) நன்றாக இருக்கும். கோயிலுக்கு திரைக்காவியம் காணவரும் குழந்தைகளையும், மகளிர்களையும் , ஆடவர்களையும், பழைய பெரியோர்களையும் திருப்தி படுத்தும் விதமாக திரைக்காவியம் ஓடும்.
முதல் படம் முடிந்ததும், சிலர் உறங்கிவிடுவார்கள், இரண்டாவது படம் ஓடும் போது அதுல பாதிபேர் உறங்கிவிடுவார்கள். 3- வது படம் சொற்ப நபர்களே காண்பார்கள்.4.00 to 4.30 குள்ள 3- படமும் நிறைவடையும்.
குழந்தைகளுக்கு பிடித்த யானை, குரங்கு, பாம்பு , நாய்குட்டி இவைகளை மையப்படுத்தி வந்த படமான மனதுக்கேற்ற ” துர்கா” தெய்வக்குழந்தை, என இராமநாராயணணின் படங்களின் பட்டியல் நீளம்.
பெண் பக்தைகளுக்கு ஏற்ற ” ஆடி வெள்ளி” தைப்பூசம், பெரியோர்களுக்கு ஏற்ற ” எங்கள் வீட்டு பிள்ளை” மாட்டுக்கார வேலன்” ஆடவர்களுக்கு ஏற்ற வைகாசி பொறந்தாச்சு, தேவர்மகன் , போன்ற திரைப்படங்கள் நமது ஊரை சுற்றியுள்ள அனைத்து கோயில்களிலும் திரையிடுவார்கள். இதில் கரகாட்டகாரன் என்ற ஒற்றை திரைப்படம் மட்டும் தான் 3- வருடத்திற்கும் குறையாமல் எல்லா கோயில்களிலும் சுழற்சி முறையில் ஓடிகொண்டே இருந்தது.
புது வித காமெடியான கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடி, மற்றும் கிளைமாக்ஸ் பாடல் காட்சி தீ மீதி விழாவுடன் மிக பரவசமாக முடியும். அத்திரைக்காவியம் காண்போரின் கண்களுக்கு, மாபெரும் விருந்தாக அமைந்தது.
அதே போன்று இந்திராநகர் முதல் தெருவில் பெரிய திரையில் படமிடுவார்கள்.ஊரே கூடி நின்று கண்டு ரசிக்கும்.
இடையகாடு மழைமாரியம்மன் கோயிலில் பச்சரிசி கெட்டி உருண்டை, தேங்காவை சிறுசிறு துண்டாக நறுக்கி பூவரச இலையில் இணைத்து கெட்டி அரிசி உருண்டையுடன், கொடுப்பார்கள்.
வரிசையில் நின்று முண்டி அடித்து வாங்குவோம் அறுசுவையாக இருக்கும்.சிறுமிகளின் அகல் விளக்கு தீபம், ஊர்வலம், சிறப்பாக இருக்கும். இங்கேயும் திரைப்படம் திரையிடப்படும்.
காந்தாரியம்மன்கோயில் காளியம்மன் கோயில், ஆத்தங்கரை முருகன் கோயில் , வாசவி மண்டப கோயில் என ஊரைச் சுற்றி காலடி படாத ஒரு கோயில் இருக்காது.
இந்த கோயில் நிகழ்ச்சிகளில், கலந்து கொள்பவர்கள் யாரும் யாருக்கும் இடையூறாக இருக்க மாட்டார்கள். சலசலப்பு என்பது மிக மிக குறைவு. ஒவ்வொருவரும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். வழிப்பாட்டு தளத்திற்குரிய மரியாதையை கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு கோயில் விழாக்களும், நிகழ்ச்சிகளும் முடிந்த பின்பு கோயில் மைதானத்திலயே ஒருவர் தலைமாட்டில் ஒருவர் படுத்துகொண்டு, படுத்துறங்கி பொழுது விடிந்து அந்த கோயில் குளங்களில் முகம் கை கால் கழுவிவிட்டு, இரவு நடந்த கலைநிகழ்ச்சிகளை அசை போட்ட படியே குதுகலமான சந்தோஷத்துடனும், மனநிறைவுடனும் திரும்புவார்கள்.
ஆனால் இன்றோ நாம் எங்கெல்லாம் உறவாடி பூரிப்படைந்து சந்தோஷபட்ட கிராமங்களிலெல்லாம் நமது இன்றைய சமுதாய இளைஞர்கள் கொரோனாவில் இறந்தவர்களை மிகுந்த மனவலியுடன் அடக்கம் செய்து விட்டு திரும்புகிறார்கள்.
ஒரு பெரிய சோதனையில் மதுக்கூர் டவுனும், சுற்றியுள்ள கிராமங்களும் சிக்கிகொண்டு தத்தளிக்கிறது. கிராமங்கள் ஓரளவு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரபட்டிருக்கிறது.
இப்பொழுது மூன்றாவது அலையும் வரக்கூடும் என்கிறார்கள். நடந்தது நடந்து முடிந்து விட்டது .இனி நடக்க போவதை கவனமாக கையாள்வோம் . கிராம மக்களும் டவுன் மக்களும் மனதால் இணைந்தகைகளாக உருவெடுத்து “நேசக்கரம்” கொண்டு சமூக இடைவெளி மற்றும் பிற முன்னேற்பாடுகளை கட்டமைத்து, கொரோனா என்னும் இந்த கொடிய “அசுரநோயினை” மண்ணை விட்டு விரட்டுவோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கொண்டாடி வருகிற பண்டிகை தினங்கள் எல்லாம் (கொரோனாவினால்) ஒரு சம்பிரதாயமாக சந்தோஷமற்ற நிலையில் கொண்டாடி வருகிறோம்.
நாம் விரைவில் விழித்து, எழுச்சி பெற்று மக்களை பாதுகாத்து இனி வரக்கூடிய அனைத்து பண்டிகைகளையும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்வோம்.
அந்த நாள் வெகு தூரமில்லை.கடவுள் நம்மை கைவிட மாட்டார்.
(இறைவன் நாடுவான்)
By Janab S Jabarullah