Madukkur
'80s '90s madukkur

மதுக்கூர் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நள்ளிரவு C.I.D .

தொன்மை தொட்ட இந்தியாவின் மக்கள் வாழ்வியலில், அதிலும் பொதுவாக தமிழக மக்களின் அன்றாட உணவு வகைகளில் “இட்லி” ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நூறு சதவீதமானர்கள் விரும்பி உண்ணும் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய உணவாகிறது. இட்லியை விரும்பாதவர்கள் என யாரும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர் குழந்தையின் வயிற்றுக்கு ஊட்டக்கூடிய முதல் உணவும், மருத்துவரால் இன்றும் பரிந்துரைக்கபடும் முதல் உணவும் இட்லி ஆகும். வயது வயோதிகம் அடைந்த காலத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு மிக எளிதில் உண்ணக்கூடிய உணவும் விரைவில் ஜீரணம் அடையக்கூடிய உணவாகவும் இட்லி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனின் வாழ்வில் இட்லி ஒவ்வொருவருடைய உற்ற நண்பனாக, உணவாக பயணிக்கிறது என்றால் அது மிகையாகாது.

80 களின் இறுதிகளில் அல்லது தொண்ணூறுகளின் தொடக்கமாக இருக்கலாம். நமதூரில் பெரும்பாலான தாய்க்குலங்கள் காலை நேரங்களில் வீடுகளிலயே இட்லியை சுட்டு “குடிசைதொழில்” வியாபாரம் செய்து வந்தனர் . ஒவ்வொருவருக்கும் அவரவர்களை சுற்றி வசிக்ககூடிய ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பர்.

காளியம்மன் கோவில் எதிர்புறம் ” பாட்டி” ஒருவர் இட்லி வியாபாரம் செய்து வந்தார். காலை 7- மணி முதலே மக்கள் கூட்டம் வரிசை கட்டி காத்திருக்க தொடங்கும்.
பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கர்கள் இட்லி வாங்க பாட்டியிடம் சென்றால் காத்திருக்க வைக்கமாட்டார் உடனடியாக கொடுத்து அனுப்புவார். மண்ணெண்ணய் அடுப்போ, கேஸ் அடுப்போ இல்லாத காலகட்டங்கள். ஒரு சிறிய இட்லி சட்டியில் அடுப்பூதும் ஊதாங்கொளையினை கொண்டு ஊதிஊதி கொண்டு மிக சுறுசுறுப்பாக செயல்படுவார் அவரது பெயர் நினைவில் இல்லை. (காரூவாய்)
25-பைசாவிற்கு 2 இட்லிகள் வீட்டிலிருந்து ஒரு சிறிய பாத்திரம் கொண்டு சென்று இட்லி வாங்கி வருவோம்
3- ரூபாய்க்கு வாங்கினால் ஒரு குடும்பத்திற்கு அன்றைய காலை உணவு போதுமானதாக இருக்கும். மிக அருசுவையாகவும் இருக்கும்.
அந்த பாட்டியின் கை பக்குவத்தில் என்னுடைய சிறுவயது பருவங்கள் கடந்தன.

காலங்கள் செல்ல செல்ல பாட்டி மறக்கடிக்கபட்டார். அந்த குடிசைதொழில் தாய்க்குலங்கள் தெருக்களில் விற்பனை வர தொடங்கியதும்
இட்லி பிரியர்களுக்கு அது மேலும் வசதியாக இருந்தது.
வீட்டு வாசலிலயே விற்பனை செய்து விட்டு நமது வீட்டு உறவுகளை போல் நலம் கலந்த விஷாரிப்புடன் வியாபாரம் செய்வது என மக்கள் மனதில் கொள்ளை கொண்டனர்.

எந்தவிதமான மின்சார பொருளின் துணையில்லாத
வியாபாரமானதால் ஆரோக்கியம் மேம்பட்டது என்றே கூறலாம்.
இன்றைய குடும்ப தலைவிகள் போல்,
கிரைண்டர், மிக்ஸி துணை இல்லாது,
அரிசி மாவு குடற்கல்லில் அரைப்பது , சட்னிக்கு அம்மிக்கல் என அனைத்தும் இயற்கையான உடலுழைப்பே .
தங்களது உழைப்புகளுக்கு ஏற்ற வியாபாரம் செய்யாமல் அந்த காலத்திற்கு தகுந்த சொற்ப வருமானத்திலயே வாழ்ந்த மகராசிகள்.

இந்த காலை நேர இட்லி வியாபாரம் ஒருபுறம் இருந்தாலும், இரவு நேர இட்லி தேவைக்கும் நமதூர் மக்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் இட்லி கடைகள் நிறைந்து காணப்பட்டது .
சிவக்கொல்லை, முக்கூட்டுச்சாலை, அம்பாரம், ஆத்துபாலம், சந்தை , மரக்கடை என குறிப்பிடலாம். சிவக்கொல்லையில் 3- இட்லிகடை மிகமிக பெயர் பெற்றது. காலை, இரவு என வியாபாரம் சிறப்பானதாக இருக்கும். அடுப்புகளில் பெரிய பெரிய விறகுகள் எரிவதும், தோசைக்கள்களின் சத்தமும், அதன் புகைகளும் சிறிய சிறிய புகைமண்டலமாக காலை, இரவு நேரங்களில் அழகாக காட்சியளிக்கும்.
சில நேரங்களில் இரவு 8- மணிக்கு மேல் இட்லி கிடைப்பது அரிதாக இருக்கும் கடைகளின் பெயர் நினைவில் இல்லை.

அதே போன்று சந்தையில் ” இந்திரா ஹோட்டல் இரவு நேர இட்லிக்கு பெயர் பெற்றவை.

ஒருமுறை எங்கள் கிரிக்கெட் அணி
” நேஷனல் கிரிக்கெட் கிளப்”
ஒரு தொடர் கிரிக்கெட் போட்டியினை நடத்தினோம் .
3- நாளைக்கு முன்னதாகவே ஊரை சுற்றி அனைத்து இடங்களிலும் விளையாட்டு போட்டியின் நோட்டீஸ்களை ஒட்டிவிட்டு இரவு 2- மணி அளவில் முக்கூட்டுசாலையில்
இறுதியாக டீ” குடிப்பதற்கு வந்தோம்.

அந்த சமயத்தில் கௌதமன் டீக்கடை, சிப்பி மெடிக்கல் ஒட்டியவாறு லக்கி டீஸ்டால், &
மாஸ்டர் C.I.D இட்லிகடை இந்த மூன்று கடைகள் மட்டுமே டியூப்லைட்டுகள் கண்ணை பறித்துகொண்டு இரவு நேர கடைகளாக திறந்து அழகாக காட்சியளிக்கும் .

அதிலும் பொதுவாக இட்லிகடை C I D அப்பா
M.G.R உடைய தீவீர ரசிகர் கடைக்கு வெளியே ஒரு பெரிய ஸ்பீக்கரை வைத்து M.G.R ன் தத்துவ பாடல்களை ஒளி பரப்பி கொண்டே இருப்பார். அந்த நள்ளிரவில் அந்த பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு மிக வசந்தமாக இருக்கும்.
” தரைமேல் பிறக்க வைத்தான்”
” எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற பாடல் அடிக்கடி கேட்டதுண்டு .

அடுப்பு கல்லில் வந்த புகையும், இட்லி சட்டியின் ஆவியும்,M.G.R பாடலும் கவர்ந்து இழுக்கவே நண்பர்கள் 15- பேர் இட்லி சாப்பிடலாம் என முடிவெடுத்து
கடைக்குள் புகுந்தோம் . அரைகை சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை திறந்து விட்டுகொண்டு, கழுத்தில் ஒரு துண்டுடன் ஏண்டா வறீங்க என்ற தோரணையில் பார்த்தார். 4- இட்லிய சாப்பிட்டு விட்டு பசங்க போய்டுவாங்க என தப்பு கணக்கு போட்டு, எரிந்து கொண்டு இருந்த அடுப்பில் 2- விறகுகளை மேலும் எரிய விட்டார்.

வாழை இலை அதுவும் அரக்குகலரில், சருகுஇலை
போடப்பட்டது முதல் ரவுண்டில் ஆவி பறக்க இட்லி வைக்கபட்டு, இட்லி பொடியும் வைக்கபட்டு சாம்பார் ஊற்றபட்டது அந்த வாசனை மேலும் பசியுணர்வை ஆர்வபடுத்தியது. பச்சையான வாழை இலையில் சாப்பிடுவது அது ஒரு சுவை, சருகு இலையில் சாப்பிடுவது அதைவிட சுவை என அன்று தான் உணர்ந்தோம். இரண்டாவது ரவுண்டு, மூன்றாவது ரவுண்டு, என இட்லி வைத்து, வைத்து களைத்து போய்விட்டார். மறுபுறம் கல்லில் தோசை ஊற்றுவதும், ஆம்லெட் போடுவதும் எங்களுக்கு சாம்பார் ஊற்றுவதும் என அடுப்பு விறகு மேலும் எண்ணிக்கை இரண்டானது.

இலையில் ஊற்றபட்ட சிறுசிறு உருளை கிழங்கு துண்டுகளுடன் சாம்பார்
நான்கு பக்கமும் வாய்க்கால் போல் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கையில் இலையை தூக்கியபடி நண்பர்களுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டே ஓடிக்கொண்டே இருந்தது.
சருகு இலை பிய்ந்து பாதி சாம்பார் கட்டிலில் ஒருபுறம் ஊற்றிக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் மீண்டும் இட்லி கேட்கவே மொத்த இட்லிதட்டையும் எங்கள் முன் வைத்து சென்று விட்டார். எனக்கு கை கடுக்குது, நீங்களே கணக்கு வச்சிகங்க என செல்ல கோபத்துடன், ஒரு 45- நிமிடம் சென்று இருக்கும்
மீண்டும் ஒரு ரோஸ்ட் கேட்கவே எரிந்து கொண்டு இருக்கும் அடுப்பின் விறகை வெளியில் இழுத்து தண்ணீர்
ஊற்றி அணைத்து விட்டார்
எந்திரிச்சி போங்க மாவு முடிந்து விட்டது என , நாளைக்கு கடை லீவு என்று வந்துடாதீங்க என உடல்மொழியில் பேசினார்.
பிறகு சாப்பிட்ட கணக்கு ஒவ்வொரும் சொல்லி முடித்து காசு முடித்து வெளி வருகையில் அப்பா ஒரு வழி ஆகிவிட்டார். எல்லோருக்குமே ஆச்சர்யம் 4- இட்லி சாப்பிடலாம்னு போய்ட்டு ஆளுக்கு கடைய காலி பண்ணியது தான் மிச்சம்.

இந்த சிறுகடையில் இந்த ருசியான உணவிற்கு பலரும்
பிரியர்கள் .

திருவிழா போஸ்டர் ஓட்டுபவர்கள், திருமண போஸ்டர் ஓட்டுபவர்கள், கலைநிகழ்ச்சி போஸ்டர் ஒட்டக்கூடியவர்கள் , விளையாட்டு போட்டி போஸ்டர் ஒட்டுபவர்கள் , அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிக்கு போஸ்டர் ஒட்டுபவர்கள் என பலரும் நள்ளிரவில் C.I.D அப்பாகடையில் பெரும்பாலும் இட்லி உண்ணாமல் செல்ல மாட்டார்கள்.

இந்த கடை இரவு வியாபாரம் மட்டும் தான் என்று நினைக்கிறேன். 7- மணிக்கு பிறகு பெரும்பாலும் பார்சல் வாங்குபவர்கள் சட்னி, சாம்பார் கொண்டு செல்ல சிறிய பாத்திரம் கொண்டு வருவார்கள் மஞ்சள் பையுடன். இட்லி வாழை இலையில் மடித்து கட்டி கையில் வாங்கும் பொழுது பொதபொதவென்று அழகான சூட்டுடன் கைகளுக்கு இதமாக இருக்கும். வியாபாரத்திற்கு உறுதுணையாக அவருடைய மகனும் கடையில் மிக உதவியாக இருப்பார்.

இதனையும் கடந்து MKM தியேட்டருக்கு 2nd show செல்பவர்கள் C.I.D கடையிலும், பூமி கடையிலும் விரும்பி உண்பார்கள் .
இதனை போன்று பல கடைகள் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவை.
90 ஸ் கிட்ஸ்கள் தேர்வில் வெற்றி பெற்றாலோ, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலோ, பார்ட்டி என்னும் பெயரில் இட்லி கடைகளில் தான் விருந்தோம்பல் நடக்கும்.

இன்று எத்தனையோ நவீனமயமான உணவுகள்
வருகை தந்து இருந்தாலும் , அதனை சாப்பிட்ட பின் 15- ரூபாய்க்கு C.I.D கடையில் மற்றும் பிற கடைகளிலும் சாப்பிட்ட திருப்தி இல்லை .
மக்களுக்கு ஏற்ற எளிய வியாபாரத்துடன் தரமான சுவையுடன் மக்களை வசீகரித்த பல இட்லி கடைகளின் வியாபாரிகள் இன்று இல்லை. அதிலும் பொதுவாக C.I.D அப்பா அதிகாலை வரை ” முக்கூட்டுச்சாலை” இவருடைய M.G.R பாடல்களாலும், அனல்பறக்கும் அடுப்புகளும் மதுக்கூர் நகருக்கு முக்கூட்டுச்சாலை தூங்காநகரமாக காட்சியளித்தது.

அந்த வயதிலும் இரவு முழுதும் கண் முழித்து வாடிக்கையாளரை நெகிழ செய்த கடின உழைப்பாளி, C.I.D என்கிற முஹம்மது செய்யது அவர்கள்.
2005- ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார்கள்.

அவருடைய மறைவிற்கு பின் “முக்கூட்டுசாலை” யின் இரவு பொழுதுகள் தனது நண்பன் C.I.Dயை இழந்து,
இன்றும்
தேடிக்கொண்டு நிற்கிறது. இன்றும் இரவு 7- மணிக்கு மேல் முக்கூட்டுச்சாலை பக்கம் சென்றால் C.I.D அப்பா நினைவில் வராமல் இருப்பது இல்லை. மதுக்கூர் அத்தியாயத்தில் தன்னுடைய இட்லி வியாபாரத்தால் (மறைந்தும்) மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நள்ளிரவு C.I.D

இன்றைய காலத்தில் இட்லி பார்சலுக்கு பேப்பருடன் பிளாஸ்டிக், சாம்பார் சட்னிக்கும் பிளாஸ்டிக் , இவை மட்டுமின்றி குடும்ப தலைவிகளுக்கு கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு நேரமில்லாமல் “பாக்கெட் மாவு” வாங்கும் கலாச்சாரம் புகுந்து விட்டது.
நேரமில்லை என அவசர வட்டத்திற்க்குள் வாழ்க்கை முடங்கிவிட்டது.

இதே மண்ணில் தான் பல வருடங்கள் முன்பு வரை குடற்கல்லிலும், அம்மிகல்லிலும் இட்லி உணவை தயாரித்து குடிசை தொழிலாக செய்து வந்த (வருகிற) அந்த தாய்க்குலங்களை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

வீட்டிலும் கை வலிக்க, கால் வலிக்க, மாவு அரைத்து குடும்பத்தினருக்கு இட்லி தயார் செய்து பசியாற்றிய தாய்க்குலங்களையும் பாராட்டுவோம்.
அந்த தாய் குலங்களின் உடலுழைப்பை இக்கால பெண்களின் உடலுழைப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் இக்கால பெண்கள் பூஜ்யமே

இயற்கையான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு செயற்கையான ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களில் அடிமை ஆகி வருகிறோம்.

மீளுவோம் பழைய சுகாதாரமான வாழ்வையும், தேடுவோம் ஆரோக்கியமான உணவு வழி முறைகளையும்.

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR