மதுக்கூரின் வெற்றி கொடியை பிற ஊர் மைதானங்களில் பறக்கவிட்ட …
எலிகண்ட் கிரிக்கெட் கிளப் E.C.C
மதுக்கூர் கிரிக்கெட் கிளப் M.C.C
அணியினர்கள் .
02.08.96
இறுதிபோட்டிக்குள் நுழைவது யார் , அனல்பறக்க நடந்த ஒரு அரையிறுதி யுத்தம்
அத்திவெட்டி A.C.C VS மதுக்கூர் M.C.C
நமதூரின் (மதுக்கூர்) பாரம்பரியமான தொன்றுதொட்ட விளையாட்டாக ” கால்பந்து” விளையாட்டு மட்டுமே மிக முக்கிய பிரதான விளையாட்டாக காணப்பட்டது.
காலப்போக்கில் ஒவ்வொரு விளையாட்டையும், விரும்பி நேசிக்ககூடிய புதியதலைமுறைகள், ஒவ்வொன்றாக உதயமாக தொடங்கினார்கள்.
கிரிக்கெட், பேட்மிண்டன், வாலிபால்,டென்னிஸ், கபடி,கேரம்போர்டு, செஸ், இன்னும் பலவகையான விளையாட்டுகளின் மூலம் தங்களது திறமைகளை வெளி உலகிற்கு பறைசாற்றி, மதுக்கூரை திரும்பி பார்க்க வைத்த வீரர்களின் பட்டியல்கள் ஏராளம். மதுக்கூரில் உள்ள ஒவ்வொரு விளையாட்டை சார்ந்த ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான தனிதனி சாதனைகள் இருக்கின்றன.
அது நமது மண் இறைவன் அருளால் வாங்கி வந்த வரம் என்றே கூறலாம். இன்றும் அனைத்து விளையாட்டுக்களையும், நேசிக்ககூடியவர்களையும்,
அதில் திறமைவாய்ந்தவர்களையும், நமதூர் இன்றுவரை பல வீரர்களை உருவாக்கி,அடையாளங் காட்டி கொண்டே வருகிறது. அது நமதூரின் மிகபெரிய சிறப்பு.
80ஸ் களில் கால்பந்திற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் விளையாட்டை நேசிக்ககூடிய ஒரு புதிய இளம்தலைமுறை உருவாகி,காலடி பதித்து, ஒரு அணியாக முழு வடிவம் பெற்றது. ஒன்று
மதுக்கூர் கிரிக்கெட் கிளப்(M.C.C)
மற்றொன்று
எலிகண்ட் கிரிக்கெட் கிளப் (E.C.C.)
உங்களுக்கு தெரிந்த நமதூர் கிரிக்கெட்டின் பல முக்கியமான விளையாட்டு செய்திகளும், வீரர்களின் செய்திகளும், அதனை சார்ந்த செய்திகளும் இப்பதிவில் தவிர்க்கிறேன்.
பெரும்பாலான தகவல்கள் M.C.C .வரலாற்று மலரில், மலர் கமிட்டியினர் பதிவேற்றி உள்ளதால், அதனை குறிப்பிடலாகாது.
நமதூர் வரதராஜபெருமாள்கோவில் திடலில் தான் M.C.C & E.C.C இரு அணியினரும் நாளுக்கு நாள் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு ஆடி வந்தனர்.
E.C.C அணியில் மகேஷ், ராஜபாண்டியன் ஆல்ரவுண்டர், M.C.C அணியில் ஷலாவூதீன், ஜியாவுதீன் ஆல்ரவுண்டர், கருணாகரன், தமிழ்அமுதன், ஹாஜா, முஸ்தாக் இந்த நால்வரும் நெருக்கடியான நேரங்களில் ரன்ரேட்டை கட்டுபடுத்த அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசுவதிலும், விக்கெட் தேவைபடும் நேரத்தில் அதற்கு தகுந்த பந்து வீசுவதிலும், கில்லாடி பந்து வீச்சாளர்கள்.
சுழற்பந்திற்கு கோவிந்த், முரளி, நஜ்புதீன் என ஒவ்வொரு வீரர்களுக்கும், சரிசமமான மற்றொரு வீரர்களை, இரு அணியிலும் இம்மைதானம் உருவாக்கியது என்றே கூறலாம். இந்த இரண்டு அணிகளும் கிரிக்கெட்டிற்கு மதுக்கூருக்கு கிடைத்த வரம் என்றே எனலாம்.
ஒரே ஊரில் இந்த இரண்டு அணிகளும் வெவ்வேறு துருவங்களில் பயணித்தாலும், இந்த இரு அணியினருக்கிடையே நட்பு இலக்கணம் மேம்பட இந்த கிரிக்கெட் வழி வகுத்தது.
வெளியூர் போட்டிகளில் பங்கேற்கும் பொழுது, சில வீரர்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது இந்த அணியிலுள்ள வீரர்கள்,அங்கு கலந்து கொண்டு வெற்றி பெற வைப்பதும், அங்குள்ள வீரர்கள் இங்கே கலந்து கொண்டு வெற்றி பெற வைப்பதும் என கிரிக்கெட் நட்புறவு பலமான இணைப்பு சக்தியாக அமைந்தது.
E.C.C அணியின் வீரர்கள்:
கேப்டன் மகேஷ், கருணாகரன்,ராஜபாண்டியன், கோவிந்தராஜ், சேதுராமன்,தமிழ்அமுதன்,முரளிதரன், வெங்கட்,கோபி, சசிகுமார்,பார்த்தசாரதி, பெரமையன், சுதாகர், அஷோக்,சரவணன், சக்திவேல், பாலு,தேவா, சிவக்குமார்,டேவிட்மாறன்,வெங்கடேஷ்,சுபாஷ், பார்த்திபன்,சுரேஷ்,கந்தசாமி, கார்த்திக்கேயன்,ராஜா, குமார், ராமபிரபு,சுபாஷ், வசந்த் என அணி வலுவான நிலையில், இருந்தது. சிறந்த பந்துவீச்சாளர்களையும், அதிகமான ஆல்ரவுண்டர்களுடன் அணி வலுவாக கட்டமைந்தது.
இரு அணிகளுமே வெளியூர் தொடர்போட்டிகளில் பங்கேற்ககூடியவர்கள். முதன்முதலில் நமதூருக்கு வெளியூர் மைதானங்களில் வடசேரி, எடையூர்- சங்கதி இன்னும் பிற ஊர்களிலும், வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி நமதூருக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள். E.C.C.அணியினர்.
ஆனால்M.C.C அணி காலிறுதி, அரைஇறுதி வரை சென்று போராடி தோல்வியடைந்து வருவது ஒரு தொடர்கதையாக இருந்து கொண்டிருந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வந்து கொண்டிருந்தனர். தோல்வியிலிருந்து பாடம் கற்று, கற்று, தங்களை மேலும் செதுக்கி கொண்டிருந்தனர்.
இந்த தொடர் தோல்விகளுக்கு பின்னால் தொடர்வெற்றி பெற போவது அறியாதவர்களாய். பயணித்து கொண்டிருந்தனர்.
90- களில் M.C.C. அணி பல ஊர் அணிகள் பங்கேற்கும் மாபெரும் “கிரிக்கெட் திருவிழா” தொடர் போட்டியை பலமுறை நடத்தியது.
திருவாரூர், தொண்டறாம்பட்டு, அதிராம்பட்டினம், ஆழியூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அத்திவெட்டி, ஊரணிபுரம், திருத்துறைப்பூண்டி, வடசேரி, கூத்தாநல்லூர், முத்துபேட்டை, ஒரத்தநாடு, தென்னமநாடு,காசங்காடு, கூத்தூர், அடியக்கமங்கலம், திருமக்கோட்டை, தாமரகோட்டை, பழையமதுக்கூர், நாச்சிகுளம், பாப்பாநாடு, தோப்புதுறை, பெரியகோட்டை என இன்னும் பல ஊர் அணிகள் பங்கேற்று விளையாடும் போட்டி வருடந்தோறும் M.C.C அணியினரால் நடந்தேறும்.
சிவக்கொல்லை மதுக்கூரின் தலைநகரம் போன்று காட்சியளிக்கும்.
போட்டி நடைபெறும் அத்தனை நாட்களும், டீக்கடை, பெட்டிக்கடை, சாப்பாடுகடை என அனைத்து கடைகளும் பிற ஊர் வீரர்களால் சூழப்பட்டு பரபரப்பாக காட்சி அளிக்கும்.
முதல் சுற்று, காலிறுதி சுற்றுகள் முடிந்தவுடன் அரையிறுதி ஆட்டத்திற்கு,
திருவாரூர்,அதிரை,E.C.C, M.C.C, பட்டுக்கோட்டை, மன்னார்குடி,அத்திவெட்டி, ஆழியூர், ஊரணிபுரம், வடசேரி போன்ற ஊர்களுக்கிடையே கடும் போட்டி நிலவும். சர்வதேச ஆட்டத்திற்கு இணையான ஆட்டங்கள் நடைபெறுவது போல் இருக்கும்.
சுவாரஸ்யமான ஆட்டம் என்றால் அது திருவாரூர் அணிக்கும், மதுக்கூர் E.C.C. அணிக்கும் தான். ஒவ்வொரு முறையும் இந்த இரு அணிகளுமே பலப்பரீட்சை நடத்தும். வழக்கம் போல் ஒரு அரையிறுதியில் மோத நேர்ந்தது.
முதலில் பேட் செய்த திருவாரூர் அணி கனிசமான ரன்ரேட்டை இலக்காக வைத்தது. பிறகு பேட்டிங் தொடங்கிய E.C.C அணியின் வீரர்கள் துவக்க ஆட்டக்காரர் ராஜபாண்டியனுடன், தேவா or அஷோக் களமிறங்கினார்கள்.
துவக்கமே திருவாரூர் பவுலர்களை திணற வைத்தார்கள். ரன்ரேட் நல்லமுறையில் வந்துகொண்டிருந்தது . திருவாரூர் கேப்டன் சரவணன் வேகப்பந்து வீச்சாளர்களை நிறுத்தி வைத்து விட்டு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார்.
சுழற்பந்தில் ரன்கள் எடுக்க முடியாமல் விக்கெட் ஒவ்வொன்றாக விழுந்தது.குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர், சதீஷ்யுடைய பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது.
கேப்டன் மகேஷ் களமிறங்கி மிக நிதானமாக ஆடினார். மகேஷ் களத்தில் நிற்கும் வரை எதிரணியின் வெற்றியை உறுதி செய்ய முடியாது. கடைசி 2- ஓவர்களில் 20- ரன் எடுத்தால் E.C.C அணி வெற்றி பெறலாம் என்ற நிலையில் , சதீஷ் பந்துவீச வந்தார். அவரின் முதல் 3- பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி விக்கெட் ஆடி கொண்டு இருக்கிறார்கள். கேப்டன் சரவணன் பீல்டிங்கில் சில மாற்றங்களை செய்தார். 4- வது பந்தில் தூக்கி அடித்தார் மகேஷ், அனைவரும் சிக்ஸர் என எதிர்பார்க்கபட்ட நிலையில் எல்லைக்கோட்டு கொடியின் மிக அருகில் கேப்டன் சரவணால் கேட்ச் ஆனார். திருவாரூர் அணி முதன்முறையாக E.C.C. அணியை வெற்றிகொண்டது.
அதற்கு முந்தைய வருடம் , E.C.C அணியிடம் திருவாரூர் அணி தோல்வியடைந்ததும் குறிப்பிடதக்கது.
ஒருமுறை இந்திராநகர் “மஹாத்மா ஸ்போர்ட்ஸ் கிளப்”( நவமணி, அக்பர் & teams) ஒரு கிரிக்கெட் தொடர் போட்டியை நடத்தியது. வழக்கம் போல் பல ஊர் அணிகளும் பங்கேற்றது.
அன்றைய தொடர் போட்டிகளில் E.C.C அணியில் ” விநாயக மூர்த்தி” இடம் பெற்றிருந்தார். அனைத்து போட்டிகளிலும் விநாயகமூர்த்தியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ரசிகர்களால் பெரிதும் பேசபட்டார்.
அந்த தொடரில் கால் இறுதி போட்டியில், அத்திவெட்டி அணியுடன் E.C.C அணி மோத நேர்ந்தது.15 ஓவர் கொண்ட போட்டி, அத்திவெட்டி அணி முதலில் பேட் செய்து 90- ரன்கள் இலக்காக வைத்தார்கள்.
அத்திவெட்டியின் சிறப்பான பந்துவீச்சால் துவக்க ஆட்டக்காரர்களை ரன்கள் பெரிய அளவில் எடுக்கவிடாமல் களத்தை விட்டு வெளியேற்றினார்கள்.
விநாயகமூர்த்தியுடன் கேப்டன் மகேஷ் ஜோடி போட்டார். இந்த இருவரும் நேர்த்தியான முறையில் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் 4- ஓவர்களுக்கு 26- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு E.C.C அணி தள்ளப்பட்டது. களம் பரபரப்பாக காட்சியளித்தது.
கேப்டன் மகேஷ் அந்த சூழ்நிலையில், தான் எதிர்கொண்ட முதல் பந்தை பிரம்மாண்டமான சிக்ஸர் ஒன்றை மாமரத்திற்கு தூக்கி அடித்தார்.மைதானம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அடுத்த பந்தில் ஒரு விரைவு ஓட்டம் எடுப்பதற்கு விநாயகமூர்த்தி முயற்சி செய்ய , அத்திவெட்டி பீல்டர்கள் ரன் அவுட் செய்து அம்பயரிடம் clime செய்தனர்.
அம்பயரால் அவுட் நிராகரிக்கபடவே அத்திவெட்டி அணி அம்பயரின் மீது அதிருப்தியுடன் ஆட்டத்தை வெளிநடப்பு செய்து மைதானத்தை விட்டு வெளியேறியது. இரண்டொரு நாள் கழித்து அத்திவெட்டி அணியினர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொண்டனர்.
இதற்கு பின் அத்திவெட்டி, மதுக்கூர் அணிகள் நீண்ட நாட்கள் ஒருவரோடு ஒருவர் விளையாடுவதற்கு வாய்ப்பு அமையவில்லை.
இம் மைதானத்தில் E.C.C. அணி ஒரு முறையும் , மஹாத்மா ஸ்போர்ட்ஸ் கிளப் ஒரு முறையும், M.C.C அணி பலமுறையும், தொடர் போட்டிகளை நடத்தியுள்ளார்கள்.
அதில் “மதுக்கூர் கோப்பையை” வென்ற சாம்பியன் அணிகள்.
அத்திவெட்டி, ஆழியூர், மதுக்கூர் E.C.C, திருவாரூர் , அணி 2- தடவைக்கு மேல் என கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள்.
நமதூருடைய M.C.C & E.C.C இந்த இரண்டு அணிகளுடைய பெரும்பாலான வீரர்களின் “தாரகமந்திரம்” நமதூரில் நடக்கும் போட்டியில் மதுக்கூர் அணி கோப்பையை கைப்பற்றினால் நன்றாக இருக்காது. பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து பயணித்து வரும் வெளியூர் அணிகள் விளையாடி வெற்றி பெற்று மதுக்கூர் கோப்பையை எடுத்து செல்வது தான் நமதூருக்கு சிறப்பு என அடிக்கடி கூறிக்கொள்வார்கள்.
அதனால் என்னவோ E.C.C சொந்த மண்ணில் ஒரு முறையும், M.C.C சொந்த மண்ணில் வெற்றி கோப்பை வென்றதில்லை. ஒரே ஒரு ஆறுதல் , கேப்டன் N.S.M அயூப்கான் தலைமையில் M.C.C அணி ஒருமுறை இறுதி ஆட்டத்திற்கு சென்று ஆழியூர் அணியுடன் மோதி , ரன்னர் பட்டம் கிடைத்த ஒன்றை தவிர பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. அதற்கான நாளும் கனிந்தது.
1996- ல் M.C.C அணியை நோக்கி ” வசந்தகாற்று வீச தொடங்கியது” புதிய அன்றைய இளம்தலைமுறைகள் ” இளம்படைகள் சூப்பர்சீனியர்களுடன் கை கோர்த்தனர்.அணி மேலும் வலிமை பெற்றது.
M.C.C யின் புதிய அத்தியாயங்களும், தொடர் வெற்றி வரலாறுகளும் உருவாக தொடங்கின.
வழக்கம்போல் தொண்டறாம்பட்டு அணியினர் நடத்திய தொடர்போட்டிகளில்,பங்கேற்று முதல் சுற்று, இரண்டாம் சுற்று, காலிறுதி என வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மதுக்கூர் மண்ணில் கோப்பையை வென்ற, முன்னாள் சாம்பியன் அத்திவெட்டி அணியும், தனக்கான அங்கீகாரத்தின் முத்திரையை பதிக்க, நீண்ட வருடங்களாக தேடிகொண்டிருக்கும் M.C.C
அணிக்குமிடையே 2.8.1996 அன்று அரையிறுதி தீர்மானிக்கபட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அத்திவெட்டி அணியும், மதுக்கூர் அணியும், அரை இறுதியில் மோத நேர்ந்ததால் ரசிகர்களிடையே இந்த ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கபட்டது.
டாஸை வென்ற அத்திவெட்டி கேப்டன் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
(வீரர்களின் பெயர் நினைவில் இல்லை) துவக்க ஆட்டக்காரர்கள் இருவரில், ஒருவர் நிதானமாக ஆட மற்றொருவர் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தார்.
M.C.C அணியின் பந்துவீச்சாளர்களை சுலபமாக எதிர்கொண்டு நாலாபுறமும் பந்துகளை அடித்து விரட்டினார்.
இந்த தொடக்க ஜோடியை பிரிக்க கேப்டன் ஹாஜா பல முயற்சிகள் செய்தார். கை கொடுக்கவில்லை . ரன் ரேட் விகிதம் அதிகரித்த நிலையில் சென்று கொண்டே இருந்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் , பீல்டர்களை நிக்க விடாமல் ஓடவிட்டு கொண்டே இருந்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் என அடித்துகொண்டே பதட்டமில்லாமலும் , தனது அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்லும் முனைப்போடும், கடமையோடும் சிறப்பாக ஆடி கொண்டிருந்தார். 10, ஓவர்கள் கடந்த நிலையில் அத்திவெட்டி அணி தன்னுடைய முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
துவக்கத்தில் நிதானமாக ஆடியவர் ஆட்டமிழந்தார் . இரட்டை இலக்க ரன்களை அடித்து இருந்தார். அதிரடி ஆட்டக்காரருக்கு ஒத்துழைக்கும் வகையில் சிறப்பாக ஆடி கொடுத்தார்.
மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் சிறப்பான முறையில் ஆடிக்கொண்டிருக்க, அடுத்தடுத்து வந்த வீரர்கள் இவருக்கு பக்கபலமாக ஆட, அத்திவெட்டி அணியின் ரன்ரேட் எகிறிய வண்ணம் இருந்தது.இரண்டு பந்துவீச்சாளர்களின் ஓவர்களை தவிர, மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவர்கள் அனைத்தும் பதம் பார்க்கப்பட்டது. 20- ஓவரின் கடைசி பந்தை, தொடக்கஆட்டக்காரர் 48 ரன்களுடன் எதிர்கொண்டார். அவரை அரைசதம் அடிக்கவிடாமல் தடுக்கும் முயற்ச்சியில்
பீல்டர்கள் நிறுத்தபட்டார்கள். கடைசி பந்தை எதிர்கொண்ட துவக்க மட்டையாளர் அட்டகாசமான சிக்ஸர் அடித்து தமது அரை சதத்தை கடந்து , 54 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 6- பவுண்டரிகளும் 3- சிக்ஸர்களும் அடங்கும்.
அணியின் எண்ணிக்கை 147
அரைசதம் அடித்த துவக்க மட்டையாளரை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்ப்பரித்து, கைதட்டி பாராட்டி, கரகோஷத்துடன் வாழ்த்து தெரிவித்தனர்.
மனதிற்குள் தோல்வியை ஊர்ஜிதம் செய்தவர்களாய் M.C.C வீரர்கள் பீல்டிங் பணியை முடித்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர். 20 ஓவர்களில் 148 ரன்கள் அடித்தால் M.C.C. அணி இறுதி போட்டிற்குள் நுழையலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
துவக்க ஆட்டக்காரர்களாக இஷாக் & பிரான்மலை களமிறங்கினார்கள். இஷாக் நிதான போக்குடன் விளையாடகூடியவர் இலகுவான பந்துகளை மட்டும் தேர்வு செய்து எல்லை கோட்டுக்கு விரட்டுவார்.தன்னுடைய விக்கெட்டை எளிதில் பறிகொடுக்கமாட்டார். இவர் களத்தில் நிற்கும் வரை பால் to பால் அணியின் ரன்ரேட் சரிசம விகிதத்தில் இருக்கும். பிரான்மலை அதிரடி ஆட்டக்காரர் .இருவரும் மைதானத்திற்குள் களம் புகுந்தனர்.
அத்திவெட்டி கேப்டன் பீல்டிங்கை, கட்டமைத்தார். அனைத்து வீரர்களும் துறுதுறுவென்று வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தடுப்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.
மைதானம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் யார் வெற்றிபெறுவார் என்பதை காண பெரும் பரபரப்பு ரசிகர்களிடம் பற்றி கொள்ள தொடங்கியது. அந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வந்த அதிரடி ஆட்டக்காரர் ” அல்லாபிச்சை” அரை இறுதியில், பங்கேற்காதது அந்த ஊர் M.C.C ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
முதலாவது ஓவரில் இருவரும் பதட்டமில்லாமல் 5- ரன்களை சேர்த்தனர்.
2- வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக 2- பவுண்டரிகளை அடித்து அதிரடியை துவக்கினார் பிரான்மலை.
இவர் அதிரடியை தொடங்கிய பிறகு மறுமுனையில் இஷாக் அதிரடியாக அவரும் அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து விரட்டினார்.ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இருவரும் அடித்து ஆட தொடங்கியவுடன் சிறிய நம்பிக்கை பிறந்தது M.C.C அணியினருக்கு,அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
4- ஓவர்கள் கடந்த நிலையில் அணியின் எண்ணிக்கை 34- ரன்களாக இருந்தபொழுது பிரான்மலை அவுட் ஆனார்.
அடுத்த ஆட்டகாரராக நியாஸ் களமிறங்கி இஷாக்வுடன் கைகோர்த்தார், முதல் 3- ரன்கள் தட்டி சேர்த்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகளை விரட்டி அடித்து ஆட தொடங்கினார்.
பிரான்மலை அவுட்டிற்கு பிறகு தனது அதிரடியை நிறுத்தி வைத்திருந்த இஷாக் , மறுமுனையில் இவரும் ஆடித்து ஆட தொடங்கி இருவரும் விசுவரூபம் எடுத்தனர்.
இந்த பார்ட்னர்ஷிப் நாலாபுறங்களிலும் பந்துகளை சரவெடி போல் அடித்து நொறுக்கினார்கள். ரன்ரேட் மளமளவென்று உயர்ந்தது. இந்த இருவருடைய ஆட்டமும் வழக்கமான இவர்களது பாணியில் இல்லாத, புதிய பரிணாமமாக உருமாறியது.
ரன்ரேட் சூழ்நிலையை உணர்ந்த அத்திவெட்டி கேப்டன் ரன்களை கொடுக்காமல் ரன்ரேட்டை கட்டுபடுத்தும் பந்துவீச்சாளர்களை கையாண்டார். அந்த பந்துவீச்சு அடித்து ஆடி கொண்டிருந்த இருவருக்குமே நெருக்கடியை கொடுத்தது.
இந்த இருவரும், அந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதமாக ஆளில்லாத பகுதியில் தட்டிவிட்டுவிட்டு, 1 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் 2 ஓட்டங்களாகவும், 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் 3- ஓட்டங்களாகவும், தங்களுடைய விக்கெட்டை பறிகொடுக்காமலும் , விரைந்து ஓடி,
ஒருவர் பேட்டிங்முனையிலும், மற்றொருவர் பவுலர் முனையிலும் விழுந்து புரண்டு, ரன்களை சேகரித்தனர்.
இந்தபக்கம் விழுந்து கிடப்பவரை கீப்பர் தூக்கிவிட்டு கைகால்களை தட்டிவிடுவார். அந்த பக்கம் விழுந்து கிடப்பவரை பவுலர் தூக்கிவிட்டு தட்டிவிடுவார்.
மறுபுறம் பீல்டர்களும் பவுண்டரி செல்ல வேண்டிய பல பந்துகளை அபாரமான திறமையான பீல்டிங்கினால் அவர்களும் விழுந்து புரண்டு ரன்களை கட்டுபடுத்தினர்.
இரு அணியினரும் இறுதி ஆட்டத்திற்குள் நுழைவதற்கு யுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக உச்சகட்டத்தை அடைய தொடங்கியது.
M.C.C அணியினர் வெற்றி பெறுவதற்கு பால் to பால் ரன் விகிதம் தேவைபட்ட நிலையில், 6- பவுண்டரிகளுடன் 37- ரன்கள் எடுத்த நிலையில் இஷாக் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த 2- வீரர்கள் சொற்ப ரன்களிலயே தங்களது விக்கெட்டை கொடுத்து வெளியேற, அத்திவெட்டிக்கு வெற்றி வாய்ப்பு, சாதகமாக நிலவியது.
களத்தில் ஆடிகொண்டிருக்ககூடிய நியாஷிற்கு உறுதுணை கொடுக்கும் வகையில் கேப்டன் ஹாஜா களமிறங்கினார். விக்கெட்டை இழக்காமலும், அதே நேரத்தில் ஒற்றை ரன்களை சேகரித்து கொண்டும், அதிகமான பந்துகளை நியாஸ் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.தனி ஆளாக போராடி கொண்டிருந்த நியாஸ் 8 பவுண்டரிகளுடன் 42- ரன்கள் எடுத்த நிலையில் அரைசதம் கடப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கபட்ட நிலையில் அவுட் ஆனார் .
2-ஓவர்களுக்கு 18- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடியான நிலையில் கேப்டன் ஹாஜாவுடன் ஷலாவூதீன் கைகோர்த்தார்.அந்த தொடரில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஷலாவூதீன் ஒற்றை இலக்க ரன்களே அடித்திருந்தார் (Form out) பெரிதும் சோபிக்கவில்லை.
அனைத்து பீல்டர்களையும் எல்லைகோட்டின் அருகில் நிறுத்தினார் அத்திவெட்டி கேப்டன். 19- வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை தடுத்து ஆடினார். 3- வது பந்தில் இறங்கி அடித்து லெக்சைடில் இமாலய சிக்சர் ஒன்றை தூக்கிபோட்டார். ரசிகர் பட்டாளம் துள்ளி குதிக்க ஆரம்பித்தது.
இளம் வீரர்கள் தோல்வியின் விளிம்பிலிருந்து அணியை வெற்றிக்கோட்டின் அருகே நிறுத்தி விட்டார்கள். நாம் கட்டாயம் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியுடன், பதட்டபடாமல் காணப்பட்டார்.
19-வது ஓவரின் 4’வது பந்தை தடுத்து ஆட, 5- வது பந்தில் 2- ரன்களை சேகரித்தார். கடைசி பந்தில் 1′ ரன்னை தட்டிவிட்டு 20- வது ஓவரையும் அவரே எதிர்கொள்ள தயாரானார்.
1 ஓவரில் 9- ரன்கள் எடுத்தால் இறுதிபோட்டிக்குள் நுழையலாம் என கமிட்டியிலிருந்து ” கமெண்டரி” கதிரவன் அவர்கள் திரும்ப திரும்ப பரபரப்புடன் கூறி கொண்டிருந்தார்.
மைதானத்தில் கூடியிருந்த அனைத்து ரசிகர்களுக்கும் இந்த ஆட்டம் சிறந்த விருந்தாக அமைந்தது.
20- ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஷலாவூதீன் மீண்டும் அதே இடத்தில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்தார். M.C.C அணியினருக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 5- பந்துகளுக்கு 3- ரன் என்ற நிலையில் அனைத்து பீல்டர்களையும், குறுகிய வட்டத்திற்குள் கேப்டன் நிறுத்தினார். இரண்டு அணியையும் உற்சாகபடுத்தும் விதமாக ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது.
2-வது பந்தையும் 3- வது பந்தையும் தடுத்தாடிய சலாவுதீன் 4- வது பந்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான இமாலய சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்து இறுதிபோட்டிக்குள் அழைத்து சென்றார்.கேப்டன் ஹாஜாவும், சலாவுதீன் விளையாடுவதற்கு பக்கபலமாக செயல்பட்டார். 8- வருட தொடர் தோல்விகளுக்கு பிறகு,M.C.C அணி இறுதி போட்டிற்குள் நுழைந்தது.
M.C.C அணி வெற்றி பெற்றதும் அந்த ஊர் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளே புகுந்து ஆரவாரமாக M.C.C அணியினருடன் கைகொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
IMAGE: ஜியாவுதீன் ஆல்ரவுண்டர்,கேப்டன் ஹாஜா மைதீன், ஷலாவூதீன்
M.C.C அணியினரும், அத்திவெட்டி அணியினரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அரைசதம் அடித்த அத்திவெட்டி துவக்க ஆட்டக்காரரை M.C.C அணியினரும் பாராட்டினர். அந்த ஊர் கிரிக்கெட் ரசிகர்களும் இணைந்து வாழ்த்தி பாராட்டினர். அத்திவெட்டி அணியினர் அதே மைதானத்தில் M.C.C.அணிக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். அடுத்து அத்திவெட்டியில் தொடர்போட்டி நாங்கள் நடத்த இருக்கிறோம் அவசியம் நீங்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தும் சென்றனர்.இறுதிபோட்டியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்தும் கூறி விடைபெற்றனர்.
இங்கே அத்திவெட்டி அணியினர் தோல்வியுற்றார்கள் என்று சொல்வதை விட , மாறாக M.C.C அணிக்கு போராட்ட குணத்தையும், வீரர்களுக்கு உள்ளே இருந்த மற்றொரு பரிணாமதிறமைகளையும், வெளிக்கொண்டு வர உதவினார்கள் என்று கூறுவதே சாலசிறந்ததாகும்.
(பின் குறிப்பு: அன்றைய அரை இறுதி போட்டியில் M.C.C. அணியின் சார்பாக ஸ்கோர்புக், பார்ப்பதற்கும், வீரர்களின் பெயர்களை கூறுவதற்கும் நான் கமிட்டியில் கமெண்டரியின் அருகில் அமர்த்தபட்டிருந்தேன்)
இந்த அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு சலாவுதீன் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்திற்க்கு(பார்மிங்) திரும்பினார். தொடர்ச்சியாக 6- வெளியூர் மைதானங்களில் 1996- முதல்- 1997- வரை, தொடர் வெற்றி கோப்பையை கைப்பற்றி
வெற்றிவாகை சூடி மதுக்கூர் மண்ணிற்கு M.C.C அணியினர் பெருமை சேர்த்தனர்.
நமதூருக்கு முற்பகுதியில் எலிகண்ட் (E.C.C)கிரிக்கெட் அணியினரும், பிற்பகுதியில் மதுக்கூர் கிரிக்கெட் கிளப்(M.C.C) அணியினரும்
பல ஊர் மைதானங்களில் கோப்பைகளை வென்று மணிமகுடமான பெருமைகளை நமதூருக்கு சேர்த்து இருக்கிறார்கள். இதே போன்று இந்த தலைமுறையினரும் நமதூருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
என்னுடைய சிறுவயதில் சாம்பியன், sports star, (sports magazine) இதழ்களை படிக்கும் பொழுது, அதில் பல விளையாட்டு வீரர்களின் போட்டோவுடன் ” கவர் ஸ்டோரி” இடம்பெறும்.அதனை படிக்கும் பொழுது நம் ஊருடைய வீரர்களின் புகைபடத்துடன் கூடிய கவர்ஸ்டோரி இடம்பெற்றால் எப்படி இருக்கும் என கனவு கண்டதுண்டு.
நமதூரில் பல திறமையான வீரர்களை உருவாக்கிய கோயில் மைதானம் நெல் அடுக்கும் இடமாக மாறியதால் ,
இன்று கிரிக்கெட் நடக்கும் தொடர்போட்டிகளும், புதிய தலைமுறைகளும் உருவாகவில்லை.
அன்று நடந்த கிரிக்கெட் வாழ்வின் நட்பில் ஜியாவுதீன், மகேஷ், ஷலாவூதீன், தமிழ்அமுதன், கருணாகரன் இன்றுவரை நட்பு குடி கொண்டிருக்கிறது.அந்த நட்பிற்கு காரணம் இந்த கிரிக்கெட் .
நமதூர் பெரியோர்களும், அரசியல் தலைவர்களும், பெரும் முயற்சி செய்து , நெல் அடுக்கும் இடத்திற்கு ஒரு மாற்று இடத்தை தேர்வு செய்து, அந்த மைதானத்தை இந்த தலைமுறையினருக்கு விளையாட அமைத்து கொடுத்தால் நடக்க போகின்ற தொடர்போட்டிகள் மூலமாக,பல ஊர் அணியின் வீரர்கள் கலந்து கொள்வார்கள்.சமூக நல்லிணக்கமும் மேம்படும். ஒருவருக்கொருவர் நட்புக்களை மேலும் அதிகபடுத்தி கொள்வார்கள்.
எதிர்காலங்களில் விளையாட்டு இதழ்களில் கவர்ஸ்டோரியில் இடம் பெறக்கூடிய பல திறமைசாலிகள் உருவாவார்கள்
என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த மைதானம் மீண்டும் கிரிக்கெட் திருவிழா நடைபெறும் மைதானமாக மாறுமா? பழைய அழகோவியம் திரும்ப கிடைக்குமா, என்று ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனாக ஆசை கொள்கிறேன்.
ஜிம்கானா பூப்பந்தாட்ட கழகம்
மஹாத்மா பூப்பந்தாட்ட கழகம்.
கிரெஸண்ட் பூப்பந்தாட்ட கழகம்.
( ஒரு நினைவு பார்வை)
By Janab S Jabarullah