நாணயம் (பணம்) வழங்கும் வட்டிக்காரர்,
நாணயம் (நம்பகத்தன்மை) தவறும் கடன்காரர்,
நடுத்தர மக்களை கசக்கும் வட்டி கடன்கள்,
நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்,
நம் மனிதகுல சமூக வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்தது முதல், இந்த உலகத்தில் நடமாடி, வாழ்ந்து வயோதிகம் அடைந்து மரணிக்கும் வரை ஒவ்வொரு ஆத்மாவும், பொருளாதார ரீதியாக பல கொடிய சூழ்நிலைகளையும், இன்னல்களையும்,கடந்து வாழ வேண்டியதாக உள்ளது. இப்பூமியில் வாழக்கூடிய ஒவ்வொருமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் அவசரநிலை காலங்களில் வட்டி என்னும் கடன் பாலத்தை கடந்து வராமல் இருந்ததில்லை.
ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் அத்திபூத்தாற் போல் இருக்கலாம்.
சுமார் 25- ஆண்டுகளுக்கு முன்பு,(95களில்) ரூ – 1000 ஆயிரம் ரூபாய் வட்டிக்கடன் பெறும் தங்களது வாடிக்கையாளர் ஒருவருக்கு, 100- ரூபாய் வட்டி பிடித்தம் போக, பாக்கி 900- ரூபாய் கையில் கொடுப்பார்கள், பைனான்ஸியர்கள்.
அந்த கடனை கட்டி முடிப்பதற்கு ஒரு எளிதான வரையறுக்கபட்ட கோட்பாட்டின் அடிப்படையில் காலக்கெடுவும் கொடுத்து தினத்தவணையாக ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வசூல் செய்து கொள்வார்கள்.
1000 வாங்கி இருந்தால் நாளொன்றுக்கு 10- ரூபாய் ,எனவும், 2000- ஆயிரமாக இருந்தால் 20- ரூபாய் எனவும், பத்தாயிரமாக இருந்தால் 100- ரூபாய் வீதம் எனவும் ,அவர் எவ்வளவு ஆயிரம் வாங்குகிறாரோ , ஒரு ஆயிரத்திற்கு 10- ரூபாய் என நிர்ணயம் செய்து, 120- நாட்களுக்குள் கட்டிமுடிக்க வேண்டும் என்பது அப்போதைய வரையறுக்கபட்ட சட்டம். அவர் தினந்தோறும் தொகையை செலுத்த, செலுத்த, அசலிருந்து கடன் தொகை குறைந்து கொண்டே வரும்.
இந்த 120 நாட்களில் ஒருவரால் கட்டமுடியாமல் காலம் தள்ளி போனாலும், எவ்வளவு தொகை பாக்கியோ அந்த பாக்கி தொகையை மட்டும் (எனக்கு தெரிந்து) நெருக்கமாக பின்தொடர்ந்து வசூல் செய்து கொள்வார்கள்.
கால தாமதமான காரணத்தால் அவருக்கு அடுத்தமுறை கடன் கொடுக்கவும் மாட்டார்கள். இதுதான் அதிகபட்ஷ தண்டனையாக இருந்தது. தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும், சிறுகுறு வியாபாரிகளுக்கும் இதே போன்ற கட்டமைப்புகள் தான் நிலவியது.
அப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் சாமானியர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், மருத்துவசெலவும், கல்விசெலவும், ஒரு பெரும்பொருட்டே அல்ல, அவர்களின் கையை கடிக்காத செலவீனங்களாக இருந்தது.
ஒரு தினசரி ஊழியரின் வருமானம் நாளொன்றுக்கு 300- ரூபாய் சம்பாதிக்கிறார். ஒரு பண்டிகை திருநாள் வருகிறது என்றால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு செலவினை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
அந்த பண்டிகைக்காக ரூ. 10000 அவர் வட்டிக்கடன் வாங்கி, அதனை 4- மாதத்திற்குள் கட்டிமுடிப்பதற்குள், அவரை விடாமல் குடும்ப செலவுகளும்,பொறுப்புகளும் பல ரூபங்களில் துரத்த தொடங்கும்.
திடீரென்று வீட்டில் உள்ள பெண்ணுக்கு நல்ல சம்மந்தம் வரும், அல்லது சகோதரிமகள் பெரிய மனுஷி ஆகி இருப்பாள், அல்லது பிரசவம் என பல வாழ்வியல் செலவுகள், இந்த கடனுடன் ஏதேனும் ஒன்று கூடும்பொழுது , இந்த செலவீனங்களை சமாளிக்க இன்னொரு வட்டிக்காரரிடம் செல்கிறார். பழைய கடனுடன் இந்த புதிய கடனும் சேரும் பொழுது ,தினசரி குடும்ப செலவுகளுடனும் போராட துவங்குகிறார். இன்னொரு சீட்டுகாரரிடம் கடன்வாங்கி இந்த இரண்டை அடைப்பதும், இந்த இரண்டையும் மீண்டும் கடன் புதுப்பித்து, சுழற்சி முறையில் வட்டிகடன்களை , இங்கிருந்து வாங்கி அங்கே அடைப்பதும், அங்கிருந்து வாங்கி இங்கே அடைப்பதுமாக சிறிது தடுமாறுகிறார். இதனுடன் வீட்டிற்கு வாங்கிய மிக்ஸி,கிரைண்டர், பிரிட்ஜ் அது மறுபுறம் வாரவட்டி கடனாக ஓடிக்கொண்டிருக்கும்.
தினந்தோறும் குடும்ப செலவுகளை சமாளித்து கொண்டும், இந்த அனைத்து வட்டி கடன்களையும் அடைக்கும் நெருக்கடி நிலைக்கு தள்ளபடுகிறார்.
இரவு உறங்கி காலை கண் விழிக்கும் பொழுது இன்றைக்கு ஏதும் புதிய செலவுகள் வந்துவிடகூடாது ஆண்டவா என்றே சிறிய பதட்டத்துடனும், படபடப்புடனும், ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்குவார்.
சராசரியாக வருடத்திற்கு இரண்டு பண்டிகைகள் வந்தாலே குறைந்தபட்சம், இவருடைய 4- மாத வருமானங்களை இவர் ஒதுக்க வேண்டும்.
இவர் திருமணமான ஒருவராக இருந்தால் அவருக்கு வேறு வடிவில் செலவீனங்கள் எதிர்நோக்கியிருக்கும்.
அவர் மனைவியை சார்ந்த ஒரு உறவினர் வீட்டில் ஒரு விஷேசம் வருகிறது என்றால் அதனுடைய தாக்கம் வேறு கோணத்தில் இருக்கும். நம்முடைய குழந்தைக்கு அரை பவுன் நகை செய்து இருக்கிறார்கள் .நாம் ஒரு பவுன் செய்தால் தான் நமக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என ஆசைபட சொல்வார். அவர் இயலாதவராக, சமாளிக்க முடியாதவராக இருந்தால், மறுப்பு தெரிவிப்பார் . ஏற்கனவே பல கடன்கள் அவரது மண்டைக்குள், ஓடுவதால், சிறிது சிறிதாக சண்டைகள் தொடங்கும், ஒரு கட்டத்தில் கொடுஞ்சொற்களை (நான் உங்களுக்கு வாக்கபட்டதுக்கு, வேறு யாருக்கும் வாக்கபட்டு இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன்) என பிரகடனபடுத்துவார்- (சில பெண்கள் மட்டும்) இது ஒருபுறம்.
மறுபுறம் அவர் இரண்டு, மூன்று , அக்கா தங்கைகளுடன் பிறந்தவராக இருந்தால் அவர்களுக்கு கல்யாணம், சீர்ஜாமான், சீமந்தசெலவு, பிரசவசெலவு ,வரை, அதனை தொடர்ந்து பிறக்கும் குழந்தைக்கும் காதுகுத்து, தாய்மாமன் சீர் என
(ஒரு குழந்தைக்கு மட்டும்) சம்பிரதாய செலவுகள் அவனை துரத்தவே ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான கடன்சுமை ஏற்படும் பொழுது தன்னால் செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது தாயிடம் எடுத்து கூறுவார்.
அங்கே வாக்குவாதம் தொடங்கும் , இறுதியில் (சில தாய்கள்) நீ வந்து என் வயித்தில் பிறந்தியடா என்ற வார்த்தையை கூறும் பொழுது, இவர் அடுத்த கட்ட வட்டிகடன்காரரை தேடுகிறார். கந்துவட்டி, மீட்டர்வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி, ஸ்பீடு வட்டி என இவர் தேடி செல்கிறார். ஏதாவது செய்து சமாளிப்போம் என்று இந்த மனநிலைபோக்கு தான் அவருடைய முதல் அழிமானமாக இருக்கிறது.
மனைவி, தாயிடம் கேட்ட வார்த்தையின் விரக்தி, கோபம், ரோஷம் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிப்பாட்டியது. இந்த புதிய மீட்டர்வட்டி கடனுடன், பழைய 2- சீட்டும் ஒன்றோடொன்று உராய்வு ஏற்பட்டு நெருப்பான கடன் சுமைக்கு ஆளாகிறார்.
முற்பகுதியில் 10000- ரூபாய்க்கு 100 -ரூபாய் என அசலில் தினந்தோறும் கட்டி கழித்தவர், இப்பொழுது தினந்தோறும் 100- ரூபாய் வட்டி மட்டும் கட்டகூடிய நிலைக்கு ஆளாகிறார்.
இது போன்று ஒவ்வொரு சக மனிதனுக்கும் , வெவ்வேறு வடிவங்களில் வகைவகையான செலவுகளின் காரணமாக இந்த இடத்திற்கு தள்ளபடுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாளும், தொழில் தொடங்குவதற்கு, வெளிநாடு செல்வதற்கு, பிள்ளைகளின் மேல்படிப்பிற்கு, மருத்துவத்திற்கு, இடம் வாங்க, வீடு கட்டி முடிக்க, அதிலும் பொதுவாக திருமணத்திற்கு கொடுக்கும் வரதட்சணை செலவுகளுக்கும், அதனை சார்ந்த தொடர்ச்சியான சம்பிரதாய செலவுகளுக்கும், சக்திக்கு மீறி தன்னுடைய வருமானத்தின் அளவுகோல் மீறி பெருமைக்காகவும், கௌரவத்திற்காகவும், அகலகால் வைத்து செலவு செய்ததன் விளைவு வேறு இடத்தில் கொண்டு வந்து இவரை நிப்பாட்டுகிறது.
வட்டி கட்ட இயலாத சூழ்நிலை, ஜாமீன் போட்டவருடன் தகராறு, மனமுறிவு, போன்ற காரணங்கள் நிறைய ஏற்படுகிறது. வட்டிக்கு மேல் வட்டி எகிறவே ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து முத்தி போக, சொந்த வீடு, சொத்துபத்து இவைகளை விற்று கடனை அடைத்த சம்பவமும் நடந்தேறியுள்ளது.
இந்த இடத்தில் சொத்துபத்து பின்புலம் இல்லாதவர், வட்டிகாரரை கண்டு ஓடி ஒளிந்தும், மானத்திற்கு பயந்தும் , கடன் அடைக்கும் வரை பிற ஊரில் ஒழிந்து வாழும் சூழலும் நடக்கிறது.
கணவன் இல்லாத விதவை பெண்கள், ஆண் வாரிசு இல்லாத சில பெண்களும் இந்த கடனில் இவர்களும் சிக்குகிறார்கள். புகுந்த வீட்டில் நம் பெண்ணை பெருமை பட பேச வேண்டும் என்று, பின் விளைவுகளை உணராதவர்களாக , ஏதாவது பண்ணிக்குவோம் என்ற பொடுபோக்கான மனநிலையில், சம்பிரதாய செலவுகளை, இந்த சமூகம் தன்னை தாழ்த்திபேசி விடகூடாது என்ற ஒற்றை நோக்கத்திற்காக இவர்களும் இந்த நிலைக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற பெண்களுக்கு மத்தியில் வருமானத்திற்கேற்ற, கட்டுக்கோப்பான முறையில் வாழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்குவதும், அதனை அவருக்கே தெரியாமல் அடைக்க முழி பிதுங்கும் தாய்க்குலங்கள் ஏராளம்.தந்தைக்கு தெரியாமல் மகன் கடன்வாங்கிவிட்டு தவிக்கும் பிள்ளைகளும் என சமூகத்தின் பட்டியல்கள் நீளமானவை, பலவிதமானவை இன்றைய அவசர உலகத்தில் சிற்ச்சில குடும்பங்களை தவிர்த்து, பல குடும்பங்களில் கலர்கலரான, வட்டிகடன் சீட்டுகள் வீட்டுக்கு வீடு, குடி கொண்டுள்ளன.
காரணம் அவசர தேவைக்கு கொடுத்து உதவ யாருமில்லை, கொடுப்பதற்கும் யாரிடமும் இல்லை, அப்படியும் ஒருவர் வட்டி இல்லாமல் கொடுத்து உதவியிருந்தால் அவர் எதிர்பார்க்கும் நேரத்தில் அவரால் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு, சிறிது நாள் கழித்து கொடுத்திறுப்பார்.அதன் காரணமாகவே அவருக்கு அவரிடம் உதவி கிடைக்காத நேரத்தில், இது போன்ற பைனான்ஸியர்களை நாடி செல்கிறார்.
அவர் அனைத்து விதிமுறைகளையும், எடுத்து கூறி சம்மதித்து நாம் கடன் பெறுகிறோம். ஒரு மணக்கணக்குடன் வாழ்க்கையின் ஓட்டத்தில் திடீர்திடீரென்று சில எதிர்பாராத செலவுகள் குறுக்கிடும் பொழுது அங்கே நாம் நாநயம் தவறுகிறோம்.90% சதவீதம் பேர் வாழ்க்கையில் இப்படியும் நடப்பதுண்டு, வட்டிக்கடன் அடைப்பதற்கு அவர் திட்டம் வகுத்திருப்பார், அது வேறுவிதமாக திசைமாறி,விடும்.
கொடுத்த வாக்குறுதிக்கு நாணயத்தை காப்பாற்ற முடியாமலும்,பணத்தை கொடுக்க முடியாமலும்,ஒரு சூழ்நிலை காரணி உருவாகும் இந்த கொடுக்கல், வாங்கல் வியாபாரத்தில்.
அதன் விளைவு கடன்கொடுத்தவர் வேறு வழிமுறைகளை கையாள்கிறார். சில நல்ல பைனான்ஸியர்களும் இருக்கிறார்கள். அசல மட்டும் கட்டிட்டு போங்க என்ற மனிதாபிமானமுள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆத்திர, அவசரத்திற்கு யோசிக்காமல் கொடும் வட்டியில் வீழ்ந்து விட்டு இந்த மனித சமூகம் அடையும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ‘புற்றீசல்,போன்று நாளுக்கு நாள் மனித சமுதாயத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது.
நம்மிடம் ஒரு தவறு இருக்கிறது. ஒரு 10- வீடு தீப்பற்றி எரிந்தால் அடுத்த 10- நாளைக்கு ” தீயணைப்பு நிலையம்” வேண்டும் என்று பேசுவோம், முயல்வோம். 11- வது நாள் அதனை மறந்து கடந்து செல்ல தயாராகி விடுவோம். அது இயல்பு இப்பொழுதும் அதே சூழல்தான் நிலவுகிறது.
வட்டி கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பது , இன்று பேசி நாளை முடிய போகிற காரியமில்லை, அது ஒரு நீண்ட நெடுந்தூர பயணம். இன்று முயற்சி செய்தால் தான் அடுத்த தலைமுறைகள் ஒரு பெரும் கடனற்ற சூழலில் வாழ நாம் அமைத்து கொடுக்க முடியும்.
இன்றைய காலநிலையில் இச்மனித சமூகம், எதிர்நோக்கியுள்ள, மிகப்பெரிய சவாலான பொருளாதார தேடல், கல்விச்செலவும், மருத்துவச்செலவும், தான். அரசுகளிடமிருந்து கல்வி, மருத்துவம், இந்த இரண்டும் எளிமையாக கிடைக்க பெற்றால் 50% சதவீதமான கடன்களிலிருந்து , நடுத்தர வர்க்கத்தினர், விழிம்புநிலை மக்கள் உட்பட பெரும்பாலான மக்களுக்கு கடன் நிலை ஏற்பட வாய்ப்பில்லை.
மறுபுறம் பள்ளியின் கடவுள் வாழ்த்து முடிந்து நடைபெறும் நாட்டுபற்றின் உறுதிமொழியிலும், வரதட்சணைக்கு எதிரான முழக்கங்களை கூறி உறுதிமொழி இயற்றபட வேண்டும். பாடபுத்தகத்திலும், சமுதாயத்தில் நடந்த வட்டியின் கடன்களால் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், தற்கொலைகள் இவைகளை பாடமாக்கினால், இன்று பள்ளியில் படிக்கிற மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு பதிய வைக்கலாம்.
“மது குடி குடியை கெடுக்கும்” உட்பட பல போராட்டங்களை மனித சமூகம் முன்னெடுத்திருக்கிறது, அது போன்று வட்டியின் கடன், என்பது , மது ஒரு குடும்பத்தை அழிப்பதை காட்டிலும், இந்த வட்டி கடன் பல குடும்பங்களை வேரோடு சாய்த்து அடையாளம் தெரியாமல் உருமாற்றுகிறது.
பள்ளிபாட புத்தகத்தில், “வரதட்சணை ஒரு தீண்டாமை” என்ற விழிப்புணர்வு பாடம் இயற்றுவதன் மூலமே அடுத்த சந்ததிகளுக்கு நிம்மதியான வாழ்வியல் கட்டமைப்பை நாம் ஏற்படுத்த முடியும்.
இன்றைய மாணவ , மாணவியரே நாளைய சமுதாயத்தின் பெற்றோர்கள், மாமனார், மாமியார்கள் இவர்களுடைய ஆழ்மனதில் இன்று விதைகள் விதைத்தால் சில பல ஆண்டுகளில் கனியாகும். சமுதாயம் மாறும், அவசியமான செலவிற்கும், அநாவசியமான செலவிற்கும் இடையே நடக்கும் யுத்தம் முடிவுக்கு வரும் . மனிதகுலம் அமைதியுடன் வாழும்.
Covid- 19 தொடங்கியது முதல் இன்று வரை பலதரபட்ட மக்களின் வாழ்வாதாரம், ஜீவாதாரம் சிதைந்துள்ளது.
அவர்கள் எப்படி மீள போகிறார்கள்.என தெரியவில்லை.
கூடுமானவறை வட்டியை தவிர்ப்போம். வறுமை இல்லாத வாழ்க்கை வாழ்வோம்.நம் வாழ்க்கை தேடலில் தொலைக்ககூடாத மிக பெரிய விஷயம் மன அமைதி, சிறுசேமிப்பின் அவசியம் அறிவோம். அடுத்த சந்ததிகளுக்கு சொல்லி கொடுப்போம்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்த கூலி தரும்.
தொடரும்.
By Janab S Jabarullah