Madukkur
'80s '90s madukkur

அரையாண்டு பரீட்சை எனும் பூந்தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளாய் பறந்த 80ஸ் 90ஸ் மாணவ, மாணவிகள்.

ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி
சந்தைபள்ளி..
காந்தாரியம்மன் கோயில் பள்ளி.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
புதுக்குளம் பள்ளி
பிள்ளையார் கோயில் பள்ளி
சூரியதோட்டம் பள்ளி.
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
இன்று உலகின் திரும்பிய திசையெங்கும் ” அறிவியல் விஞ்ஞானத்தின்” அசுர வளர்ச்சி மின்னல்வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாளும் யாரேனும் ஒருவர் புதுமையை கண்டுபிடித்தம் வண்ணம் சாதித்து வளர்ந்து கொண்டே வருகின்றனர். இந்த சாதனைக்கு பின்னால் இருக்ககூடிய ஒவ்வொரு வெற்றிபெற்ற (கடந்த கால) மாணவ, மாணவிகளின் பின்னால் அவர்களை உற்சாகபடுத்தி, அவர்களின் திறமையினை கண்டறிந்து, தூண்டுகோலாக செயல்பட்டு, கல்வியறிவின் மூலமாக அவர்களை செதுக்கி நடமாட விட்ட, மனித சமுதாயத்தில் நடமாடி கொண்டிருக்கும் சாதித்த ஒவ்வொரு ” மாணாக்கரின்” பின் புலங்களில் முகம் தெரியாத பல தலைசிறந்த ஆசிரிய- ஆசிரியை- ஆஷான்களின் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் இருக்கின்றன.
ஆசிரியர் தினமென்று வருடத்தில் செப்டம்பர் – 5 என்று ஒரு நாள் நினைவு கூறினாலும், ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் நாம் வாசிக்கும் வார்த்தைகள் மூலியமாகவும், எழுதும் எழுத்துக்கள் மூலமாகவும் நம்முடன் பல தருணங்களில் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக, நம்முடைய நாடிதுடிப்புடன் நினைஉறவாடி வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த ஆசிரியர் பெருமகனார்கள்.
இன்று எங்களின் ஊரிலும், உலகின் பல நாடுகளிலும் ஒவ்வொரு துறைகளிலும், வேலைவாய்ப்பு, வர்த்தகம் போன்ற தொழில்களிலும் தன்னிகரற்ற முறையில், பெரும்பாலான மாணவ மாணவியர்கள் பெயர் சொல்லும் படியாக திகழ்கிறார்கள் என்றால் , ஊரில் உள்ள அனைத்து அரசுபள்ளி கூடமும், நாங்கள் படித்த சந்தைபள்ளி கூடமும் , எங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்- ஆசிரியைகளும் ஒரு முக்கிய காரணம்.
எங்கள் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் Phd முடித்த அளவிற்கு கல்வி அறிவில் புலமை பெற்றவர்கள்.
வசதியுள்ள மாணவன், வசதியற்ற மாணவன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மாணவ சமுதாயங்களையும் எந்த விதமான ஏறுமுகமுமின்றி, இறங்குமுகமுமின்றி மேற்கூறப்பட்ட அனைத்து பள்ளியின் வகுப்பறைகளும் சரிசமமாக மாணவ செல்வங்களை அரவணைத்தது.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற போதனையுடன் உலக கல்வியுடன் எங்களுக்கு மாண்பு, அறம், ஏற்றத்தாழ்வு இல்லாமை, நீதி, நேர்மை , ஒழுக்கம், சமத்துவம், சகோதரத்துவம், சமய நல்லிணக்கம் என மனித வாழ்வியலுக்கு தேவையான அனைத்து நற்பண்புகளையும் நாங்கள் மரணிக்கும் வரை, போதனைகளாக எங்களின் சிந்தைகளிலே பயிற்றுவிக்கபட்டு, இந்த மனித சமுதாயத்தில் எம்- ஆசிரிய பெருமக்கள் நடமாட விட்டு சென்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
மதுக்கூர் “அத்தியாயத்தில்” மேற்கூறப்பட்ட அனைத்து அரசுபள்ளிகளும் , அதில் ஆசிரியராக பணிபுரிந்த, புரிகின்ற அனைத்து ஆசிரியர்களும் (mile stone) ஒரு மைல்கல்.
நாங்கள் 2- ம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்று 3- ம் வகுப்புக்கு மாறினோம். அந்த வகுப்பில் தான் , தேர்ச்சி அடையாமல் மீண்டும் 3- ம் வகுப்பு பயணிக்ககூடிய சுப்ரமணியை சந்தித்தேன். எங்களிடையே விளையாட்டு தனமான நட்புறவு மேம்பட தொடங்கியது.
என் வகுப்பு மாணவிகள் மாணவர்கள் அனைவரும் என்னுடன் மிக நெருக்கமாக நட்புறவாட கூடியவர்கள்.
இவன் ஒரு படி மேலே நாங்க இரண்டு பேரும் கடைசி வரிசைதான் . அவன் சேட்டை செய்து ஆசிரியரிடம் மாட்டிகொண்டால் என்னையும் ஒரு காரணகர்த்தராக அவன் கோத்துவிடுவதும் . அதே போல நான் ஏதும் தவறு செய்து மாட்டி கொண்டால் அவனை கோர்த்து கொள்வது மட்டுமில்லாமல் எங்கள் மொத்த வரிசையையும் கோத்துவிடுவேன் .
அவர்களும் அப்படிதான்.திடீரென்று பூனை , கிளி, ஆடு கத்துவது போல் கத்திவிட்டு எல்லோரையும் வசமாக மாட்டிவிடுவார்கள். இயற்கையாகவே எங்கள் கடைசி வரிசை (மாப்பிள்ளை பெஞ்ச்) அனைவரிடமும் இந்த “குணாதிசயம்” தோன்றிவிட்டது . நல்ல நட்புறவுடன் இப்பள்ளியில் வாழ்ந்தோம்.
பள்ளிக்கூடங்களில் படித்த கால கட்டங்களில் ஒவ்வொரு மாணாக்காருக்கும் பல ஆசிரியர்களிடமும் ” தர்ம அடி” வாங்கியது முதல் பலவிதமான அசைபோடும் நினைவுகள் இன்றளவும் மனதளவில் குடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதிலொன்று மிக மிக முக்கியமானது, பரீட்சை நடக்கும் காலகட்டங்கள்.
காலாண்டு, அரையாண்டு,முழாண்டு தேர்வு எழுதும் நாட்களில் தேர்வு ஹாலில் மாணவ , மாணவியரிடையே நடக்ககூடிய
தில்லுமுல்லுகள், காப்பியடிப்பது போன்ற ஒவ்வொரு சிறு அசைவும், அமைதியான அமளியும் அதீதமான ” சுவாரஸ்யம்” கொண்டவை.
எங்கள் பள்ளியின் மாண்புமிகு ஆசிரிய- ஆசிரியைகள்.
தலைமையாசிரியர் தங்கவேல், சமதர்மம், துரைராஜ்,பச்சமுத்து, ஜெயபால், மேரி, பங்கஜம்,சிங்காரம்,காயத்ரி, ரஷ்யா,ஜெமீலா, விஜயலட்சுமி, மணிமேகலை, அல்லிராணி,பரமேஸ்வரி, செந்தமிழ்செல்வி, பிரேமா, கைத்தொழில் டீச்சர் என எங்களின்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எங்களின் பேராசிரியர்களாக திகழ்ந்தார்கள்.
இருதயராஜ் ஆசிரியர் புத்தகங்கள், சீருடை கொடுக்கும் பொறுப்பாளராகவும், சண்முகராஜன் ஆசிரியர் சத்துணவின் பொறுப்புதாரியாகவும் இருந்தார்கள்.
தாயுள்ளத்துடன் சத்துணவு சமைத்து பகிரும் இரண்டு ” ஆயம்மாக்கள்” பிற்பகுதியில் தலைமையாசிரியராக தங்கவேல் ஆசிரியர் ஓய்வுக்குப் பிறகு, முத்துலெட்சுமி ஆசிரியை அவர்களும் பணியாற்றினார்கள்.
சனி, ஞாயிறு வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை அடுத்த சனி, ஞாயிறு எப்படா வரும் என்று கவலை தேய்ந்த முகத்துடன் சில மாணவ,மாணவிகள் பள்ளிக்கு வேண்டாவெறுப்பாக வருவார்கள்.
வாரந்தோறும் திங்கட்கிழமை ” தமிழ்த்தாய்” வாழ்த்து 3- மாணவிகள் ” தேசியகொடியின்” கம்பத்தின் அருகில் நின்று

இனிமையாக முழங்குவார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசணைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே!
அதில் “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் ” தமிழணங்கே! தமிழணங்கே ! என ராகமாக மாணவிகள் இளுத்து மறுமுறை கூறும்போது உடம்பிற்குள் ஒரு வித சிலிர்ப்பும், பரவசமும் ஏற்படும். அது தமிழ்த்தாய்க்கே உரிய பெருமை
தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து உறுதிமொழி, ஒரு வாரம் அன்பழகனும், மறு வாரம் உருட்டி நிஷாரும் மாறி மாறி கூறுவார்கள்.
அவர்கள் நாட்டுபற்று கூற கூற அனைத்து மாணவ மாணவிகளும் வழி மொழிவோம்.
நாட்டின் உரிமை வாழ்வையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வலுப்படுத்த செயற்படுவேன் என்று உளமார நான் உறுதி கூறுகின்றேன். ஒருபோதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம், மொழி, வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல்- பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியில் நின்று தீர்வு காண்பேன் என்றும் நான் மேலும் உறுதியளிக்கிறேன்.என்று சொல்லி முடிந்ததும் புத்துணர்ச்சி பாய்ந்தது போல் வரிசையாக பள்ளிக்குள் சென்று அமர தொடங்குவோம்.
பள்ளி வகுப்பறை பரபரப்பாக செயல்பட தொடங்கும்.
பெரும்பாலும் (1st period) முதல்பாடம் தமிழ் பாடமாக இருக்கும்.
எங்களுடைய தமிழாசிரியர் சமதர்மம் அவர்கள். பாடம் நடத்துகின்ற செய்யுள்பகுதி,இலக்கணம், திருக்குறள், பாடங்கள் அனைத்தும் மிக மிக சுவாஷ்ரயமாக நடத்துவார்.
மணிமேகலை டீச்சர் மற்றும் சமதர்மம் ஆசிரியர் நடத்திய சில நினைவில் நிற்கும் பாடங்கள்…..
கண்டு ஒன்று சொல்லேல்
ஙப்போல் வளை
சனி நீராடு
ஆத்திச்சூடி
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
சூரியன் வருவது யாராலே
சந்திரன் திரிவது எதனாலே
காரிழ் வானில் மின்மினிபோல்
கண்ணில் படுவது அவை என்ன
பேரடி மின்னல் எதனாலே
பெருமழை பெய்வது எதனாலே.
” இடுக்கண் வருங்கால் நகுக”
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடிஇடிக்கும் மேளங்கள்
போன்ற மழை பாட(ல்)ங்கள்.
கண்ணகி, சிலம்பு, கோவலன், மாதவி, இளங்கோவடிகள்,செங்குட்டுவன், பிசிராந்தையார் , கோப்பெருஞ்சோழன், சீத்தலை சாத்தனார் போன்ற இலக்கிய பாடங்கள் .
கடைசி வரை வாயில் மனப்பாடமாக புகுந்திடாத நாக்கிற்கு வேகதடை போட்ட திருக்குறள் .
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூஊம் மழை.
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்…. போன்ற வாழ்வியல் சார்ந்த பாடங்கள்.
மனுநீதிச்சோழன், தாய்ப்பசு, ஆராய்ச்சிமணி சார்ந்த நீதி தவறாத பாடங்கள், தனது கன்றை விபத்தில் இழந்த தாய்பசு, ஆராய்ச்சி மணி அடித்து அரசனிடம் நீதி கேட்பதும், அதற்கு அரசனோ கன்றுகுட்டியின் மரணத்திற்கு காரணம் தனது மகன் என்றறிந்து தன்னுடைய “தேர்சக்கரத்தால்” மகனின் கழுத்தில் ஏற்றி மரண தண்டனை கொடுத்து பசு மாட்டிற்கு தீர்ப்பு அளிக்கும் அரசனின் பாடம் நடத்தும்பொழுது உடம்பு சிலிர்த்தது.
மாணவ மனங்களை கவனம் சிதறாமல் தன்பக்கம் ஒன்றினைத்து, எந்த சூழலிலும் அரசனுடைய மகனாக இருந்தாலும் நீதி, நேர்மை தவறாமை வகுப்பெடுத்தது இன்றளவும் நினைவில் நிற்பவை. “கொடிகாத்த குமரனின்” நாட்டுபற்று மிக்க பாடம் உணர்ச்சிகரமாக நடத்தியதும் இன்றும் மறக்க முடியாதவை.
ஏவா மக்கள் மூவா மருந்து
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
சீரைத் தேடின் ஏரைத் தேடு
சூதும் வாதம் வேதனை செய்யும்.
எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும்….
போன்ற செய்யுள் பகுதிகளை நடத்திவிட்டு ஒரு மாணவர் எழுந்து நின்று கூற, கூற அதனை நாங்கள் கும்பலாக, கரகோஷத்துடன் திரும்ப கூறிய பல மாணவ, மாணவிகளின் (குயில்களின்) குரல்களும், இனிமையான சப்தங்களும் இன்றும் பலரது காதுக்குள் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கின்றன.
அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து ஆசிரியர்களும் அனைத்து வித பாடங்களையும் எடுக்க கூடியவர்கள். ஒருவர் இருவரை தவிர தமிழ் பாடங்களுக்கு சமதர்ம ஆசிரியர் 100% சதவீதம் நகைச்சுவை பரிமாற்றத்துடன் வகுப்பறையை எடுத்து செல்வார்.கோபம் என்பது மிக அரிது.
ஜெமீலா டீச்சர் அறிவியலுக்கும், விஜயலெட்சுமி, டீச்சர் ஆங்கிலத்திற்கும் வகுப்பெடுத்தார்கள். இந்த இரண்டு டீச்சர்களும் பாடம் நடத்திகொண்டே பரபரபரவென்று போர்டில் எழுதுவதும், இடையிடையே, கை வளையல்களை மேலே இழுத்து நிறுத்துவதும் என, மும்முரமாக பாடம் எடுக்கும் அவர்களுடைய பாணி ரசிக்கும்படியாக இருக்கும்.
எங்களை பார்த்து என்னா புள்ளைங்களா நடத்துனது ஏதாவது புரிஞ்சதா என்று கேட்டவாறே கண்பார்வை முதல் வரிசையில் பார்க்க தொடங்கி கடைசியில் எங்கள் வரிசையில் வந்து நிற்கும். என்னாங்கடா வாய தொறக்க மாட்டுகிறீங்க , கேட்டதும் நாங்களும் டீச்சர் மனசு கஷ்டபடகூடாதுனு நல்லா புரிஞ்சது என்றதுமே டீச்சரும் புன்னகைத்தவாறே மீண்டும் மறுமுறை விளக்கமாக நடத்துவார்கள் அந்த தருணம் மிகமிக அழகு வாய்ந்தவை.
ஜெமீலா டீச்சர் கோபமாக திட்டினால் அறிவு கெட்ட “…………” , செல்லமாக திட்டினால் ஏண்டா கழுத இப்டி பண்ற, என்ற வார்த்தை மட்டுமே.
விஜயலெட்சுமி டீச்சர் திட்டினால் அறிவுகெட்ட “…….”, மூளைகெட்ட “………”, என்பது தான். இவர்கள் இருவரும் மாணவ இருபாலரையும் அடிப்பதிலும், மாணாக்கர் மேல் கொண்ட அன்பை வெளிக்காட்டி கொள்ளாமல் இருப்பதில்
சரி சமமானவர்கள்.
அதிலும் விஜயலெட்சுமி டீச்சர் மர ஸ்கேல் கொண்டு கையின் பின்புறம் மணிக்கட்டில் அடிப்பார்கள். அடிக்கிற அடியில் மரஸ்கேல் உடைந்து தெறிக்கும் அளவிற்கு அடிப்பார்கள்.
ஒரு தடவை டீச்சர் ரொம்ப மனகஷ்டபட்டு, டேய் உங்கள திட்ட மனசு கஷ்டமா இருக்குடா. ஒழுங்கா இருங்கடா , படிக்க முயற்சி பண்ணுங்கடா பொழுதா பொழுதனைக்கும் திட்டு வாங்க வெட்கமா இல்லயாடா என்று கேட்க …..” அப்டியா டீச்சர் ” என சந்தோஷ் யதார்த்தமாக கேட்க டீச்சரும் சிரிச்சிட்டாங்க.
உங்கள திருத்த முடியாதுடா ” மண்டு பசங்களா” என்று கூறியது அழகாக இருந்தது.
துரைராஜ் ஆசிரியர் சமூகஅறிவியலுக்கும், ஜெயபால் ஆசிரியர் கணிதத்திற்கும் என, இருவரும் அடிப்பதிலும், அவ்வப்போது சிரிக்கவைப்பதிலும், சரி சமமானவர்கள்.
டீச்சர்கள் மணிமேகலை, பிரேமா, அல்லிராணி,செந்தமிழ்செல்வி, கைத்தொழில் டீச்சர் பாடம் எடுக்கும் பொழுது வீட்டில் கூட பிறந்த அக்கா நமக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும் போது எந்த மனநிலையில் நாம் இருப்போமோ, அதே போன்ற உணர்வு கிடைக்கும். 90% சதவிகிதம் அரவணைப்பு மேலோங்கும்.
காயத்ரி டீச்சர்,சிங்காரம் டீச்சர், கெத்ஷியாள்(ரஷ்யா) டீச்சர், பரமேஸ்வரி டீச்சர் பாடம் எடுக்கும் பொழுது மிலிட்டரி ஆபிஸர்கள் பாடம் எடுப்பது போல் மொத்த வகுப்பறையும் கப்சுப்னு இருக்கும். 100% அதிரடி ஆசிரியைகள்.
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது பக்கத்தில் இருப்பவனிடம் குறுகுறுவென்று பேசும் அந்த சிற்றின்பம் மிக அலாதியானது. தனி சு(ர)கமானது.
மாணவிகள் புத்தகத்தில் முகத்தை ஒளித்து கொண்டு தயங்கி தயங்கி பேசுவதில் எங்களுக்கு அவர்கள் சளைத்தவர்களும் அல்ல,
ஒரு முறை ” ரஷ்யா” டீச்சர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் பொழுது நானும் என் கடைசி வரிசை நண்பர்களும் முனுமுனுவென்று சிறிதாக பேசினோம்.
டீச்சர் காதில் விழுந்து விட்டது.
“எந்த ஒளுச ……. பேசுனது எந்திரி ..” என்றதும் வகுப்பறை கப்சுப்னு இருந்தது. வழக்கம் போல் ஒரு மாணவி போட்டுக்கொடுக்க
நான் முதலில் எழ, டீச்சர் அவன் சிரிப்பு காட்டுனான், இவன் கிச்சிகிச்சி காட்டுனான் என்று என்னுடன் அமர்ந்து இருந்த எங்க மொத்த வரிசையும் கைகாட்டி விட்டேன். எல்லாரும் வெளியே வாங்காடானு பெரம்பு அடி, சரமாரியாக காலிலும் இடுப்பிலும் விழுந்தது. உள்ளங்கையில் அடிக்கும் பொழுது பயத்தால், பெரம்பை பிடித்து கொண்டு விடவில்லை. மேலும் கோபபட்ட ஆசிரியர் கம்பை உருவி கொண்டு திருவிழா கொண்டாடினார்.
அடி தாங்காமல் வகுப்பறையை விட்டு பள்ளியின் வெளி பகுதிக்கு ஓடி விட்டோம்.
எங்கடா வெளிய ஓடுறியனு அதுக்கு ஒரு 2- அடி கொடுத்து, 6- பேரையும் முட்டி போட்ட நிலையிலயே பாட புத்தகத்தை இரு கைகளிலும் விரித்த நிலையில் கவனிக்க சொன்னார்கள்.
2- நிமிடம் முட்டி போட்டு இருப்போம்.
பின்புறத்திலிருந்து வந்த தலைமையாசிரியர் தங்கவேல் அவர்கள், 6- பேர் முதுகுலயும் ஆளுக்கு ஒரு அடி, எங்களுக்கு ஆளாளுக்கு பதஷ்டம் வந்துவிட்டது .நான் இல்லை சார் அவன், அவன் இல்லை சார் இவன் என்று நான், சுப்ரமணி, கார்த்திக், நாக சந்தோஷ், ஜபார், முத்துவேல் ஆளாளுக்கு பழியை மாத்தி மாத்தி போட்டு கொண்டோம்.
என்னாடா நாயி இல்லை, பூனை இல்லை, குரங்கு இல்லை ,என்று முறைத்தவாறு ஒரு அதட்டி திட்டிவிட்டு டீச்சரிடம் பரிந்துரைத்து வகுப்பறையில் உட்கார வைத்தார்கள். என் நண்பர்கள் அன்று முழுவதும் இதனை பேசி சிரித்து கொண்டே பொழுதை கடந்தோம்.
என் நண்பர்களில் சுப்ரமணி விசித்திரமானவன் மிக மிக விளையாட்டாக பேசுபவன்.
ஒவ்வொரு நாளும் வகுப்பறையில என்கிட்ட இன்னைக்கு உன்னால என்னென்ன துன்பத்த அனுபவிக்க போகிறோனோ சிரிச்சிகிட்டே புலம்புவான். பழநிமலை முருகா உனக்கு நான் காவடி எடுக்குறேன், ஷேகுரப்பாவே சக்கரை வாங்கி பாத்தீஹா ஓதுறேன் இந்த பயல மட்டும் வேற வரிசையில் மாத்தி போட்டா நான் நிம்மதியா படிப்பேன் பாஸ் பண்ணிடுவேன் என்று சிரித்த நிலையில் கூறுவான். அந்த (dialogue delivery slang) அடிக்கடி என் நினைவிற்குள் வந்து செல்பவை.
ஆசிரியைகள் காயத்ரி,பரமேஸ்வரி, இவர்கள் வகுப்பிலும் பாடம் நடத்தும் பொழுது சிறிது சலசலப்பு ஏற்பட்டால் கதை முடிந்தது.
பெரம்புகளை கையில் வைத்து கொண்டு வெளியே வாங்கடா , வெளிய வாங்க அந்த ” மூம்மூர்த்திகள்” வெளியே வாங்கடானு முகத்தையும், கையின் பெரம்பையும் அசைத்து, அசைத்து கொண்டே எங்களை அடிக்க கூப்பிடும் முக பாவணைகள் பயமாக இருந்தாலும் ரசிக்கதக்கவையாக இருக்கும். பரமேஸ்வரி டீச்சர் ஒரு கையால் தலைமுடியை பிடித்து தேங்காய் உறிப்பது போல் கழுத்தை சுத்தி சுத்தி மறு கையால் பிரம்பை கொண்டு அடிப்பார்கள்.
ஆசிரியர்கள் தங்கவேல், பச்சமுத்து…பாடம் நடத்தும்பொழுது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற மனநிலையில் இருப்போம்.100% அரவணைப்பு மட்டுமே.
ஆசிரியர்கள் பச்சமுத்து, சமதர்மம், ஜெயபால் ஆகியோர் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது தோளில் போட்டு இருக்கும் துண்டுகளை, வலதுபுறமும் இடதுபுறமும், பரவசமாக மாற்றி மாற்றி போட்டுகொள்வது அழகாக இருக்கும். அதில் ஜெயபால் ஆசிரியர் இடது கை பழக்கம் கொண்டவர் அது கூடுதல் அழகாக இருக்கும்.
” குருதிபுனல்” திரைப்படம் ரிலீஸான காலகட்டம். அன்று எங்கள் வகுப்பறையில் 6- பேர் குருதிபுனல் கட்டிங் (சிகை அலங்காரம்)
வெட்டி பள்ளிக்கு வந்து இருந்தோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சராசரியாக 3-4 மாணவர்கள் வெட்டி இருந்தார்கள்.
அன்று காலை முதல் வகுப்பு துரைராஜ் ஆசிரியர் வந்தார்கள். வந்தவர் அட்டனன்ஸ் புக்கில் 2- நிமிடம் மும்முரமாக எழுதினார்கள்.
சுப்ரமணி என்னிடம் கேட்டான் என்னடா மதியம் 3- வது பீரீயட் வர வாத்தியாரு இப்ப எதுக்கு வந்து இருக்கார் என கேட்க, நான் பதிலுக்கு ஸ்கூலு அரை நாள் லீவு விட போறாங்கனு நினைக்கிறேன் அதான் இப்பவே பாடம் நடத்த வந்துட்டாங்கனு சொல்லி முடிக்கல, அந்த 6- முட்டாள் .”………….யும்” வெளியே வானு சொல்லும் போதே உசுரு போச்சு ரொம்ப உக்கிரமாக இருந்தார்.
யார்ட்ட முடிவெட்னிங்கனு ஒரு வார்த்தை மட்டும் தான் மனுஷன் பேசினார். அடி விழுகிற இடம் தெரியவில்லை. 6- பேரும் சிதறு தேங்காய் மாதிரி ஆளுக்கொரு திசையில் தெறிச்சி ஓடுறோம். 2- பேர் மாணவிகள் கூட்டத்தில் விழுந்தார்கள். 6- பேரையும் தோள உறிச்சிட்டாங்க வாங்குன அடில இனிமே வாழ்க்கைல தலைமுடி வெட்டவே கூடாதுனு நினைப்பு வந்துவிட்டது.
படிக்கிற மாணவன் செய்ற வேலையாடா இது ஒழுக்கமாக இருங்கடானு திட்டிவிட்டு, இனி எவனாவது மண்டைல அரை முடியோட வாங்க தொலச்சிபுடுவேனு சென்றுவிட்டார்.
இது போதாத குறைக்கு பக்கத்து வகுப்பிலிருந்து அய்யோ, அம்மானு சத்தம், ஜெயபால் வாத்தியார் நொறுக்கி எடுத்துகிட்டு இருக்காங்க.
தங்கவேல் ஆசிரியர் தலையில முடிய புடிச்சி அடிக்கிறதுக்கு கூட ஒரு பயலும் முடி வச்சில்ல பூரா பயலும் இப்படியே நிக்குறானுவோனு அவர் பங்கிற்கு மறுபுறம் அடித்து கொண்டிருந்தார்.
ஒவ்வொரு வகுப்பிலும் அன்று காலை “முதல் பாடம்” குருதிபுனல் ” தண்டனை” தான்.
எங்கு திரும்பினும் மாணவர்களுடைய அலறல் சத்தம், என்றும் இல்லாமல் இன்று ஏன் விசித்திரமான அலறல் சத்தம் கேட்கிறது என சத்துணவு ஆயம்மா அவர்களும் வந்து எட்டி பார்த்தார்கள்.
நாங்க அடிவாங்கி களைத்து போய் அமருமிடம் சென்றோம் ஒரு “வாயாடி மாணவி” சுப்ரமணியிடம் டேய் உனக்கு 8- அடி விழுந்துச்சுடா அவனுக்கு 7- அடி விழுந்துச்சுடா நான் எண்ணுணேன் என்றதும், அப்படியே திரும்பினான்
நாங்க அடிவாங்குறது உனக்கு அவ்வளவு சந்தோஷமா?
நீயும் குருதிபுனல் கட்டிங் போடு உனக்கும் நல்லாஇருக்கும் என நக்கலடிக்க, அந்த மாணவி பஞ்சாயத்து கூட்ட ஆரம்பிச்சிருச்சி, இருடா கல்ச்சகுண்டு துரைராஜ் வாத்தியார்ட்ட இப்பவே சொல்றேனு, நான் குறுக்கே புகுந்து தாயே நல்லா இருப்ப, நீ இப்ப இவன சொன்னா இவன் என்னையும் சேத்து கோத்துக்குவான் மன்னிச்சி வுட்று அடி வாங்க தெம்பு இல்லை என்றதும் அப்புறம் ஏண்டா கல்ச்சோ புறாக்கு முடிவெட்டுன மாதிரி வெட்டுனியே அது டீச்சரா மாதிரி 2- நிமிடம் என்னை திட்டியதெல்லாம் மறக்க முடியாத சம்பவம்.
அன்று முழுவதும் எங்கள் தலையை பார்த்து வகுப்பெடுக்க வந்த ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமாக விமர்சனம் செய்தார்கள். அதே போன்று வகுப்பறைக்கு பாடமெடுக்க வந்த அல்லி ராணி டீச்சரும் ஏண்டா தலை கரடி கீறிவிட்ட மாதிரி இருக்கு என கேட்க வகுப்பறை முழுதும் சிரிப்பொலி .மாணவிகள் எங்களை கேலியும் கிண்டலுடன் பார்த்து வெடி சிரிப்புடன் சிரித்தார்கள்.
ஒரு சில மாணவிகள் டீச்சர் சேருமானம் சரி இல்லை டீச்சர், இவன்வோ 6- பேரையும் வேற வரிசையில் மாத்தி போடுங்க ஒரு சில மாணவிகள் முறையிட வாய மூடுங்கடி , உங்களை அவன்வோ எதாவது தொந்தரவு பண்றானுவலோ இல்லைல, உங்களுக்கு ஏன் இந்த வேலை .எந்திரிச்சி வாங்கடி என கூப்பிட்டு மாணவிகளுக்கு பூசையை போட்டார்கள் . எங்களுக்கு மனதிற்கு மிக சந்தோஷமாக இருந்தது. எங்களை விட்டுக்கொடுக்காத டீச்சரை நினைத்து பெருமிதம் கொண்டோம். இன்றும் சந்தைபள்ளியில் ” மாண்புமிகு” அல்லி ராணி ஆசிரியை அவர்கள் தனது கல்வி பணியினை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்.
சிங்காரம் டீச்சர் பாடம் நடத்தும் பொழுது சிறிது பேசிவிட்டால் அவர்களுடைய தண்டனை கொடுக்கும் பாணி தனி பணியாகும். பொங்கலுக்கு இரண்டு மாதம் பாக்கி இருந்தது. நான் சுப்ரமணியிடம் 5- நாள் லீவு கிடைக்குமாடா என மௌனமாக கேட்டேன் அவன் வாயில் கைவைத்து பேசாதே என்றான்.
நான் அவன் தொடையை கிள்ளிவிட்டேன் சத்தமாக கத்திவிட்டான்.
முதலில்” பேசுனவன் எந்திரி, யாரு பேசுனதுனு, எனக்கு தெரியும் எந்திரிச்சிரு, என்று சொல்லியவுடன் நானும் சுப்ரமணியும் கதிகலங்கி எழுந்து நின்றோம்.
பாடம் நடத்தி கொண்டிருந்த புத்தகத்தை விரித்த நிலையிலேயே தலைகுப்புற மேஜையின் மீது வைத்து விட்டு, கண்ணாடியை கழட்டி அழகாக வைத்துவிட்டு, பெரம்பை கையில் எடுத்து மேலிருந்து கீழாக, தடவி பார்த்தார்கள்.
கம்பு சரியில்லை பக்கத்து கிளாஸ்ல போய் மூங்கில் கம்பு எடுத்து வாங்கனு சொன்ன மறுவிநாடி ஒரு மாணவி குடுகுடுனு ஓட்டம், எங்க மேல வெறி கொண்ட பாசம் அதுக்கு, கூடவே மாணவியின் காலில் கிடந்த கொலுசு சத்தமும் எங்களை மேலும் பீதீயாக்கியது.
கம்பும் வந்தது, சொல்லுங்கடா என்னடா சத்தம் சுப்ரமணியிடம், அவன் பயந்த கோளாறில் டீச்சர் பொங்கலுக்கு எத்தனை நாள் ஸ்கூல் லீவு கிடைக்கும்னு கேட்டான் டீச்சர் தொடையை கிள்ளிவிட்டான் டீச்சர் , அடுத்த விநாடி மூங்கில் சடபுடா பட்டாசு,
கை கால்களில் வெடிக்க தொடங்கியது இருவருக்கும். எப்ப பாரு கம்னாட்டிகளுக்கு ஸ்கூல இழுத்து மூடுற பேச்சு தான்.
2- மாசம் கழிச்சி வற பொங்கலுக்கு இப்பவே தெரிஞ்சி என்ன பண்ண போறீங்கனு திட்டினார்கள்.
இறுதியாக சிங்காரம் டீச்சர்…
நான் அவன் காதுகளையும் அவன் என் காதுகளையும் பிடித்து 50- தோப்புகரணை போட சொன்னார்கள். கூடவே வசனமும் “உன்னால நான் கெட்டேன்’ என்னால நீ கெட்ட” நான் தயாராகி அவன் இரு காதுகளையும் பிடித்து விட்டேன்., அவன் என் காதையும் புடிக்கும் பொழுதே என் மேல் அவனுக்கு கொலவெறி. கண்ணு சிவந்த நிலையில் என்னை முறைத்து கொண்டே, இருந்தான்.
நாங்கள் இருவரும் ” தோப்புகரணை” போட தொடங்கினோம். 15- தோப்புகரணை கடந்த நிலையில் போய் உட்காருங்கடா கம்னாட்டியலானு உத்தரவு வந்ததும், சுப்ரமணி என் பக்கத்தில் அமராமல் புத்தகபையை எடுத்து கொண்டு முதல் வரிசைக்கு ஓடினான். இதனை கண்ட டீச்சர், ஏண்டா இங்க வற, அவன கெடுத்தது போதாதுனு இப்ப முதல் வரிசையில் உள்ளவன கெடுக்க வறியானு அதுக்கு ஒரு பூசை. அந்த அடியை வாங்கி கொண்டு என்னை புடிச்ச சனி என்னை விடமாட்டுகிதேனு புலம்பிகிட்டே என் அருகில் மீண்டும் அமர்ந்தான்.
வகுப்பறையில் கணக்கில்லாமல் வாங்கிய பல பிரம்பு அடிகளில் இதுவும் என் வாழ்வில் அவ்வபோது நினைவில் வந்து செல்பவை.
எங்களை கண்கலங்க வைத்த பாடம் ஒன்று…
ஒருமுறை ஆங்கில வகுப்பு விஜயலெட்சுமி ஆசிரியை எடுத்து கொண்டிருந்தார். “SARAVANAN PARENTS” எனும் பாடம் .
இரண்டு கண்களும் பார்வையற்ற தாய், தந்தை இருவரும் தங்களுடைய மகன் சரவணணிடம் காசிக்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் அது தங்களுடைய கடைசி ஆசையும் விருப்பமும் என சரவணணிடம் கூறவே
சரவணணும், பெற்றோருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக ஒரு நீண்ட கம்பில் இருபுறமும் இரண்டு கூடைகளை கட்டி தாயை ஒரு புறமும், தந்தையை ஒரு புறமும் அமர வைத்து தனது தோள்களில் சுமந்தவாறு நடைபயணமாக ” காட்டுபகுதியின் வழியே நடைபயணமாக காசிக்கு சென்று கொண்டிருப்பார்.
பெற்றோருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார்கள். சரவணணும் அவர்களை மரத்தின் ஓரமாக நிழலில் இறக்கி அமர வைத்து விட்டு ஓடுகின்ற நீரோடையில் நீர் பிடிக்க தண்ணீர் குடுவையை எடுத்து செல்வார். அந்த நேரம் பார்த்து
அரசன் காட்டுபகுதிக்கு வேட்டையாடுவதற்கு வந்திருப்பார்.
ஓடுகின்ற நீரோடையில் மரத்திற்கு அடியில் குடுவையால் தண்ணீரை நிரப்பும் பொழுது குடுவையின் உள்ளே நீர்புகும் சத்தம் கேட்கவே , அரசனோ ஏதோ காட்டுவிலங்கு தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது என்றெண்ணி சரவணன் உருவம் நிற்பதை மரமும் மறைத்து இருந்ததனால், அரசன் குறிபார்த்து அம்புவிட அந்த அம்பு சரவணணின் மார்பில் பாய்ந்து விடும்.
வலியால் கத்திகொண்டு துடிதுடித்து விழும் சரவணணின் குரலை கண்டு அரசன் திடுக்கிட்டு ஓடி சரவணணை தனது மடியில் அமர்த்தி மன்னிப்பு கேட்பார் .உடனடியாக மருத்துவத்திற்கும் ஏற்பாடு செய்வதாக கூறுவார்.
ஆனால் சரவணணோ என்னுடைய பெற்றோர்கள் தண்ணீர் தாகமுடன் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த தண்ணீரை நீங்கள் கொடுங்கள்.
நான் பிழைக்க மாட்டேன் என் பெற்றோருடைய கடைசி ஆசையை நீங்கள் நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென்று உயிரிழப்பார். அரசனும் மிகபெரிய குற்ற உணர்ச்சியுடன் பெற்றோரிடம் சென்று சரவணணின் மரணத்தை மறைத்து நீண்ட நேரம் இங்கேயே அமர்ந்து இருந்தால் பொழுது ஏற்பட்டுவிடும் காட்டு விலங்குகள் நடமாட கூடிய பகுதி உங்கள் மகன் வழி தவறி சென்றிருக்கலாம் உங்களை நான் காசிக்கு அழைத்து செல்கிறேன் என அரசன், சரவணணாக தன் பெற்றோரை காசிக்கு அழைத்து செல்வார். பாடம் இப்படி தான் நிறைவடையும்.
இதனை டீச்சர் நடத்தும்பொழுது எங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சரவணண் மீது பற்று ஏற்பட்டு, கவனம் ஒரு துளி சிதறாமல் வைத்தகண் வைத்த மாதிரியே டீச்சர் ஆங்கிலத்தில் ” போர்டில்” எழுதுவதும் அதற்குண்டான அர்த்தத்தை தமிழில் மொழி பெயர்ப்பதும் என கைகளை கட்டிபோட்டு வகுப்பெடுத்தார்.
நாங்கள் படித்த பொழுது ஆங்கில மொழி பெரும்பாலும் வளர்ச்சியடையாத காலகட்டங்கள். இறுதியாக he’s is dead என்று எழுதி முடித்து, இதற்கு என்ன அர்த்தம் யாராவது முயற்சி பண்ணி சொல்லுங்க தப்பா இருந்தாலும் பரவாயில்லை என்று வினவவே, ஒவ்வொருவரும் சரவணண் பிழைத்துவிட்டான் என்றும் அரசன் காப்பாற்றி விட்டான் என்றும் பேராசையுடன் நேர்மறை பதில்களையே கொடுத்தனர் .
டீச்சரிடமிருடந்தும் அதனையே எதிர்பார்த்தோம். அனைவருக்கும் மனது நல்ல விடையை டீச்சர் சொல்ல வேண்டும் என்று தவித்து கொண்டிருந்தோம்.
டீச்சர் போர்டில் dead- இறப்பு, மரணம் என்று எழுதி போட்டதுமே எல்லோருடைய மனமும் களங்கி சுக்குநூறாக உடைந்து போனது. மாணவிகள் சிலர்” உச்உச்” என்று கவலையை கொட்ட ஆரம்பித்தனர்.
டீச்சரும் எங்கள் மனதை மாற்ற இது வெறும் கதை புள்ளைங்களா உண்மையில்லை என்று கூறினாலும் மனது ஏற்கவில்லை.
சரவணண் பெற்றோர் மீது கொண்ட பற்றுக்காகவும், சரவணண் மீது நாங்கள் கொண்ட கருணையாலும், நன்றி செலுத்தும் விதமாக படிக்காத கடைசி பெஞ்ச் மாணவ மாணவியரையும் , இந்த பாடத்தின் Paragraph, Essay போன்றவற்றை படித்து மனப்பாடமாக்கி ஒப்பித்தோம்.
விஜயலெட்சுமி டீச்சர் இந்த பாடம் நடத்தியது இன்றும் என் கண்களுக்குள், நினைவில் நிற்கிறார்.
அனைத்து ஆசிரியர்களும் அரையாண்டு தேர்விற்கு உண்டான குறிப்பிட்ட பாடங்களை நடத்தி முடித்துவிட்டு 5- நாள் படிப்பதற்கு விடுமுறையும் கொடுத்து யாராவது மார்க் கம்மியா எடுங்க அப்புறம் பேசுகிறேனு எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.
குறிப்பிட்ட நாளில் “தேர்வுகளம்” தயாராகும்.
நாங்கள் எழுத கூடிய அரையாண்டு பரிட்சையின் ரிசல்ட் .முழாண்டு பரீட்சையில் நல்ல மார்க்குடன் வெற்றி பெறுவோமா மாட்டோமா என்பதையும், எங்கள் திறமையினையும் நிர்ணயிக்கும் பரீட்சை.அன்று அதிகாலை 8- மணிக்கு எழுந்து பாரதியார், பாரதிதாசன் குறிப்புகளை படித்துவிட்டு முதல் பரீட்சையை நோக்கி எங்களின் கால்கள் பள்ளியை நோக்கி விரைய தொடங்கின.
சூடுபிடித்த பரிட்சை களம்.
தொடரும்…
ஆசிரியர் தினத்தன்று.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR