Madukkur
'80s '90s madukkur

மதுக்கூர் பேருந்து நிலையமும், பட்டுக்கோட்டை தாமரை குளமும்

மதுக்கூர் பேருந்து நிலையமும், பட்டுக்கோட்டை தாமரை குளமும்
@ எண்பது- தொண்ணூறுகளில் @

– by Janab S Jabarullah

” மதுக்கூர் மக்கள்” வாழ்வியலில் பெருநகரமான, பட்டுக்கோட்டையுடான போக்குவரத்து தொடர்பு அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

இயல்பு நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 500- க்கும் உட்பட்டோருக்கு குறையாமல் வேலை நிமித்தமாக பட்டுக்கோட்டை சென்று வருகின்றனர். பட்டுக்கோட்டையிலிருந்து அதிகாலை, முதல் நள்ளிரவு, வரை வருகின்ற ஒவ்வொரு பேருந்திலும் சராசரியாக 5- நபர்கள் விகிதம் பயணிக்க வாய்ப்பிருக்கிறது. இவையன்றி இரு சக்கர வாகனம், வாடகை கார், ஆட்டோ, சொந்த காரில் பயணிப்போர் என எளிதாக 500- நபர்களை கடந்து செல்லும்.

இந்த ஐநூரில் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், தொழில் செய்பவர்கள், தொழிலாளிகள், மருத்துவதிற்காக செல்லும், டாக்டர் மற்றும் பொதுமக்கள்,

வியாபார கொள்முதல் செய்பவர்கள், திருமண விஷேசங்களுக்கு ஜவுளி எடுப்போர் , தியேட்டருக்கு செல்லும் ” “சினிமா பிரியர்” கார் மெக்கானிக்கிடம் செல்லும் டிரைவர்கள் , வாரந்தோறும், மாடு வாங்க, விற்க என மாட்டுச்சந்தை சென்று வரும் விவசாயிகள், வியாபாரிகள், என பல விதமான வகையிலும் தொடர்புடைய அனைத்து மக்களும் அடங்குவர். இன்றைய பட்டுக்கோட்டையுடைய ” மாபெரும் வளர்ச்சியில் நமதூர் மக்களுடைய பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த பட்டுக்கோட்டைக்கும் நமதூருக்குமான போக்குவரத்து தொடக்கம் பெற்ற வரலாறு சுவாரஷ்யமானது.

நமதூர் முன்னோர்கள், தங்களுடைய வாழ்க்கை தேவைகளுக்கு, தேவையானதை நிறைவேற்றிக் கொள்ள ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பயணிப்பதற்கு ஆரம்ப காலங்களில் “கால்நடை பயணமே ” பிரதான பயணமாக இருந்தது., பிற்பகுதியில் ” சைக்கிள்” இரண்டு சக்கரம் வாகனம் மேம்பட்டதால், கால்நடையிலிருந்து ,கால் மிதிவண்டியாக உருவெடுத்தது.

பெரும்பாலும் நம் முன்னோர்கள் ” பேருந்துகள் நமதூரில் இயக்கபடுவதற்கு முன்பாக ” பட்டுக்கோட்டை செல்வதற்கோ, இன்னும் பிற ஊர்களுக்கும் வியாபார ரீதீயாக செல்வதற்கோ, உறவினர் விஷேசங்களுக்கு செல்வதற்கோ, ஆன்மீகவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கோ ,மூட்டை முடிச்சியுடன் கூடிய ” நடை பயணங்களும்,சைக்கிள்களும் மிக முக்கிய பங்கு வகித்தன.

1965- க்கு மேலாக “கப்பிகல்லும், செம்மண்ணும் கலந்த தார்ரோடு சாலைகளில்” முதன்முதலாக மதுக்கூரில், பேருந்து பயணிக்க தொடங்கியது .மன்னார்குடி to பட்டுக்கோட்டை ஒரு நாளைக்கு” 3″ டிரிப் என ஒரே ஒரு பேருந்து என சாலை பயணம் துவக்கம் பெற்றது. மன்னார்குடி சாலையும், பட்டுக்கோட்டை சாலையும்,அதிரை சாலையும், சமச்சீராக இல்லாமல் “கறடுமுரடாக” காட்சியளிக்கும் . ஓரே ஒரு பேருந்து பயணிக்கின்ற அளவில் ரோடுகளின் அகலம் இருக்கும். ஒரு பஸ் சாலையில் பயணித்து கொண்டிருக்கும் பொழுது எதிரே மற்றொரு பஸ் வந்தால் , இரண்டு பஸ்களும் வண்டியின் அரைபகுதியை மண்ரோட்டில் இறக்கி ஓட்டியவாறே, கடந்து செல்வார்கள். ரோடுகள் சமநிலை இல்லாமல் ஆங்காங்கே கரிங்கற்கள், கழன்று, பெயர்ந்து மிக கோரமாக காட்சியளிக்கும். எப்போதாவது ரோடு போடுவார்கள், ஓறிரண்டு, மாதம் தாங்கும் அதன் பிறகு மீண்டும் குலுங்கிய பஸ்-ஸீடன் கரடுமுறடான பயணமாகவே இருந்தது.

பட்டுக்கோட்டையில் முதன் முதலில் “பஸ்ஸ்டாண்ட்” அமைந்த வருடம் 1963களுக்கு மேலாக அப்போதைய முதல் “பேருந்து நிலையம்” “காவல்நிலையம்” எதிர்புறம் உள்ள பழக்கடைக்கு பின்னால், முதல் பஸ்ஸ்டாண்ட் உருவாக்கம் பெற்றிருக்கிறது.

அந்த பஸ்ஸ்டாண்டில் ஒரு நாளைக்கு அதிகபட்ஷமாக 5,அல்லது 6 பேருந்துகள் வருவதும் போவதுமாக தொடக்கம் பெற்றிருக்கிறது.

பேருந்துகள் பட்டுக்கோட்டை உள்ளே நுழையும் பொழுது , G.H .முகப்பு வழியாக பஸ்ஸ்டாண்ட் செல்வதும், வெளியேறும் பொழுது G.H பின்புறமாக வெளியேறுவது என அப்போதைய (one-way)ஒரு வழிப்பாதையாக இருந்திருக்கிறது.

நாட்கள் செல்ல செல்ல பேருந்து பயணம் ” அசுரவளர்ச்சி” அடையவே பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கு இடபற்றாக்குறை ஏற்ப்பட்டதனால் , அருகிலிருந்த ” தாமரைகுளத்தினை” தூத்துவிட்டு சமன் செய்து ” ஒரு பிரம்மாண்டமான, “பேருந்து நிலையம்” உருவாக்கி இருக்கிறார்கள். அது தான் இப்போதைய ” பயன்பாட்டில் இருக்கும் பஸ்ஸ்டாண்டும்” பழைய தாமரைகுளமும், ஒரு சிறு மழை பெய்தால் கூட “பட்டுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட்” குளம்போல் காட்சியளிக்கும். காரணம் மழைநீர் தன் இருப்பிடத்தை தேடி வருவதே.

இந்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின் பல டவுன்களிலிருந்தும் , கிராமபுறங்களிலிருந்தும் பஸ்கள் நாலாபுறமும் ஓட துவங்கின . திருமணம், பண்டிகை, வியாபாரம் என பல “வாழ்வியல்” சார்ந்த தேவைகளுக்கு பட்டுக்கோட்டை ஒரு முக்கிய வியாபார பெருநகராக வடிவம் பெற்றது.

நகரை நோக்கி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அனைத்து பஸ்களுக்கும்  (one-way)ஒரு வழிபாதை உருவாக்கபட்டது . பிற ஊர்களிலிருந்து வரக்கூடிய பேருந்துகள் உள்ளே நுழைவதற்கு ” boys high- school, மைனர்பங்களா, வழியாக செல்லவும், வெளியேறும் பொழுது G.H.கடந்து, மணிக்கூண்டு வழியாக வெளியேறுவதும் என 1985-ல் ஒரு வழிப்பாதை அமைக்கபெற்றுள்ளது.

அதே போன்று “பட்டுக்கோட்டையிலிருந்து’ “தஞ்சாவூர்” செல்வதற்கும் போக்குவரத்து தொடக்கம் பெற்றது 1963- களின்,துவக்கங்களில், ஒரத்தநாடு (by pass) புறவழிச்சாலை உருவானது 1991- ல் அதற்கு முன்பு வரை அனைத்து வாகனமும் 
மெயின்ரோடு ( பானு மெடிக்கல்) பாதையின் வழியாக கடந்து சென்று வந்து கொண்டிருந்தது.காலப்போக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே புறவழிச்சாலை 91- ல் உருவாக்கபட்டிருக்கிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் .திருவள்ளுவர் டெப்போ பின்புறம், அது தான் முதல் பேருந்து நிலையம் தொடக்கம் . 1970களில் தற்போது இயங்குகின்ற ” புதிய பேருந்து நிலையம்” 1996- ல் உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற்ற பொழுது உருவாக்கபட்டு, பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்தது.

தொடக்க காலங்களில் மதுக்கூரிலிருந்து மன்னார்குடிக்கும், பட்டுக்கோட்டைக்கும், ஒன்று இரண்டு, என செல்ல துவங்கிய பேருந்துகள் காலப்போக்கில் முக்கிய நகரங்களிலிருந்தும், மதுக்கூரை கடந்து ஓட தொடங்கி சாலைகள் மிக சுறுசுறுப்பு பெற தொடங்கின.

1998- களில் சாலைகள் தரமான, சமச்சீரான அகலபாதைகளாக, படப்பைகாடு முதல் கைகாட்டி வரையிலும், இந்த புறம மன்னார்குடி வரை, அதிரை சாலையிலும் ரோடுகள் விரிவுபடுத்தபட்டது.

2001- ல் சூரியதோட்டம் வழியாக, பேருந்துகள் மதுக்கூர் பேருந்து நிலையம், செல்வதற்கு (one-way) ஒரு வழிப்பாதையும் அமைக்கப்பட்டது.

நமதூர் சாலையில் பல பஸ்கள் ஓடினாலும் 8- ம் நம்பர் குணசேகர்” பஸ்-யுடைய சிறப்பு மிக மிக மகத்தானது . அதிகாலை பட்டுகோட்டையில் இருந்து வரும் முதல் trip-ல் தினசரி செய்தித்தாள்கள், மற்றும் வெற்றிலை, ஐஸ்கட்டி பார் போன்றவைகள் வியாபாரிகள் அனுப்பி வைப்பார்கள்.மறுபுறம் சிவக்கொல்லை காய்கறி வியாபாரிகள் இதில் ஏற்றிக்கொண்டு கடை வாசலில் இறக்கி கொள்வார்கள். இரண்டு தியேட்டர்களின் சினிமா படபொட்டிகள் இன்னும் பல வியாபார பொருட்களும் வரும்.

குறிப்பாக இந்த பஸ் சிவக்கொல்லையிலிருந்து, பட்டுக்கோட்டை நோக்கி புறப்படுகின்ற ஒவ்வொரு நேரமும்(very executive time) இந்திராநகர் மக்களுக்கும், சிவக்கொல்லை பகுதி மக்களுக்கும் மிக மிக உபயோகமான நேரம் .

காலை 7.40, 9.45, 12.20, 3.30, 5.50, 8.30 என கல்யாண ஓடையிலிருந்து புறப்பட்டு சிவக்கொல்லை வந்து சேரும்.

இதே போன்று ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு பஸ் பிரசித்திபெற்றது.

31- விசுவநாதா’ திருமக்கோட்டை ,  6- ஸ்ரீ லக்ஷ்மி சொக்கனாவூர்”, 35- அத்திவெட்டி , 7,28,21,34,20,  என பண்டிகை விழா காலங்களில் இந்த பஸ்கள் ஒவ்வொரு ட்ரிப்பிலும் கிராமமக்களை பிதுங்கிவழியும் கூட்டத்துடன் வருவதும், போவதுமாக இருக்கும்.மதுக்கூர் பஸ்ஸ்டாண்ட் பயணியர் நிழற்குடையில் கிராம பஸ்களுக்காக, காத்திருக்கும் போது மக்களின் நெருக்கடியாலும்,காத்திருப்பாலும் பஸ்ஸ்டாண்ட் ஆர்ப்பரிப்பாக இருக்கும். செவ்வாய்கிழமை சந்தை தினங்களில் கிராம மக்களின் சந்தை வியாபாரமும், கொள்முதல் பொருட்களுடனும், அனைத்து டவுன்பஸ்- களும் வாரவாரம்- ஆராவரமாக காட்சியளிக்கும்.

முகூர்த்த நேரங்களில் சொல்லவே வேண்டாம் ஒரு பண்டிகைக்கு உண்டான பரபரப்புடன் அனைத்து பஸ்களும் நிரம்பி வழியும் .

பாஸ்போர்ட் ஆபீஸ் செல்பவர்களுக்கு அதிகாலை மன்னார்குடியிலிருந்து வருகின்ற 5.00 மணி CRC யும் 5.30 மணி CRC யும் பேருதவியாக இருக்கும்.

அதிரை கல்லூரி , பட்டுக்கோட்டை ஹை- ஸ்கூல் செல்கிற மாணவர்களுக்கு, 8.50 வருகிற451- CRC-யும், 9.00 மணி CRC மற்றும் 
9.10 வருகிற S.V.S.கண்ணன் பஸ்- டைம் கைகொடுக்கும்.

மாலை மலர், மாலைமுரசு போன்ற மாலை நாளிதழ்கள் திருவாரூர் பேருந்தான ” ராயல் டிரான்ஸ்போர்டில்(3.40க்கு) வரும் , 
பட்டுக்கோட்டை திரைப்படத்திற்கு செல்வதற்கு  காலை ஷோவிற்கு 9.20 பழநிஆண்டவர், மதிய காட்சிக்கு 12.30 SPT,
1st ஷோவிற்கு 5.40 சுந்தரம், 2-nd ஷோவிற்கு , 8-50 K.P ரோடுலைன்ஸ் .இதில் பயணித்தால் சரியான நேரத்திற்கு முன்னரே தியேட்டருக்கு சென்றுவிடலாம்.

பட்டுக்கோட்டையில் வேலைகளை முடித்து விட்டு இரவு ஊருக்கு திரும்புவதற்கு 9- மணிக்கு மேல் சுந்தரம், CRC படு கூட்டமாக பயணபட்டு வரும்.

பிறகு 11- மணிக்கு ரஞ்சித் , 12.40 சுந்தரலெட்சுமி, 1.30 SPT’, 2- மணிக்கு SVS கண்ணன் இதுதான் கடைசி பஸ் .2nd show படம் முடிந்து பெரும்பாலும் இதில் ஒரு கூட்டம் பயணிக்கும்.

மன்னார்குடியிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு முதல் பேருந்தாக பட்டுக்கோட்டை செல்வதற்கு சுந்தரலெட்சுமி வரும். சில நேரங்களில் சென்னை பேருந்து திருவள்ளுவர் 333 ம் வரும்.

பெரும்பாலோனோருக்கு பேருந்து பயணம் என்றாலே, ஒரு அலாதி பிரியமாக இருக்கும். அதிலும் ” படிக்கட்டில்” தொங்கி செல்வது உச்சகட்ட சந்தோஷமாக இருக்கும்.

முதன்முதலில் நான் பயணித்த 80-களின் இறுதிகளில் 8- ம் நம்பரிலும் டவுன் பஸ்களிலும் பேருந்து கட்டணம் 80- பைசாவாக இருந்தது. தனியார் மற்றும் அரசுபேருந்தில் 1.20 பைசாவாக இருந்தது.

பயணமாக பட்டுக்கோட்டையை நோக்கி பயணிக்கும் பொழுது அந்த அரை மணி நேரம் நாம் பார்த்து கடந்து வேடிக்கை பார்த்து செல்கின்ற ஒவ்வொரு சம்பவமும் அழகு வாய்ந்தவையாக இருக்கும்.

பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்படும் பொழுது இரண்டு பஸ்கள் 5- நிமிட தாமதத்தால் ஒரே நேரத்தில் முட்டிகொண்டு, பஸ் டிரைவர், கண்டக்டர் செய்யும் செல்ல சண்டை ரசிக்கதக்கவை.

மரக்கடையில் நிப்பாட்டி சில டிக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு, புகையை கக்கி கொண்டும் , பரபரவென்று முக்கூட்டுசாலையில் வளையும் பொழுது பஸ் முகப்பு ஒரு அழகிய தோரணையுடன் வளைந்து வந்து ” முக்கூட்டுசாலையில்” நிற்பது அழகுக்கு அழகாக காட்சியளிக்கும்.

பஸ்ஸில் நிற்பதற்கு இடம் இருக்காது, ஏறுங்க, ஏறுங்கனு அள்ளி திணிச்சிகிட்டு வண்டி புறப்படும்.

கைகுழந்தை, மற்றும் சிறுகுழந்தைகளை வைத்து நின்றுகொண்டு பயணிக்ககூடிய இஸ்லாமிய தாய்மார்களின் குழந்தைகளை , பாதுகாப்பாக வாங்கி கையில் வைத்து கொள்ளும் இந்து சமய பெண்மணிகளும், அதே போன்று’ இஸ்லாமிய பெண்மணிகளும் இந்து சமய மக்களின் குழந்தைகளை வைத்துகொண்டு பஸ்-ஸீடன் ஒரு சமூக நல்லிணக்கபயணமும் சேர்ந்தே பயணிக்கும். நமக்கு தெரிந்த ஒருவருக்கு டிக்கெட் சேர்த்து எடுத்துவிட்டு,அவரிடம் கூறுவது நட்புறவை மேலும் வளர்த்து கொள்வதுமாக அமையும். அதேபோல் நமக்கு யாரும் தெரிந்தவர்கள் டிக்கெட் சேர்த்து எடுத்துவிட்டால் குஷியாக இருக்கும்.

பெட்ரோல் பங்க் கடந்து காற்றின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து படப்பைகாட்டில் முதல் நிறுத்தம் தொடங்கும். சில பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தம், டவுன் பஸ்களில் நிறுத்ததிற்கு பஞ்சமிற்காது. ஒவ்வொரு நிறுத்ததிலும் 4 – பேர் ஏறுவதும் இறங்குவதுமாகவும், புளிய மரம் போர்த்திய படர்ந்த சாலையின் நிழலில் குளிர்ந்த காற்றுடன் பயணிப்பது

 
அருமையாக இருக்கும்.

தென்னை- ஆராய்ச்சி நிலையம் கடந்த பின் இருபுறங்களிலும் பச்சைபசேலென்று வயல்வெளிகளும், செழிப்பான வெள்ளாமைகளும், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். வயல்களுக்கு ஓடுகின்ற சிறுசிறு நீரோடைகளும் ,மஞ்சள் பசும்பூவை காற்றில் அசைந்தாடி கொட்டி கொண்டு இருக்கின்ற மரங்கள் தளிக்கோட்டை பாலம் முன்புவரை காற்றின் வேகத்தில் தூவிய வண்ணம் பறக்கும்.

“தளிக்கோட்டைபாலம்” ஆற்றில் தண்ணீர் ஓடும்பொழுது ஜன்னலோரத்தில் உட்கார்ந்து பார்க்கும் அழகு . காண கிடைக்காதவை.

கண்டக்டர் துறுதுறுவென்று, விசிலை ஊதிக்கொண்டும், விரல் இடுக்குகளுக்கிடையே 1,ரூபாய் 2’ரூபாய் , 5′ ரூபாய் தாள்களை சொருகிகொண்டும் டிக்கெட், டிக்கெட் ,என பஸ்ஸின் மேல்மட்டத்தை பட்,பட் என என தட்டுவதும் என நாட்டுச்சாலை வந்துவிடும். குழந்தைகளுக்கு 1/2 டிக்கெட் விவகாரத்தில் தாய்குலங்கள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அழகாக ரசிக்ககூடியவையாக இருக்கும்.

நடிகர் விஜயகுமார் வீட்டை கடக்கும் பொழுது பஸ்ஸில் யாரேனும் ஒருவர் இதுதான் நடிகர் விஜயகுமார் வீடு என பிறருக்கு அடையாளம் காட்டுவது என வாடிக்கையாக இருக்கும். நசுவினி காட்டாற்று பாலத்தை கடக்கும் பொழுது வெள்ளபெருக்கின் சப்தமும் , ஏறி குதித்து குளியல் போடும் சிறுவர்களும், ஆற்றினை சுற்றி பறந்து கொண்டிருக்கும்

பல ” வண்ணாத்தி பூச்சிகள், பட்டாம் பூச்சிகள் செடி கொடியினை மொய்ப்பது மன வசீகரபடும்.

படப்பைகாடு, வேப்பங்குளம்,கள்ளுக்கடை, கண்டியன்காடு, பூங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையம், கோட்ரஸ், தளிக்கோட்டைபாலம், தளிக்கோட்டைarch, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை மில், கேணிப்பாலம், வளவன்புரம், என பல ஊர் மக்களின் நிறுத்தங்களை கடந்து  பேருந்து பட்டுக்கோட்டை கைகாட்டி அடைந்ததும் இறங்க வேண்டிய இடத்தை திட்டமிட்டு ஒவ்வொரு மக்களும் இறங்கும் பொழுது மைனர்பங்களா வாசலில் பஸ் அப்பொழுதுதான் பெருமூச்சு விடும். சில டிரைவர்களிடம் பழக்கவழக்கம் இருப்பதால் ” அன்னபூர்ணா” தியேட்டர் வாசலிலயே சிலரை இறக்கிவிட்டும் செல்வார்கள்.

தஞ்சாவூர் வேலை விஷயமாக செல்வதாக இருந்தால் பெரும்பாலும் தனியார் பேருந்தான S.K நாதன், கணேஷா , ரவி போன்ற பேருந்துகளில் தேர்வு செய்து பயணிப்பது வழக்கம். அதுவும் S.K நாதன் பஸ்- ஸீக்கு பின்னால் அடுத்த 5- நிமிடத்தில் POINT to POINT அரசுபஸ் தயாராக நிற்க்கும்.

அந்த நேரத்தில் SK நாதனில் பயணிப்பது படு “த்ரில்லிங்காக” இருக்கும். மனதிற்கு பிடித்த “ஆனந்தவிகடன்” நாவலை வாங்கிக்கொண்டு ஜன்னலோரமாக அமர்ந்து படித்துகொண்டும், இடையிடையே இயற்கையை ரசித்து கொண்டும், அளமளிப்பான பயண காற்றில் ,அப்பயணம் தித்திப்பாக இருக்கும்.

எல்லா நிறுத்தங்களிலும் டிக்கெட்டையும் ஏற்றுவான் , பின்னால் புறப்பட்ட point to point பஸ் கிட்ட நெருங்க முடியாது. வேக தடைக்கெல்லாம் கொஞ்சம் கூட மதிப்பு இருக்காது. புயல் வேகத்தால் தனக்கு முன்னால் புறப்பட்ட 3- பஸ்களை மேல உளூர் செல்வதற்குள் overtake செய்துவிடுவான். சென்டர்மிரர் கண்ணாடில தொங்குற கரடிபொம்மை வாய் இருந்தால் அழுதுடும். கியர்ராடு, பல உதறல்களுடன், துடிக்கும். கைல ஒடச்சி எடுக்காத குறையாக வண்டி மின்னல் வேகத்தில் பறக்கும்.

அதே போல் கணேஷாவும். விரும்பி பயணித்த ரசிகன். தஞ்சையிலிருந்து காலை 11.20 க்கு புது பஸ்ஸ்டாண்டிலிருந்து , பட்டுக்கோட்டைக்கு P.L.A பஸ் புறப்படும் . 12- மணிக்கு அறந்தாங்கி ட்ரிப், பட்டுக்கோட்டைல 11.55 இருக்கணும். அந்த பயணம் 
மெய்சிலிர்க்கும், அமர்க்களமான, மரணபயணமாக இருக்கும். அமளி அடிச்சிகிட்டு டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டுவார் 
12- மணிக்குள் REACH ஆகிடுவார் மனதிற்குள் ஏண்டா இந்த பஸ்-ஸீல ஏறுனோம்கிற பயம் வந்துடும்.

இப்படி எல்லாம் அனுபவித்து கடந்து வந்த எங்கள் தலைமுறைகள் .

இன்றைய தலைமுறைகளில் 70% சதவிகிதமானோர், பஸ் பிராயணங்களை விரும்பவில்லை அதன் பாதுகாப்பையும் அறிந்திடவில்லை. இன்று 100 km எல்லைக்குட்பட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மக்கள் பஸ் பயணங்களை தவிர்த்து பைக்கில் சென்று வர கூடிய சூழல் மாறியுள்ளது.

மதுக்கூர் மார்க்கம்(தடம்) வழியாக  கடந்து சென்ற சில ” புறநகர் பேருந்துகள்.

அரசு பேருந்து C.R.C.
மதுரை- மதுக்கூர்- திருவாரூர்

GVS வெங்கடேஸ்வரா டிரான்ஸ்போர்ட்
மயிலாடுதுறை-மதுக்கூர்-பட்டுக்கோட்டை

ரஞ்சித் ரோடுவேஸ்.
புதுக்கோட்டை-மதுக்கூர்_ மன்னார்குடி.

S.V.S கண்ணன்
குடந்தை- மதுக்கூர்- பேராவூரணி.

ராஜ்கலா
திருவப்பாடி- மதுக்கூர்- முத்துபேட்டை

ஜெயலட்சுமி டிரான்ஸ்போர்ட்
நாகூர்-மதுக்கூர்- பட்டுக்கோட்டை.

S.P.T சீனிவாசா டிரான்ஸ்போர்ட்
பேராவூரணி- மதுக்கூர்- வேதாரண்யம்.

கும்பகோணம்-மதுக்கூர்- பட்டுக்கோட்டை.

ராயல் ரோடு லைன்ஸ்.
திருவாரூர்- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

K.P. ரோடுலைன்ஸ்&
அரசி டிரான்ஸ்போர்ட்

451 C.R.C அரசுபேருந்து.
குடந்தை- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

சக்தி விநாயகர்
மன்னை- மதுக்கூர்- மல்லிப்பட்டினம்

333- திருவள்ளுவர் போக்குவரத்து கழகம்.
அதிரை- மதுக்கூர்- சென்னை

 தனியார் பேருந்து

RTT முதல் தனியார் பேருந்து  1994
மதுக்கூர் – சென்னை

முதல் சொகுசு பேருந்து 1997- ஆக இருக்கலாம்.
மதுக்கூர்- மன்னை- சென்னை

C.R.C.
மதுக்கூர்- கண்ணுக்குடி- தஞ்சாவூர் சில வருடம் ஓடியது.

POINT to POINT
மன்னை- பரவாகோட்டை- மதுக்கூர்- நாட்டுச்சாலை- பட்டுக்கோட்டை சில மாதங்கள் ஓடியது.

டவுன் பஸ்கள்

மதுக்கூர் வழியாக கடந்து செல்லும் கிராம பேருந்துகள்.

8-ம் நம்பர் குணசேகர்
கல்யாணஓடை- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

7-ம் நம்பர் அரசு பேருந்து
திருமகோட்டை- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

6-ம் நம்பர் ஸ்ரீ லக்ஷ்மி
சொக்கனாவூர்- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

35- சோழன் போக்குவரத்து கழகம்
அத்திவெட்டி-மறவக்காடு மதுக்கூர்- பட்டுக்கோட்டை

34-சோழன் போக்குவரத்துகழகம்
பரக்கலகோட்டை- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

31- விசுவநாதா
திருமகோட்டை- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

28-சோழன்போக்குவரத்து கழகம்.
பெரியகோட்டை- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

21- சோழன் போக்குவரத்துகழகம்.
கன்னியாகுறிச்சி- மதுக்கூர்- பட்டுக்கோட்டை.

20- சோழன்போக்குவரத்து கழகம்
பெருகவாழ்ந்தான்- மதுக்கூர்- பட்டுக்கோட்டை

அதிரை பயணிப்பதற்கு,

சந்திரா டிரான்ஸ்போர்ட்.
மன்னார்குடி- மதுக்கூர்- அதிரை

ராஜா டிரான்ஸ்போர்ட்&
ஜெயராஜ் டிரான்ஸ்போர்ட்,
மன்னை- மதுக்கூர்- அதிரை

குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே அதிரை செல்லும்.

இவையன்றி

பழநி ஆண்டவர், சக்தி விநாயகர், சுந்தரம், சுந்தரலெட்சுமி , ஒரு CRC இந்த பேருந்துகள் ஒரு நாளைக்கு 5- முறை.
மன்னார்குடி- மதுக்கூர்- பட்டுக்கோட்டை என சுழற்சி முறையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

சில நேரங்களில் ஒரு ” எமர்ஜென்ஸி” வேலையாக பட்டுக்கோட்டை செல்ல பஸ்-ஸீக்காக காத்திருந்தால் வரிசையாக மன்னார்குடி செல்வதற்கு பஸ் வரும். மன்னார்குடி செல்வதற்கு காத்திருந்தால் வரிசையாக பட்டுக்கோட்டை செல்வதற்கு பஸ்- வரும் இது எழுதபடாத விதி. மதுக்கூர் மற்றும் சுற்றுபுற மாணவர்கள் ” மதுக்கூரிலிருந்து அதிரைகல்லூரிக்கு” நேரிடையாக செல்வதற்கு பல ஆண்டுகளாக பல மனுக்கள் கொடுத்தும் இன்றுவரை ” மாணாக்கருடைய” கோரிக்கைகள் அமல்படுத்தவில்லை. ஊரும் , போக்குவரத்தும் இவ்வளவு வளர்ந்தும், மாணவசெல்வங்களுக்கு இன்றுவரை ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது அரசுகளின் மிகபெரிய ” வரலாற்று பிழை”யாகவே நான் எண்ணுகிறேன்.

முதல் பேருந்தான T.V.S டிரான்ஸ்போர்டில் முதன் முதலில் பட்டுக்கோட்டை பயணிக்கும் பொழுது(1965) “நாலணாவில்” துவங்கிய பேருந்து கட்டணம் இன்று (2021)10- ரூபாய் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த 56- வருட பேருந்து பயண வாழ்க்கையில்.

இன்று காலத்தின் முன்னேற்றத்தால் ஒவ்வொரு அசைவுகளுக்கும் சொந்த வாகனமோ, வாடகை காரோ பயன்படுத்தி வேலைகளை முடித்தாலும், அன்றைய காலங்களில் காதுகுத்து, கல்யாணம், இன்பம், துன்பம் ,

கோவில் திருவிழா, கந்தூரி விழா என அனைத்து காரியங்களிலும் எங்கள் தலைமுறையினரிடம் அந்த கால பேருந்துகள் ஒட்டி உறவாடினான், என்பதை யாரும் மறுக்க முடியாது.நிதர்சனமான உண்மையும் கூட.

தொடரும் எங்களின்,

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தின்
மதுக்கூர் பேருந்து கொண்ட நட்புறவு

– by Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR