Madukkur
'80s '90s madukkur

ஓய்வறியா அகல் அலைகள்…

80ஸ் 90 ஸ் களில்
ஓய்வறியா அகல் அலைகள்..

தொன்றுதொட்டு வாழ்ந்த,வாழும் மதுக்கூர் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும்
தாய்பள்ளியானது
” முஹைதீன் ஆண்டவர்” மஸ்ஜித் எனும் நமதூர்
பெரிய பள்ளிவாசல் .

இப்பள்ளி தோன்றபட்ட பிறகு அரை நூற்றாண்டுகளுக்கும், மேலான வருடங்கள் கடந்த பிறகு, நமதூர் சமுதாய பெரியோர்கள் அரும்பாடுபட்டு தொழுகைக்கு வருகை தரும் அனைவரும் ஒது செய்வதற்காக அகல் உருவாக்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ் .

நிச்சயமாக இந்த அகல் எல்லோருடைய மனதிலும் குடிகொண்டு வாழக்கூடிய ஒன்றாகவும், ஒரு மிகபெரிய பொக்கிஷமாகவும்
இருக்க கூடும்.

விபரமறிந்த ஒவ்வொருவரும் முதன் முதலாக பள்ளி அகலில் ஒது செய்த இடம் இந்த அகலாகத் தான் இருக்க கூடும்.

இந்த அகல்கள் எத்தனை தலைமுறைகளின் கைநனைந்து புழங்கிய இடம். அல்ஹம்துலில்லாஹ்.

பெரிய பெரிய மார்க்க மேதைகள், அறிஞர்கள்,உலமாக்கள், ஹஜ்ரத்மார்கள், மோதினார்மார்கள், பல வெளியூர் உறவினர்கள் & வெளியூர் ஜமாத்தார்கள் மற்றும் நமதூர் சமுதாயத்தின் பல ஆன்றோர்களும், சான்றோர்களும், பொதுமக்களும், நம்முடைய பெற்றோர்களும்,
இறை வணக்கத்திற்காக பலரது கைநனைத்த பரக்கத்தான அகல்.

இந்த பெருமைக்குரிய அகலில் இன்றும் நாமும், இன்றைய தலைமுறை சந்ததியினரும், “வாழையடி வாழையாக” இறை வணக்கத்திற்காக இதே அகலில் ஒது செய்து வாழ்ந்து கொண்டிருப்பது பெருஞ்சிறப்பு.

இன்று உலகின் பல தேசங்களில் நமதூர் மக்கள் வாழ்ந்தாலும், விடுமுறையில் ஊருக்கு வருகை தந்து,
ஒரு இடைவெளிக்கு பிறகு, பெரிய பள்ளியில் ஒதுவெடுக்கின்ற அந்த தருணம், சந்தோஷம் ஈடு இணையற்றது. இரு கைகளின் சட்டை பகுதிகளை மடக்கி விட்டோ, சுருட்டி கொண்டோ, பேராவலுடன் கைகளை அகலுக்குள் விட்ட மறுகணம் மனதிற்குள் ஒரு எல்லையற்ற சந்தோஷம் மலர்ந்து காணப்படும்.
முகத்தை கழுவுகின்ற பொழுது , ஒருவித பரவசம் மேலும் அதிகரித்து, இன்பமாக இருக்கும் ஒது செய்து முடித்த பின்பு, முகத்தை துடைத்த பின், கண்ணாடியில் முகத்தை பார்க்கின்ற பொழுது இது நம்முடைய முகமா என நமக்கே ஆச்சர்யமளிக்கும் வகையில் பேரழகாக காட்சியளிக்கும்.

கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த பல பெரியோர்கள் இரண்டு பள்ளியின் அகல்களிலும், ஒது செய்யும் விதம் மிக அழகாக இருக்கும்.

ஒவ்வொருவருடைய பாணியும் தனித்தன்மை வாய்ந்தது .
சிலர் சட்டையை கழட்டி வைத்துவிட்டு அரைக்கை முண்டா பனியனுடன், தொப்பி,வாட்ச், கைக்குட்டைகளை,
குட்டி மதில் சுவற்றில் கழட்டி வைக்கும் சிலர். தோளில் கர்சீப் போட்ட வண்ணம், சிலர் தேங்காப்பூ துண்டு, சிலர் நீளமான மென்மையான துண்டு, சிலர் தலையில் வெள்ளை வரிகோடு தொப்பி அணிந்த நிலையில், அகலை சுற்றி அமர்ந்து அவர்கள் ஒது செய்யும் அழகு இன்னும் பலரது கண்களிலும் நெஞ்சஞ்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் ஒது செய்து கொண்டிருக்கும் பொழுது,
அகலில் தண்ணீர் நிறையும் மென்மையான சப்தமும், குட்டி மீன்கள் அங்கும் இங்குமாக, நான்கு புறங்களிலும், சுற்றி சுற்றி வட்டமடித்து கொண்டே நீந்துவது அகலின் மற்றொரு அழகாக இருக்கும்.

இயல்பான நாட்களில் இந்த அகல்கள், பஜ்ர் தொழுகைக்கு பிறகு 6,7 மணிவரை புழக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும் .
அதற்கு பிறகு சற்று அமைதி பெறும் ,
மதியம் 12- மணிக்கு பிறகு தொடக்கம் பெறுகிற அகல் அலை, அதன் பிறகு தொடர்ச்சியாக ஒருவர் மாற்றி ஒருவர் என, ஒவ்வொரு வக்திற்கும் கலந்து கொள்கிறவர்களும்,
ஜமாத் கலந்து கொள்ள முடியாதவர்கள் தனிதனியாக வருகை தந்து கொண்டே இருப்பார்கள்.

இஷா ஜமாத் முடிவுற்ற பிறகு,
10-மணிக்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக, அகல் சலசலப்பு ஓய்வுபெற தொடங்கும்.

ரமலானுடைய காலங்களில் இதனை விட அகல்கள் பல மடங்குடன் எழுச்சியாக இருக்கும் . 5 வக்து தொழுகை, தராவீஹ், திக்ரு, குர்ஆன் ஓதுவது என இறைவழிபாடு,(இபாதத்) பெரிய பள்ளியில் மிகமிக சிறப்பாக இருக்கும். ஒருவர் மாற்றி ஒருவர் என யாராவது ஒருவர் இபாதத் செய்த வண்ணம் இருப்பார்கள்.

மாலை நேரங்களில் அஸர் தொழுகையோடு” மருதாணி தோட்டத்தில்” நோன்பு கஞ்சி வாங்குவதற்கு ஆண்சிறுவர்கள் ஒரு வரிசையாகவும், பெண் சிறுமியர்கள் ஒரு வரிசையாகவும், பள்ளியின் படிக்கட்டு வரை, இருபுறமும் “மருதாணி செடி வரிசையுடன், நீண்ட நேரமாக காத்து நிற்பார்கள் .

தூக்குவாளியால் சிறுவர் சிறுமியர்கள், தங்கள் முன்னால், பின்னால், நிற்கக் கூடியவர்களின்
தூக்குவாளிகளில் இடித்து கொண்டு விளையாடி கொண்டு இருப்பார்கள்.
சில நேரங்களில், தள்ளுமுள்ளுடன், 10- பேர் கும்பலாக கீழே விழுவதும், எழுவதுமாக விளையாட்டும் நடக்கும். இவர்களை “கண்ட்ரோல்” பண்ணுவதற்கு ஒரு நபர் மருதாணி குச்சியை கையில் வைத்து கொண்டு அங்கும் இங்குமாக பாதுகாப்பிற்காக வரிசையை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார்.

அஸர் தொழுகை முடிந்த பிறகு முதலில் பெரியோர்களுக்கு கொடுத்துவிட்டு,
அதன் பிறகு சிறுவர் 10- பேர்,
சிறுமியர் 10- பேர் , என வரிசையில் செல்ல தொடங்கி கஞ்சி ஊற்ற துவங்குவார்கள்.

“கஞ்சிசட்டி” அனல் தெறிக்க, கஞ்சி ஊற்றுபவர்களும் கைகடுக்க ஒருவர் மாற்றி ஒருவர் என ஊற்றி கொடுத்து கொண்டே இருப்பார்கள் .

நீண்ட-நிமிடம் வரிசையில் காத்திருந்து கஞ்சி ஊற்றும் கொட்டகைக்குள் சென்று “J.M.E.C சிகப்பு நிற கலர் மர நாற்காலி” நோன்பு கஞ்சியால் வழிந்து காணப்படும்.

நம்முடைய தூக்குவாளியை வைத்த பிறகு கொதிக்க, கொதிக்க ஊற்றுவார்கள். இன்னும் கொஞ்சம் சேத்து ஊத்தூங்க என கேட்கும் பொழுது,
1/4 குவளை சில நேரங்களில் சேர்த்து கிடைக்கும், பல நேரங்களில் கிடைக்காது. கஞ்சி வாங்கிய கையோடு வெளியில் பளியாகுளத்தின் சுவற்றில் உட்கார்ந்தவாறே பல சிறுவர், சிறுமியர்கள், தூக்குவாளி மூடியில் நோன்பு கஞ்சியை ஊற்றி சுவைத்த பிறகு,
பல தெருவை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவார்கள்.
பெருநாள் கொல்லை, பள்ளிவாசல் தெரு, நூருல் இஸ்லாம் தெரு, இந்திராநகர், இடையகாடு, பட்டாணிதெரு, மேலத்தெரு, செட்டித்தெரு, கீழக்காடு,சூரியதோட்டம், இராமம்பாள்புரம், என சிறுவர் சிறுமியர்கள் தூக்கு வாளியில் கஞ்சி ததும்பி வழிந்து கரைபடிந்த நிலையில் நடைபயணமாக ஒருஒரு, அணியாக, பிரிந்து செல்வார்கள்.

அந்நேரத்தில் தெருக்களில் மாலைநேர “தப்ஸ் கீதங்கள்” ஒலித்து கொண்டு அழகுக்கு அழகு மேலும் சேர்க்கும்.
ரமலானுடைய 30- நாட்களும் அனைத்து தெருக்களிலும், சிறுவர், சிறுமியர்கள் நோன்பு கஞ்சி வாங்க, போக வருவது என தூக்குவாளியின் சட, புட வென்ற சப்தங்கள் ஒவ்வொரு வீட்டிலும் கேட்டுக்கொண்டே, தெருக்கள் மிக மிக புழக்கமாக விழாக்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கும்.

கஞ்சி ஊற்றி எல்லோரையும் அனுப்பி வைத்த பிறகு,இஃப்தார் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் நோன்பாளிகளுக்கு உள்ள நோன்பு கஞ்சி சட்டியை 10- நபர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என, இறை பொறுத்தத்தை நாடியவர்களாக கொட்டகையிலிருந்து தூக்கி வருவார்கள். குறிப்பாக படிக்கட்டு வரை சேர்ந்த பின்,கீழே வைத்து கிரீல்கேட்டு களை விசாலமாக திறந்து வைத்து கொண்டு, வலதுபுறமாக படிக்கட்டுடன் அகலிருந்து நீர்
கொட கொடவென்ற சலனத்துடன், சிறிய சிமெண்ட் கால்வாயிலிருந்து தென்னை மரங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.

8- படிக்கட்டுகளையும் மேல் தூக்கியவாறு மூவர் மேலாகவும், மூவர் கீழாகவும்,சரிசமமான நிலையில் கொதிக்கின்ற சட்டியை தூக்கிபிடித்தவாறு பெரும் சிரத்தையுடன் உள் பள்ளிக்குள் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

இப்தாருடைய நேரத்தில் ஹஜ்ரத் சிராஜ்தீன் அவர்கள், நோன்பின் மாண்புகள் பற்றி, ஒரு குறுகிய பயானை நோன்பாளிகளுக்கு எத்தி வைப்பார்கள். அதன் பிறகு கூட்டு துவா தொடக்கம் பெறும்.

முதலில் அரபு மொழியில் துவாவை ஓதிகேட்டுவிட்டு, பிறகு தமிழில் கேட்க தொடங்குவார்கள்.

யாஅல்லாஹ் எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக, எங்களுடைய பெற்றோர்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக, என துவங்கி ஊர் மக்கள் நலன், மறுமைநலன், மறைந்த முன்னோர்கள், எதிர்கால சந்ததிகள், வாழும் சந்ததிகள், இம்மை மறுமை, ஹஜ் கடமை,கபுர் வாழ்க்கை, ஆரோக்கியம், திருமணம்,பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, குழந்தை பாக்கியம் என நம்முடைய எண்ணங்களில் கேட்க தோன்றாத பல துவாக்களையும் மெய்உருகி கேட்பார்கள். மொத்த நோன்பாளிகளுடைய கவனங்களையும்,துளி அளவு சிதறாமல் தன்னுடைய துவாவின் கட்டுபாட்டில் வைத்து இருப்பார்கள் .

அகல் தொட்டியில் நடுவில் நீர் சலசலவென்று மெல்லிய சலனத்துடன், முழுமையடைவதற்காக ஓடிக்கொண்டே இருக்கின்ற அந்த ரம்மியமான உணர்வுகளுடன்
ஒவ்வொரு துவாவிற்குமிடையே ஆமீன்,ஆமீன் என நோன்பாளிகள் மொழியும் பொழுது, அந்த வசீகர குரல்கள் பள்ளியில் நிசப்தமாக எதிரொலிக்கும், உடம்பு சிலிர்த்து புல்லரிக்கும்.

சில பெரியோர்கள், துவாவின் ஆழம் அறிந்தவர்கள் கண்களிலிருந்து, நீர்
தாரை தாரையாக ஓடும் .
குறிப்பாக லைலத்துல் கத்ர் இரவு தொழுகை பிறகு, இப்தார் நேரம் மிகமிக சிறப்பான துவாக்களை ஓதுவார்கள். ஆமீன் ஆமீன், என கூற கூற நெஞ்சங்கள் சிலிர்ப்படைந்து புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கும் ரமலானுடைய ஒவ்வொரு இப்தார் நேரமும் துவா ஓதி முடிந்த பிறகு அதிர்வேட்டு சப்தத்துடன் நோன்பாளிகள் பேரீத்தம்பழம் கடித்து நோன்பு திறந்து, நார்த்தம் பழம் பழச்சாறு, அருந்துகின்ற அந்த ஒற்றைக் கணம். மனதிற்குள் ஒரு
” பசுந்தோட்டம்” முளைக்க பெற்றது போல் இருக்கும்.

மஃரிப் தொழுகையுடன் அகல் மீண்டும் பரபரப்பு பெற தொடங்கிவிடும்.

பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் நோன்பு 30- நாட்களும் நம்முடைய சொந்த ஊரில் அமைந்தால் மிகமிக நன்றாக இருக்குமே என்று ஏங்காத நெஞ்சங்கள் இருக்காது. காலச்சூழல், வாழ்க்கை சூழலால், பலரும் பல திசைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஊரை பிரிந்து பல தேசங்களில் வாழ்ந்தாலும், தராவீஹ், இப்தார், இறை வணக்கத்தில் ஈடுபடும் பல நேரங்களிலும்
“தாய் பள்ளியான” பெரிய பள்ளிவாசல் நினைவில் வராமல் இருப்பது இல்லை.
மேலப்பள்ளி வாசலிலும் “தாய்பள்ளியில்” நடைபெறுகின்ற இதே சகல விதமான சிறப்புகள் அங்கும் நடைபெறும்.

மேலப்பள்ளி வாசல் புதியதாக கட்டிய பொழுதே அகலையும் இணைத்து கட்டிவிட்டார்கள்.

கடந்த 2020-2021-களில் கொரோனா காலநிலை சூழலால், பள்ளிகள் மூடப்பட்டு இரண்டு வருட ரமலான் காலம் பள்ளியில் இஃபாதத் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டது . எல்லாம் வல்ல இறைவன் தன்னுடைய கருணையால் இந்த வருட ரமலான் நோன்பு நாட்களை நம் அனைவருக்கும் முழு ஆரோக்கியத்துடன் நோன்பு நோற்றிடவும், இறை வணக்கம் திருப்திகரமாக செய்வதற்கும் அருள் புரிவானாக (ஆமீன்)

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR