Madukkur
'80s '90s madukkur

80ஸ் 90ஸ்களில் “மாநாடு” திரைப்படமும், வெடித்து சிதறிய ” சோடா பாட்டில்களும்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

டூரிங் டாக்கீஸ்களில் “மாநாடு" திரைப்படம். "கத்திமுனையில் நகரும்" பரபரப்பான அடுத்தடுத்த திரைக்கதை காட்சிகளை கொண்ட படம் மாநாடு.

28- வருடங்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து டூரிங் டாக்கீஸ்களிலும், மற்ற தியேட்டர்களிலும் இந்த
” மாநாடு” திரைப்படம் ரிலீசாகி வெளியிடபட்டு இருந்தால், தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது அன்றைய கால சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படம் எந்த மாதிரியான தாக்கத்தை கொடுத்து இருக்கும் . என்ற கற்பனையின் படைப்பே இப்பதிவு.

யாரையும் கேலி, கிண்டல் செய்யும் நோக்கத்துடனோ மனதை காயபடுத்தும் நோக்கத்துடனோ பதிவிடபட்டதல்ல.

எனக்கும் நமதூர் ஐயப்பா & M.K.M தியேட்டருக்குமான உறவு கிட்டதட்ட 23- வருட காலகட்டங்கள். இந்த 23- வருட கால கட்டங்களில் பல திரைப்படங்கள் கண்டதுண்டு.
படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது காட்சிக்கு காட்சி, பலரும் காட்சிக்கு தகுந்த நகைச்சுவையான விமர்சனங்களை செய்து கொண்டு’ சந்தோஷம் பூத்து குலுங்க, நண்பர்களாக, சிறுவர்களாக, குடும்பத்தினர்களாக கண்டு களிப்பார்கள் .

அப்பொழுது நான் கண்ட ரசிகர்களின் விமர்சனங்களை ” மாநாடு” திரைபடத்துடன் ஒப்பிட்டு எழுதுகிறேன்.

!! கற்பனையே கற்பனையே!!

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” மாநாடு” திரைப்படத்தில்
S.A சந்திரசேகர் 9- தடவையாகவும், பிரேம்ஜி 3- தடவையாகவும்,
வாகை சந்திரசேகர் 7- தடவையாகவும், சிலம்பரசன் 23- முறை இறந்து 24-வது தடவையாக (time-loop) உயிர்பெற்று மருத்துவமனையில் உயிருடன் இருப்பது போல் இப்படம் நிறைவடையும்.

கதைக்களம் இடைவேளை வரையிலும் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாக அமைய பெற்றிருக்கும். இந்த ” மாநாடு” மொத்த படமும்
Time- loop என்ற புதிய கோணத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட
விருந்தாக அமைந்தது.

28- ஆண்டுகளுக்கு முன்
” ஒரு பண்டிகை” தினத்தன்று நமதூர் தியேட்டரில் !! மாநாடு!! வெளிவந்து இருந்தால் அப்படத்தை பார்க்க செல்லும் ” 7-வயது சிறுவன் முதல் 70- வயது ” தாத்தா” வரை
சாதாரண வெள்ளந்தியான, பாமர
சினிமா ரசிகனின் மனநிலை படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது எப்படி இருந்து இருக்கும் .

இந்த குழப்பமான கதைகளத்துடன் நமதூர் டூரீங் டாக்கிஸ்கள் நம்முடைய ஆடியன்ஸ்களின் கைகளில் சிக்கி எப்படி திக்கு முக்காடுகிறது.என கற்பனை தோற்றமே இப்பதிவு.

நம்மூர் தியேட்டரில் நல்ல புரிதலான கமர்ஷியல் சினிமாக்கள் பார்த்து
கொண்டிருக்கும் பொழுதே காட்சிக்கு காட்சி,
நம்முடைய ரசிகர்களின் விமர்சனங்கள், லூட்டிகள் படு ஜாலியாக, அமர்க்களமாக இருக்கும் .

இந்த படத்தை பார்க்க வந்த இவர்களின் விமர்சனங்களை
“காட்சிக்கு காட்சி” காண்போம்.

தீபாவளி,பக்ரீத்,பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை தின சிறப்பு திரைப்படங்களை காண
பண்டிகை தினமான இன்று முதல் காட்சியான
(மேட்னி ஷோ) மதிய காட்சி காண்பதற்கு

நண்பர்கள் அவரவர்களின்
பாடை பரிவாரங்களோடும், சிறுவர்கள் அவர்களின் பட்டாளத்துடனும்,
பலரும் குடும்பமாக, பெண் ரசிகைகள் தோழிகளாக, தெரு மக்களாக ,
ஒன்று சேர்ந்து ” படைசூழ” வருகை தந்தார்கள் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என .

வீட்டிலிருந்து புறப்பட்டு கிளம்பி வருகையில் வழியெங்கும் ஒட்டபட்டிருக்கும்
பட போஸ்டர்களை ரசித்து கொண்டே படு உற்சாகத்துடன்
பரவசமாக வந்தடைந்தார்கள் .

கேரியர் இல்லாத வாடகை சைக்கிள்களில் முன் கம்பியில் ஒருவர், நடுவில் ஓட்டுபவர், மெற்க்காடு பின்னால் இரண்டு பக்கமும் கால்களை போட்டு நின்று கொண்டு
ஓட்டுபவரின் தோளை பிடித்தவாறே மூவராக குஷியாக வருவார்கள்.
இதே போல் பலரும்.

படம் திரையிடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, ஆத்துபாலம் முதல் பெரமையா கோயில் வரை புதிய தார்சாலை போடுவதற்காக சாலையின் இருபுறமும் கரிங்கல்லும்,(கப்பிக்கல்லும்) கொட்டபட்டு
கூர்மையான கற்கள் முட்டு முட்டாக காட்சியளித்தன.அதனை பார்த்து கடந்து கொண்டே தியேட்டர் வந்தடைந்தார்கள்.

தியேட்டர் வளாகத்தில் ஒட்டபட்டு இருக்கும் பிரத்யோகமான பட போஸ்டர்கள் மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

கண்ணால் பார்த்த அனைத்து பட போஸ்டர்களையும் ஒன்று சேர்த்து மனதிற்குள் படத்தின் கதை இப்படி தான் பயணிக்கும் என எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு சினிமா ரசிகரும் கற்பனை செய்து கொள்வார். அன்றும் அப்படிதான் பலத்த எதிர்பார்ப்புடன்
” மாநாடு” திரைப்படம் காண ஐயப்பா தியேட்டருக்கு வருகை தந்தார்கள்.

அனைத்து டிக்கெட் கவுண்டர்களிலும் கரடு முரடான மீசையுடன், ஆணழகன் போன்று தொடை தெறிய வேட்டியை வரிஞ்சி கட்டிகொண்டு டேய் சீக்கீரம் கதவ தொறங்கடா படத்த உடனே பாக்கணும் போல ஆசையா இருக்கு. படத்த பார்த்தால் தான் கையும் காலும் உதறுவது நிக்கும் என மீசையை முறுக்கிவிடுகிறார் ஒருவர்.

வருங்கால முதல்வர் சிம்பு வாழ்க என இளவட்டங்கள் கரகோஷம் எழுப்ப, கவுண்டர் அதிர்கிறது. ரசிகர்கள் கூட்டம் கட்டம் கட்டி நெரிசலாக, தள்ளு முள்ளுடன், வரிசையில் நிற்க,

தியேட்டர் மணி விர்ரென்று ஒலிக்கபட்டு கவுண்டர் கதவுகள் திறக்கபட்டு உற்சாகமாக,
சந்தோஷ சப்தங்களுடன் ரசிகர்கள் உள்ளே நுழைகிறார்கள் .
கவுண்டரில் திணறடியாக பின்னால் நிற்க்ககூடிய ஒருவருடைய முகம் நெரிசலினால்
முன்னாள் நின்றுகொண்டிருப்பவர் தோளின் மீது, 6- மாத கைக்குழந்தை கவுந்து கிடப்பது போல் இருக்கும்.

கவுண்டரின் நடுவில் நெரிசலில் சிக்கி கொண்ட ஒருவர் டேய் தள்ளாதீங்கடா, தள்ளாதீங்கடா மூச்சுமுட்டுதுனு கத்தி கத்தி டிக்கெட் எடுத்துவிட்டு வெளியே வரும்பொழுது ” வேப்பமர காற்று உடம்பின் மேல் பட்டபொழுது அப்பாடானு ஒரு நிம்மதி பெரு மூச்சுவிட்டவர், தியேட்டர் கேண்டீனில் ஒரு சோடா கொடு தம்பி இடைவேளைல வந்து பாட்டில தறேனு சொல்லி வாங்கிகொண்டு ஒரு இடத்தில் அமருகிறார்.

4- கவுண்டர்களின் புறங்களிலிருந்தும் டிக்கெட் கிழித்தவுடன் ரசிகர்கள் விரைந்து ஓடிய வண்ணம், திரைக்கு முன்பிருக்கும்
(கோழி குடாப்பு) சிமெண்ட் கட்டாயம்
முதல் பெஞ்ச், இரண்டாம் பெஞ்ச், மூன்றாம் பெஞ்ச் என அனைத்தும் முழுமையடைந்து உட்கார இடமில்லாமல் சிலர் நடைபாதையின் தரையிலும், பலர் ஊதாகலர்(EXIT) கதவை சாத்திக்கொண்டு நின்றுகொண்டும், அரங்கு முழுவதும் காதை பிளக்கும் கரகோஷத்துடனும், கைதட்டலுடனும், விதவிதமான விசில் சப்ததுடனும் ரசிகர்கள் குமிந்த வண்ணம் தியேட்டரில் “மாநாடு” படம் தொடங்குகிறது.

முதல் சிலைடில் புகை பிடிக்காதீர் என அறிவிப்பு வர
நம்ம ஆடியன்ஸ் அப்பதான் கணேஷ் பீடியும், செய்யது பீடியும் வாயில் வைப்பார்கள்.

2-வது சிலைடில் எச்சீல் துப்பாதீர்கள் என அறிவிப்பு வர அப்பதான் ஒரு பாட்டி வெற்றிலை பாக்கு போட்டு பொளிச் பொளிச்சினு துப்ப தொடங்கும்.

3- வது சிலைடில் முன் இருக்கைகள் மீது கால்களை தூக்கி போடாதீர் என அறிவிப்பு வர, அப்பதான் சட்டையெல்லாம் கழட்டி போட்டுட்டு , முன் இருக்கையில் உட்கார்ந்து இருப்பவர் தோளின் ஓரமாக கால்களை தூக்கி வைப்பார்கள்.

நண்பர்கள் அவரவர் பட்டாளத்துடன் சாய்மான பெஞ்சில், ஒரே வரிசையாக குரூப் குரூப்பாக,
ஒவ்வொரு குரூப்பும் உட்கார்ந்து இருந்தார்கள்.
முதல் பெஞ்ச் முதல் கடைசி பெஞ்ச் வரை.

ஒவ்வொரு குரூப்பிலும் கஞ்சாகருப்பு போல் ஒருவரும், சூரி போல் ஒருவரும் சில காமெடி செய்யும் நண்பர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

இன்று வெளியில் பார்த்த போஸ்டர்களை கண்டு மனதிற்குள் இன்னைக்கு
” இணைந்த கைகள்” இ.பி.கோ 84, மாதிரி ஒரு ஆக்சன் படம் பாக்க போற சந்தோஷத்தில் இருக்க எதிர்பார்ப்புடன், 16- ரீல் என சிலைடு விழுகிறது . சத்தம் காதை பிளக்க தொடங்குகிறது.

பூக்கள் திரையில் வண்ண வண்ண வண்ணமாக பறக்க,
யுவனின் பரபரப்பான இசையுடன், சிலம்பரசன் நடிக்கும் “மாநாடு” என டைட்டில் கார்டு போடும் பொழுதே , என்னாடா இளையராஜா மொவன் இசை இந்த போடு போடுறான் ப்பா
மரண போடு,

அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்குனு விமர்சனம் தொடக்கம் பெறுகிறது.

முதல் 7- நிமிடத்திற்குள் படத்தின் ஹீரோவின் அறிமுக பாடல், அல்லது அனல் பறக்கும் சண்டை காட்சியை எதிர்பார்த்தவர்களாக விறுவிறுப்புடன் அமர்ந்து காத்திருப்பார்கள் இந்த இரண்டில் ஒன்று நடந்தால் தான் அவர்களின்” இதயம்” அமைதி பெறும்.இல்லையென்றால் அப்பொழுதே மனது உடைந்து விடும்.

படம் தொடங்குகிறது பிளைட்டில் சிம்பு அறிமுகம் ஆகிறார். T.ராஜேந்தர் மொவன் பால்பன்னு மாதிரி மொளுமொளுனு இருக்கான்யா, என A சென்டர் ரசிகர்கள் பேசிக்கொள்ள

ஹீரோயினை பார்த்து இளவட்டங்கள் யாருப்பா இது நதியா தங்கச்சி மாதிரி இருக்கா ” என B சென்டர் ரசிகர்களின் விமர்சனத்துடன் ஒவ்வொரு காட்சிகளும் நகர்ந்து கொண்டே செல்கிறது.

சோடா வாங்கியவர் சோடாவை ஒவ்வொரு மொடக்காக குடித்து கொண்டும், சிறிது தூங்கிகொண்டும், பிறகு முழித்து பார்ப்பதும் என சுவாரஷ்யத்துடன் படத்தை பார்க்கிறார்.

பிளைட் இறங்குவது , வெளியில் வருவது, கல்யாணத்திற்கு சென்று திருமண பெண்ணை கூட்டி செல்வது, அதற்கு பிறகு கார் சேஸிங் ஆரம்பிச்சதும், பைட் வரபோகுது , பைட் வர போகுதுனு ஆர்வம் அதிகரித்து படத்தின் பரபரப்பும் தொடங்கிவிடுகிறது.
கதையோடு connect ஆகிறார்கள்.

கோயம்புத்தூரில் போலீஸ் சுற்றி வளைத்ததும் , படம் இனிமே செம்ம சூடா இருக்க போவுதுனு முன் பெஞ்சிலிருந்து கடைசி பெஞ்ச் வரை பீடி சிகரெட்டை அறக்கபறக்க பற்ற வைக்கிறார்கள்.

யுவனின் மிரட்டும் இசையில் போலீஸ் சூர்யா, அறிமுகம் ஆக
ரசிகர்கள் மேலும் பரபரப்பாகிறார்கள்.
ரசிகர்கள் அனைவருக்கும் அடுத்து என்ன நடக்க போவுதுனு ஆர்வத்துடன் கவனத்தை திசை திருப்பாமல் பார்க்கிறார்கள்.

கதை நகருகிறது சிம்பு நிருபராக மாநாட்டுக்குள் நுழைகிறார், C.M.சுடப்படுகிறார் சிம்புவும் சுடப்பட்டு இறக்கிறார் .ரசிகர்கள் கூட்டம் உறைந்து போய் அமைதி காக்கிறது .

இவன் செத்துட்டா கதை இனிமே ஓடாதே
ஒரு வேளை கொள்ளகூட்டன கண்டுபுடிக்கிறதுக்கு ராம்கி வருவானோ , என விமர்சனம் ஒவ்வொன்றாக பேச தொடங்க
1st t-i-m-e l-o-o-p முடிகிறது.

இரண்டு நிமிடம் தியேட்டரில் ரீல்பொட்டி மாற்றுவதற்காக படம் நிறுத்தபடுகிறது.

2nd t-i-m-e l-o-o-p ?தொடங்குகிறது.
பிளைட்டில் சிம்பு மீண்டும் கண் முழிக்கிறார்.
என்னாடா இது ,
Double-action ஆ இருக்குமோ என இளவட்டங்கள்,

ஏதும் கனவு கண்டு இருப்பானோ,என
மீசைகாரர்கள்

சிம்புவுக்கு ஏதும் மனநோய் இருக்குமோ , பெண் ரசிகைகள் .

இல்ல இவன் சிம்புவோட அண்ணணாக இருப்பான் இவன் தான் அந்த போலீஸ்காரன பழிக்கு பழி வாங்குவானோ என யூகிக்கும் நேரத்தில்,

பார்த்த அதே காட்சிகள் மீண்டும் திரும்புவதால் கொஞ்சம் லேசான குழப்பத்துடன் தலையை சொறிந்து கொண்டு அடுத்தடுத்த காட்சிகளை பொறுமையிழந்து பார்க்கிறார்கள். கூடவே கொஞ்சம் கோவம் கலந்த சத்ததுடன் பதட்டமும் தியேட்டரில் லேசாக அதிகரிக்கிறது.ரசிகர்கள் பொறுமையிழந்து ஒவ்வொரு குரூப்பாக விமர்சனங்களை தொடங்குகிறார்கள்.

இளவட்டங்கள் டேய்,
நான் அப்பவே சொன்னேல,
M.K.M தியேட்டருக்கு ” வலிமைக்கு” போவோம்னு பாத்தீயா படம் ரம்பமா அறுவையா இருக்கு என ஒருவன் கூற, கொஞ்சம் பொறுடா நம்ம வலிமைய காட்ட வேண்டிய நேரம் வர போகுது, கொஞ்சம் வெயிட் பண்ணு. இனி வேட்டையாடு விளையாடு தான் என சட்டை கையை மடக்கி விடுகிறார்கள்.

மதுபிரியர்கள்:
பிளைட்ல ஒரு சில்க்சுமிதா டான்ஸ் வச்சி இருந்தால்,கூட பாட்டு திரும்ப திரும்ப வரும் ஜாலியா பாத்துகிட்டே இருக்கலாம் என இவர்கள்.

புகை பிரியர்கள்:
படம் போற போக்க பாத்தா 3-கட்டு பீடியும், 2-வத்திபொட்டியும் பத்தாதுனு நினைக்கிறேன் .

யாராவது திரைக்கு பின்னாடி போயி சிம்புவ கூட்டி வாங்க என்னானு கேட்போம் இது C சென்டர் இளஞ்சிறுவர்களின்
ஆழ் மனதிற்குள்.

இந்த ரசிகர்கள் கூட்டத்தினரிடையே ஊசிமணி பாசிமணி, விற்கும் நரிக்குறவர் ஒருவர் வெத்திலையை போட்டுக்கொண்டு , கையில் நாட்டு துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டு படத்தை பார்ப்பதும், குழம்புவதும், ஆபரேட்டர் ரூமை முறைப்பதுமாக இருக்கிறார்.

யாராவது மாங்கொட்டை தலைவலி மாத்திரை வச்சி இருக்கியலா என பெண்கள் முனங்க.

சிம்புவ பிளைட்லேந்து புடிச்சி கீழே தள்ளிவிடுங்கடா, அப்படியாவது ஓரே தடவையாக செத்து போகட்டும்
என காலில் அணிந்திருந்த கொலுசுகளின் திருகாணியை
திருகி விட்டவாறே, முணுமுணுத்து எரிச்சலுடன் தனது கழுத்தின் முன்னாள் கிடந்த இரண்டு ஜடையையும் பின்னால் தூக்கிபோட்டவாறே எரிச்சலா வருதுனு பெண் ரசிகை விமர்சித்தார்.

இப்படி பல விமர்சனங்களுடன் படம் ரசிகர்களின் கடுங்கோபத்துடன் நகருகிறது.

இரண்டாவது முறையாக சிம்பு, காவல்துறையால் ரவுண்டப் செய்து, சூர்யாவால் சுடப்பட்டு இறக்கிறார்.

3-rd time loop தொடங்குகிறது.

மீண்டும் பிளைட்டில் சிம்பு வர, வக்காலி ஒரே ரீல அந்த ஆபரேட்டர் பய திரும்ப திரும்ப ஓட்றான்யா என கொதிப்படைந்த மறு விநாடி.

சோடாகுடித்தவர்
சோடா பாட்டிலை ஆபரேட்டர் கூண்டை நோக்கி முதலில் வெறிகொண்டு வீசுகிறார். பாட்டில் 4- பக்கமும் தெறித்து விழுகிறது.

நரிக்குறவரும் தன் பங்கிற்கு
வெறிகொண்ட வேங்கையாக மாறி நாட்டு துப்பாக்கியை கையில் எடுத்து டூமீல்,டூமீல்,டூமீல் என்று 3- முறை ஆபரேட்டர் ரூமை நோக்கி சுடவே , ரசிகர்கள் கூட்டம் ஆங்காங்கே சிதறி தெறித்து ஓடுகிறார்கள்.

ஏ-லே-ய் நிறுத்துடா, படத்த நிறுத்துடா 3- ரூவாய் காச வாங்கிட்டு யார ஏமாத்த பாக்குறீங்க படஒளி வரும் கூண்டை நோக்கி 10-15 வாடகை இரும்பு சேர்கள் மடக்கி கொண்டு தடார் புடாரென்று வீசப்படுகிறது .

(கோழி குடாப்பு )சிமெண்ட் கட்டாயத்தின் முன்பாக அமர்ந்து படம் பார்த்த பலரும்
சுவறை தாண்டி கத்திகொண்டும், திட்டிக்கொண்டும் கட்டாயத்தை ஏறி குதித்து
முறுக்கு, சோளபொறி விற்கும் சிறுவர்களின் தட்டுகளை மேலே பறக்கவிட்ட படி கோபம் கொப்பளிக்க நரம்பு நையபுடைக்க, நாக்கை கடித்தபடி சிலர் ஆபரேட்டர் ரூமை நோக்கி வெறிகொண்டு மூர்க்கதனமாக ஓடுகிறார்கள்.

இளவட்டங்கள் திரையை(screen) வாழைமட்டையை, உறிப்பது போல் உறித்து மறுபுறம் தீயை பற்ற வைக்கிறார்கள்.
கபகபவென்று தீ எரிய ஆரம்பிக்கிறது.

மொத்த தியேட்டரும் செவ்வாய்க்கிழமை சந்தைபோல் ஆகிறது.

மாப்ள டே-ய் அந்த ஆபரேட்டர பயல புடிச்சி வெளிய
புளிய மரத்துல கட்டுடா. பட ரீல ஒழுங்கா மாத்தாம தண்ணி போட்டுட்டு படத்த ஓட்றான் போல, கடும் கூச்சலுடன்
அனைவரும் ஆபரேட்டர் ரூமை நோக்கி ஓடுகிறார்கள். தியேட்டர் களேபரம் ஆகிறது.

ஆப்ரேட்டர் வையாபுரி படம் ஓட்டும் ரூமை மூடிவிட்டு தியேட்டரின் மாடிக்கு தாவி குதிச்சி என்ன நடக்க போவுதுனு தெரியலயேனு பின்னால் இருக்கும்
” அவையாண்டி குளக்கரை பக்கம் தப்பித்து ஓடுகிறார்.

கோவத்துடன் வந்த மக்கள் ஆபரேட்டர் ரூம் பூட்டி இருப்பதை கண்டு ஓடிட்டாண்டா அந்த பய, என குமுறிகொண்டே ஆப்ரேட்டர் ரூம் கதவினை உடைத்து
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை புகுந்தது போல் படபொட்டி ரோட்டுக்கு தூக்கி வீசபடுகிறது.மிஷினை பரட்டி போட்டு ஆபரேட்டர் ரூம் அடித்து நொறுக்கபடுகிறது.

வெறி அடங்காமல் மொத்த கூட்டமும்
காம்பவுண்ட் உள்ள 5- அடுக்கு பாதுகாப்பு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களை திட்டிகொண்டே, தூக்கி பந்தாட ஆரம்பிக்கிறார்கள்
4- திசையிலும் சைக்கிள்கள் வானத்திற்கும் பூமிக்குமிடையே மிதக்கிறது.
மெற்க்காடு,சீட்டு,
டைனமோ, பெல்லு, சுக்குசுக்காகிறது.

4 ஊதாகலர் கதவை புடுங்கி எறிந்துவிட்டு,
2- பெரிய வெளிக் கதவையும் உடைத்தெறிந்து வெளியேறி சாலையில் கிடக்கும் கரிங்கல்லையும், கப்பிக்கல்லையும் எடுத்து
சரமாரியாக வீச தொடங்குகிறார்கள்.

தியேட்டர் மேனேஜர் மனோபாலா ஆபிஸ் ரூமீன் இரும்பு கதவை பலமாக பூட்டிகொண்டு பாதுகாப்பாகிறார். தொலைபேசி மணி அலற போனை எடுக்கிறார்

ஹலோ
மேனஜரே
நான் ” துவரங்குறிச்சி” சின்னசாமி தியேட்டர்லேந்து ஆபரேட்டர் யோகிபாபு பேசுறன்.ஒரு முக்கியமான தகவல் சொல்லணும்.

உங்க தியேட்டர் ரீல்பொட்டி எப்டி இருக்கு என மேனஜர் கேட்க,
அதுசரி இப்பதான் பிரச்சனை ஆரம்பமா என கேட்க,
ஆமா என்று கூற ,
எங்க தியேட்டர் ஆடியன்ஸ், (புள்ளிங்கோ) எல்லாம் ரொம்ப sharp
சிம்பு மொத தடவை செத்தப்பவே வேலைய சிறப்பா செஞ்சிட்டாங்க.

என்னப்பா பட பொட்டில பிரச்சனை, ஓடுன ரீலே திரும்ப திரும்ப வந்துகிட்டு இருக்கு என மேனேஜர் வினவ

யோகிபாபு:
மேனேஜரே இந்த பிரச்சனை உங்க தியேட்டர்ல மட்டும் இல்லை .
தஞ்சை மாவட்டம் புல்லா ஒரே கொந்தளிப்பா தான் இருக்காம்.
” மாநாடு ” ஓடுற எல்லா தியேட்டர்லயும், இதே பிரச்சனை தான் போய்கிட்டு இருக்கான் .

இப்பதான் நாங்களும் படத்தை நிப்பாட்டி 20 நிமிஷம் ஆச்சுனு முத்துபேட்டை வேதநாயகி தியேட்டர்லேந்து போன் பண்ணுணாங்க.
அந்த ஊரு தியேட்டர் ஆடியன்ஸ் டியூப்லைட், காத்தாடிய புடிச்சுகிட்டு தொங்கி, எல்லாம் அக்குவேறு ஆணி வேறா முட்டை லாரி கவுந்தாப்புல கெடக்காம்.

அதிராம்பட்டினம் ஜக்கிரியா தியேட்டர்ல, என்னாயா ரீல் பிரச்சனை யார் காதுல பூ சுத்துற, இந்த படம் ஒரே காட்சி திரும்ப திரும்ப
வர மாதிரி என்னைக்காவது பிட்டு (A)படத்த, திரும்ப திரும்ப போட்டு இருக்கியாலானு கேட்டுகிட்டே ஆபரேட்டர தூக்கிகிட்டு போய்ட்டாங்களாம்.

பாப்பாநாடு சாமி தியேட்டர்ல படம் போட்ட 45-வது நிமிஷமே
அந்த ஊர் ஆடியன்ஸ் பயபக்தியா பூஜை போட்டுடாங்களாம்.

நம்ம பேராவூரணி சக்கரம் தியேட்டர்ல,ஆப்ரேட்டர
படம் ஓட்டுற சக்கரத்துலயே கட்டி வச்சி பதம் பாத்துருகாங்க.

இன்னைக்கு தமிழ்நாடு புல்லா முக்காவாசி தியேட்டர்ல ஒரே வன்முறை கலந்த பதட்டமாகத்தான் இருக்காம்.

பத்தாயிரம் சரம்
” சடாபுடா” வெடிச்சி சிதறுனா எப்டி இருக்குமோ அப்டிதான் இருக்காம். முக்கால்வாசி தியேட்டரு,

மேனேஜரே
இன்னும் 1- வருஷத்துக்கு தமிழ்நாட்ல எங்கேயும்
” சோடா பாட்லே கிடைக்காது .
எல்லா சோடா பாட்டிலும் தியேட்டருக்கு உள்ள சிதறி கெடக்காம்.அந்தளவுக்கு
வெறி கொண்டு ஆடியன்ஸ் எறிஞ்சி இருக்காங்க.

ஒரத்தநாட்ல
செல்வி தியேட்டரையே காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்காங்களாம்.

நீங்க உங்க தியேட்டர காப்பாற்றுவது இருக்கட்டும்,
முதல்ல உங்களை காப்பாத்தீங்கங்க என யோகிபாபு தகவலை சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்தபடி படம் அமையாததால், கோபம் கட்டுக்கடங்காமல் ஒவ்வொரு குரூப்பும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் தியேட்டரை அடித்து நொறுக்குகிறார்கள்.

ஒரு குரூப் T.V.S 50 வாகனத்தில் பெட்ரோல் ஒயர்களை பிடிங்கிவிட்டு பெட்ரோல் பிடித்து தியேட்டர் மீது தீபந்ததுடன் பெட்ரோலையும் சேர்த்து எரிகிறார்கள். காட்டூ தீ போல்
மளமளவென்று கொளுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது.

பெண் ரசிகர்கள் அடபடுபாவியலா , உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாதுபா.
இந்த நேரம் பார்த்து நம்ம ஊருல fire-station இல்லையே என புலம்புகிறார்கள்.

இளவட்டங்கள் பட போஸ்டரை கிழித்து கொளுத்தி விட்டபடி , யாருயா ஊர சுத்தி போஸ்டர் ஒட்டுன ஆளு என வலிமையாக கையில் கொளுந்து விட்டெரியும் தீபந்தத்துடன் கத்தவே, மீசை மாமாவும் போஸ்டர காமிச்சி என்னை ஏமாத்தீட்டிங்களடா என இவரும் சேர்ந்து தேட

போஸ்டர் ஒட்டியவர் 6-ம் நம்பர் லக்ஷ்மி
டவுன் பஸ் அந்த பக்கம் செல்லவே அதில் ஏறி பெரியகோட்டைக்கு சென்று விடுகிறார்.

தீடீரென்று சோடா பாட்டிலை வீசிய ரசிகருக்கு முகம் வியர்த்து உடம்பு ஒரு உலுக்கு உலுக்குகிறது. தூக்கத்திலிருந்து முழித்தவர்
மிரண்டு போய் தியேட்டரை நாலாபுறமும் காண்கிறார்.

ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு loop- time முன், பின் காட்சிகளை முடிச்சுபோட்டு புரியும் வண்ணமாக பேசிகொண்டு,
நம்ம ஐயப்பா தியேட்டர்ல வித்தியாசனமான சூப்பர் படம்
என்று கதையுடன் ஒன்றிணைந்து, அவர்களுடைய சந்தோஷமான பாணியிலயே படம் பார்த்து கொண்டிருந்தனர்.

!!வந்தான் சுட்டான் செத்தான்!!
ரீப்பீட்டு காட்சிகள் ஓடிக்கொண்டு ரசிகர்கள் விரும்பி பார்த்து கொண்டிருக்க, பதிலுக்கு ரசிகர்கள்
!! பீடிய எடு பத்தவையி புகையவிடு !! ரீப்பீட்டு என சந்தோஷமாக விமர்சித்தவாறு காண்கிறார்கள்.

அருகில் உள்ளவரிடம் இப்ப நம்ம எல்லாம் ஒண்ணு சேர்ந்து தியேட்டர்ல கலவரம் பண்ணுணம்ல என கேட்கவே,
லூசாயா நீ என அவர் கேட்டதும் கொஞ்சம் தடுமாறுகிறார்.
ஆபரேட்டர் ரூமை காண்கிறார்
வையாபுரி பண்டிகை முகத்துடன் படத்தின் பிலிம்ரோல்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.

குழப்பத்துடன் மீண்டும் ஒரு சோடா வாங்கி கொண்டு, சோடாவினால் முகத்தை கழுவி கொண்டு, தியேட்டரின் அழகை 4- புறமும் சுற்றி பார்க்கிறார் . பட போஸ்டர்களும் கொடி தோரணங்களும், மினுமினுத்து அசைந்தாடி கொண்டிருந்தன.

வெளியில் அடுத்த காட்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்து குமிழ்ந்து கொண்டு, ஆரவார கரகோஷத்துடன் காத்திருப்பதை,கவிதா ஜீவல்லரி விளம்பரம் பதிந்த வெளியேறும் பெரிய கதவின் துளையின் வழியே வெளியில் பார்க்கிறார்.

இரண்டு புறாக்கள் ஜோடியாக பறந்து வந்து தியேட்டரின் மேற்கூரையில் அமர்ந்து உறங்குவதற்கு இடம் தேடுவதை பார்த்ததும் ஆனந்தம் கொள்கிறார்.

தியேட்டருக்கு எந்த வித சேதாரம் இல்லை என்று மனம் நெகிழ்ந்தவாறே அரங்கினுள் மீண்டும் படம் பார்க்க செல்கிறார் கையில் ஒரு புதிய சோடா பாட்டிலுடன்.

ஆம்- இந்த சோடாகுடி ரசிகர் தனக்கு
Time-loop இருப்பதை உணர்ந்து கொள்கிறார்.

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR