(இந்தப் பதிவு கொஞ்சம் நகைச்சுவைக்காக மட்டுமே )
என்ன இது தேர்தல் முடிந்தவுடன் ஓட்டு கேட்கிறானே என்று நினைக்க வேண்டாம் .
நான் கொஞ்சம் வித்தியாசமானவன் .
மதுக்கூர் 17ஆம் (ஏரிக்கரை) வார்டில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறேன் .
எனது பெயர் பாணபத்திர ஓணாண்டி .
எனது சின்னம் ..காற்று .
தேர்தல் நாள் ..19.02.2027.
எனது வாக்குறுதிகள் …..
புது குளத்தையும் காவிரி ஆற்றையும் ஒன்றாக இணைப்பேன் .
மதுக்கூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவேன் .
மதுக்கூரில் ஓடுகின்ற கல்யாண ஓடை கால்வாய் ஆற்றை தாமிரபரணி ஆற்றோடு இணைத்து வருடம் 365 நாட்களும் தண்ணீர் ஓட வைப்பேன் .
மதுக்கூரில் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் மத்திய மாநில அரசுகளில் வேலை கொடுப்பேன்.
மதுக்கூரில் நடக்கும் திருமணங்களில் இனி பிரியாணியே போடக்கூடாது என்ற சட்டத்தை அமல் படுத்துவேன் .
துபாயில் வசிக்கும் மதுக்கூர் மக்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மதுக்கூர் வந்து செல்ல இலவச விமான பாஸ் கொடுப்பேன் .
40 ஆண்டுகளுக்கு மேல் துபையில் உழைத்து விட்டு ஓய்வு பெறுவதற்காக ஊருக்கு வந்து வீட்டில் மொத்துப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண்களுக்காக பாதுகாப்பு நல வாரியம் அமைப்பேன் .
ரேஷன் கடைகளில் கோழி, கறி ,மீன் ஆகியவையும் இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்வேன் .
திருமணங்களில் கொடுக்கப்படும் பிரியாணி அல்லது நெய் சோற்றில் கறி இல்லாமல் இருந்தால் விருந்து கொடுப்பவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனை என்று சட்டம் கொண்டு வருவேன் .
அதே சமயம் பெரிய துண்டு கறியுடன் சுவையான பிரியாணி அல்லது நெய் சோற்றை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து சாப்பாடு சரி இல்லை என்று குறை கூறுபவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் , ஆறு வருடம் திருமண விருந்து சாப்பிட கூடாது என்ற தடையும் விதிப்பேன்.
பலியா குளத்தை சுத்தம் செய்து படகு விடுவேன் .
மதுக்கூரில் இருந்து சென்னைக்கு புல்லட் ரெயில் விட திட்டம் கொண்டு வருவேன் .
13 நிமிடங்களில் மதுக்கூரில் இருந்து சென்னைக்கு சென்று விடலாம் .
மதுக்கூரில் உள்ள நம் சமுதாய அமைப்புகளுக்கு உடனடியாக நிர்வாகிகள் தேர்தலை நடத்துவேன் .
காற்று எப்படி சின்னமாக முடியும் அதை எப்படி அடையாளம் காண்பது என்று விதண்டாவாதமான கேள்விகளை கேட்க வேண்டாம். மேலே உள்ள படத்தில் பலூன் இருக்கிறது .அந்த பலூனுக்குள் காற்று இருக்கிறது .அதுதான் என் சின்னம் . தங்களின் பொன்னான ஓட்டுகளை பலூன் சின்னத்தின் மீது குத்தும்போது மெதுவாக குத்தவும் . பலூன் உடைந்து காற்று வெளியாகி விட்டால் அது செல்லாது ஓட்டாக போய்விடும் .
நன்றி ..
பாணபத்திர ஓணாண்டி .
ஆக்கம் ..K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் …27.02.22