கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

டென்ஷன் ….

இந்த தலைப்புக்கு தமிழில் அர்த்தம் தேடி ,தேடி  டென்ஷன் ஆகிப் போனேன் …..

“பதற்றம்” என்ற விடை கிடைத்தது ..
பதற்றம் என்று தலைப்பு வைத்தால்
புரிந்துகொள்ள பதட்டப்படுவார்களே 
என்று மீண்டும் டென்ஷன் ….

சரி எல்லோரும் உச்சரிக்கும்
டென்சன் என்ற வார்த்தையை
தலைப்பாக ஆக்கினேன்
எனக்கும் டென்ஷன் குறைந்தது.

அறிவியல் முன்னேற்றத்தின் …
அவசர உலகத்தில் ..
அன்றாடம் பயணம் செய்து,
டென்ஷனில் நீச்சலடிக்கும் மனிதர்கள் நாம் .

எங்கும் டென்ஷன்.. எதிலும் டென்ஷன் …
டென்ஷன் இல்லா மனிதர்கள் …
டென்ஷன் இல்லாத நாட்கள் .. இந்த உலகில்
இருப்பதாக தெரியவில்லை …

காலையில் எழுந்தவுடன் ….
பால்காரர் வரவில்லை என்றால் டென்ஷன்..
பாத்ரூமில் தண்ணீர் இல்லையென்றால் டென்ஷன் ..

குப்பைகளை எடுக்க குப்பை வண்டி வரவில்லை என்றால்  டென்ஷன்….
வீட்டு வேலை செய்யும் பெண் சுகம் இன்மையால் 
வேலைக்கு வராவிட்டால் டென்ஷன் . 

வாங்கி வந்த காய்கறிகள் நல்லதாக இல்லை எனில் மனைவியிடம் திட்டு வாங்க
வேண்டுமே என்கிற டென்ஷன்.. 

நேற்று அரைத்து வைத்த தோசை மாவு
புளிக்கவில்லை என்றால் டென்ஷன்….
ரேஷன் கடை கோதுமை மாவில் சுடும்
பூரி எண்ணெய் அதிகமாக
குடிக்கிறதே என்று டென்ஷன் ….

கண் மூடி கண் திறப்பதற்குள்
அடுத்த மாதம் வந்து விடுகிறதே என்று வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு  டென்ஷன்..

உடல் சுகம் இல்லை என்று  மருத்துவமனைக்குச் சென்றால்
சில லட்சங்கள் தீட்டி விடுவார்களே
என்கிற டென்ஷன் …

மருத்துவமனைக்குள் சென்றுவிட்டால்
மரண பயத்தை கண்முன் காட்டுவார்களே என்கிற டென்ஷன் …

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பல ஆண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லையே என்கிற டென்ஷன் …

பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமே என்று பெண் குழந்தை பெற்றவர்களுக்கு மெகா டென்ஷன் ….

பெட்ரோல் விலை ஏறிவிட்டதே என்று
வாகனம் வைத்திருப்போருக்கு டென்ஷன்..

வாகனத்தை விற்பனை செய்வோம் என்று முடிவெடுத்தால் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்களே என்று டென்ஷன்….

ரேஷன் கடைக்காரர் உங்களுக்கு சர்க்கரை இல்லை என்று சொன்னால் டென்ஷன்..

மருத்துவர் உங்களுக்கு சக்கரை நிறைய இருக்கிறது என்று சொன்னால் டென்ஷன் .

இன்னும் நான் எழுதிக்கொண்டே போனால்  டென்ஷனின் உச்சத்திற்கே நாம்
சென்று விடுவோம் என்பதால்
இத்துடன் நிறைவு செய்கிறேன்…

K.N.M. முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 25.12.21.

கருத்து தெரிவியுங்கள்