கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

முதுமை

முதுமை …..

அயல்நாடுகளில் அயராது உழைத்து,
இளமை முறுக்கோடு திரிந்த மனிதனே ….

முதுமை என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு ?
வெளிநாட்டு வேலைக்கு விடைகொடுத்து விட்டு ஊருக்கு வந்து பார் …

முதுமையின் படிக்கட்டுகள்
உன்னை முத்தமிட தொடங்கும் ….
ஆங்காங்கே உன் உடம்பு பிரதேசத்தில்
வலிகள் தோன்றும்   …
சுகர் உன்னை சொந்தம் கொண்டாடி மகிழும்…

மருத்துவமனைகள் உனக்கு மாமியார் வீடு ஆகிப் போகும்  …
நீ விரும்பிய உணவுகள் உனக்கு தூரமாகும் ..
இதை எண்ணி, எண்ணி உன் கண்கள் ஈரமாகும் …

பீவியும் (மனைவி), பிபியும் (BP பிளட் பிரஷர்) அடிக்கடி
எகிறிக்கொண்டே கொண்டே இருக்கும்.
வியாதிகள் அனைத்தும் விலாசம்
தேடி உனை வந்தடையும்..

குளிர் நிலவு கூட சுடும் அனலாய் தகிக்கும் …
கொஞ்சும் மனைவி கொடும் மொழியால் சுட்டெரிப்பாள்……
இருட்டு இரவுகளில் உறக்கம் தொலைப்பாய் .

தலை முடிகள் தானாக விடைபெற தொடங்கும்.
தலை “மை” அடிப்பதையும்  நீ
மறந்து போவாய். வீட்டின்
தலைமை பொறுப்பையும் 
நீ  இழந்து போவாய்…

ஏசியிலேயே வாழ்ந்த உனக்கு AC இங்கே தடை செய்யப்படும் .
காரணம் கேட்டால் கரண்ட் பில் கூடிவிடும் என்று கச்சிதமான பதில் வரும்….

உன் வீட்டு  கோழி குஞ்சுகள் கூட உன்னைப் கொத்த துரத்தும்….
ஆடு மாடுகளுக்கு கூட நீ அன்னியனாகிப்  போவாய் ..

சும்மாதானே இருக்கிறீர்கள் என்ற வார்த்தைகளை  சும்மா சும்மா 
உன் செவிகள் ஏற்க தொடங்கும்…
ரேஷன் கடைக்கும் ,EB அலுவலகத்திற்கும்
உன் நடை பயணம் தொடங்கும் ..

ஒரு பொருள் வாங்க தெரிகிறதா உங்களுக்கு ? 
என்கிற வசை உனக்கு இசையாக ஒலித்துக்கொண்டே இருக்கும் …
காய்கறி கடைக்காரர் கூட உன்னை  காமெடியாக பார்ப்பார் …..

தன் இஷ்டத்திற்கு செலவு செய்வது என்பது உனக்கு பகல் கனவாகிப் போகும் …
உன் பிள்ளைகள் கூட செலவிற்கு தன்  அம்மாவிடம்தான் பணம் பெற்றுச் செல்லும் ….

அப்படியென்றால் அயல்நாடு சென்றவர்கள் திரும்பியயே வரக்கூடாதா 
என்ற கேள்வி நீ என்னை கேட்க எண்ணுகிறாய் ……

வா சகோதரா . வா.. மகிழ்வுடன் திரும்பி வா ..
உன்னை வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ..
வரும்போது பண பலத்தோடு வா  … ஊரில் நிரந்தர வருமானத்திற்கு
வழி வகுத்துவிட்டு வா……

உன் மனைவி மதிக்கத் தொடங்குவாள் …
குடும்பத் தலைவன் என்ற
பட்டம் நிலைக்கும்,
இளமை நிரந்தரமாகும் ..

வியாதிகளும் வெகுண்டு ஓடும்.. 
சொந்தங்களும் உனை சொந்தம் கொண்டாடும் ….
வசந்தங்கள் உன்னை வாரி அணைத்துக் கொள்ளும் . ..

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .
16.03.2021.


குறிப்பு ..
இந்தக் கவிதை என் சொந்த சரக்கு ..
சொந்த அனுபவமா ? என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள் ..ஊர் நடப்பு, நாட்டு நடப்பு நாலும் நன்கு அறிந்தவன்தான் கவிஞன் .

கருத்து தெரிவியுங்கள்