Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

விடைபெறும் ரமலான் …(2020)

விடைபெறும் ரமலான் ………(2020)
————–
கடந்த ஒரு மாத காலமாக எங்களுடன் உறவாடிய ரமலானே … சென்றுவா ….
உன் வரவால் மனம் மகிழ்ந்தோம் …..
உன் பிரிவால் இதயம் நெகிழ்ந்தோம் ….
உலக மக்களுக்கு இந்த ரமலான் ..
ஒரு வித்தியாசமான அனுபவம்…
மனிதர்களை பண்படுத்த …
இறைவன் வகுத்த செயல் திட்டம்.
ஷைத்தானுக்கு விலங்கிட்ட இறைவன்…
கொடூர சைத்தானாம் கொரோனாவை…
ரமலான் வரும் முன்னே இவ்வுலகில் ..
விலங்கு அவிழ்த்து உலவவிட்டான் ….
அல்லாஹ்வின் செயல் அனைத்தும் ..
நன்மைக்கே என ஈமான் கொண்ட
மக்கள் நாம் …
இறைவா உன் ஆணை என்று
ஏற்றுக்கொண்டோம் இந்நோயை ..
உச்சாணிக்கொம்பில் …..
கொரோனோவின் கொடி பறந்ததனால்..
ஏராள மாற்றங்கள் இந்த ரமலானில் …
ஏற்க இயலா சட்டங்கள் ஆள்பவரால் …
மூடப்பட்ட நிலையில் பள்ளிவாசல்கள்.
திறக்க இயலா கட்டுப்பாடு வளையத்திற்குள்
பள்ளிக்கூடங்களும், மதரஷாக்களும் ..
தொடர்ந்து இழந்து வரும் ஜமாத் தொழுகைகள் .
இரண்டு பெருநாள் தொழுகைகளை விட … சிறப்பு மிக்க ஜும்மா தொழுகை…
லுஹர் தொழுகையாக மாற்றம் கண்டது.
எங்கள் மனமோ ஏமாற்றம் கொண்டது.
ஷக்காத் வாங்க வரும் ஏழை மக்கள் …
எங்கே சென்றார்கள் தெரியவில்லை ..
ஏன் இவர்கள் வரவில்லை என்று…
எண்ணி,எண்ணி ஏக்கம் கொண்டோம் ..
கஞ்சி மணம் வீசுகின்ற பள்ளிகளில் ,
கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில்
கஞ்சி பாத்திரங்கள் .
தராவிஹ் தொழுகை இல்லை.
திருக்குர்ஆன் ஓதும் சப்தமும் இல்லை .
இந்நோயின் கோரத் தாண்டவத்திலும் ..
இயல்பு நிலைகள் பல கடந்து …..
இறைவனின் கருணையதால்…
இனிய செயல்கள் பல ஆக்கம் பெற்றன ..
வீடுகளை பள்ளிகளாய் மாற்றிக் கொண்டோம்.
பிள்ளைகள் எல்லாம் இமாம்கள் ஆகினர்….
திரு குர்ஆன் ஓதும் இனிய சப்தம் ..
வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது ..
பள்ளி செல்லும் பிள்ளைகள் ..வீட்டில்
பயான் சொல்லத் தொடங்கினர்…
அமல்கள் அனைத்தும் அழகான முறையில்
அனுசரிக்கப்பட்டன ….
இறைவா …..
நீ இல்லாமல்,
உன் தொடர்பு இல்லாமல் ,
உன் பள்ளி இல்லாமல்,
எங்களின் நெஞ்சம் நிறைவதில்லை,
உள்ளம் ஜொலிப்பதில்லை …இது
நாங்கள் உணர்ந்து கொண்ட உண்மை ..
ஜும்மா இல்லை என்றால்..
சும்மா இருக்க முடியுமா எம்மால் …..
திருக்குர்ஆன் இல்லாமல்…
நபிகள் நாயகத்தை நினையாமல் …
வாழ்ந்து விடத்தான் முடியுமா எம்மால் ?
துயர் நீக்கும் தூயவனே ….
இந்தக் கொடும் நோய் ..
நீ எமக்குக் கொடுத்த தண்டனையா ?
அல்லது படிப்பினையா ?.
தண்டனை என்றால்
ஏற்றுக் கொள்கிறோம் இறைவா .
மன்றாடுகின்றோம் …பாவிகள் எம்மை,
மன்னித்து விடு மாபரணே …
படிப்பினை என்றால்
பாடம் கற்றுக் கொள்கிறோம் வல்லோனே ..
நல் வழியை ,உன் வழியை ,
நபி வழியை எமக்கு காட்டு …
அரசுக்கு எம் மீது அக்கறை இல்லை …
ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லை …
அரசுக்கு எல்லாம் அரசாக
அரசாட்சி செய்யும் பேரரசனே ….
உன்னை விட்டால் எமக்கு
வேறு கதி இல்லை..யா அல்லாஹ் . ..
மருத்துவர்களுக்கு எல்லாம்
மருத்துவரான மன்னவனே ….
மருந்து இதற்கு உன்னிடத்தில்
மட்டுமே இறையவனே ..
அம் மருந்தும் நீயே,
குணம் அளிப்பவனும் நீயே ,
நோயை அழிப்பவனும் நீயே
கனிவும் நீயே ,கருணையும் நீயே …
எங்களின் பாவங்களை மன்னித்து
எங்களை காப்பாற்று யா ரப்பே ….
இயல்பு நிலையை எங்களுக்கு
திரும்பத் தா ரஹ்மானே ….ஆமீன் ..
அனைவருக்கும் என் இதயம் நிறைந்த
“ஈதுல் பித்ர்”
நல்

வாழ்த்துக்கள்
 

….

K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR