Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மதுக்கூரில் ரமலான்.

மதுக்கூரில் ரமலான்.
 
****************************
 
தொடங்கியது ரமலான் மதுக்கூரில் ….
 
ரமலானை வரவேற்கும் நோக்கில் …
கோடை மழை கொஞ்சம் பெய்து …
மதுக்கூர் மண்ணையும் மக்களையும்  குளிர்வித்தது ….
 
பள்ளிகளில் எல்லாம் நோன்பு கஞ்சி 
மணம் வீசத் தொடங்கியது …
வாடா கடைகளும் ..வடை சமோசா கடைகளும் ..
ஆங்காங்கே புதிதாய் முளைத்தன ..
 
சித்திரை வெயில் உச்சியைப் பிளப்பதால் ஜூஸ் , சர்பத்துகளின் விற்பனை உச்சத்தை எட்டியது .
ஜிகர்தண்டா என்றால் முத்துக்கடைதான் 
என்கிற முத்திரை நிரந்தரமாகிப்போனது ..
 
40 ஆண்டுகளுக்கு முன் 
சக்கினியர் கடையில் அரையாகுளம் அப்பா போடும் வாட்டு  சமோசா ….
கோவரசா கடையில் மட்டுமே தயாராகும் இறால் வைத்த வாடா ……
 
அலி முகம்மது,ராசு முகம்மது இவர்களின் ஹோட்டல்களில்  தயாரிக்கப்படும் 
வடை பஜ்ஜி வகைகள் …. 
லாபேலா கரீம் அண்ணன் உணவகத்தில்  போடப்படும் அடித்த புரோட்டாவும்,எலும்பு சால்னாவும் ..
 
ரஹ்மானியா ரோஸ்மில்க், 
லெஸ்ஸி, நன்னாரி சர்பத் ஆகியவையும் இந்த நோன்பு நாட்களில் 
என் நினைவலைகளில் வந்து போயின ..
 
50 வருடங்களுக்கு முன்பு மதுக்கூரில் பிறந்தவர்கள் அனைவருமே கொடுத்துவைத்தவர்கள்தான்..
காரணம் அன்றைய நோன்பு நாட்களில்   
நமது ஊரில் பதார்த்தங்களின் சுவையையும், யதார்த்தமான வாழ்க்கையின்  இனிமையையும் அவர்கள் மட்டுமே அனுபவித்து அறிந்தவர்கள். 
 
தராவீஹ் தொழுகை எல்லா பள்ளிகளிலும் சங்கையோடு  ஆரம்பமானது  …….
சில பள்ளிகளில் மட்டும் எட்டு ரக்அத்துகள் ..
பல பள்ளிகளில் 20 ரக்அத்துகள் ….
 
இந்த நோன்பு நாட்கள் மிக வேகமாக 
நகர்ந்து போகும் ..
27ஆம் கிழமை வரும்..சஹர் உணவு 
மிகச் சரியான முறையில் நிகழ்ந்தேறும் ….
SSB சேமியா கஞ்சி நாக்கிலும்,மனதிலும்  இனிப்பைத் தரும்..
 
கடந்த ரமலானுக்கு இந்த ரமலானுக்கும்  இடைப்பட்ட காலகட்டத்தில் …
நீண்ட நெடிய காலங்கள் நாம் எதிர்பார்த்திருந்த 
இரண்டு இனிய காரியங்கள் …
ஏற்றமுடன் நிகழ்ந்தேறியது …
 
அதில் ஒன்று 
15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த புதிய அடக்கஸ்தலம் பல(ர்) 
தடங்கல்களையும் 
தாண்டி செயல்பாட்டுக்கு வந்தது.  அல்ஹம்துலில்லாஹ் ….
 
இரண்டாவது 
20 ஆண்டுகளாக நாம் எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருந்த புதிய 
ஜும்மா பள்ளி கட்டும் பணி இறைவன் அருளால் இனிதே தொடக்கம் …
மாஷா அல்லாஹ் ..???
 
புதுப்பள்ளி கட்டுவதற்கு மதுக்கூர் 
மண்ணின் மாந்தரெல்லாம்   நன்கொடைகளை  
கிள்ளி கொடுக்கவில்லை 
அள்ளி அள்ளிக் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ் ..  
 
குழப்பங்களை எல்லாம் ஓரங்கட்டி 
புதுப்பள்ளி கட்டும் பணியை  
பொலிவோடு தொடங்க அருள்புரிந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்…
 
இறைவா …தொடுங்கள் தொடர்வோம் 
என்று சொல்பவன் நீ ..
தொட்டு இருக்கிறோம் யா அல்லாஹ் …
தொடர்ந்து அதன் காரியங்களை 
நிறைவேற்றி அடுத்த ரமலானில் புதிய பள்ளியில் உன்னை வணங்குகின்ற பாக்கியத்தை எம் அனைவருக்கும் அருளிடுவாய் ரஹ்மானே ..
 
புதிய பள்ளியின் கட்டிடப் பணிக்காக 
தன்னை அர்ப்பணித்துக்கொண்ட 
ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும், 
நிதி கொடுத்த,கொடுக்கப் போகிற 
அத்தனை நமதூர் நன் மக்களுக்கும் 
உன் ரஹ்மத்தை அள்ளி வழங்கு யா ரஹ்மானே  ….
 
ஆமீன் …ஆமீன்… யாரப்பில் ஆலமீன் …
 
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் …18.04.2021

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR