Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

புரோட்டா …..

புரோட்டா …..

கொரோனா தொற்றின்  பயத்தை பறக்கவிட  கொஞ்சம் ரிலாக்ஸ் இந்தக் கவிதை  !!!

மைதா எனும் தந்தைக்கு பிறந்த இந்திய திருநாட்டின் செல்ல குழந்தை இது. 
புரோட்டா எனும் பெயர் கொண்ட இந்த சுட்டிக்குழந்தை இப்பூவுலகில் பிறந்ததனால்
பூலோகத்தின் பூகோளமே பூபாளம் இசைத்துக் கொண்டு இருக்கிறது .

புரோட்டாவை பார்த்தவுடன் ஒருவருக்கு
நாடி நரம்புகள் கிளர்ச்சியும்,எழுச்சியும்
பெற்று ஹார்மோன்கள் வேகம்
எடுக்கவில்லை  என்றால் அவர்
உடம்பில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்..

குரும்பு ஆட்டுக்கறி குழம்பில் , 
ஊற வைத்த பரோட்டாக்களை 
ஒருவர் ருசி பார்க்கவில்லை என்றால் இந்த பிரபஞ்சத்தில் பிறந்த பயனை அவர்  இழந்துவிட்டார் என்று பொருள்….

சுட்டு எடுத்த புரோட்டாவை…
இரண்டு கைகளால் அடிக்கும் போது  வெளிக்கிளம்பும் ஆவியும் அதன் மணமும் ஆயிரம் அணுகுண்டுகளுக்கு  சமம்….

புரோட்டாவும்,போத்து கறியும்(மாட்டுக்கறி)
கட்டன் சுலைமானியும் உண்ணாமல்
இருந்து விட்டால் சேட்டனின் உயிரே
போய்விடும் கேரளத்தில் ….

சிலோன் பரோட்டா ,செட்டிநாடு புரோட்டா ,
தென்காசி பார்டர் கடை ரஹ்மத் புரோட்டா ,
கடையநல்லூர் புரோட்டா,பன் புரோட்டா,
காயின் புரோட்டா ,முடிச்சு புரோட்டா,

மதுக்கூர் லாபேலா ஹோட்டல் புரோட்டா,
கொத்து புரோட்டா, முட்டை லாப்பா
இவையாவும்  ஒரே ஒரு மைதாமாவில்
இருந்து புரோட்டா எடுத்த பலப்பல அவதாரங்கள்….

கொரோனா தொற்றின் தொடக்கநிலை
சுவையையும் வாசனையையும் உணர முடியாதாம்…. யார் சொன்னது .?

சூடான புரோட்டாவையும்,ஊதாகால்
நண்டு பிரட்டலையும் ஒரு பிளேட்
கொடுத்து பாருங்கள் ….

நாசியில் வாசனை வசப்படும்,  
நாவில் சுவை பள்ளிகொள்ளும் …இதுதான் புரோட்டாவின் மருத்துவ குணம் .

அசைவ குருமா ,சைவ குருமா , பாயா,சூப்,
மீன், நண்டு, இறால்,முட்டை ஆம்லெட்
இவை அத்தனைக்கும் பொருத்தமாக ஜோடி சேரக்கூடிய ஒரே ஒரு பொருள் இந்த  புரோட்டாதான்…. 

புரோட்டாவின் குணநலன்களை 
முகலாயர்கள் அறிந்து புசித்து
இன்புற்ற காரணத்தால் 800 ஆண்டுகள்
இந்தியாவை சிறப்பாக ஆண்டனர்.

புரோட்டாவை ஆங்கிலேயர்கள் அறியாத காரணத்தால் 200 ஆண்டுகளில்
இந்தியாவை விட்டே ஓட்டம் பிடித்தனர்.
இந்த வரலாற்று காரணத்தை ஏற்க மறுத்தால் நீங்கள் ஆன்ட்டி இந்தியன் (anti-indian).

இந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம்  மக்களோடு பின்னிப்பிணைந்து கிடக்கும்
புரோட்டாவை அகில உலக தேசிய
உணவாக அறிவிக்கக்கோரி ஐ .நா.சபை தலைவர் இடம் மனு கொடுத்தோம் . 

தைவான் காளான் தின்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர்
வேண்டுகோளை ஏற்கிறேன் ஆனால்
80 விழுக்காடு GST என்றார்.
துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடி வந்துவிட்டோம் பாவம்
புரோட்டா அறியா பாலகன்..
மிரட்டவா முடியும் அவரை ?

ஆயிரம்தான் புரோட்டா உடம்புக்கு கேடு
என்று மருத்துவம் அறிவித்தாலும் ..
புரோட்டா வியாதிகளை குணப்படுத்தும்
சக்தி வாய்ந்த சஞ்சீவ நிவாரணியாகும்.

புரோட்டா கல்லில் கிடைப்பதை
பார்க்கும்போது  நம் உடம்பில் தளர்ந்து
போய் கிடக்கும் குடல் பிரதேசங்கள்
வீரியம் பெற்று கிளர்ந்து எழுவதால் 
வயிற்று வியாதிகள் வந்த வழியே திரும்பி ஓட்டமெடுக்கும் ….

கல்லில் இருந்த புரோட்டாவை எடுத்து அடித்து
தட்டையில் போடும்போது வருகின்ற
மணத்தை சுவாசிக்கும்போது நுரையீரல் நோய்கள் நம்மைவிட்டு விலகி
சுவாசங்கள் சீராகிறது .

புரோட்டாவுடன்  சால்னாவை கலந்த  கலவையை
நம் நாவில் எடுத்து வைத்து தொண்டைக்குழிக்குள் செலுத்தும் போது  இரத்த ஓட்டம் சீராகி,வலுவிழந்த நம் உடல்  எலும்புகள் வலுப் பெற்று முழங்கால்,கை வலிகள் அகன்றுவிடும் என்பதை அனுபவித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் .

புரோட்டா நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
கடவுள் அனுப்பி வைத்த கற்பூர பெட்டகம் .
காலத்தால் அழிக்க முடியாத ,
அழிந்து போகாத பொற்கால அதிசயம் .

வாருங்கள் அனைவரும்
புரோட்டாவை சுவையோடு ருசிப்போம் ….
புரோட்டா இல்லாத உலகத்தை வேரோடு சாய்ப்போம்.

இப்படிக்கு …..

அகில உலக புரோட்டா ரசிகர் மன்ற தலைவர் ..

K.N.M.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் … 01.07.2021

குறிப்பு :::
இந்த கற்பனைக் கவிதை சிரிப்பதற்காக மட்டுமே .சிந்திப்பதற்காக அல்ல .ஆகவே சில கவிதை வரிகளின் கருத்துக்கள் பற்றி  உண்மை தன்மை குறித்து  யாரும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நன்றி .

 

1 கருத்து

Anwar July 10, 2021 at 9:53 am

புரோட்டா கவிதை அருமை
நமதூரில் நிச்சயத்துக்கு சுடும் புரோட்டாவும்
கறியானமும் அட..டா.. அதன் சுவையோ தனி தான்.
அது போல நானா கடை புரோட்டா
அன்றைய கால விளம்பரம்
சூடானா புரோட்டா
அதற்கேற்ற சால்னா
நாடுவீர் நானா கடை…

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR