பள்ளிவாசல் இமாம்கள்
எந்நேரமும் இறைவன் நினைப்பிலேயே வாழும் இமயங்கள் இந்த இமாம்கள் .
சாதாரண மனிதர்களை விட மென்மையானவர்கள்,
மேன்மையானவர்கள் ..
ஆண்டிற்கு ஒருமுறை ரமலானில் மட்டுமே குர்ஆனை தொட்டுப் பார்க்கும் சில மக்களின் மத்தியில்..
இந்த இமாம்களின் நாவுகள் குர்ஆனின் வசனங்களை ஒவ்வொரு நாளும் உச்சரிக்காமல் உறக்கம் கொள்வதில்லை.
இமாம்களின் உருவ தோற்றமதில் சுன்னத்துக்களின் அடையாளங்கள்.
இவர்கள் வாழும் எளிமை வாழ்க்கையதில் நிறைந்திருக்கும் இறையச்சங்கள் .
இமாம்கள்…கம்பீரமாய் தலைப்பாகை அணிவார்கள். ஆனால்
தலைக்கணம் இல்லா வாழ்வை
இலக்கணமாய் வாழ்வார்கள்.
இறைமறையை ஓத தெரியாத மக்கள் பலர்.
ஆனால் திருமறையை தங்கள் இதயப்
பொன் ஏடுகளில் வைரமணிகளாய் பதியம் போட்டுக்கொண்டு வாழ்பவர்கள் இமாம்கள் .
இமாம்கள்…சிறார்களுக்கு ஓதி கொடுத்து ஒப்பற்ற தீன் வழியை தப்பாமல் பின்பற்ற கற்றுக் கொடுக்கும்போது ஆசிரியர் ஆகிறார்கள் …
இமாம்கள்…தொழுகைகளில்
இமாமத் செய்யும் போது பின்னின்று
தொழுபவர்கள் யாவர்க்கும் தலைவராகிறார்கள்.
இமாம்கள்…பயான் கூறும்போது மார்க்க விஷயங்களை விளக்கமாக
எடுத்துரைப்பதில் பேராசிரியர் ஆகிறார்கள்.
இமாம்கள்…மார்க்கத்தில் ஏற்படும் சந்தேகங்களை விளக்கிச் விவரித்து
விளங்க வைக்கும் போது
விரிவுரையாளர்கள் ஆகிறார்கள் .
மார்க்க ஞானம் இல்லா
மனிதரை அல்லாஹ்வை அறிந்த
புனிதராக மாற்றுதல்
இமாம்களின் தலையாய கடமை
என அறிந்து செயலாற்றுபவர்கள்.
ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் இமாம்கள் தேவை …
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுதற்கும் இமாம்கள் தேவை ..
நிக்காஹ் மஜ்லிஸிற்கும் இமாம்கள் தேவை .
ஜனாஸா அடக்கத்திற்கும் இமாம்கள் தேவை .
இப்படி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருப்பவர்கள் இமாம்கள் .
தம் வாழ் நாட்களை எல்லாம் அர்ப்பணித்து திருகுர்ஆனில் ஊடுருவி ஆய்வுகள் பல செய்து அல்லாஹ்வின் சொற்களை
அழகிய நெறிமுறையாக வகுத்து மதஹபுகளை ஆய்வு அறிக்கைகளாக
தந்த தீர்க்கதரிசிகள் நான்கு பேர்களும்
இமாம் பெருந்தகைகள்தானே..
இமாம்களை நாம் கண்ணியப்படுத்துவோம்
இறைவன் நம்மை கண்ணியப்படுத்துவான் .
இமாம்களை நாம் மதிப்போடு நடத்துவோம்.
இறைவன் நம்மை மதிப்போடு வாழவைப்பான்
இமாம்களை மேன்மைப் படுத்துவோம் .
இறைவன் நம்மை மேன்மையானவர்கள் ஆக்குவான் .
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் .
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .
05.07.21