Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மதுக்கூரில் புயல் …….

மதுக்கூரில் புயல் ……

நமது மதுக்கூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நமது ஊர் ஏரியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி  தீவிர புயலாக மாறி மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு “மதுகைப் புயல்” என்று பெயர் சூட்டப்பட்டது. 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்க முயற்சி செய்தபோது அருகே  இருக்கின்ற புதிய அடக்கஸ்தலம் அதன் கண்ணில் பட்டது..

16 ஆண்டுகள் பராமரிப்பற்று கிடந்த இடமா இது ? என்று ஆச்சரியத்தில் தன் விழிகளை வினாக்குறி ஆக்கியது . சிறப்பான முறையில் செப்பனிடப்பட்டு அழகிய தோற்றத்தோடு இந்த கபர்ஸ்தான் செயல்பாட்டுக்கு வந்து விட்டது கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தது . பிறகு யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல் தன் வேகத்தை குறைத்து மெதுவாக தென்கிழக்குத் திசையில் ஊர்ந்து வந்து புதுக்குளத்தில் மையம் கொண்டது…

நான்கு பக்கமும் படித்துறைகள் அமைக்கப்பட்டு ஏராளமான மக்கள் பயன்படுத்திய குளமா இது ?… என்று ஏக்கப் பெருமூச்சு விட்டது .இரண்டு நாட்கள் மையம் கொண்டிருந்த புயல் இந்த குளத்தில் தண்ணீரும் , குளத்தில் மனிதர்கள் இறங்குவதற்கு எந்த முகாந்திரமும்  இல்லாத காரணத்தால் கவலையோடு  மேற்கு நோக்கி நகர்ந்து பளியாகுளத்தில் மையம்  கொண்டது .

குடலைப் பிடுங்கும் மீன் நாற்றமும், குளத்தில்  நிறைந்திருந்த பாசி படர்ந்த அசுத்த நீரின் வாடையும் பொறுக்காமல் பலமுறை வாந்தி எடுத்ததோடு  மீன் கழிவுகள் குளத்தில் கலப்பதை கண்டு கலக்கம் அடைந்த புயல் வடமேற்கு திசையில் இடம் பெயர்ந்து மணியாங்குளத்தில்  அடைக்கலமானது .

நீர் நிறைந்த மணியாங்குளத்தில் தாமரை செடிகள் வளர்ந்து , சுற்றிலும் கரைகளெல்லாம் காடுகளாக மாறி குளம் புதரில் வீசி எறியப்பட்ட அனாதை குழந்தையை போல ஆதரவற்று கிடப்பது கண்டு உள்ளம் குமுறியது ..

பிறகு கிழக்கு நோக்கி நகர்ந்து பாப்பாத்தி குளத்தை வந்தடைந்தது ..பாப்பாத்தி குளத்தை கண்டவுடன் புயலின் கண்களில் ஆனந்த கண்ணீர் குற்றால அருவியைப் போல்  பெருக்கெடுத்தது .. இந்த ஒரு குளமாவது பராமரிக்கப்படுகிறதே. .. .. மக்கள் பயன்படுத்துகிறார்கதே என்று எண்ணி சந்தோஷத்தோடு தெற்கு நோக்கி நகர்ந்து அம்மா குளத்தில் முகாமிட்டது ..

நீர் இந்த குளத்தை நோக்கி வரும் வாய்ப்பை  மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஓரளவு நீர் நிரப்பப்பட்டு இருப்பதைக் கண்டும், ஆனால் ஒரே ஒரு படித்துறை மட்டும் இருப்பது பயனாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சிரமத்தோடு அதை மக்கள் பயன்படுத்தி கொண்டிருப்பதைக் கண்டும் சற்று மன நிம்மதியோடு இந்தக் குளத்தில் நிலைகொள்ளாமல் தெற்கு நோக்கி நகர்ந்து சங்கிலி குளத்தை வந்தடைந்தது ..

அங்கே குளம் இல்லை குப்பைமேடு தான் காட்சியளித்ததை கொண்டு இதயம் நொறுங்கியது ..அதிர்ச்சியில் உறைந்து போனது …அருகிலேயே காவல் நிலையம் இருந்தும் இந்த சங்கிலி குளம் எங்கே தொலைந்து போனது என்று உச்சி மண்டையை பிய்த்துக் கொண்டது ….

மனமுடைந்து போன இந்த புயல் இனி எந்த குளத்திற்கும் நான் இடம் பெயரப் போவதில்லை என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டது ..

“மதுகைப்புயல்” எழுதிய அந்த உருக்கமான கடிதத்தை உன்னிப்பாக படியுங்கள் …

மதுக்கூர் மக்களே …. ஏரியில்  உருவாகி மதுக்கூரில் அத்தனை நீர்களை நிலைகளையும் சுற்றி வந்து  சங்கிலி குளம் இருந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்ட “மதுகைப் புயல்” எழுதிய நிருபம் …

மதுக்கூரில் இருக்கின்ற குளங்கள் எல்லாம் உங்கள் குழந்தைகளைப் போல …ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த மிகப் பிரபலமான குளங்கள் எல்லாம் இன்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் களைப் போல் பரிதாபமாக காட்சி அளிப்பது ஏன் ? இவைகளை பாதுகாக்க, பராமரிக்க,பயன்படுத்த மறந்து விட்டீர்களே ஏன் ?..

மதுக்கூரில் மிகச் சிறந்த முறையில் ஜாதி மத பேதமின்றி பொது நலக் காரியங்களில் ஈடுபட்டு முத்திரை பதித்து கொண்டிருக்கின்ற நம் சமுதாய அமைப்புகள் பல உள்ளன ..இந்த அமைப்புகள் செய்த நற்காரியங்கள் எண்ணிலடங்காதவை . ஆனால் இந்த குளங்களைப் பற்றிய சிந்தனை இந்த அமைப்புகளின் சிந்தைக்கு வராமல் போனது ஏன் ?.

ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு குளத்தை தத்து எடுத்தாலே போதுமானதாயிற்றே .முடியும் என்கின்ற நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் ..தொடுங்கள்.. படைத்தவன் தொடர்வான் என்ற வேண்டுகோளுடன் உங்களிடம் இருந்து பிரியா விடை பெறுகிறேன் .

இப்படிக்கு , “மதுகைப்புயல்”…..

கருத்தாக்கம் ….

KNM.முகம்மது இஸ்மாயில் . மதுக்கூர் . 11.12.2020.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR