Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

கனவு காண்போம் …..

கனவு காண்போம் …..
அன்றைய நூருல் இஸ்லாம் தெருவும் ,
அன்றைய சிறுவர்களான நாங்களும் ….
வாருங்கள் அழைத்துச் செல்கிறேன்…
அன்றைய வசந்த காலத்தை நோக்கி ……
 
மேற்கே கீழத்தெரு சங்கமும்,சந்தைப் பள்ளியும்,
கிழக்கே பெருநாள் கொல்லை …
இதுதான் இந்த தெருவின் எல்லை .இது
நூருல் இஸ்லாம் தெரு எனும் எங்கள்
கனவுலக கோட்டை …..
 
பள்ளிப்பருவத்தில் பரவசத்தோடு நான்
பவனி வந்த வீதி,
இந்தத் தெருவில் வசித்ததால்,
நண்பர்கள் பட்டாளம் ஏராளம் …
 
பத்திற்கும் மேற்பட்ட கூட்டாளிகள் கூட்டம் ,
பருப்பானத்து வீட்டு ..
படிக்கட்டுகள்தான் …
எங்களுக்கு பாராளுமன்றம்..
 
கிட்டிப்புள், பம்பரம், லாக்கு (கோலி),
கபடி ,பாய்ச்சல் கோடு (கிளிகோடு)என …
சீசன் விளையாட்டுகளில் சிக்குண்டு போவோம் நாங்கள்,
 
பம்பரத்தை”சிரா”எடுப்பதில் ,,
பலே கில்லாடி”சபூர்”என்னும் சகதோழன்,
சபூர் ஆட்டத்திற்கு வந்துவிட்டாலே
சகலருக்கும் குலை நடுங்கும் ..
 
“ஆ.நெ.” இல்லத்தில் ,
ஹஜ்ஜுப் பெருநாளன்று..
ஆடு அறுத்து குர்பானி கொடுக்கும் போது..
கூடி நின்று வேடிக்கை பார்ப்போம்.
நாங்கள் பார்த்த முதல் குர்பானி அது.
 
“இ.சி.”வீட்டின் எதிர்புறம்தான் ..
எங்களுக்கு விளையாட்டு மைதானம் ,
சுடுமணலில் கபடி ஆடுவோம் ..
வியர்வையை யாம் கண்டதில்லை.
 
சோவக்குல்லா அப்பா பெட்டி கடையில் ,
சுவை நிறைந்த நாக்கு ரொட்டியும்,
ஆரஞ்சு சுளை மிட்டாய்களும்,
எங்கள் பசி அடக்கும் பட்சணங்கள்.
 
சோனி வீட்டின் அருகில் இருந்த
“சிறுவா” மரத்தடியில் ….
இரவு தொடங்கும் நேரத்தில்…
இப்பகுதி முதிய பெண்களின்
சட்டசபை கூட்டம் கூடும் …
 
ஊர் பலா பேசமாட்டார்கள் …
உருப்படியான செய்திகள் மட்டுமே
அலசி ஆராயப்படும் ..
அன்பின் பரிமாற்றங்கள் மட்டுமே அரங்கேற்றம் ஆகும் .
 
நிறைந்த வயது உடைய பெரியவர்கள் நிறைந்திருந்த காலம் அது .
இன்று வயதான பெரியவர்களை காண்பதே குதிரைக் கொம்பாக ஆகிப்போனது .
 
என்னதான் சேட்டைகளின் சிகரத்தில்
நாங்கள் இருந்தாலும் ..
பெரியவர்களை கண்டவுடன்
மரியாதை கொடுக்கும் தன்மை
எங்கள் மரபணுக்களில் நிறைந்திருக்கும்.
 
“கத்தத் ராவு”வந்துவிட்டால் …
தெருவெங்கும் கீற்று வேய்ந்த… கொட்டகைகளாக சர்பத் கடைகள் ..
முன் அனுபவம் இல்லாத
முதலாளிகளாக நாங்கள் ..
 
நாங்கள் கொடுக்கும் சர்பத்தில் ,
கலர் கலராய் கேசரியை ..
கலந்து கலக்கி குடிக்கும்,
காசு படைத்த கஸ்டமர்கள் ஏராளம் …
 
சங்கத்து மௌலூது நாட்களில் ,
12 நாட்களும் பெருநாள்தான் ,
பூவந்தி,லட்டு ,சேமியா கஞ்சி என்று …
கொடுக்கப்படும் நார்ஷாக்களுக்காக ..
நாள் முழுதும் காத்திருப்போம் .
 
மௌலூது ஓதுதற்கு சங்கத்தின்
உள்ள அமர்வதற்கு ..
உஹதுப் போர் ஒன்று உருவாகும் ..அதில் வெற்றி பெற்றோர் உள்ளே நுழைவோம்.
 
தாமதமாக வரும் பெரியவர்கள்
உட்கார இடம் இல்லையெனில்..எங்களை கைபிடித்து வெளியேற்றிவிடுவர்..
துயரத்தின் உச்சத்திற்கே சென்று விடுவோம் .
 
பெருநாளின் அதிகாலை பொழுதில்…
தீப்பந்தங்கள் கையிலேந்தி …
படப்பை குளத்திற்கு கடும் குளிரிலும் குளிக்க செல்வோம்.
குளித்து விட்டு வீடு வந்து அடையும் வரை பந்தம் அணையாமல் பாதுகாப்போம்.
 
பெருநாள் அன்று மாலை பெருநாள்
கொல்லையில் அலைமோதும் பெண்கள் கூட்டம்…
விளையாட்டுப் பொருட்கள் தின்பண்டங்கள் என ஒன்றுவிடாமல் சுற்றி வருவோம் ..
 
பெருநாள் கொல்லையில் நேரம் ஆக ஆக.. பெருநாள் முடியப்போகிறது என்று கவலை..
கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நெஞ்சை கவ்வும் ….
 
நேராக செல்வோம் ஐயப்பா தியேட்டருக்கு .
பெருநாள் ஸ்பெஷல் திரைப்படத்தை.. உற்சாகத்தோடு கண்டு களிப்போம் .
பெருநாள் முடிவுக்கு வரும் .
மீண்டும் அடுத்த பெருநாளை நோக்கி கனவுகளோடு காத்திருப்போம் …
 
அன்று வசதியில்லை, வசந்தம் இருந்தது .
பணம் இல்லை .மன மகிழ்ச்சி இருந்தது .
கள்ளம் இல்லை ,களிப்பு இருந்தது .
உறவுகளில் பிரிவு இல்லை ,பாசம் இருந்தது .
 
ஒரு உண்மையை சொல்லட்டுமா ?
 
விவரம் தெரிந்த பிறகுதான் தெரிந்தது …
விபரம் தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கை… சொர்க்கம் என்று ….
 
மீண்டும் திரும்புமா அந்த நாட்கள் ?
கனவு காண்போம் ..
 
K.N.M.முஹம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .
——————————————————————————–
விளக்கம் :
 
சிரா எடுப்பது : தன்னிடமுள்ள பம்பரத்தின் கூர்மையான ஆணியால் அடுத்தவரின் பம்பரத்தை வட்ட கோடிட்டு நடுவில் வைத்து குத்தி உடைப்பது .(பம்பர விளையாட்டில் இப்படி ஒரு போட்டி )
 
கத்தத் ராவு : ஷேக் பரீத் ஒலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி தினம் .
 
சபூர் : எங்களின் நண்பர்கள் கூட்டத்தில் மிகவும் துணிச்சலான ஒருவர் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறையடி சேர்ந்து விட்டார் .இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக ..ஆமீன் .

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR