Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

தேடுகின்றேன் ….

புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே …..

என்ன மதுக்கூர் சகோதரர்களே, நண்பர்களே நலமுடன் இருக்கிறீர்களா ?..கடந்த சில தினங்களாக தேர்தல் முடிவு செய்திகளை கேட்டு கேட்டு அலுத்துப் போய் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் . கொஞ்சம் புத்துணர்ச்சி தேவை என்பதற்காக உங்களுக்காக ஒரு கவிதை தந்துள்ளேன்..

படிங்க…படிங்க…படித்துவிட்டு மகிழ்க…மகிழ்க கடந்து போன வசந்த காலத்தை எண்ணி …. 

வாருங்கள் கவிதைக்குள் பயணிக்கலாம் ….

தேடுகின்றேன் ….

ஆம் நான் பிறந்த மதுக்கூர் மண்ணில்  தேடுகின்றேன் …..

இதோ என் தேடல்கள் ……….

மரைக்காயர் தோப்பு நாவல் மரங்கள் …

பெருநாள் அன்று மட்டுமே கூடி கலையும் பெருநாள் கொல்லை …..

சிறியோர் பெரியோர் என தினந்தோறும் குளிக்கும் புதுக் குளத்தில் சுத்தமான படித்துறைகள் ..

சிரமேல்குடி ரோட்டில் இருந்த பந்தடி கொல்லை.

வீதிதோறும் திண்ணை வைத்த வீடுகள்  …..

அடுத்த வீட்டில் வைக்கும் ரசத்தின் மணம்.

பெருநாளன்று சைக்கிள் சக்கரங்களில் பலூன் கட்டியபடி படபடவென்று சத்தத்தோடு ஊரைச் சுற்றி உலா வரும் சிறுவர்கள் .

பச்சை தலப்பாக்கட்டி,காவி நிற பற்களோடு அத்தனை பேரையும் உரிமையோடு “போடா படுவா” என்று அழைத்து ஊரையே சுற்றி சுற்றி வந்த நெட்டைபாய் சுல்தான்.

பம்பரம் , கிட்டிப்புள் , கிளி கோடு ,கபடி என்று சீசன் விளையாட்டுக்களை  தெருக்களில் விளையாடும் சிறுவர்கள் ..

விளக்கு மரத்தடியில் டியூப் லைட் வெளிச்சத்தில் “ஒன்னும் பொரிக்க பொரிக்கன்” என்கிற விளையாட்டை விளையாடி மகிழ்ந்த சிறு பெண் பிள்ளைகள் .

தவறாமல் தினசரி நம் வீதிகளில் வீடு தேடி வந்து நட்புடன் தபால் பட்டுவாடா செய்யும் திரு.சுந்தர்ராஜன் என்கிற போஸ்ட் மேன் .

இன்றைக்கும் பல வீடுகளில் சுவற்றில் கண்ணாடி பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கும் என் கவிதை வரிகளோடு கூடிய திருமண வாழ்த்து மடல்களை தன் கைகளால் ஓவியமாக வரைந்து கொடுத்த  விக்டோரியா பிரஸ் MRB என்கிற எம் ஆர் பாலசுப்ரமணியம் அவர்கள் .

ஒரு நாளைக்கு ஒரு முறையோ இரு முறையோ நமது ஊரை கடந்து கடந்து செல்லும் MMT ,TVS ,சக்தி விலாஸ் பேருந்துகள்.

மதுக்கூரில் அண்ணன் துரை அவர்கள் ஒட்டி வலம் வந்த பச்சை நிற அம்பாசிடர் 5005 வாடகை கார் .

ஆறு மாத காலங்கள் நமது ஊரில் டேரா அடித்து தினசரி நாடகங்கள்,கலை நிகழ்ச்சிகள் நடத்தி நமதூர் மக்களை மகிழ்வித்த கண்ணகி கலையரங்கம் .

இவை அத்தனையும் நம்மை விட்டுச் சென்றுவிட்டது என்பதும்,

இனி எத்தனை தேடினாலும் திரும்பி வராது என்பதும்  

எனக்குத் நன்றாகத் தெரியும்  

இருந்தாலும் தேடுகின்றேன்..

காரணம் …

இவைகள் அத்தனையும் இருந்த காலம் மதுக்கூரின் பொற்காலம் .இந்த காலத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆகவேதான் மீண்டும் மீண்டும் தேடுகிறேன் ….

KNM.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் …

06.05.21

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR