காந்திஜி திரும்ப வந்தால்….
———————————–
காந்திஜியே ….நீ திரும்ப வர வேண்டாம்.
அன்று ஒரே ஒரு கோட்சேதான் இருந்தான்..
இன்று திரும்பும் திசையெல்லாம்
கோட்சேக்கள் நிறைந்த இன்றைய இந்தியாவை காண…..
காந்திஜியே நீ திரும்ப வராதே…. இன்றைய
கார்ப்பரேட் அரசியல் உனக்கு புரியாது .
சட்டையில்லாமல் சத்யாகிரகங்கள்
நடத்தி நீ சரித்திரம் படைத்தாய் ….இன்று
கோடிகளில் கோட் சூட் அணிந்து
மக்கள் வரிப்பணத்தில் உலகம்
சுற்றும் உத்தம தலைவர்களை காண ……
காந்திஜியே நீ திரும்ப வராதே….இன்றைய
கார்ப்பரேட் அரசியல் உனக்கு புரியாது .
அஹிம்சை வழியில் சுதந்திரம்
பெற்றுத் தந்த நீ ரத்த யுத்தம் நடத்தியதில்லை ..இன்று
கொலை,கற்பழிப்பு ,இனப்படுகொலை
என ஆங்காங்கே இரத்த ஆறுகள் சங்கமிப்பதை காண……..
காந்திஜியே நீ திரும்ப வராதே…இன்றைய
கார்ப்பரேட் அரசியல் உனக்கு புரியாது..
உயர்கல்வி கற்ற உனக்கு உயர்
சிந்தனை மட்டுமே உன் சிந்தையில் இருந்தது…இன்று
எங்கள் நாடு ,எங்கள் ராஜ்யம் என
பிரிவினை சிந்தனைகள்
மலிந்துபோய் கிடப்பதை காண..
காந்திஜியே நீ திரும்ப வராதே…இன்றைய
கார்ப்பரேட் அரசியல் உனக்கு புரியாது..
240 மைல்கள் தண்டி வரை நடந்து உப்புச் சத்தியாகிரகம் நடத்தி வெள்ளையனை நடுநடுங்க வைத்த உனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சி .. ஆனால்
உன்னைக் கொன்ற
கோட்சேவுக்கு கோவில் கட்டி
சிலை வைத்து கும்பிடுகிறார்களே
இந்த கொடும் செயலை காண …..
காந்திஜியே நீ திரும்ப வராதே… இன்றைய
கார்ப்பரேட் அரசியல் உனக்கு புரியாது..
அறப்போராட்டம் நடத்தி ஆங்கிலேய கிழக்கிந்தியக்
கம்பெனிக்கு நீ சிம்ம சொப்பனமாக திகழ்ந்தாய்..
இன்று அரசின் சொத்துக்கள் அனைத்தும்
தனியார் மயமாக்கல் என தடம் மாறி,
தடுமாறி நிற்பதை காண…
காந்திஜியே நீ திரும்ப வராதே… இன்றைய
கார்ப்பரேட் அரசியல் உனக்கு புரியாது..
மகாத்மா காந்திஜி வாங்கிக்கொடுத்த
சுதந்திர இந்தியாவை தேடும் சராசரி
மனிதர்களில் நானும் ஒருவனாக
காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறேன்..
வாழ்க மகாத்மா காந்திஜி நாமம் …..
K.N.M.முகம்மது இஸ்மாயில்
02.10.21.