Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

கால்பந்தாட்டமும் மதுக்கூரும்…… 

கால்பந்தாட்டமும் மதுக்கூரும்……

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கூரில் மதுக்கூர் கால்பந்தாட்ட கழகம் நடத்திய  கால்பந்து தொடர் போட்டியில் மதுக்கூர் MFC அணி இறுதிப்போட்டியில்(25.10.20)முதல் பரிசு வென்று இமாலய சாதனை படைத்தது .

இந்த சாதனையை கொண்டாடும் நேரத்தில் .. மதுக்கூரின் கால்பந்து வரலாற்றையும் … களம் கண்டு வெற்றி பல கண்ட நமது ஊர் முன்னால்  கால்பந்தாட்ட வீரர்களையும் … உங்கள் கண்முன்னே கொண்டு வருகிறேன் ….

எனக்கு கருத்து தெரிந்த காலம் முதல் .. நமது ஊரோடு கலந்து ஒட்டி உறவாடிய .. அனைவர்களின் ஆழ்மனதிலும் பதிந்து போன ஒரே விளையாட்டு கால்பந்து ஆட்டம் …

சிரமெல்குடி ரோட்டிற்கும் .. இடையகாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பரந்து விரிந்து கிடந்து , நாம் இழந்துபோன  மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தின் பெயரே  “பந்தடி கொல்லை” என்பதுதான்.

ஆண்டுதோறும் நடைபெறும் கால்பந்தாட்ட திருவிழா … கால்பந்தாட்ட தொடர் போட்டிகளுக்கு இந்த மைதானம் பிரதானம் .

25 காசுகள் கட்டணமாக கொடுத்து கால்பந்தாட்டம் ரசித்திருக்கிறோம் …. போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துவதில் தீவிரமாக  செயல்பட்டவர்கள் மறைந்த OPM. அல்லா பிச்சை ராவுத்தர்,மு.ரா.அப்துல் வஹாப், H.R.மேன் ஆகியோர் என்பது சிறப்பு .

பாண்டிச்சேரி ,ஒலவக்கோடு (கேரளா ) ஆகிய கால்பந்தாட்ட அணிகள் மிகவும் பிரபலம் . துரைராஜ் சாரும்,சிங்கத்து வீட்டு அஜிஸ் ரஹ்மான் அண்ணனும் நடுவர்களாக களப் பணியாற்றியதை  கண்டு களித்து இருக்கிறோம் .

இந்த மைதானம் எப்படி நம்மை விட்டுப் போனது என்று இன்றைக்கும் புரியாத புதிராக இருக்கிறது…

நமது ஊரின் மூத்த மனிதர்களில் கால்பந்தாட்ட ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள்  “உருட்டி பிரதர்ஸ்”எனும் உயர்ந்த மனிதர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ….

வெற்றிலைக் கடை கரீம் அவர்களும் இந்த ஜாம்பவான்களோடு  இணை சேர்ந்து அன்று கால்பந்து விளையாட்டிற்கு உயிரோட்டமாக இருந்திருக்கிறார்கள் ….

1972 களில் மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் நமதூர் உயர்நிலைப்பள்ளி அணி  வெற்றிக் கோப்பையை தட்டி கொண்டு வந்தது …..

வெற்றி பெற்ற இந்த அணியில் .. உருட்டி பிரதர்ஸின் வாரிசுகள் பலரும் , நமது சமுதாய சகோதரர்களும் மிகுந்த அளவில் இருந்தார்கள் என்பது சிறப்பு

இந்த சரித்திர சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது நமது ஊரின் தனிச்சிறப்பு ….

தெருக்களில் எல்லாம் பிள்ளைகள் கால்பந்து விளையாடிய ஒரு காலம் இருந்தது . காலமாற்றத்தின் கோலமோ என்னவோ.. மட்டைப்பந்து என்னும் மாய விளையாட்டு மனிதர்களை மயக்கத் தொடங்கியது..

கிரிக்கெட் எனும் இந்த மாயையை வென்றெடுத்து .. மதுக்கூரில் இன்றைக்கும் கால்பந்து விளையாட்டும், கால்பந்தாட்ட வீரர்களும் உற்சாகத்துடன் வீர நடை போடுகிறார்கள் என்று சொன்னால் . . ..

அதற்கு மூல காரணம் ,முதல் காரணம் , முக்கிய காரணம் …… மிகச் சரியான நேரத்தில் காலம் தந்த பரிசு , கால்பந்தாட்ட தந்தை அண்ணன் அப்துல் கலாம் அவர்கள் என்றால் மிகையல்ல .

இன்றைக்கும் மதுக்கூரில் கால்பந்தாட்டம் சாகாவரம் பெற்ற ஒரு விளையாட்டாக இருப்பதற்கு கலாம் அவர்களின் கடும் உழைப்பே காரணம் எனலாம் …

இவரின் உழைப்பை போற்றுகிறேன் .. தன்னைப் போன்று பல “கலாம்களை”  உருவாக்க வேண்டும் என்பது ,. இது என் இதய பொன் ஏடுகளில் வைர வரிகளால் பதிந்து கிடக்கும் ஆசைகள் …

மதுக்கூர் மண்ணின் இளைய மைந்தர்களுக்கு என் இனிய வேண்டுகோள் . கால்பந்து விளையாட்டு நம் உயிர் மூச்சாய் இருக்க வேண்டும் .. மதுக்கூரின் புகழ் உலகெங்கும் நிலைக்க  வேண்டும் …

கால்பந்து விளையாட்டுகளில் .. வெற்றி என்பது இலக்கு … முயற்சி என்பது உழைப்பு … திறமை என்பது வரம் …. நேர்மை என்பது தரம் … இவை அத்தனையும் தாரக மந்திரமாக நாம் பின்பற்றல் நன்று… வாழ்த்துகிறேன் …வாழ்த்துக்கள் …

KNM.முகம்மது இஸ்மாயில் . மதுக்கூர் .. —————————————————————————–

குறிப்பு ….

தொடர்ச்சியாக கால்பந்தாட்டத்திற்கு  மதுக்கூரில் உயிரூட்டியவர்கள் பலர் . பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் ,கல்லூரி போட்டிகளிலும் , உள்ளூர் வெளியூர் தொடர் கால்பந்தாட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டு கலக்கியவர்களை  வரிசைப்படுத்தி இருக்கிறேன் ….

PSKA அன்வர்,ESM அலி, ANM.அஜிஸ்  ரஹ்மான் ,VK.அபுசாலிபு, இடைக்காடு சோமு,  இடையக்காடு பிச்சை ,பொதக்குடியார் வீட்டு Dr.சேட், M.அப்துல் கலாம்,கல்வர்ஷா,மருக்கை யூனுஸ், பல கல்லூரி அணிகளில் விளையாடி முத்திரை பதித்த TSM அப்துல் காதர்,பக்குமுழி வீட்டு அப்துல் கரீம் , பக்குடு  ரஹ்மத்துல்லா,உருட்டி வீட்டு SSMH அபுசாலிபு, SSMH முகம்மது சரிப்,SSMM ரபி அகமது,SSMA ரஹ்மத்துல்லாஹ்,மேலும் PSKA ஜஹான் ,E.அபூபக்கர்(கருத்தல வீடு)E.அப்துல் நாசர்( கருத்தல வீடு) முஹம்மது அலியார், மாச்சாப்பா வீட்டு முஸ்தபா , நேஷனல் பர்னிச்சர் அஜிஸ் ரஹ்மான் இடையக்காடு மாரிமுத்து ,மற்றும் பலர்.

என் நினைவு ஆற்றலில் உள்ளவர்களை வரிசைப்படுத்தி இருக்கிறேன் .ஆனால் மேலும் பலர் இருந்திருக்கிறார்கள். ———————————————————————————

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR