கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

விவசாயி …….

விவசாயி …….

உழைப்பைத் உரமாக்கி
வியர்வை எனும் நீர் பாய்ச்சி
நம் வயிற்றை நிரப்பும் ஜீவன்கள் ..இன்று டெல்லி குளிர் வீதிகளில்..

பசுமை புரட்சி செய்து வரலாறு படைக்கும் பஞ்சாப் மண்ணின் மைந்தர்கள் …
படை திரண்டு  வந்திருக்கிறார்கள் தலைநகரை நோக்கி …..

கழனியில் வாழ்ந்து தேகம் கருத்து
உணவு தரும் இந்த விவசாயிகள்தான்
நம் நாட்டின் முதுகெலும்புகள்.
இவர்களின் முதுகெலும்புகளுக்குள்ளே
முட்களை சொருக கடும் முயற்சி ..

அரசாங்கம் மக்களுக்காகவா ?..அல்லது
மக்கள் அரசாங்கத்திற்காகவா ? என்கிற
நீண்ட நெடிய இந்த வினாவிற்கு
முற்றுப்புள்ளி வைக்க தொடங்கியிருக்கிறார்கள் .

நாட்டைக் காக்கும் ராணுவத்தில் …தம் உயிரை துச்சமென மதிக்கும் சர்தார்கள்….தம் சொந்த வீட்டிற்கே பங்கம் என்றவுடன் ….
போர் முரசு கொட்டத் தொடங்கி இருக்கிறார்கள் ….

இறையாண்மை இயற்கை எய்திவிட்ட இந்த தேசத்தில் …..
மண்ணைப் பொன்னாக்கும் இந்த விவசாயிகள் ….தன் மண்ணை காக்க
தலை நகரத்து குளிரை நெருப்பாக்கிப்  கொண்டிருக்கிறார்கள்.

அரியாசனத்தில் இருப்பவர்களே …நாங்கள் அறியா சனம் அல்ல என்று
ஹரியானாவின் விவசாய பெரும் கூட்டம்
டெல்லியை முற்றுகையிட்டு
அறப்போரை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள் . .

தலைநகர் விலை போனதோ வியாபாரிகளின்
தந்திர மந்திரங்களில் என்று …
தம் உயிர் காக்க வரவில்லை .
தங்களின் பயிர் காக்க வந்திருக்கிறார்கள் …

காளையை காக்கிறேன் என்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தவர்கள்..  தோற்றுப்போனார்கள் மெரினா புரட்சி கண்டு ..இந்த
எழுச்சிமிக்க விவசாயிகள் போராட்டம் கண்டு  தோற்றுப் போவார்கள் இந்த சட்டம் தீட்டியவர்கள்….

விவசாயிகளுக்கு தோள் கொடுப்போம்…
துணை நிற்போம் ….
போராட்டக் களத்தில் உயிர்துறந்த அத்தனை விவசாயிகளுக்கும், போராடிக் கொண்டிருக்கும் விவசாய உறவுகளுக்கும்
என் வீர வணக்கம் ..

ஜெய்ஹிந்த் ……

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் …
25.12.20

கருத்து தெரிவியுங்கள்