இளம் வயதில் வெளிநாடு சென்றேன் ….
பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டேன்.
பொருளாதார நெருக்கடியை வென்றேன், ஆனால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன்,
ஊர் திரும்பியதும் கஷ்டத்தில் நான் ..
இந்த புலம்பல் சத்தம் ஊரெங்கும் ஒலிக்கிறது.
இந்தப் புலம்பல்கள் உண்மை என்றாலும்…
அயல் தேச பிரம்மச்சாரிய வாழ்க்கையில் ..
பெற்றவைகள் அதிகம் இல்லை..
கற்றவைகள் அதிகம் …..
பெற்றோருக்கு அடங்கி வாழாத நாம்…
அன்னிய மனிதர்களோடு அனுசரித்து
வாழ கற்றுக் கொண்டோம் ….
அன்னையின் உணவை அன்றாடம்
குறை கூறி வளர்ந்த நாம்…..
நாமே சமையல் செய்து சுவை குறைந்த உணவை சாப்பிட கற்றுக் கொண்டோம் …
ஆலிம்கள் ஓதிக் கொடுத்ததை
ஓத மறுத்த நாம்
திருக்குர்ஆனை தடங்கலின்றி
ஓத கற்றுக்கொண்டோம் …..
சொந்த வீட்டு வேலைகளில்
ஒரு துரும்பைக் கூட தூக்கிப்
போடாத நாம் .
தம் வேலைகளை தாமே செய்ய கற்றுக்கொண்டோம் ….
துணிகளை துவைப்பதற்கு ஊரில் சலவை
கடைகளை நாடிய நாம்……
நம் துணிகளை நாமே துவைத்து நாமே இஸ்திரி போட கற்றுக்கொண்டோம்.
கல்வி கற்பதற்கு வாய்ப்பில்லாமல்
போன நாம்…..
பிள்ளைகளுக்கு உயர் கல்வி கொடுக்க கற்றுக்கொண்டோம் .
தொழுகைகளை அலட்சியப்படுத்திய நாம் ..
ஐவேளை தொழுகையை அழகாக தொழுவதற்கு கற்றுக்கொண்டோம் ….
ஊதாரியாக ஊரில்
சுற்றித் திரிந்த நாம்…
உழைத்து சம்பாதிப்பது எப்படி
என்று கற்றுக் கொண்டோம் …..
ஊரில் சைக்கிளில்
வலம் வந்த நாம் …
கார்,பைக் என்று வாகனங்கள்
ஓட்ட கற்றுக் கொண்டோம் ..
என்ன ஊர் இது என்று பிறந்த ஊரை வெறுத்துப் பேசிய நாம்……
பிறந்த ஊர் மீது அதீத காதல் கொள்ள
கற்றுக் கொண்டோம் ….
தமிழ் மொழியில் மட்டுமே
பேசி வளர்ந்த நாம்….
அரபி,ஹிந்தி,ஆங்கிலம்
மலையாளம் என பல
மொழிகளை பேச
கற்றுக் கொண்டோம் .
குடும்பத்தாரோடும், உறவுகளோடும் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்திருந்த நாம் …
பிரிவு என்பது மிகப்பெரிய கொடுமை என்பதை கற்றுக் கொண்டோம் .
நோன்பு பிடிப்பது என்றால்
என்னவென்று கேட்ட நாம் …
30 நோன்பையும் முழுவதுமாய்
நோற்க கற்றுக் கொண்டோம் …
ஊரில் ஒரு பிரச்சனை என்றால்
நமக்கு என்ன என்று ஒதுங்கியிருந்த நாம்…..
இன்று ஒன்று கூடி உதவிக்கரம் நீட்ட கற்றுக்கொண்டோம்.
நம் நாட்டு சட்டங்களை மதிக்காமல்
வாழ்ந்த நாம் ……
அரசாங்க சட்டங்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டோம் .
சிலவற்றை இழந்தாலும் பலவற்றை
கற்றுக் கொண்டோம் …ஆக
அயல் நாட்டு வாழ்க்கை நமக்கு
பணத்தையும்,படிப்பினைகளையும்
தந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ..01.11.2021.